Thursday 30 April 2020

சிவ புராணம் ( 15 )

15. தாருகாவனத்தில் திவ்ய நாடகம் 




ஒரு சமயம் தேவதாரு வனம் எனப்பட்ட தாருகா வனத்திலுள்ள முனிவர்கள் யாகமே எல்லாப் பலனைக் கொடுக்கக் கூடியதென்றும், யாகத்தைத் தவிர வேறு ஆண்டவன் இல்லை என்றும் எண்ணம் கொண்டு பகவானை மறந்து இருந்தனர். அதே போல முனிபத்தினிகள் கற்பு ஒன்றே சிறந்தது எனக் கொண்டு பகவானை ஆராதிப்பதை விட்டு விட்டனர். அவர்கள் அறியாமையை நீக்க ஈசன் விருப்பம் கொண்டார்.

மகாவிஷ்ணுவை அழைத்து அழகிய பெண்ணைப் போன்று உருவம் எடுத்துக் கொள்ளச் செய்தார். விஷ்ணுவும் அவ்வாறே தம்மைப் பலவாறு அலங்கரித்துக் கொண்டு கண்டோர் மயங்கும் பெண் வடிவைக் கொண்டார்.

இப்படியே புறப்பட்டுச் சென்று தாருகா வனத்தில் யாகம் செய்யும் முனிவர்கள் முன்னிலையில் நடமாடி அவர்கள் உள்ளத்தில் மோகம் உண்டாகச் செய்"  என்றார் ஈசன்.

விஷ்ணு தாருகாவனத்தை அடைந்தார். அங்கே யாகம் செய்யும் முனிவர்கள் முன்பு, வீணையில் இனிய நாதம் எழுப்பினார். இன்னிசையால் கவனம் ஈர்க்கப்பட்ட முனிவர்கள் தாங்கள் செய்து வந்த யாக காரியங்களை நிறுத்திவிட்டு நாதம் எங்கிருந்து வருகிறதென்று சுற்றும்முற்றும் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் பார்வை, பெண் வடிவிலே வந்திருக்கும் விஷ்ணுவின் மீது பட்டதும் அங்கேயே லயித்துவிட்டது. அத்தனை அழகு வடிவம் கொண்ட பெண்ணை அவர்கள் அதுவரைப் பார்த்ததே இல்லை. அவள் மீது வைத்த பார்வையை மீட்கச் சக்தியின்றி அவளையே பார்த்தபடி இருந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் தம்மிடம் அடிமையாகி விட்டன என்பதை உணர்ந்து மெல்ல இசைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார் விஷ்ணு.

முனிவர்கள் தாங்கள் செய்து வந்த யாகத்தை மறந்தனர். தம் மனைவியரை மறந்தனர். பெண்ணாக வந்திருக்கும் விஷ்ணுவோடு புறப்பட்டு விட்டனர். அவர்கள் உள்ளங்களில் அந்த மோகன வடிவமே நிறைந்திருந்தது. அவள் அழகைப் பற்றிய நினைவே அவர்கள் சிந்தனையில் குடி கொண்டிருந்தது.
யாகசாலையில் இருந்த முனிவர்கள், விஷ்ணுவின் மாயையில் சிக்கி அவர் புறப்பட்ட அதே நேரத்தில் சிவ பெருமான் பரதேசியைப் போன்று வேடம் கொண்டு திகம்பரராய் கையில் ஓடு ஏந்தி உடுக்கை அடித்துப் பாடியபடி முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். ஒவ்வொரு வீடாக ஏறி உடுக்கையின் நாதத்துக்கேற்பப் பாடிக் கொண்டு பிக்ஷை கேட்டார்.
யாரோ பரதேசி பிச்சை கேட்டு வந்திருக்கிறான் என்று வெளியே வந்த முனி பத்தினிகள் ஒருகணம் திகைத்து விட்டனர். பிச்சைக்கு வந்திருப்பவனின் சுந்தர வடிவத்தைக் கண்டதும் அவர்கள் உள்ளங்களில் கள்ளம் புகுந்துவிட்டது. அவனைப் பார்க்கப் பார்க்க அவர்கள் உள்ளங்களில் இன்பம் ஊற்றெடுத்தது. அவனோடு பேசுவதிலேயே அவர்கள் ஓர் இன்பம் கண்டனர். பகவானின் மாயையல்லவா?
சிவபெருமான் அங்குள்ள முனிவர்கள் அத்தனை பேருடைய வீடுகளிலும் ஏறி இறங்கி முனி பத்தினிகளின் மனத்திலே ஆசைக் கனல் கொழுந்துவிட்டெரியச் செய்தார். அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு பல விதமாக உரையாடினர். மனத்துக்கு இதமான பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தினர். தேனிலே அமர்ந்த ஈயைப் போன்று அவர்கள் சிவபெருமானை விட்டுப் பிரிய மனமின்றித் தவித்தனர். அவர்களுடைய மனநிலையை அறிந்த ஈசன், மெல்ல அங்கிருந்து தவச் சாலையை நோக்கி நகர்ந்தார். முனி பத்தினிகளுக்கு அவர் புறப்பட்டு விட்டாரே என்ற வருத்தம்.
இருப்பா! அதற்குள் புறப்பட்டுவிட்டாயே...!" என்று அவரை மேலும் பாட்டுக்கள் பாடும்படி வற்புறுத்தினர். ஈசனோ மெல்ல அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்குவது போல நிற்பதும் உடனே புறப்பட்டுச் சிறிது தூரம் நகர்வதுமாக இருந்தார். முனி பத்தினிகளும் தங்கள் இல்லங்களை மறந்து அவரோடு புறப்பட்டு வந்தனர்.
அப்போது எதிர்புறமாக மற்றொரு கூட்டம் வந்தது. அவர்கள் வேறு யாருமல்ல, விஷ்ணுவின் மாயையில் சுழன்று அவர் பின்னால் வந்த முனிவர்கள்தான். விஷ்ணுவின் மோகன வடிவத்தைக் கண்களால் பருகி ஆனந்தித்து அவர் பின்னாலேயே வந்து கொண்டிருந்த முனிவர்கள் தூரத்தே வந்து கொண்டிருக்கும் பெண்களின் கூட்டத்தைக் கண்டதும் திடுக்கிட்டனர். அவர்களில் ஒருவர், அக்கூட்டத்தில் முனி பத்தினிகள் இருக்கிறார்கள் என்று அறிவித்ததும் மற்றவர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர்.
யாரோ பரதேசி ஒருவன் உள்ளத்து உணர்ச்சிகளை எழுப்பும் பாடல்களைப் பாடுவதும் அவன் பாட்டைக் கேட்டு முனிபத்தினிகள் மெய் மறந்து அவனைப் புகழ்வதையும் பார்த்த முனிவர்களுக்குச் சொல்ல முடியாத கோபம் எழுந்தது.
அடே தூர்த்தா! என்ன காரியம் செய்கிறாய்? ஆண்கள் இல்லாத நேரத்தில் பெண்களிடம் இச்சையாகப் பேசி அவர்கள் மனத்திலே உணர்ச்சியைத் தூண்டுகிறாயே! உன்னை என்ன செய்கிறோம் பார்" என்று கடிந்து பேசி அவனைப் பலவாறு சபித்தனர்.
அவர்கள் சாபம், பிக்ஷாடனராக வந்திருந்த பகவானை ஒன்றுமே செய்யவில்லை. ஈசன் சிரித்தபடி அவர்களைப் பார்த்தார்.
இப்போது என்ன ஆயிற்று" என்று கேட்டார்.
அப்போதுதான் முனிவர்களுக்கு மெல்லச் சந்தேகம் தோன்றியது. வந்திருப்பது பெரிய யோகியாக இருக்கலாமோ என்று எண்ணினர்.
ஐயா, நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்?"என்று கேட்டனர்.
முனிவர்களே, நானும் உங்களைப் போன்று ஒரு முனிவனே. இவ்வனத்தில் நீங்கள் ஒன்றுகூடித் தவம் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு நானும் இங்கே தங்கி தவம் மேற்கொள்ளலாமென்று என் மனைவியுடன் வந்தேன். ஆகாரத்திற்காக யாசித்துக் கொண்டே இந்த ஆசிரமத்தில் நுழைந்தேன்..."
உங்கள் மனைவி எங்கே?" என்று கேட்டனர் முனிவர்கள்.
அதோ! உங்கள் மத்தியில்தான் இருக்கிறாள்!..." என்று பெண் வடிவிலே நிற்கும் விஷ்ணுவைச் சுட்டிக் காட்டினார். பின்னர் அவரை நெருங்கி, இவ்வளவு நேரமாக எங்கே சென்றாய்? ஆற்றுக்குப் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றாயே!" என்று கேட்டார்.
ஆற்றங்கரையிலே கூட்டம் இருந்தது. அதனால் சற்று தாமதமாயிற்று. திரும்பி வரும்போது உங்களைக் காண வில்லை. யாகசாலை பக்கம் போயிருப்பீர்களோ எனப் பார்த்து வந்தேன்" என்றார் விஷ்ணு தேனினும் இனிய பெண் குரலில்.
ஐயா!... " என்று கூப்பிட்டனர் முனிவர்கள்.
என்ன?..."
தவம் செய்ய விருப்பம் தெரிவித்தீர்கள். இந்தப் பாதகியை அனுப்பிவிட்டுத் தாங்கள் எங்களோடு வாருங்கள்" என்று அழைத்தனர்.
அதெப்படி முடியும்? அவள் என் மனைவி அல்லவா? தவிர, மனைவியோடு தவம் செய்வதுதான் சிறந்ததெனச் சொல்லப்பட்டுள்ளதே!...
ஐயா, தாங்கள் கூறுவது ஒருவிதத்தில் சரிதான். ஆனால் தங்கள் மனைவியோ களங்கமுள்ளவள். பிற ஆடவர்களிடம் சிரித்துப் பேசி அவர்களோடு இன்ப வார்த்தைகளை உரையாடுகிறாள். ஆகவே அவள் ஒதுக்கப்பட வேண்டியவளே!..." என்றனர் முனிவர்கள்.
ஈசன்கலகலவென்று சிரித்தார்.
மிகவும் நன்றாயிருக்கிறது உங்கள் பேச்சு. என் மனைவி களங்கமுள்ளவள் எனக் கூறும் உங்கள் யோக்கியதை மட்டும் என்ன? உங்கள் மனைவியர் மட்டும் கற்பிற் சிறந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ? திகம்பரனாகிய என்னை அவர்கள் தலை நிமிர்ந்து பார்க்கலாமா? பார்க்கவே கூடாதென்றால் என்னைச் சூழ்ந்து கொண்டு உணர்ச்சி மயக்கமாக வார்த்தையாடுவதை என்னவென்று கூறுவது? உங்கள் யோக்கியதை இப்படி இருக்கிறது. இந்த இடத்தில் தவம் செய்தால் என் குறிக்கோள் நிறைவேற மார்க்கமே கிடையாது. நான் வருகிறேன்" என்று கோபம் கொண்டவர் போல நடித்து விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு வேகமாக நடந்தார். இருவரும் நேராக வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்து அவரிடம் விடைபெற்றுத் திரும்பினர்.
மறுநாளே தாருகாவனத்து முனிவர்களுக்குக் கேடுகாலம் ஆரம்பமாகி விட்டது. முனிவர்கள் நோய் வாய்ப்பட்டனர். அதன் காரணமாக அவர்களால் நித்திய கர்மாக்களைச் சரிவர செய்ய முடியவில்லை. ஆசிரமத்தில் லக்ஷ்மீகரம் போய் விட்டது. அமைதி நிரம்பிய வாழ்க்கை மாறி தினமும் வேதனைப்பட்டுத்  தவித்தனர்.
