Monday 11 May 2020

சிவ புராணம் ( 19 )

19. ஓங்கார லிங்கம் 



ஒரு சமயம் நாரதர் க்ஷேத்திரங்கள் பலவற்றையும் தரிசித்துக் கொண்டு வரும்போது, கோகர்ணேஸ்வரரை வழிபட்டு, விந்திய கிரியை அடைந்தார். நாரதரிக் கண்டதும், விந்திய மன்னன் அவரை வரவேற்ரு உபசரித்துத் தான் எவ்விதக் குறையுமின்றி இருப்பதாகப் பெருமையுடன் பேசினான். மன்னனின் மனதில் கர்வம் குடிகொண்டிருப்பதை அறிந்த நாரதர், அதற்கு  ஒரு உபாயம் செய்யவேண்டும் என்றெண்ணி, ஒரு பெருமூச்சு விட்டார். 

“ என்ன ஸ்வாமி… பெருமூச்சு விடுலிறீர்களே “ என்றான் விந்திய மன்னன்.

“ விந்தியா… ! நான் என்ன சொல்வேன். நீயோ ஒரு குறைவும் இன்றி இருக்கிறேன் என்கிறாய். ஆனால் மேரு மலையோ உன்னை விட பெரியதாகவும், தேவர்கள் முதலானோர் வசித்து வருவதாகவும் உள்ளதே.. அது கூறை இல்லையா ? என்று கேட்ட நாரதர், சிரம பரிகாரங்களை முடித்துக் கொண்டு புறப்பட்டார். 

நாரதர் சென்றாலும், நாரதரின் வார்த்தைகள் விந்திய மன்னனின் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. மேருவை விட தான் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினான், விந்திய மன்னன்.
ஓம்கார ரூபமான யந்திரம் ஒன்றை வரைந்து, அதில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டைச் செய்து, ஆறு மாதங்கள் இருந்த இடத்தைவிட்டு அகலாது பூஜை செய்து வந்தான், விந்திய மன்னன். 

விந்தியனின் பக்திக்கு மெச்சிய சர்வேஸ்வரன், அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். 

ஈசனைப் பலவாறு துதித்த விந்தியன், “ பிரபோ… எல்லோரையும் விட உயரமாக வளரும் சக்தியை எனக்களிக்க வேண்டும்” என வேண்டினான். 

சற்று யோசித்தார், ஈசன். விந்தியன் கேட்கும் வரத்தால், உலகில் உள்ளவர்களுக்குத் துன்பம் விளையும் என்பதை உணர்ந்தார். தவமிருந்து, கேட்ட வரத்தைக் கொடுக்காமல் இருக்க முடியாது என்பதால், அவன் விருப்பப்படியே வரமளித்த இறைவன் அதற்கு ஒரு கட்டுப்பாடும் விதித்தார். 

“ விந்திய மன்னா… நீ விரும்பிய வரத்தை அளித்தேன். ஆனால் நீ மமதை கொள்வாயானால், என் அடியார் ஒருவரால் சிறிதாக அடக்கப்படுவாய் “ என்றார், 

ஆனந்தம் அடைந்து, ஈசனைப் பலவாறு துதித்த விந்திய மன்னன், தனக்கு அருளிய தாங்கள் இங்கேயே எழுந்தருளி, இங்குள்ள மக்களுக்கும் அருள் புரிய வேண்டும் என வேண்ட, ஈசனும் சம்மதித்து அங்கே எழுந்தருளினார். 

ஓம்கார லிங்கத்தில் சுயம்பு லிங்கமாக ஓங்காரேஸ்வரர் என்றும்,  விந்தியன் பூஜித்த பார்த்திப லிங்கத்தில் அமரேஸ்வரராகவும் எழுந்தருளினார். தேவர்களும், மானிடர்களும், ஈசனைப் பூஜித்து அநேக வரங்களைப் பெற்று பேறு பெற்றனர்.

ஹரி ஓம் !!!












No comments:

Post a Comment