Wednesday 30 May 2018

கண்ணமங்கலம் ( எ ) கண்ணத்தங்குடி
PIN  614 711

தேவார வைப்புத்  தலம்

அரிவாட்டாய நாயன்மார் அவதார,
முக்தி தலம் 


Route Map 

சிற்றேமத்தில் இருந்து 12 கி மீ  

திருத்துறைப்பூண்டியில் இருந்து 6 கி மீ   

நாகப்பட்டினத்தில் இருந்து 47 கி மீ  

திருக்கோவிலைப் பற்றிய விவரங்கள் 

தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கண்ணமங்கலம் என்ற ஊரில் (இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது) வேளாளர் குலத்தில் தாயனார் என்ற சிவனடியார் அவதரித்தார். இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளராமல் தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கி கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப் பொருள்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப் பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. மாவடுவை கடித்துச் சாப்பிடும் சப்தமும் கேட்டது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு "அரிவாட்ட நாயனார்" என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.







No comments:

Post a Comment