நாளுக்கு நாள் இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது. காரணம் தெரியாது தவித்த முனிவர்கள் எல்லோருமாகப் பிரம்மதேவனை அடைந்து தங்களுக்கு நேர்ந்துள்ள துயரைத் தெரிவித்தார்கள்.
முனிசிரேஷ்டர்களே! பகவானுக்குச் செய்த அபசாரமே உங்களை இப்படித் துன்புறுத்துகிறது. யாகமே எல்லாவற்றையும் கொடுக்கவல்லது என்றும், வேறு கடவுள் இல்லை என்றும் நீங்கள் எண்ணியிருந்தீர்கள். உங்கள் மனைவியரோ கற்பிற் சிறந்தது வேறு இல்லை என பகவானை ஆராதிப்பதை விட்டு விட்டனர். உங்கள் அறிவிலே படிந்திருந்த மயக்கத்தை நீக்கவே பகவான் கைலாசநாதன் மஹா விஷ்ணுவோடு பிக்ஷாடனராகத் தாருகா வனம் வந்திருந்தார். நீங்களோ அவரது உண்மைச் சொரூபத்தை உணராது உங்கள் மனைவியரை நெறி கெட்டு நடக்குமாறு பரதேசி தூண்டினான் என்று சபித்தீர்கள். அதன் பலனைத்தான் நீங்கள் இப்போது அனுபவிக்கிறீர்கள்" என்றார்  பிரம்மதேவன்.
முனிவர்களுக்கு அப்போதுதான் உண்மை புரிந்ததுசர்வேசுவரன் அவ்வளவு நெருக்கத்தில் இருந்தும் அவரை உணராது போனோமே என்று அவர்கள் வருந்தினர். மறுபடியும் பிரம்மதேவனை வணங்கி, பிரபோ ! நாங்கள் இத்தனை காலமாக அறியாமையால் பகவானை மறந்து இருந்து விட்டோம். இப்போது தான் எங்கள் கண்கள் திறந்தன. எங்கள் தவறுக்கு நாங்கள் பெரிதும் வருந்துகிறோம். எங்களை மன்னித்து நாங்கள் கடைத்தேறும் மார்க்கத்தைத் தாங்கள் தான் காட்டவேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.
பிரம்மதேவன் அவர்களுக்குச் சிவலிங்கம் ஒன்றைக் கொடுத்து, பஞ்சாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்தார்.
நீங்கள் இந்த லிங்கத்தை எடுத்துச் சென்று தினமும் தவறாது ஆராதித்து பஞ்சாக்ஷரியை ஜபித்து வந்தீர்களானால் சிவபெருமானின் அருள் பெறுவீர்கள்" என்றார்.
முனிவர்கள் சிவலிங்கத்தைப் பக்தியோடு பெற்றுத் தங்கள் இருப்பிடம் கொணர்ந்து பிரதிஷ்டை செய்தனர். தினமும் லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, பஞ்சாக்ஷரியை ஜபித்து வந்தனர்.
அவர்கள்
பூஜையில் மகிழ்ச்சி அடைந்த ஈசன், மறுபடியும் விஷ்ணுவோடு பிக்ஷாடன கோலத்தில் தாருகாவனம் வந்தார்.
இம்முறை அவரைப் பார்த்து முனிபத்தினிகள் சித்தம் பேதலிக்கவில்லை. அவரைப் பக்தியோடு வரவேற்று கால் அலம்பி பிக்ஷை இட்டனர். முனிவர்களும் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்தோட பகவானையும் விஷ்ணுவையும் வேத கோஷங்களால் வரவேற்று அர்க்கியம் முதலானவைகளைக் கொடுத்து உபசரித்தனர்.


முனிவர்களின் உபசரிப்பிலே பெரிதும் மகிழ்வுற்றுக் கைலாசநாதன் அவர்களுக்குத் தமது திவ்விய ரூபத்தைக் காட்டி அவர்கள் துயரம் நீங்குமாறு அருளினார். முனிவர்கள் அவரைப் பணிந்து என்றும் அங்கேயே இருக்க வேண்டுமென்று வேண்ட, சிவபெருமான் அவ்வாறு சம்மதித்து, நாகேசர் என்ற திருநாமத்தோடு அவர்கள் பூஜித்து வந்த லிங்கத்திலே சாந்நித்தியம் அடைந்தார்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment