Thursday 7 May 2020

சிவ புராணம் ( 18 )

18. உஜ்ஜயினி மகாகாளேசர் 





க்ஷிப்ரா நதி தீரத்தில் அவந்திகாபுரி என்றொரு படடணம் இருக்கிறது. அப்பட்டணத்தில் வேதப்பிரியன் என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் சிவபெருமானிடம் இடையறா பக்தி கொண்டவன். சிவ பூஜை செய்து தினமும் பகவானை ஆராதித்து வந்தான்.

அவனுக்கு நான்கு புதல்வர்கள். தேவப்பிரியன், மேதன், சுவிரதன், தருமவாதி ஆகிய நால்வரும், தந்தையைப் போன்று சிவ பக்தி உடையவர்கள்.

அவ்வூருக்குப் பக்கத்தில் ரத்தினமாலா என்றொரு பர்வதம் இருக்கிறது. அதில் தூஷணன் என்னும் அரக்கன் இருந்தான். அவன் பிரம்மதேவனைக் குறித்துக் கடும் தவம் செய்து அளவில்லா பராக்கிரமத்தை அடைந்திருந்தான். அதனால் செருக்குற்ற அவன், அந்தப் பகுதியில் இருந்தவர்களைத் துன்புறுத்தியும் முனிவர்கள் செய்யும் தவத்திற்கு இடையூறு செய்தும் வந்தான். பகவானைப் பூஜிப்பவர்களையும், அடித்து பூஜை முதலியவற்றை விட்டுவிடுமாறு துன்புறுத்தினான். 
ஒரு சமயம், தூஷணன் தன்னுடைய படைகளுடன் அவந்திப் பட்டணத்தில் நுழைந்து, அங்குள்ளவர்களை அடக்கித் தனக்குக் கீழ்படியுமாறு செய்தான். அந்தணர்களை நித்திய பூஜைகளைச் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தான். இதனால் கலக்கமுற்ற வேதியர்கள், தேவப்பிரியனின் புதல்வர்கள் நால்வரும் தவம் செய்யும் இடத்தை அடைந்து, அவர்களிடம் முறையிட்டனர். 
“ பகவானிடத்து இடையறாது பக்தி பூண்டு, அவரது திருக்கடாக்ஷத்திற்குப் பாத்திரமாயிருக்கும் பெரியோர்களே ! எங்களை ரக்ஷிக்க வேண்டும். தூஷானன் எங்களைத் துன்புறுத்தி வருகிறான். அவனுக்கு பயந்து நித்திய பூஜைகளைக்கூட செய்ய முடியாமல் தவிக்கிறோம். அவன் அழிவதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

“ பேரன்பு உடையோர்களே ! நாங்களும் உங்களைப் போன்று மானிடர்களே ! அவர்களை அழிக்கும் சக்தி எங்களுக்குக் கிடையாது. நம் அனைவரையும் காத்து ரக்ஷிக்க சர்வேஸ்வரன் இருக்கின்றார், அவர்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நாம் நமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்து வருவோம். நம்மை ரக்ஷிப்பது அவருடைய பெறுப்பல்லவா “ என்றனர் நால்வரும். 

தன் படைகளுடன் அட்டகாசம் செய்துகொண்டிருந்த தூஷணன் அவ்விடத்திற்கு வந்தான். தன்னைக் கண்டு அவந்திப் பட்டணமே நடுங்கும்போது, கொஞ்சமும் பயமின்றி இவர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டதும் , தூஷணனுக்கு ஆத்திரம் அதிகமாகி,
“ என்ன காரியம் செய்கிறீர்கள்? இம்மாதிரி பூஜைகள் எனக்குப் பிடிக்காதென்றும், இவற்றைச் செய்யக்கூடாதென்றும் நான் கட்டளையிட்டதை மறந்துவிட்டீர்களா ? “ என்று சீறினான். 
அரக்கனைக் கண்ட மாத்திரத்திலேயே அனைவரும் நடுங்கினாலும்,  “ அரக்கனைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம், பகவானை நினைத்து பூஜையில் ஈடுபடுவோம் “ என்று வேதப் பிரியனின் புதல்வர்கள் கூறியதை நினைவில் நிறுத்தி, அரக்கனை அலட்சியப்படுத்தி, சிவ பூஜையைத் தொடர்ந்தனர். 

கோபம் தலைக்குமேல் ஏற, தூஷணன், அங்குள்ளோர் அனவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டன். அவன் ஆணைக்குப் பணிந்த அவன் படைகள், யாகசாலையின் உள்புகுந்து முதலில் யாகத்தைக் கலைக்க முற்பட்டனர்.
பூஜைக்கு வேண்டிய சிவலிங்கங்களைச் செய்ய மண் தோண்டி எடுக்கப் பட்ட இடம், நீர் நிரம்பிக் குளமாக இருந்தது. அந்தக் கிளத்தில் இருந்து ‘ கிடு கிடு “ க்கும் சப்தத்துடன் மஹாகணேசர் தோன்றினார். அவ்ர் செய்த ஒரு ஹூங்காரத்திலேயே  தூஷணனும், அவனைச் சார்ந்தவர்களும் பஸ்மாயினர். 

அவந்தி பட்டணத்து மக்கள் பெரு மகிழ்ச்சிக்குள்ளாயினர். அரக்கனின் இன்னல்களில் இருந்து காத்த இறைவனைப் பலவாறு துதித்துக் கொண்டாட, இறைவனும், அவர்களின் மனோபீஷ்டங்கள் நிறைவேற ஆசீர்வதித்து மறைந்தார்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment