Saturday 16 August 2014

மூலவர் : புட்டு சொக்கநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : மீனாட்சி
தல விருட்சம் : வன்னி மரம்
தீர்த்தம் : வைகை
ஆகமம்/பூஜை : சிவாகமம் 
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : புட்டுத்தோப்பு
ஊர் : ஆரப்பாளையம்
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:

ஆவணி பூராடம் புட்டு திருவிழா, பிரதோஷம், சிவராத்திரி, தமிழ் மாத பிறப்பு, பவுர்ணமி

தல சிறப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலைப் போலவே இத்தலத்தில் உள்ள புட்டு சொக்கநாதரின் வலதுபக்கம் மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. எனவே இது திருமணக்கோல சன்னதியாகும். சிவபெருமான் வந்தியம்மைக்கு இந்த இடத்தில் தான் மோட்சம் கொடுத்தார். அதன் அடிப்படையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. எனவே இங்கு மட்டுமே வந்தியம்மைக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக பைரவர் ஒரு நாய் வாகனத்துடனோ அல்லது நாய் வாகனம் இல்லாமலோ அருள்பாலிப்பார். சில தலங்களில் இரண்டு, மூன்று மற்றும் எட்டு பைரவர் கூட இருப்பதுண்டு. ஆனால் இங்குள்ள ஒரு பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பது சிறப்பு. இதனால் இவர் இரட்டை கால பைரவர் என அழைக்கப்படுகிறார். சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக சில கோயில்களில் ஹரி ஹர சர்ப்ப ராஜா இருப்பதுண்டு. ஆனால் இது சிவத்தலம் என்பதால் ஹர ஹரி சர்ப்ப ராஜா இருப்பது இத்தலத்தின் மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

திறக்கும் நேரம்:



காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி வரையும், செவ்வாய்க்கிழமை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

மேனேஜிங் ட்ரஸ்டி அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் புட்டுதோப்பு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மதுரை-625 016.

போன்:

+91 93622 29296

பொது தகவல்:


பிரகாரத்தைச் சுற்றிலும் விநாயகர், பாலமுருகன், திருமணக் கோலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சரஸ்வதி, மகாலெட்சுமி, சுந்தரானந்தர், துர்கை, வீரபத்திரர், சப்தகன்னிமார், கல்யாண விநாயகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கலியநாயனார், அய்யப்பன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், இரட்டைகால பைரவர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் போன்ற தெய்வங்கள் உள்ளன. மேலும் புட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மன், வந்தியம்மை போன்றோர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.






பிரார்த்தனை


பக்தர்கள் தங்களது வறுமை நீங்கி செல்வம் பெருக, இழந்த பொருள்களையும், செல்வத்தையும் மீண்டும் பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் தீர இரட்டை கால பைரவரையும், சர்ப்ப தோஷம் நீங்க ஹர ஹரி சர்ப்ப ராஜாவையும், திருமணத் தடை நீங்க மீனாட்சி சொக்கநாதரையும் பிரார்த்தனை செய்கிறார்கள்.



நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

புட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மன், வந்தியம்மை மூவரும் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர்.

ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் இங்கு புட்டு திருவிழா நடைபெறும். அன்று மட்டுமே இங்கு புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள உற்சவ வந்தியம்மை இங்கு வந்து அலங்காரம் செய்து, முக்தி பெற்று பூப்பல்லக்குடன் மீண்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும். இத்திருவிழாவிற்கு திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியரும், மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிரியாவிடை, மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரரும், திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகரும் வருகை தருவர். அன்று ஒரு நாள் மட்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நடை சாற்றப்பட்டிருக்கும்.

பக்தர்கள் சர்ப்ப கால தோஷ நிவர்த்திக்காக இங்குள்ள ஹர ஹரி சர்ப்ப ராஜாவிற்கு பாலபிஷேகம் செய்து வணங்கிச் செல்கின்றனர். இது சிவத்தலம் என்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. சர்ப்ப ராஜாவின் முன்புறம் சிவன், மீனாட்சி, விநாயகர், முருகன், சூலமும், பின்புறம் விஷ்ணு, லெட்சுமி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது.




தல வரலாறு:

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த படலம் வைகை ஆற்றங்கரையிலுள்ள இத்தலத்தில் தான் நடைபெற்றது. வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மதுரை நகரை அலைக்கழித்தது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென அரிமர்த்தன பாண்டியன் உத்தரவிட்டான். இச்செய்தி மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி வசித்து வந்தாள். அவள் முதுமையிலும் பிட்டு விற்று பிழைத்தவள். முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்து விட்டு, அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். பின்னர் அவிக்கும் பிட்டை விற்க ஆரம்பிப்பாள். வெள்ளத்தை தடுக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. வயதான காலத்தில் தன்னால் கரையை அடைக்க முடியாது என்பதால் கூலிக்கு ஆள் தேடினாள். இதை அறிந்த சுந்தரேஸ்வரப் பெருமான் மூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். வந்தியின் முன் வந்து நின்றவர், பாட்டி! கூலிக்கு நீ ஆள் தேடி அலைவதாக நான் கேள்விப்பட்டேன். நானே உனக்கு பதிலாக வேலை செய்கிறேன், கூலியாக நீ அவிக்கும் பிட்டை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறினார். பாட்டியும் ஒத்துக்கொண்டார். தான் கொண்டு வந்த மண்வெட்டி, கூடையுடன் கரைக்குச் சென்று, வந்திக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து சுறுசுறுப்பாக மண் வெட்டினார். அதன் பிறகு, ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். சிறிதுநேரத்தில் சோம்பல் முறித்தார். திடீரென வந்தியின் வீட்டுக்குச் சென்று, பாட்டி பிட்டு கொடு, கூலியில் கழித்துக்கொள், என வாங்கி சாப்பிடுவார். ஒரு பகுதியை வேலை செய்யுமிடத்தில் நின்றவர்களுக்கு கொடுத்தார். அவ்வப்போது ஆடினார், பாடினார். தன்னுடன் வேலை செய்தவர்களையும் ஆடவைத்தார் அந்த ஆடல்வல்லான். ஆக, அவரது இடத்தில் வேலை நடக்கவில்லை. அப்போது, தலைமை கண்காணிப்பாளர் அங்கு வந்தார்.

ஏய்! என்ன கூத்து இங்கே! வேலைக்கு வந்தாயா?ஆட வந்தாயா? கிழவியிடம் பிட்டை வாங்கித் தின்றுவிட்டு ஆட்டமா போடுகிறாய்?என்று கண்டிக்கவும், அரிமர்த்தன பாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்து விட்டான். அந்நேரத்தில் கண்காணிப்பாளர் சற்று ஒதுங்கிச் சென்று விட, மன்னனைக் கண்ட லோகநாயகனான சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கே வந்தான். கண்காணிப்பாளரின் கையில் இருந்த பிரம்பைப் பிடுங்கினான். ஓங்கி முதுகில் ஒரு அடிவிட்டான். ஆனால் மன்னன் ஆவென அலறினான். அவன் மட்டுமல்ல! அங்கு நின்றவர்களெல்லாம் அலறினர். உலகமே அலறியது. அடி வாங்கியவர் எழுந்தார். ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டினார். வெள்ளம் வற்றிவிட்டது. தான் அடித்த அடி தன் மீது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி நின்றவர்கள் மீதும் விழுந்தது கண்டு அதிசயித்தான் அரிமர்த்தன பாண்டியன். மேலும், ஒரு கூடை மண்ணிலேயே கரை உயர்ந்து வெள்ளம் கட்டுப்பட்டது கண்டு வியப்பு மேலிட்டவனாய் கூலியாளாய் வந்தவரை பார்த்த போது, அவர் மறைந்து விட்டார். அப்போது தான் கூலியாளாய் வந்தது சிவன் என்பதை உணர்ந்தார். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானம் ஒன்று அவள் வீட்டு முன்பு இறங்கியது. அதில் வந்தவர்கள் அவளிடம், தாயே! நாங்கள் சிவகணங்கள். தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார்கள். தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச் சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள்.




சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக பைரவர் ஒரு நாய் வாகனத்துடனோ அல்லது நாய் வாகனம் இல்லாமலோ அருள்பாலிப்பார். சில தலங்களில் இரண்டு, மூன்று மற்றும் எட்டு பைரவர் கூட இருப்பதுண்டு. ஆனால் இங்குள்ள ஒரு பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பது சிறப்பு. இதனால் இவர் இரட்டை கால பைரவர் என அழைக்கப்படுகிறார்.

1 comment:

  1. அருமையான ஆலயம் பற்றி
    அபூர்வமான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    ReplyDelete