Friday 24 January 2014

அபிராமி அந்தாதி ( 6 )

அபிராமி   அந்தாதி

பாடல்  6



சென்னியது  

உன்பொன்  திருவடித்  தாமரை !

சிந்தையுள்ளே  மன்னியது,

உன்  

திரு மந்திரம் !

சிந்தூர வண்ணப் பெண்ணே !

நின்  அடியாருடன்  கூடி  

முறை முறையே  பன்னியது 

என்றும் 

உந்தன் 

பரம  ஆகம  

பத்ததியே !!


எப்போதும்   அன்னை  அபிராமியையே  நினைத்திருத்தல்.





விபூதி தரிக்கும் முறை

விபூதி  தரிக்கும்   முறை.


கங்காளன்  பூசும்  கவசத்  திருநீற்றை  

மங்காமல்  பூசி  மகிழ்வரே  யாமாகில் 

தங்கா  வினைகளும்  சாரும்  சிவகதி 

சிங்கார மான  திருவடி  சேர்வரே
--திரு மூலர்.

ஏதோ  பூசுகிறோம்  என்றில்லாமல் ,  அது  ஒரு  மாபெரும்  கவசம்
என்ற  நினைவுடன்,  பயபக்தியுடன்  அதற்குரிய  இடங்களில்  திருநீறு  அணிவது  மிகுந்த நலம்  பயக்கும்.

1.   சிரசு  நடுவில்
2.   நெற்றி
3.  மார்பு
4.  தொப்புளுக்கு  சற்று மேலே
5.  இடது  புஜம்
6.  வலது  புஜம்
7.  இடது  கை  நடுவில்  ( மூட்டு )
8.  வலது  கை  நடுவில்
9.  இடது கை  மணிக்கட்டு
10. வலது  கை  மணிக்கட்டு
11. இடது  இடுப்பு
12. வலது  இடுப்பு
13. இடது கால்  நடுவில்  ( முழங்கால் )
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்கு  கீழே
16. கண்டத்தைச் சுற்றி  ( கழுத்து முழுவதும், முன்பக்கமும், பின்பக்கமும் )
17. வலது காதில்  ஒரு பொட்டு
18. இடது காதில்  ஒரு  பொட்டு .


திருமேனி  தானே  திருவருள்  ஆகும் 
திருமேனி   தானே  திருஞானம்  ஆகும் 
திருமேனி  தானே  சிவநேயம்  ஆகும் 
திருமேனி  தானே  தெளிந்தார்க்கு  சித்தியே 
-- திரு மூலர்.


திருச்சிற்றம்பலம்.






Thursday 23 January 2014

அபிராமி அந்தாதி ( 5 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  5


பொருந்திய  முப்புரை,   

செப்புரை  செய்யும்  

புணர்   முலையாள் !

வருந்திய வஞ்சி 

மருங்குல்  மனோன்மணி, 

வார்  சடையோன் 

அருந்திய  நஞ்சு  

அமுதாக்கிய  அம்பிகை !

அம்புய  மேல்  

திருந்திய  சுந்தரி !

அந்தரி  பாதம் 

என் 

சென்னியதே  !

சிவ பெருமான்  அருந்திய  ஆலகால  விஷத்தையே  அமுதமாக்கிய   அன்னையே,  அபிராமியே!!  உன்   பாதத்தில்,  தலை  வைத்து  வணங்குகின்றேன்.




Wednesday 22 January 2014

அபிராமி அந்தாதி ( 4 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  4


மனிதரும்,

தேவரும், 

மாயா  முனிவரும்   வந்து 

சென்னி  குனிதரும்  

சேவடிக்  கோமளமே  !!

கொன்றை  வார்சடை மேல் 

பனி தரும்  திங்களும்,

பாம்பும்,

பகீரதியும்  படைத்த  

புனிதரும்,  நீயும்  

என்புந்தி  எந்நாளும்

பொருந்துகவே !!


அன்னை  அபிராமியைப்  பற்றிய  சிந்தனை,  எப்போதும்,  எந்நாளும்   இருக்கவேண்டும்  என்று  வேண்டுதல்.


Tuesday 21 January 2014

நமஸ்காரங்கள் செய்யும் முறை.

நமஸ்காரங்கள்  செய்யும்  முறை.


நமஸ்காரங்கள்  ஏகாங்கம்,  துவியாங்கம்,  திரயாங்கம், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் என ஐந்து  வகைப்படும்.

ஏகாங்க  நமஸ்காரம்  என்பது  தலையை  மட்டும்  தாழ்த்தி  வணங்குதல்  ஆகும்.  

துவியாங்க நமஸ்காரம்  என்பது  வலக்கையை மட்டும்  சிரசில்  குவித்து வணங்குதல்  ஆகும்.

திரயாங்க  நமஸ்காரம்  என்பது  சிரசின்  மீது  இரண்டு  கைகளையும்  குவித்து  வணங்குதல்  ஆகும்.

பஞ்சாங்க  நமஸ்காரம்  என்பது  தலை,  கையிரண்டு,  முழங்காலிரண்டு  என  ஐந்து உறுப்புகள்  நிலத்தில்  படும்படி  வணங்குதல்  ஆகும்.

அஷ்டாங்க  நமஸ்காரம்  என்பது  தலை,  கையிரண்டு,  செவியிரண்டு,  மோவாய், புஜங்களிரண்டு  ஆகிய  எட்டு  உறுப்புகளும்  நிலத்தில்  படியும்படி  வணங்குதல்  ஆகும்.

பஞ்சாங்க  நமஸ்காரம்  அல்லது  அஷ்டாங்க  நமஸ்காரம்  செய்யும்போது  மூன்று,  ஐந்து,  ஏழு , ஒன்பது  அல்லது  பன்னிரண்டுதரம்  செய்தல்  வேண்டும்.  ஒருதரம், இருதரம்  செய்தல்  குற்றமாகும்.

ஆடவர்  அஷ்டாங்க  நமச்காரத்தையும்,  பெண்டிர்  பஞ்சாங்க  நமஸ்காரத்தையும்   செய்தல்  வேண்டும்.  ஏகாங்க,  துவியாங்க, திரயாங்க  நமஸ்காரங்கள்  ஆண் , பெண்  ஆகிய  இருபாலார்க்கும்  பொதுவாகும்.

நமஸ்காரம்  செய்யும்போது  கிழக்கேயோ அல்லது  வடக்கேயோ  காலை  நீட்டலாகாது.  கால்களை  தெற்கு அல்லது  மேற்கு நோக்கியே  நீட்ட வேண்டும்.

அஷ்டாங்க  நமஸ்காரம்  செய்யும்போது,  முன்னர்  சிரசை  வைத்து  மார்பு  பூமியில் படும்படி  வலதுகையை  முன்னும் இடதுகையை பின்னும்  நேரே  நீட்டிப்  பின்னர்  அம்முறையே  மடக்கி,  வலத்தோளும்  இடத்தோளும்  தரையில்  பொருந்தும்படி  கைகளை இடுப்பை நோக்கி  நீட்டி,  வலது  காதை  முன்னும்  இடதுகாதைப்  பின்னும்  பூமியில்  தோயும்படி  நமஸ்காரம்  செய்தல்  வேண்டும்.

விநாயகரை  ஒருமுறையும்,  
முருகனை  மூன்று  முறையும், 
சிவனை   மூன்று / ஐந்து / ஏழு / ஒன்பது / பதினைந்து / இருபத்தொன்று  முறைகளும்,

உமாதேவி / திருமால்  - இவர்களை   நான்கு முறையும்,
சூரியனை  இரண்டு  முறையும் ,
சக்திகளை  நான்கு  முறையும்  வலம்  வருதல்  வேண்டும்.

வலம்  வருதல்  போகத்தையும், 
இடம்  வருதல்  மோட்சத்தையும்,
வலமாகவும்,  இடமாகவும்  வருதல்  போக மோட்சத்தையும்  அளிக்கும்    என  ஆன்றோர்  கூறுவர் .

ஞான பூமி  August  1983  இதழிலிருந்து..


அபிராமி அந்தாதி ( 3 )

அபிராமி  அந்தாதி 
பாடல்  3


அறிந்தேன்  

எவரும்  அறியா  மறையை !

அறிந்து கொண்டு  செறிந்தேன், 

 உனது  திருவடிக்கே,  திருவே !

வெருவிப்  பிறிந்தேன்,

நின் அன்பர்  பெருமை 

எண்ணாத  கரும  நெஞ்சால்,

மறிந்தே  விழும் 

நரகுக்கு  உறவாய 

மனிதரையே ! !


அன்னை  அபிராமியின்  பாத கமலத்தை  சரணடைதல்.

....  தொடரும்



Monday 20 January 2014

அபிராமி அந்தாதி ( 2 )

அபிராமி  அந்தாதி

பாடல்  2


துணையும்,

தொழும்  தெய்வமும்,

பெற்ற தாயும்,

சுருதிகளின்  பணையும்,

கொழுந்தும், 

பதிகொண்ட  வேரும்,

பனிமலர்  பூங்கணையும் ,

கருப்புச்  சிலையும்,

மென்  பாசாங்குசமும், 

கையில்  அணையும் 

திரிபுர  சுந்தரி,

ஆவது 

அறிந்தனமே !


