Tuesday 26 May 2015

வைகாசி  மாதப் பயணம் .. ( 2 )

அருணகிரியாரின்  பெருமைகளைக் கண்ட  சம்பந்தான்டான் ,
ஒரு சூழ்ச்சி  வலை விரிக்கிறான்.  அரசர் ,  தன்  கண் பார்வையை
திரும்பப்  பெறுவதற்கு , தேவ லோகத்திலிருந்து  பாரிஜாத
மலரைக் கொண்டு வர வேண்டும் என்றும், அது  அருணகிரியாரால்
மட்டும்தான்  முடியும் என அரசரிடம்  கூறுகிறான் .  அருணகிரியாரும்,
அரசனின் கட்டளைப்படி  தேவலோகம் சென்று பாரிஜாத மலரைக்
கொண்டுவர  முடிவெடுக்கிறார். தேவ லோகத்திற்கு  பூத உடலுடன்
செல்ல  முடியாது  என்பதினால் , வேறு உருவத்தில் செல்ல
முடிவெடுத்து , கிளி கோபுரத்தின் மேலேறிய போது , அங்கு
இறந்து கிடக்கும் கிளியின் உடலைக் காண்கிறார்.


சித்தர்கள், அஷ்டமா சித்திகளையும்  ஆண்டவன் அருளால்
கை வரப் பெற்றவர்கள். பரகாயப் பிரவேசம் எனப்படும்  கூடு விட்டு
கூடு  பாயும் சித்தியை  கைவரப் பெற்ற  அருணகிரிநாதர் ,
தன் பூத உடலை  ஒருபுறம்  கிடத்தி விட்டு, கிளியின் உடலில்
பாய்ந்து, தேவலோகம் செல்கிறார்.  இந்த தருணத்திற்காகவே
காத்திருந்த  சம்பந்தாண்டான் , அருணகிரியாரின்  உடலை
எரித்து விடுகின்றான் ...

சம்பந்தாண்டான்,  அருணகிரியாரின்  உடலை  எங்கு
எரியூட்டியிருக்க முடியும்.. ?

மேலும்,  அருணகிரியாரின் உடலை   சுமந்து கொண்டு,
கோபுரத்திலிருந்து  கீழே இறங்கிய சம்பந்தாண்டான் , ஒரு
ஒதுக்குப்புறமான  இடத்தை  தேடியிருப்பானா  அல்லது
கோபுரத்துக்கு  அருகிலேயே  எங்காவது  எரியூட்டியிருப்பானா ?


ஆத்திரக்காரனுக்கு  புத்தி மட்டு  அல்லவா.. ?  எனவே ,
சம்பந்தாண்டான் ,  கோபுரத்திற்கு  அருகிலேயே எரியூட்டியிருக்க
வேண்டும்  என்பது  என்னுடைய கருத்து...

பழி வாங்கும் எண்ணத்தில்  இருப்பவர்களுக்கு , சில
குரூரமான எண்ணங்கள்  தோன்றுவது இயல்பு.

" அருணகிரியின்  வேண்டுதலுக்கு இணங்கி,  அரசருக்கு 
காட்சி கொடுத்தாயே .... முருகா... ,  இங்கே பார்  உன் பக்தனின் 
கதியை..."  என்ற  எண்ணத்தில் அருணகிரியாரின் உடலை ,
கம்பத்து இளையனாரின்  சன்னதியின்  பின்புறம்  எரியூட்டியிருக்கவும்
வாய்ப்பு  இருக்கிறதல்லவா ?

ஸ்ரீ ரமணர்,  நிஷ்டையில் இருந்த  பாதாள  லிங்கம் ,
இந்த மண்டபத்திற்கு  அருகில் உள்ளது.

ஸ்ரீ  சேஷாத்ரி சுவாமிகளும் , தன்  பெரும்பாலான நேரத்தை
கம்பத்து  இளையனாரின்  சன்னதியில்  கழித்திருக்கிறார்.

சாதாரணமாக, சித்தர்களும், ஞானிகளும் , மற்றொரு சித்தரோ
அல்லது ஞானியோ  இருக்கும் இடத்திற்கு  அருகிலேயே
இருந்திருக்கின்றனர்.

மேலும், இந்த மண்டபத்தின்  தூண்களில்,  சில  சித்தர்களின்
உருவங்கள்....

இந்த எண்ணத்தின்  அடிப்படையில்,  இந்த மண்டபம்
அருணகிரியாருக்கு  உரியதாக இருக்கக்கூடும்  என்ற  முடிவிற்கு
வந்திருந்த  நாங்கள் ,  அருணகிரி நாதரையும், அங்கிருக்கும்
சித்தர்களையும்  வழிபாட்டு , முன் சென்றோம்..

யானை  முகனை  வழிபாட்டு, சிவனின்  முதற் சீடராம்
நந்தி தேவரை வலம்  வந்து , முன் செல்ல ,
எதிரே  கிளி  கோபுரமும் , கோபுரத்து  இளையனாரும் ...

தொடரும்..........






1 comment:

  1. அன்புள்ள திரு. G. பெருமாள் செட்டியார்அவர்களுக்கு வணக்கம்!
    திரு VGK நடத்திய சிறுகதை விர்மசனப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் நீங்கள் என்ற முறையில் தாங்கள் எனக்கு அறிமுகம்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப் பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/25.html

    ReplyDelete