Tuesday 19 May 2020

சிவ புராணம் ( 22 )

22. காசி ஷேத்திரம்

பரப்பிரம்மத்திலிருந்து உண்டான பிரகிருதியும், விஷ்ணுவும், ‘தங்களைத் தோற்றுவித்தவர் யார்’ என்பதையும், ‘தாங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவென்பதையும்’ அறியாது குழம்பிய போது, ‘தவம் செய்து சிருஷ்டியைத் தொடங்கு’ என்றொரு அசரீரி கேட்டது. அவ்வாறே அவர்கள் தவம் செய்ய தீர்மானித்தனர். ஆனால் எந்த இடத்தில் அமர்ந்து தவம் செய்வது என குழம்பினர். மறுபடியும் அவர்களுக்கு அசரீரி கட்டளையிட்டது.
கோடி சூரியப் பிரகாசத்தோடும் பஞ்சக்குரோச விஸ்தீர்ணத்தோடும் கூடிய நகரம் ஒன்று பரமாத்மாவால் தோற்றுவிக்கப்பட்டு ஆகாயத்தில் உள்ளது என்றும் அங்கே சென்று தவம் செய்யுமாறு அவர்களுக்கு அசரீரி தெரிவித்தது. அவர்களும் அங்கே தவம் செய்தனர். கடுமையான தவத்தினால் விஷ்ணுவின் உடல் இளைத்துப் போய் அவருடைய உடலிலிருந்து வியர்வைப்  பெருகத் தொடங்கியது. அந்த நீர், பிரபஞ்சம் முழுவதும் வியாபித்தது.
விஷ்ணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. பகவானைத் தியானித்தார். அப்போது சிவபெருமானின் ஒரு காதிலிருந்து மணி ஒன்று அவர் முன்பு விழுந்தது. அந்த இடமே மணிகர்ணிகை என்ற பெயருடன் விளங்கத் தொடங்கியது. அதன் பின் விஷ்ணுவிடமிருந்து பிரம்மதேவன் தோன்ற, உலக சிருஷ்டி தொடங்கியது.
விஷ்ணுவின் வியர்வையினால் மூடப்பட்ட அந்த ஆகாய நகரம்ஈசனின் திரிசூலத்தால் தாங்கி நிறுத்தப்பட்டிருந்தது. விஷ்ணுவும், பிருகிருதியும் தங்கி தவம் செய்து அந்த நகரத்தைப் பூமத்தியிலே இறக்கினர். அந்த நகரமே காசி க்ஷேத்திரமாகும். கர்மங்களை நாசஞ் செய்வதால் அதற்குக் காசி என்று பெயர் விளங்கிற்று. இதர ஸ்தலங்களில் சாரூப்பிய முக்தி கிட்டும். இந்த க்ஷேத்திரத்திலோ சாயுஜ்யம் என்னும் முக்தி உண்டாகுமாம்.
காசியில் இறப்பவர்களுக்கு மறுபிறவி என்பதே இல்லை. இறப்பவர்களின் செவிகளிலே பகவானே தாரக மந்திரத்தை உபதேசித்து அவர்களுக்கு முக்தி அளிக்கிறார்.
காசி க்ஷேத்திரத்தின் பிரபாவம் எத்தனையோ உண்டு.
ஒரு சமயம் பரமசிவன் சஞ்சரித்துக்கொண்டு வரும்போது பிரம்மலோகத்தை அடைந்தார். பிரம்மதேவன் ஓடிவந்து பகவானை வரவேற்று அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் பூஜித்து உபசரித்தார். சிவபெருமானைப் பலவிதங்களிலும் ஸ்தோத்தரித்தார்.
பிரம்மதேவனுடைய ஐந்து திருமுகங்களில் நான்கு முகங்கள் மட்டுமே பகவானைப் புகழ்ந்து பாடின. ஐந்தாவது முகம் புகழ்வதற்கு மாறாகச் செருக்குடன் பகவானை நிந்தித்தது.
ஈசனின் உள்ளம் சிறிது வேதனை அடைந்தது. பிரம்ம தேவனின் புனிதத் தன்மையை அந்த ஐந்தாவது முகம் கெடுத்து விடுகிறதே என வருத்தப்பட்டார். அதை அனுமதித்தால் அது பிரம்மனுக்குத்தான் துன்பம் என்பதால், அவரை நெருங்கிக் கைவிரலால் அதைக் கிள்ளி எறிந்தார்.
கிள்ளப்பட்ட பிரம்மனின் ஐந்தாவது தலை, பகவானின் கைவிரலில் அப்படியே ஒட்டிக்கொண்டு விட்டது. பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பிடித்ததால் தலை, விரலை விட்டு அகலவில்லை.
பிரம்மதேவனுக்கு சரஸ்வதியின் சாபம் ஒன்று இருந்தது. அவளைச் சிருஷ்டித்தபோது அவளுடைய அபரிமிதமான அழகையும், அறிவையும் கண்டு அவளைத் தாமே அடைய எண்ணினார் பிரம்மதேவன். சரஸ்வதியைத் தம்மை மணக்கும்படி கூறியபோது அவள் சம்மதிக்கவில்லை.
பிரபோ தாங்கள் கூறுவது விசித்திரமாக அல்லவா இருக்கிறது. தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட நான், தங்களுடைய மகள் அல்லவா. அப்படியிருக்கத் தங்களுக்கு எவ்வாறு தாரமாக முடியும்?" என்று மறுத்தாள்.
பிரம்மதேவன் அவளை வற்புறுத்தி மணந்து கொண்டு விட்டார். அப்போது அவள் என்னை மகளே என்று அழைக்க வேண்டிய வாயால் மனைவியாக அழைத்த தோஷத்துக்கு பின்னால் ஒரு சமயம் கைலாசநாதனால் தகுந்த சிக்ஷை பெறுவீர்கள்" என்று சாபம் கொடுத்தாள். அதன் காரணமாகவே பிரம்மனின் ஐந்தாவது சிரம் சிவனை நிந்தித்ததும், அவரால் கிள்ளப்பட்டது.
பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமான் பல க்ஷேத்திரங் களுக்கும் விஜயம் செய்தார். எங்குச் சென்றாலும் கைவிரலில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்மதேவனின் சிரம் நீங்கவில்லை. கடைசியாக அவர் காசியை அடைந்தார். அங்கு சென்றவுடன் விரலில் ஒட்டிக் கொண்டிருந்த சிரம் விழுந்து விட்டது. பகவானுக்குச் சந்தோஷம் ஏற்பட்டது. அந்த ஸ்தலத்திலே நித்தியவாசம் கொண்டார். பிரம்மனின் சிரம் விழுந்த இடம் கபாலமோசனம் என்று அழைக்கப்படுகிறது.
சகலமான பாபிகளும் காசியில் இறக்க நேர்ந்தால் அவர்கள் பாபங்கள் ஒழிந்து முக்தியை அடைவர். யாவருக்கும் முக்தி கொடுப்பதால் அரிமுக்தம் என்ற பெயரும் இந்நகருக்கு விளங்குகிறது. அதாவது தன்னிடத்தில் வருபவர்களைக் கைவிடாது முக்தியளித்து ரக்ஷிக்கிறது என்று பொருளாம். நைமிசாரண்யம், குருக்ஷேத்திரம், கங்காத்துவாரம், புஷ்கரம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தால்தான் முக்தி கிடைக்கும். அந்த இடங்களில் இறந்தால் முக்தி கிட்டாது. பிரயாகையில் இறந்தால் முக்தி கிட்டுமென்றாலும், காசியில் பகவான் நித்தியவாசம் செய்து வருவதால் பிரயாகைக்கும் மேலான இடத்தைப் பெற்றுள்ளது.
காசி நகரம் க்ஷேத்திர மகிமை, தீர்த்த மகிமை, மூர்த்தி மகிமை ஆகிய மூன்றையும் உடையது. குபேரன் அந்த க்ஷேத்திரத்தில் பகவானை ஆராதித்து உயர் பதவியைப் பெற்றான். விஷ்ணு, லக்ஷ்மி, பிரம்மதேவன் மற்றும் தேவர்களும் வியாசர் முதலான யோகிகளும் அங்கே பகவானைப் பூஜித்து அனுக்கிரகம் பெற்றனர்.  
காசி க்ஷேத்திரத்தில் கோப்பிரேக்ஷகம் என்றொரு இடம் இருக்கிறது. அங்குள்ள லிங்கம் கோப்பிரேக்ஷகேச்வரர் என்ற பெயரால் விளங்குகிறது. பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப் பட்ட மூர்த்தியாகும் அது.
கபிலாஹ்ரதம் என்னுமிடத்திலும் சிவலிங்கம் ஒன்றுள்ளது. பிரம்மதேவன் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முற்பட்டபோது பக்கத்திலிருந்த விஷ்ணு, அந்த லிங்கத்தை வாங்கி அவர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். தான் பூஜிப்பதற்காக வைத்திருந்த லிங்கத்தை விஷ்ணு எடுத்து வழிபட்டு விட்டாரே என பிரம்மதேவனுக்கு வருத்தம். அதை உணர்ந்த விஷ்ணு, நான்முகா, உன்னைவிட சிவனிடம் அதிகப் பிரீதி உடையவன் நான். அதனால் தான் நான் பூஜை செய்தேன். இருப்பினும் உன் பெயராலேயே இரண்யகர்பேசர் (பிரம்மனுக்கு இன்னொரு பெயர்) என்று இவர் விளங்கட்டும் " என்றார்.
பிரம்மதேவன் மகிழ்ச்சியடைந்தார். இருந்தாலும் அவருக்கு மனதில், தானே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. உடனே செயல் படுத்தியும் விட்டார். மற்றொரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார். அதிலும் பகவான் ஐக்கியம் கொண்ட தால் அவர் வீனேசுவரர் என்ற பெயரில் விளங்கலானார்.
இன்னும், புலியாக உருவெடுத்து வந்து தேவர்களைத் துன்புறுத்திய அரக்கனைச் சிவபெருமான் அழித்து வியாக்கிரேசுவரர் என்ற பெயருடன் விளங்குகின்றார்.
பர்வத ராஜன் பிரதிஷ்டை செய்த லிங்கம் சைலேஸ்வர லிங்கம் என அழைக்கப்படுகிறது. 
வருணா, அசி என்னும் இரு நதிகளும் கலப்பதால் அந்த க்ஷேத்திரத்திற்கு வாரணாசி என்ற பெயரும் உண்டு. அந்தச் சங்கமத்தில் பிரம்மன் பிரதிஷ்டை செய்த சங்கமேசுவரர் இருக்கிறார். இன்னும் மத்தியமேசுவரர், ஜம்புகேசுவரர், கிருத்திவாகேசுவரர், விருத்தகாளேசுவரர், ஆகியோரும் அங்கே இருக்கின்றனர். சுக்கிரனால் பூஜிக்கப்பட்ட  சுக்கிரேசுவரரும் இருக்கிறார்.
காசி க்ஷேத்திரத்தில் பாபம் செய்பவன் பிசாசு ரூபமே அடைவான். அந்த க்ஷேத்திரத்தில் வசித்து அங்கேயே உலக வாழ்வை நீத்தலானது சாதாரணமாகக் கிட்டக்கூடியது அன்று. முக்தித் தலங்கள் என்று கொண்டாடப்படும், ஏழு தலங்களில் ஆறு தலங்களான மதுரா, மாயை ( ஹரித்துவார் ), காஞ்சி, அவந்தி, துவாரகை, அயோத்தி ஆகியவற்றைத் தரிசிப்பவனுக்கே மறு ஜன்மத்தில் காசியில் பிறக்கும் பாக்கியம் கிடைக்கும். 
அங்கே பகவான், விசுவநாதர் என்ற திருநாமத்தோடு பார்வதி சமேதராய் என்றும் அருளாட்சி செய்து வருகிறார்.

ஹரி ஓம் !

No comments:

Post a Comment