Sunday 28 June 2020

சிவ புராணம் ( 50 )


50. அருந்ததியின் சிறப்பு





ஒரு சமயம் இந்திரன், அக்கினி, சூரியன் மூவரும் வசிஷ்டரின் மனைவி அருந்ததியின் கற்புத் தன்மையைப்  பரிசோதிக்க எண்ணம் கொண்டனர். ஒருநாள் அருந்ததி நீர் கொண்டுவரத் தடாகத்துக்குச் சென்ற போது அவள் முன்பு மூவரும் வந்து நின்றனர். அருந்ததி அவர்களைத் தேவ புருஷர்கள் என்று அறிந்து வலம் வந்து வணங்கினாள். பின்னர் அவர்களைப் பார்த்து பரம புருஷர்களே, என்னை நாடிவந்த காரணம் என்ன?" என்று கேட்டாள்.

உன்னிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கான பதிலைத் தெரிந்து செல்ல விரும்பியே வந்துள்ளோம்" என்றனர் மூவரும். அப்படியானால் பர்ணசாலையில் சென்று தங்கியிருங்கள். அதற்குள் நீர் கொண்டு வந்து விடுகிறேன்" என்றாள்  அருந்ததி. நீ போக வேண்டாம். இப்போதே குடத்தில் நீர் நிறையச் செய்து விடுகிறோம்" என்றனர் அவர்கள். அதற்கு அருந்ததி சம்மதித்தாள்.

பிறப்பினால் பிராமணனிடத்தில் எனக்குப் பயமில்லா திருப்பதும், தவம், பிரம்மசரியம், அக்னிஹோத்ரம் முதலான அனுஷ்டானங்களால் என் பதவியை ஒருவன் அடையலாம் என்பதும் சத்தியமானால் இந்தக் குடம் கால்பங்கு ஜலம் நிரம்பியதாக ஆகட்டும்" என்றான் இந்திரன்குடத்தில் கால் பங்கு ஜலம் நிரம்பிற்று.

யாகம், பிதுர்சிரார்த்தம் இவைகளால் அடையும் திருப்தியை விட அதிதிக்கு அன்னமளிப்பது எனக்கு அதிகப் பிரீதியைக் கொடுப்பது சத்தியமானால் குடத்தில் இன்னொரு பங்கு ஜலம் நிரம்பட்டும்" என்றான் அக்கினிகுடத்தில்  பாதி வரை நீர் நிறைந்தது.

தினந்தோறும் அதிகாலையில் வேதியர் செய்யும் அர்க்கியப் பிரதானம், அஸ்திரமாகி மந்தேஹால் என்று அரக்கரை நீக்குவது சத்தியமானால் குடத்தில் கால்பங்கு நீர் நிறையட்டும்" என்றான் சூரியன். குடத்தின் முக்கால் பகுதிவரை நீர் நிறைந்தது.

இரகசியமாக இருக்கக்கூடிய சூழ்நிலையும் பிற புருஷர்களோடு சகவாசமும் கிடைக்கும் வரையில் ஸ்திரீகள் பதிவிரதைகளாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களை ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும் என்பது சத்தியமானால் குடத்தில் நீர் நிரம்பி வழியட்டும்" என்றாள் அருந்ததி. குடம் முழுவதும் நீர் நிரம்பி வழிந்தது.


இந்திரன், அக்கினி, சூரியன் மூவரும் மகிழ்ந்து அவளைக் கொண்டாடிச் சென்றனர். முன்னர் ஒரு சமயம் அக்கினி சப்தரிஷிகளின் மனைவியரைக் கண்டு மோகித்து விரகதாபத்தால் துடித்தான். அப்போது அவன் மனைவியான ஸ்வாஹாதேவி அவனைத் திருப்தி செய்ய, தன் சக்தியால் சப்தரிஷிகளின் மனைவியரைப் போலத் தான் உருக்கொண்டு அவன் உள்ளத்தைத் திருப்திப் படுத்தினாள். ஆறு பேர்களைப் போல் தான் அவளால் உருவம் கொள்ள முடிந்தது. அருந்ததியைப் போல் அவளால் உருவம் எடுக்க முடியவில்லை. அவள் மகிமையை உணர்ந்து ஸ்வாஹா தேவி அவளைக் கண்டு வணங்கி, அருந்ததி, நீ ஒரு உத்தமி. எவனொருவன் தன் திருமணக் காலத்தில் அக்கினிபந்துமித்திரர் முன்னிலையில் உன்னைத் தரிசிக்கிறானோ, அவன் சுகத்தையும், தனத்தையும் பெற்று நீண்டகாலம் மனைவியோடு சுகித்திருப்பான். அந்தப் பெண், வைதல்ய கோலம் இல்லாமல் சுமங்கலியாகவே தன் வாழ்நாளை முடித்துக் கொண்டு கணவனுடன் புண்ணிய லோகத்திலும் சேர்ந்திருப்பாள்" என்று அனுக்கிரகித்தாள்.


ஹரி ஓம் !!!