Tuesday 21 January 2014

நமஸ்காரங்கள் செய்யும் முறை.

நமஸ்காரங்கள்  செய்யும்  முறை.


நமஸ்காரங்கள்  ஏகாங்கம்,  துவியாங்கம்,  திரயாங்கம், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் என ஐந்து  வகைப்படும்.

ஏகாங்க  நமஸ்காரம்  என்பது  தலையை  மட்டும்  தாழ்த்தி  வணங்குதல்  ஆகும்.  

துவியாங்க நமஸ்காரம்  என்பது  வலக்கையை மட்டும்  சிரசில்  குவித்து வணங்குதல்  ஆகும்.

திரயாங்க  நமஸ்காரம்  என்பது  சிரசின்  மீது  இரண்டு  கைகளையும்  குவித்து  வணங்குதல்  ஆகும்.

பஞ்சாங்க  நமஸ்காரம்  என்பது  தலை,  கையிரண்டு,  முழங்காலிரண்டு  என  ஐந்து உறுப்புகள்  நிலத்தில்  படும்படி  வணங்குதல்  ஆகும்.

அஷ்டாங்க  நமஸ்காரம்  என்பது  தலை,  கையிரண்டு,  செவியிரண்டு,  மோவாய், புஜங்களிரண்டு  ஆகிய  எட்டு  உறுப்புகளும்  நிலத்தில்  படியும்படி  வணங்குதல்  ஆகும்.

பஞ்சாங்க  நமஸ்காரம்  அல்லது  அஷ்டாங்க  நமஸ்காரம்  செய்யும்போது  மூன்று,  ஐந்து,  ஏழு , ஒன்பது  அல்லது  பன்னிரண்டுதரம்  செய்தல்  வேண்டும்.  ஒருதரம், இருதரம்  செய்தல்  குற்றமாகும்.

ஆடவர்  அஷ்டாங்க  நமச்காரத்தையும்,  பெண்டிர்  பஞ்சாங்க  நமஸ்காரத்தையும்   செய்தல்  வேண்டும்.  ஏகாங்க,  துவியாங்க, திரயாங்க  நமஸ்காரங்கள்  ஆண் , பெண்  ஆகிய  இருபாலார்க்கும்  பொதுவாகும்.

நமஸ்காரம்  செய்யும்போது  கிழக்கேயோ அல்லது  வடக்கேயோ  காலை  நீட்டலாகாது.  கால்களை  தெற்கு அல்லது  மேற்கு நோக்கியே  நீட்ட வேண்டும்.

அஷ்டாங்க  நமஸ்காரம்  செய்யும்போது,  முன்னர்  சிரசை  வைத்து  மார்பு  பூமியில் படும்படி  வலதுகையை  முன்னும் இடதுகையை பின்னும்  நேரே  நீட்டிப்  பின்னர்  அம்முறையே  மடக்கி,  வலத்தோளும்  இடத்தோளும்  தரையில்  பொருந்தும்படி  கைகளை இடுப்பை நோக்கி  நீட்டி,  வலது  காதை  முன்னும்  இடதுகாதைப்  பின்னும்  பூமியில்  தோயும்படி  நமஸ்காரம்  செய்தல்  வேண்டும்.

விநாயகரை  ஒருமுறையும்,  
முருகனை  மூன்று  முறையும், 
சிவனை   மூன்று / ஐந்து / ஏழு / ஒன்பது / பதினைந்து / இருபத்தொன்று  முறைகளும்,

உமாதேவி / திருமால்  - இவர்களை   நான்கு முறையும்,
சூரியனை  இரண்டு  முறையும் ,
சக்திகளை  நான்கு  முறையும்  வலம்  வருதல்  வேண்டும்.

வலம்  வருதல்  போகத்தையும், 
இடம்  வருதல்  மோட்சத்தையும்,
வலமாகவும்,  இடமாகவும்  வருதல்  போக மோட்சத்தையும்  அளிக்கும்    என  ஆன்றோர்  கூறுவர் .

ஞான பூமி  August  1983  இதழிலிருந்து..


No comments:

Post a Comment