Wednesday 13 May 2020

சிவ புராணம் ( 20 )

20. பத்ரிகாஸ்ரமத்தில் கேதாரேஸ்வரர்


பிரம்ம தேவருடைய புத்திரர்களில் ஒருவர் ஸ்வாயம்புமனு என்பவர். அவருடைய பிள்ளை பிரியவிரதன். அவனுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர். பிரியவிரதன், தான் ஜீவித்திருக்கை யிலேயே பிள்ளைகளுக்குப் பாகம் பிரித்துக் கொடுத்து விட வேண்டுமென்று விரும்பினார்
மேருமலையை ரதத்திலேறி ஒரு முறை பிரதக்ஷிணம் செய்து ஏழு தீவுகளாகப் பிரித்தான். ஒவ்வொரு தீவையும் ஒவ்வொரு பிள்ளைக்குக் கொடுத்தான்.
மூத்த புதல்வனான ஆக்நீத்ரனுக்கு ஜம்பூத்வீபத்தைக்  கொடுத்தார். அவன் வெகு காலம் புகழோடு ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பின் அவன் மகன் நாபி அரசனானான்
நாபிக்கு ரிஷபன் முதலான ஒன்பது குமாரர்கள் பிறந்தனர். ரிஷபனுக்கு பரதன் மற்றும் நூறு புத்திரர்கள் பிறந்தனர்.
ரிஷபனும் அவன் சகோதரர்களுக்குப் பாகம் பிரித்துக் கொடுக்க ஜம்பூத்வீபத்தை ஒன்பது கண்டங்களாகப் பிரித்துக் கொடுத்தான். ரிஷபனுக்குப் பிறகு மூத்தவனான பரதன் அரசன் ஆனான். அவன் ஆண்ட கண்டமே பரதகண்டம் ஆகும். எல்லாக் கண்டங்களிலும் சிறந்து விளங்கும் பரதக் கண்டத்தில் பத்ரிகாச்ரமத்தில் விஷ்ணு, லோக சம்ரக்ஷணைக்காக நர நாராயணர்களாக வந்து அவதரித்தார்.
நர நாராயணர் இருவரும் கைலாசநாதனின் அனுக்கிரகத்தைப் பெறுவதற்காக மண்ணால் சிவலிங்கம் அமைத்து பக்தியோடு பூஜை செய்து வந்தனர். பகவானும் அவர்கள் பூஜையில் திருப்தி கொண்டு அவர்களுக்குத் தரிசனம் தந்து, என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.
பிரபோ? எங்களுக்குத் தரிசனம் கொடுத்ததன் நினைவாகத் தாங்கள் இங்கே எழுந்தருள வேண்டும்" என்று வேண்டினர் அவர்கள். ஈசனும் மகிழ்வோடு அவர்கள் விருப்பத்தைக் கேட்டுக் கேதாரேசுவரர் என்ற பெயரோடு அங்கே எழுந்தருளினார்.
கேதாரேசுவரரைப் பூஜிப்பவர்கள் சகல துக்கங்களும் நீங்கப் பெற்று நிம்மதி அடைவார்கள். பத்ரிகாச்ரமம் சென்று கேதாரேசுவரரைத் தரிசிப்பவனுக்கு மறு பிறப்புக் கிடையாது.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment