Saturday 2 May 2020

சிவ புராணம் ( 16 )

16. ஆதி சைவர் மகிமை


சைவர்கள் ஏழு வகையானவர் எனச் சொல்லப்படுகிறது. அதாவது அநாதி சைவர், ஆதி சைவர், மஹா சைவர், அநு சைவர், அவாந்தர சைவர், பிரவர சைவர், அந்ய சைவர் எனப்படுவர்.
அநாதி சைவர் எனப்படுபவர் சிவபெருமானே. ஆதிசைவர் சிவத்விஜர் ஆவர். மஹா சைவர் சத்திரியர்; அவாந்தர சைவர் நான்காம் வருணத்தாரும், பிரவர சைவர் சவர்ணாம் பஷ்ட மத்யஸ்த குலாலரும் ஆவர். அந்ய சைவர் இதர ஜாதியாவர். ஆதி சைவர்* சிவபெருமானுடைய ஊர்த்துவ முகத்தினின்று தோன்றியவர்களாம். அந்தணர்களான அவர்கள், சதாசிவ மூர்த்தியாலேயே தீக்ஷை செய்யப் பெற்றவர்களாம்.
ததீசி என்ற பெயருடைய ஆதி சைவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானிடம் அபரிமித பக்தி கொண்டு நியமம் தவறாது பகவானை ஆராதித்து வந்தார். அவருக்கு ஒரு  புத்திரன் இருந்தான். அவனுக்குத் தக்க வயது வந்ததும் ஒரு பெண்ணை மணம் செய்து வைத்தார் ததீசி.
அவன் தந்தையைப் போல் சிவபெருமானிடம் பக்தி பூண்டு சிவபூஜை செய்து, பிறர்க்கு தீக்ஷை செய்து வந்தான். இருப்பினும் அவனுக்குத் தன் மனைவியிடம் அபரிமித மோகம் இருந்தது.
ஒரு சமயம் ததீசி அயலூர் செல்ல வேண்டி நேரிட்டது. அவர் தன் மகனை அழைத்து, தான் சென்று திரும்பும் வரை சிவபூஜையை நியமப்படி செய்துவருமாறு சொல்லிச் சென்றார்.
(*கௌசிகர், காசிபர், பரத்வாஜர், அத்திரி, கௌதமர் ஆகிய ஐந்து முனிவரும் சதாசிவனின் பஞ்ச முகங்களால் தீக்ஷை செய்யப்பட்டவர்களாம். அவர்கள் குலத்தில் பிறந்தவர்களே ஆதி சைவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.)
அப்போது சிவராத்திரி தினம் வந்தது. அன்றையத் தினம் வழக்கம்போல அவன் உபவாசம் இருந்து ஒவ்வொரு காலத்திலும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம், அர்ச்சனை முதலியன செய்து வந்தான். அன்றிரவு மூன்றாங் கால பூஜை முடிந்து நாலாங்கால பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மனைவியிடம் கொண்டிருந்த அபிரிமித மோகத்தால் அவன் மனத்தில் சிறிது களங்கம் ஏற்பட்டுவிட்டது. அதனோடு அவன் நான்காம் கால பூஜையையும் செய்து முடித்தான். அதனால் சினம் கொண்ட ஈசன் அவன் சித்தம் பேதலிக்குமாறு செய்துவிட்டார். அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதால், அவனுடைய நான்கு பிள்ளைகளில் மூத்தவன், சிவபூஜையை மேற்கொண்டு நடத்தி வந்தான்.
வெளியூர் சென்ற ததீசி திரும்பியதும், அங்கே நடந்த சம்பவங்களை அறிந்து பெரிதும் வேதனை அடைந்தார். தன் குமாரன் திடீரென்று பைத்தியம் பிடித்து அலைய வேண்டிய காரணமென்னவென்று அறிய சிவபூஜையின் போது பகவானை வேண்டினார். பகவானும் அவருக்குக் குமாரனின் களங்கமடைந்த உள்ளத்தைத் தெரிவித்தார்.
ததீசி அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. தம் குலப் பெருமைக்குக் களங்கம் ஏற்படும் வகையில் குமாரன் நடந்து கொண்டுவிட்டானே என வருந்தினார். இந்தச் சமயத்தில் இவ்வளவுக்கும் காரணமான அவர் மருமகள் இறந்துவிட்டாள். இருப்பினும் தம் மகன் செய்த தவறுக்குத் தகுந்த பரிகாரம் செய்ய வேண்டுமென்று விரும்பினார் அவர். அவனுக்காகத் தான் தினமும் சிவபூஜையும் பார்வதி பூஜையும் செய்து வந்தார்
ததீசி செய்து வந்து பூஜையில் திருப்தி அடைந்த தேவி, அவர் முன்பு தோன்றி, ததீசி, நீ கவலைப்பட வேண்டாம். ஆதி சைவர்களாகிய நீங்கள் என் புத்திரர்கள் அல்லவா? உன் குமாரனின் தவற்றை மன்னித்து அருளும்படி ஈசனிடம் வேண்டிக் கொள்கிறேன்" என்று அருளினாள்.
ஈசனும் அதற்குச் சம்மதித்துக் குமாரனை நெய்யில் ஸ்நானம் செய்யச் செய்து, யக்ஞோபவீதம் தரித்து சிவகாயத்ரியையும், சிவ பஞ்சாக்ஷரியையும் உபதேசம் பெற்றுக் கொள்ளுமாறு செய்தார். பதினாறு முறை ஜபித்த உடனேயே அவன் பாவங்கள் அகன்று புத்தி தெளிவுற்றான். பகவான் மேலும் அவர்களுக்கு அனேக வரங்களை அளித்துத் தம்மை பூஜிக்கும் பெருமையையும் அவர்களுக்கு அருளினார்ஆதிசைவரை எவனொருவன் பூஜிக்கிறானோ அவன் சிவபெருமானையே பூஜித்த பலனை அடைவான் என்றும் அனுக்கிரகித்து மறைந்தார்.
இப்படி ஆதி சைவர்களின் பெருமையை விளக்கும் மற்றொரு கதையைப் பார்ப்போம்.
அந்தகேசுவர நகரத்தை பத்திரன் என்னும் அரசன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் தினமும் ஆயிரம் வேதியருக்கு அன்னம் அளித்து வந்தான். அவன் சிவபெருமானிடம் குன்றாத பக்தி கொண்டவன்.
ஒருநாள் சர்வேச்வரன் அவன் முன்பு தோன்றி பத்திரா, இதோ இந்தக் கொடியை உன் அன்ன சாலையின் உச்சியில் தினமும் விடியற்காலையில் கட்டி வை. எப்போது சத்புருஷன் உன்னிடம் அன்னம் பெறுகிறானோ அப்போது இந்தக் கொடி கீழே விழும்" என்று சொல்லி கொடி ஒன்றைக் கொடுத்து மறைந்தார்.
அன்று முதல் அவன் தினமும் விடியற்காலையில் கொடியை அன்னச் சத்திரத்தில் கட்டிவிட்டு, வரும் வேதியர்களுக்கு அன்னம் வழங்குவான். தினமும் இவ்வாறு நடந்து வந்தது. ஒரு நாள்கூட கொடி கீழே விழவில்லை.
இப்படியிருக்கும்போது ஒருநாள் அரசனிடம் அன்னம் பெற ஆதி சைவ வேதியன் ஒருவன் வந்தான். அவனுக்கு அன்னம் கொடுத்த உடனேயே கொடி கீழே விழுந்தது. அரசன் ஆச்சரியமுற்று அவனைப் பெரிதும் கொண்டாடினான்.
பக்கத்திலிருந்த அந்தணர்கள் அதை ஆட்சேபித்தனர்.
அரசே! நீர் சந்தோஷப்படுவது போல் எதுவும் நடக்க வில்லை. இந்த ஆதிசைவன் எங்களோடு சேர்க்கப்படக் கூடியவன் அல்ல. எங்களுக்கும் கீழானவன். நாங்கள் அன்னம் பெற்ற பின்னரே அவன் பெறவேண்டும். அப்படியிருக்க முன்னதாகப் பெற்றதால், அதைப் பொறுக்கமாட்டாது கொடி விழுந்துவிட்டது. அவ்வளவுதானே தவிர, இவன் ஒன்றும் சத்புருஷன் அல்ல!" என்றனர்.
ஐயா, நீங்கள் சொல்வதை நான் ஏற்க முடியாது. வேண்டுமானால் மீண்டும் பரீட்சிக்கலாம். நாளை, முதலில் நீங்கள் அன்னம் பெறுங்கள். பின்னர் இவன் பெறட்டும். கொடி எப்போது விழுகிறது என்பதைப் பார்க்கலாம்" என்றான், அரசன்.
அவர்களோ அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனாலும், அரசன் தொடர்ந்து, வழக்கப்படி கொடியை உயரக்கட்டி அன்னம் வழங்கி வந்தான். இப்படியாக நடந்துவரும்போது மற்றொரு நாள் ஆதி சைவர் ஒருவர் வந்தார். அவர் அன்னம் பெற்றதும் கொடி கீழே விழுந்தது. அப்போதுதான் அவர்கள் ஆதிசைவருடைய பெருமையை அறிந்து கொண்டனர்.
ஈசுவர அனுக்கிரகம் பெற்ற அவர்கள் பிறரால் பூஜிக்கத் தகுந்தவர்கள் என்பதை உணர்ந்து அவர்களைப் போற்றிக் கொண்டாடினார்கள்.

No comments:

Post a Comment