Tuesday 26 May 2020

சிவ புராணம் ( 25 )

25. போகேசுவரரின் பக்தன் 

தாருகை என்றொரு அரக்கி பார்வதியைப் பூஜை செய்து பெரும் வலிமை பெற்றிருந்தாள். அத்துடன் அவள் உபயோகத்துக்கென ஒரு வனமும், நினைத்த மாத்திரத்தில் அந்த வனத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமையும் பெற்றிருந்தாள். அவளைக் கண்ட மாத்திரத்திலேயே  மக்கள் நடுங்கினர். அரக்கி தன் மனம் போனபடி சஞ்சாரம் செய்து சாதுக்களைக் கொடுமைப்படுத்தினாள். அவள் கணவன் தாருகன் முனிவர்களையும் அந்தணர்களையும் மிரட்டி நித்திய கர்மாக்களைச் செய்யவிடாது தடுத்திருந்தான்.
எல்லோருமாக ஒன்று சேர்ந்து ஔர்வ முனிவரிடம் சென்று முறையிட்டனர். ஔர்வ முனிவர் மகாதேஜஸ்வி, சிவ பெருமானிடம் என்றும் குன்றாத பக்தி உடையவர். அனுதினமும் ஈசனை வழிபடத் தவறமாட்டார். அவரைச் சரண் அடைந்து அரக்கர்களின் கொடுமையிலிருந்து காப்பாற்றும்படி வேண்டினர்.
சாதுக்கள் படும் வேதனையைக் கண்டு முனிவர் கண்ணீர் வடித்தார்.
பெரியோர்களே, கவலைப்பட வேண்டாம். அந்த அரக்கர்கள் இனி உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். உங்களுக்கு எந்தத் தீங்கு இழைத்தாலும் அவர்கள் அப்போதே சாம்பலாகிவிடுவர்" என்று அபயம் கொடுத்து அரக்கர்களுக்குச் சாபமிட்டார். முனிவர்களும் மகிழ்ச்சியோடு ஔர்வ முனிவரின் ஆசிரமம் அருகிலேயே இருந்துகொண்டு நித்திய கர்மானுஷ்டானங்களை நிறைவேற்றி சிவபூஜையில் ஈடுபட்டு வந்தனர்.
ஔர்வ முனிவரின் சாபத்தைக் கேட்டுத் தாருகை பெரிதும் விசனம் கொண்டாள். அவள் கொட்டம் அடங்க வேண்டியதாகி விட்டதே. ஆகவே அவள் அந்த இடத்தை விட்டுத் தன்னுடைய வனத்தோடு மேற்குக் கடற்கரையில் ஓரிடத்தில் போய்த் தங்கினாள். சமுத்திர மார்க்கமாக வரும் வியாபாரி களைப் பிடித்து வந்து அவர்களிடமிருந்து பொருள்களைக் கைப்பற்றிக் கொண்டு சிறையில் அடைத்து வைப்பாள்.
அவ்வாறு தாருகையால் சிறையில் அடைக்கப்பட்ட வைசியர்களில் சுப்பிரியன் என்பவனும் ஒருவன். அவன் மிகுந்த சிவபக்தன். சிறையில் தன்னோடு அடைக்கப்பட்டிருப்பவர் களையும் சிவபக்தர்களாக்கினான். அவர்கள் அரக்கியைக் பற்றிய பயம் கொஞ்சமுமில்லாது சிறையிலேயே சிவலிங்கத்தை செய்து அதற்கு நாள்தோறும் பூஜை செய்து வந்தனர்.
பகவான்  அவர்கள் பூஜையால் மனம் மகிழ்ந்து அவர்கள் முன்பு தோன்றினார்.
சுப்பிரியன் பகவானை மும்முறை வலம் வந்து அவர் பாதங்களில் பணிந்து பலவகையாகத் துதித்தான். பின்னர் பிரபோ! இந்தச் சிறையிலிருந்து எங்களுக்கு எப்போதுதான் விடுதலையோ? தாங்கள் தான் அனுக்கிரகிக்க வேண்டும்" என்று வேண்டினான்.
சிவபெருமான் பாசுபதாஸ்திரத்தை அவனுக்கு அளித்து, இந்த அஸ்திரம் உங்களை அரக்கர்களிடமிருந்து காப்பாற்றும்!" என்று அருளி மறைந்தார்.
சிறையினுள் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் காவலர்கள் அறிந்தனர். உடனே விஷயம் தாருகையிடம் தெரிவிக்கப்பட்டது. அனேக ஆயுதங்களை எடுத்துக்  கொண்டு சிறைக்கு வந்தனர் அரக்கர்கள்.
அடே மூடர்களா, எங்களுடைய இடத்திலிருந்து கொண்டே உங்களுக்கு இத்தனை துணிவா? உங்களை என்ன செய்கிறோம், பார்!" என்று சீறியபடி அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்
சுப்பிரியனோ மற்றவர்களைப் பயப்படாதிருக்கும்படி சொல்லி, மனத்திலே கைலாசநாதனைத் தியானித்து அவரால் கொடுக்கப்பட்ட பாசுபதாஸ்திரத்தை அரக்கர்களை நோக்கி எய்தான். இமைக்கும் நேரத்தில் எதிர்த்து வந்த அரக்கர்கள் யாவரும் அழிந்து போனார்கள். சுப்பிரியன் தன்னோடு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்வித்தான்.
இதற்குள் தாருகைக்குச் சிறைச்சாலையில் நடைபெற்ற அரக்கர்களின் அழிவு பற்றிய செய்தி கிடைத்தது. பரமசிவனால் அளிக்கப்பட்ட பாசுபதாஸ்திரத்தை வைத்திருக்கும் வரையில் சுப்பிரியனை ஒன்றும் செய்ய முடியாதென்பதை அறிந்தாள். அவனால் மேலும் அரக்கர் குலம் அழிந்து போவதைத் தடுக்க எண்ணம் கொண்டவளாய், பார்வதியைக் குறித்துத் தவம் மேற் கொண்டாள்.
தாருகை பார்வதியிடம் அளவில்லா பக்தி கொண்டிருந்த படியால் அவளுக்குத் தேவியின் தரிசனம் விரைவிலேயே கிட்டியது.
மகேசுவரி தாயே, எங்கள் குலம் அழிந்து போகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் தான் எங்கள் மீது கருணை கொண்டு அவ்வாறு ஏற்படாதிருக்க அனுக்கிரகிக்க வேண்டும்" என்று வேண்டினாள்.
தாருகை வருத்தப்படாதே. என் நாதனிடம் தெரிவித்து ஆவன செய்கிறேன்" என்று உறுதிமொழி கொடுத்து மறைந்தாள் தேவி.
சிவபெருமான் அதை அறிந்தபோது மிகவும் சீற்றமடைந்தார்!
தேவி என்ன காரியம் செய்துவிட்டாய்? அந்தத் துஷ்டர்களின் வம்சம் அழியாமலிருக்க வழி செய்வதாக வாக்குக்  கொடுத்து விட்டாயே" என்றார்.
நாதா! தாருகை என் பக்தை. அவள் கேட்கும் வரத்தைக் கொடுக்காமலிருக்க  முடியாதே. தாங்கள் தான் இதற்கொரு வழி காணவேண்டும்" எனத் தெரிவித்தாள் பார்வதி.
தேவி, உன் விருப்பப்படி நான் சம்மதிக்கிறேன். கலியுகம் முடிந்து கிருதயுகத்தின் ஆரம்பத்தில் நைஷதபட்டணத்தில் மகாசேனராஜன் மகனாக வீரசேனன் என்பவன் தோன்று வான். அவன் என்னிடம் அதிக பக்தி கொண்டு பன்னிரண்டு வருஷம் சிவபூஜை செய்து என் அருளால் சகல வல்லமையும் பெறுவான். மரத்தால் மீன் போன்ற படகு ஒன்று செய்து அதன் பக்கங்களில் ஈயத்தகடு அடித்து அதில் ஏறி சமுத்திரத்தைக் கடந்து தாருகையிருக்கும் வனத்தை அடைவான். அங்கே ஓர் தனியிடத்தில் கோவில் கொண்டுள்ள என்னை ஆராதித்துப் பாசுபதாஸ்திரத்தை அடைவான். அதைக் கொண்டு அவன் தாருகையை அழித்து வெற்றியோடு திரும்புவான். அதுவரை நான் அங்கே போகேச்வரராக எழுந்தருளியிருப்பேன்" என்றார் சிவபெருமான்.

ஹரி ஓம் !!

No comments:

Post a Comment