Saturday 5 March 2016


திருவெண்ணைநல்லூர்
இறைவன் பெயர்  :  தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர்,
                                           வேணுபுரீஸ்வரர்
இறைவி பெயர்  :  வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை
திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும்,
விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. 
தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில்
 திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. 
திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். 
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-00 மணி முதல் பகல் 11 மணி வரையிலும்,
மாலை 5-00 மணி  
முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு:    93456 60711 
இத்தலத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். 
கிழவராக வந்து , சிவா லிங்கத்தில் ஐக்கியமாகும் முன் , கருவறை வாசலில் 
சிவபெருமான் கழற்றி வைத்த பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது.
சுந்தரருக்கும், கிழவராக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால்,
பஞ்சாயத்து நடத்தப்பட்ட மண்டபம் இன்றும்  
உள்ளது.
 பரமன் சாய்ந்திருந்த தூண் இன்றும் வெதுவெதுப்பாக உள்ளது.
அருச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது.
தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் உள்ளது.
மஹாவிஷ்ணு பூஜித்த சங்கர லிங்கம் உள்ளது.
தன் மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு , முருகன் மயிலோடு நடனமாடி
காட்சி தந்த திருத்தலம் இது.
தருமனும், பாஞ்சாலியும் தனித்திருந்ததை பார்த்ததால் உண்டான பாவத்தை ,
அருச்சுனன், இங்கு இறைவனை நோக்கி தவமிருந்து போக்கிக் கொண்டான்.
கருவுற்ற பசுவை வேள்வி செய்த பாவத்தை, வித கோத்திரர் எனும் அந்தணர் ,
இங்கு வந்து அருள்துறை தீர்த்தத்தில் 
நீராடி, 
இறைவனை பாடி பணிந்து போக்கிக் கொண்டார்.

மகிஷனை வதம் செய்த ஆக்ரோஷம் தீர நதியில் குளித்து , மங்களம் பெற்றதால் ,
அம்பிகைக்கு மங்களாம்பிகை  
என்று பெயர் .
 அம்பிகை , நான்கு திருக்கரங்களுடன் , நின்ற கோலத்தில் அருள் புரிகிறார்.
சங்கநிதி, பதும நிதி, ஸ்ரீ சக்கரத்துடனும்,
சிம்ம வாகனத்துடனும் இருக்கும் 
அம்பிகையை தரிசனம் செய்வது என்பது,
முற்பிறவியின் பயனே !
தல புராணம் 
திருமண நாளன்று, திரு  நாவலூரில் திருமணக்கோலத்தில் இருந்த சுந்தரரை,
ஈசன் தடுத்து ஆட்கொள்கிறார். 
சுத்தரருக்கும், சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் இதுவே.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர், 
" பித்தா பிறை சூடி " என்ற புகழ்பெற்ற பாடலை பாடிய தம் இதுவே. 
தாருகாவனத்து முனிவர்கள் இறைவனை கொல்ல ,
வேள்வியில் தோன்றிய யானையை ஏவினர். 
அவர்கள் எண்ணம் ஈடேரவில்லை.
அவர்கள் ஆணவம் அழிந்து,
இத்தலத்தில், இறைவனை நோக்கி தவம் புரிந்தனர். 
இறைவனும், அவர்களின் தவறை மன்னித்து அருள் புரிந்தார்.
எனவே இத்தலம் அருள் துறை என பெயர் பெற்றது. 
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் - பெண்ணைத் தென்பால்  வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக் காளாய் இனி அல்லேன் எனலாமே. 
திருப்புகழ்
தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன தனதன தத்தன
          தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான

......... பாடல் .........
பலபல தத்துவ மதனையெ ரித்திருள்
     பரையர ணப்படர் வடவன லுக்கிரை
          படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப்
பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு
     பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு
          பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
     வொலிமலி யத்திரு நடனமி யற்றிய
          கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக்
கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ
     டனகச கத்துவம் வருதலு மிப்படி
          கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே
புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை
     நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர
          புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே
புனமலை யிற்குற மகளய லுற்றொரு
     கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய
          புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா

மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை
     கிழவிய றச்சுக குமரித கப்பனை
          மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
     திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
          மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணப் படர்
வட அனலுக்கு இரை பட ... பலபல தத்துவ சேஷ்டைகளையும்,
அஞ்ஞான இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை
வடவா முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி,
நடநச் சுடர் பெரு வெளியில் கொ(ள்)ள இடம் மேவி பவனம்
ஒழித்து இரு வழியை அடைத்து ... நடன ஜோதியை பரந்த ஆகாச
வெளியில் கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில்
சேர்ந்து, வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை* என்ற இரண்டு
வழிகளையும் மாற்றி அடைத்து,
ஒரு பருதி வழிப் படவிடல் ககனத்தொடு பவுரி கொ(ள்)ளச்
சிவமயம் என முற்றிய பரம் ஊடே ... ஒப்பற்ற சூரிய ஜோதியின்
பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ
மயமாய் முற்றும் பரந்த பர வெளியில்,
திருவெண்ணைநல்லூர் (  5 )
கலகல எனக் கழல் பரிபுர(ம்) பொன் பத ஒலி மலியத் திரு
நடனம் இயற்றிய கனக சபைக்குளில் உருகி நிறைக் கடல்
அதில் மூழ்கி ... கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய திருவடியின்
ஒலி நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த
சுகானந்தக் கடலில் முழுகி,
கவுரி மின்னல் சடை அரனொடு நித்தமொடு அனக
சகத்துவம் வருதலும் இப்படி கழிய நலக்கு இனி நிறம் என்
நவிற்று உடல் அருள்வாயே ... பார்வதி தேவி மின்னலை ஒத்த
சடையையுடைய சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற
உலக தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு
கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை
எனக்குத் தந்தருளுக.
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில்
கழுக்களில் உற விடு சித்திர புலவன் எனச் சில விருது
படைத்திடும் இளையோனே ... இழிந்தவர்களும், திருநீற்றை
விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை
வரிசைகளில் பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை
கொண்டவன் என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய
(திருஞானசம்பந்தர் என்னும்) இளையவனே,

புன மலையில் குற மகள் அயல் உற்று ஒரு கிழவன் எனச்
சுனை தனில் அவள் ஐப் புய(ம்) புளகிதம் உற்று இபம் வர
அணையப் புணர் மணி மார்பா ... தினைப் புனம் உள்ள வள்ளி
மலையில் குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன்
என வேடம் பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை
புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய
மார்பனே,
மலை சிலை பற்றிய கடவுள் இடத்து உறை கிழவி அறச் சுக
குமரி தகப்பனை மழு கொ(ண்)டு வெட்டிய நிமலிகை பெற்று
அருள் முருகோனே ... மேரு மலையை வில்லாகப் பிடித்த
சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள்,
தருமமே புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு
வெட்டிய தூய்மையானவள் ஆகிய (தாக்ஷாயாணி என்ற) உமாதேவி
பெற்றருளிய முருகோனே,
மகிழ் பெ(ண்)ணையில் கரை பொழில் முகில் சுற்றிய
திருவெ(ண்)ணெய் நல் பதி புகழ் பெற அற்புத மயிலின்
மிசைக் கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே. ... மகிழ்ச்சி
தரும் பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த
திருவெண்ணெய்நல்லூர்** என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க
அற்புதமான மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும்
பெருமாளே.

* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
      அதன் சுருக்கம் வருமாறு:
நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு
ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள்,
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி,
ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும்
(இடைகலை, பிங்கலை,சுழுமுனை முதலியன) உள்ளன.
'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.
'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.
சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.
'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும்
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.
சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்
மன அமைதி ஏற்படும்.
 ( திருச்சிற்றம்பலம்  )

1 comment:

  1. பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamin.in)

    ReplyDelete