' யாதுமாகி  நின்றாய்  காளி '  என்று  சொல்லப்படுவதுபோல்,  

அபிராமி  அன்னையை,  எல்லாம்  நீயே  என்று  தெளிவடைதல்.







Saturday 18 January 2014

அபிராமி அந்தாதி. ( 1 )

அபிராமி  அந்தாதி.


மாணிக்கவாசகப்  பெருமான்  தன்னுடைய சிவபுராணத்தை  முடிக்கும்போது

"  சொல்லிய  பாட்டின் 
           பொருளுணர்ந்து  சொல்லுவார் 
  செல்வர்  சிவபுரத்தின் 
           உள்ளார்  சிவனடிக்கீழ் 
  பல்லோரும்  ஏத்தப் 
           பணிந்து    " 
என்று  பாடுகிறார்.

அபிராமி அந்தாதியில்  உள்ள  பாடல்களை  அதன் பொருள்  உணர்ந்து
பாராயணம்  செய்தால், சகல  நன்மைகளும்  கிடைக்கும்  என்பது  உறுதி .


மாணிக்க வாசகர், அதே சிவபுராணத்தில்,

" அவன் அருளாலே  அவன் தாள்  வணங்கி..."

என்று பாடுகிறார்.  அபிராமி அந்தாதியில்  உள்ள  பாடல்களைப்   பாராயணம்  செய்யவும்  அவள்  அருள்  வேண்டும்.  அபிராமியின்  அருள்  பெற்று,  பாடல்களின்  பொருள்  உணர்ந்து  பாராயணம்  செய்திடுவீர்!

பிள்ளையார்  காப்பு.

தாரமர்  கொன்றையும் 
                 சென்பகமாலையும்  சாத்தும்

தில்லை  ஊரர்  தம் பாகத்து  
                  உமை  மைந்தனே ! 

உலகேழும்  பெற்ற  
                  சீர்  அபிராமி  அந்தாதி  

எப்போதும்  என்  
                  சிந்தை  உள்ளே,  

காரமர்  மேனிக்  
                 கணபதியே !
நிற்கக்     கட்டுரையே !




நூல் 

உதிக்கின்ற  செங்கதிர்   உச்சித்  திலகம் !  

உணர்வுடையோர்  மதிக்கின்ற   மாணிக்கம்.!

மாதுளம்  போது !

மலர்  கமலை  துதிக்கின்ற  மின்கொடி  !

மென்கடிக்  குங்குமத்  தோயமென்ன  

விதிர்கின்ற  மேனி, 

அபிராமி,  எந்தன்  விழுத் துணையே !                                        பாடல்  1



அபிராமியே  உற்ற  துணை  என்ற  சரணாகதி.

தொடரும்....


         



         

Thursday 16 January 2014

விரிஞ்சிபுரம்

தலவிருட்சம்  -  பனை மரம்.


மூலவர் சற்று ஈசாணியப்பக்கம் சாய்ந்துள்ளார்.பிரம்மனுக்கு முடியை சாய்த்து கொடுத்ததால் அவ்வாறு உள்ளது.
*
திருவண்ணாமலையில் அடிமுடி காண்பதில் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் பூஜை செய்து திருமுடி கண்டிருக்கிறார்.
*
பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில் சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
*
விரிஞ்சன் என்று பிரம்மாவுக்கு பெயர். பிரம்மா பூஜை செய்ததால் விரிஞ்சிபுரம் என்று பெயர் வந்தது.
*
மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன.
*
தனபாலன் என்ற வணிகனுக்கு வேடுவராய் சிவபெருமான் வழித்துணை வந்தருளிய தலம்.இதனாலேயே வழித்துணை நாதர் என்ற பெயரும் சுவாமிக்கு உண்டு
*
திருமூலர்,பட்டினத்தார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.
*
மூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல் இருப்பது விசேசம்
*
ஸ்ரீ மத் அப்பய்ய தீட்சிதர் பிறந்த இடம் இது.
*
சிற்பக்கலைக்கு சிறந்த சான்றாகத் திகழும் தலம் இது.
*  விரிஞ்சிபுரம் மதிலழகு -  என்று சொல்லப்படுகிறது.

கடைஞாயிறு திருவிழா: திருவண்ணாமலையில் சிவபிரானின் முடி தேடி அன்னமாகப் பறந்த பிரம்மன் தாழம்பூவைக் கொண்டு திருமுடியைக் கண்டதாகப் பொய் சொன்னதும், தண்டனைக்கு ஆளானதும் பலரும் அறிந்த புராணம். அந்தப் பிரம்மன், இந்த விரிஞ்சிபுரப் பெருமானை ஆராதிக்கும் சிவநாதன்-நயினாநந்தினி தம்பதிக்கு மகனாகப் பிறந்தான். மைந்தனுக்கு உபநயனமும், சிவ பூஜைக்கான தீட்சையும் செய்து வைக்கும் முன்பே, தந்தை இறந்துவிட்டார். உரிய பருவம் வந்ததும், அவற்றை தம் மகனுக்குச் செய்விக்கும்படி அன்னை நயினாநந்தி உறவினர்களிடம் கேட்டாள். அவர்கள் அதற்கு மறுத்ததுடன் பூஜா உரிமையையும் சொத்துக்களையும் தமக்கே எழுதித்தரக் கூறினர். வேறு வழியற்ற அவள் பெருமானைச் சரணடைந்தாள்.

அவள் கனவில் தோன்றிய ஈசன், பிரம்ம தீர்த்தக் கரையில் நாளை அதிகாலை உன் மகனை நீராட்டிவை என்று சொன்னார். ஈசன் சொன்னது கார்த்திகை மாத சனிக்கிழமை. மறுநாள் அதிகாலை ஈசன் சொன்னபடியே தன் மகனுடன் காத்திருந்தாள். வயோதிக அந்தணராக வந்த ஈசன், சிறுவனுக்கு பிரும்மோபதேசமும், சிவ தீட்சையும் செய்வித்தார். கரையேறி வந்தவர் மகா லிங்கமாக மறைந்துவிட்டார். ஈசன் கனவில் சொன்னபடியே சிறுவனை யானை மீது திருமஞ்சனக் குடத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர் மன்னர்கள். ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆயலக் கதவு திறந்துகொண்டது.

குடத்துடன் உள்ளே சென்ற சிறுவனோ, மரவு வழுவாமல் முறைப்படி பூஜைகளைச் செய்ய முற்பட்டான். அப்போதுதான், அபிஷேகம் செய்ய தன்னுடைய உயரம் போதாமையால் வருந்தினான். சிறுபாலனின் வருத்தம் அறிந்த பெருமான். பாணத்தைச் சாய்த்து, அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். சிருஷ்டிகர்த்தாவாக விளங்கும்போது பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, சிறுவனாக வந்து வருந்தியபோது காட்டி, அந்த அபிஷேகத்தையும் ஏற்றருளிய நாள் கார்த்திகை கடைஞாயிறு. கடைஞாயிறன்று கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு, விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடி கோயிலில் உறங்குகிறார்கள். அவர்கள் கனவில் பெருமான் காட்சி தந்தால் அடுத்த வருடமே கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.











திருவண்ணாமலையில் ஈசனின் முடி காண முடியாமல் ஈசனாரின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு ஈசனாரின் முடி கண்டதாக கூறி அதனால் அவதியுற்ற பிரம்மா, தேவரூபத்தில் காட்சி தரக்கூடாது என்று ஈசன் கருதியதால் விரிஞ்சிபுரத்தில் உள்ள இக்கோயில் குருக்கள் மகனாக பிறந்து சிவசர்மன் என்ற பெயரோடு வளர்ந்தான். கொஞ்ச காலத்தில் தந்தையார் மறைந்ததால் சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்ய சிறுவன் தயாரானான்.சுவர்ண கணபதியை ஆராதித்த பின் கையில் திரு மஞ்சன குடத்துடன் பகவானுக்கு அபிசேகம் செய்ய எத்தனிக்கையில் மகாலிங்கம் உயரமாக இருந்ததால் (சிவசர்மன் சிறு பாலகனாக இருந்ததால்) திருமுடி எட்டவில்லை.அது கண்டு எந்தையே எனக்கு எட்டவில்லையே நும்முடி என்று உருகி நிற்க அவனது பக்திக்கு இரங்கி ஈசனார் தம் திருமுடியை வளைத்தார். பெருமான் திருமுடி வளைந்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகா லிங்கமாக ஸ்ரீ மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்று வரலாறு கூறுகிறது.







சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன. இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது.இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது.மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது. மூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல் இருப்பது விசேசம்.       ஸ்ரீ மத் அப்பய்ய தீட்சிதர் பிறந்த இடம் இது.



தினமலர்