Thursday 5 March 2020

சிவ புராணம் அத்தியாயம் (1 )

சிவ புராணம் 
அத்தியாயம் 1


சிவபுராணம் என்ற ஒரு புத்தகம் ( 1960 இல் முதல் பதிப்பு ) மிகவும் 
நைந்த நிலையில், நண்பர் ஒருவரால் என்னிடம் கொடுக்கப்பட்டது. 
அதில் படித்தைப் பதிவிடுகிறேன் ! 



1.  லிங்கம் ஜோதியாக தோன்றுதல்.
ஓரு சமயம் நைமிசாரண்யத்தில் இருந்த முனிவர்கள் சூத முனிவரைப் பணிந்து “ பரம பாகவத சிகாமணியே, தங்களிடம் ஒரு கோரிக்கை.! தங்கள் திருவாக்கிலிருந்து அமுதமாகிற பகவத் விஷயங்களை எத்தனை எத்தனயோ கேட்டுப் பருகி கிருதார்த்தர்களாகி உள்ளோம். புராணக் கடலாகிய தங்கள் பிரவசனங்களைக் கேட்க கேட்க, மேலும் அவற்றைக் கேட்டு ஆனந்திக்க வேண்டுமென்ற ஆவலே எழுகின்றது. கைலாச நாதனாகிய சிவபெருமானுடைய தத்துவத்தையும், அவரின் அநேக திருஅவதாரங்கள் பற்றிய அற்புத விருத்தாந்தங்களையும் அறிய விருப்பம் உடையவர்களாயிருக்கிறோம். படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூவகைத் தொழில்களுள் அழித்தலுக்குக் காரணகர்த்தாவாயிருக்கின்ற ஈசன் சிருஷ்டிக்கு முன் எவ்வாறு இருந்தார்? பிரளயத்தின் போது எவ்வாறு இருந்தார் என்பன போன்ற விஷயங்களை எங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவரை வழிபட்டு அருட்கடாக்ஷம் பெறும் வழிமுறைகளையும் விளக்க வேண்டும் “ என்று வேண்டினர்.
முனிவர்களின் இந்தக் கோரிக்கையைக் கேட்ட சூத முனிவர் “ முனி சிரேஷ்டர்களே ! முன்பொரு சமயம், சகல லோகங்களிலும் சஞ்சரித்து வந்த நாரதர், சிவபெருமாணின் அநேக திருவுருவங்களைத் தரிசிக்க நேர்ந்தது. அந்த அந்த காலங்களில் ஈசன் அவ்வாறு செய்ய நேர்ந்ததின் ரகசியங்களை அறிய எண்ணம் கொண்டு, தன் பிதா பிரம்ம தேவரிடம் வந்து, அவரைப் பணிந்து வணங்கி, “ தந்தையே…. பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் மகிமை அனைத்தையும் தாங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். லோக சஞ்சாரம் செய்து வரும்போது சிவனின் அநேக திருவுருவங்களைத் தரிசித்தேன். அவருடைய அவதார ரகசியங்களை அறிய ஆவலாய் இருக்கிறது. தாங்கள்தான் எனக்கு அவற்றை விவரித்துச் சொல்லவேண்டும் “ என்று பிராத்தித்தார்,

நான்முகனும் பெருமகிழ்ச்சி அடைந்தவராய், “ நாரதா… சிவபெருமானின் மகிமைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே சகல பாபங்களும் நசித்துப் போய்விடும். அத்தகைய ஈசனின் தத்துவத்தை விஷ்ணுவினாலும் என்னாலும் பூரணமாக அறிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், எனக்குத் தெரிந்தவற்றை உணக்குக் கூறுகிறேன்” என்று அந்த விருத்தாந்தங்களை நாரதருக்கு எடுத்துரைத்தார். அவற்றை இப்போது நான் உங்களுக்குக் கூறுகிறேன்  .கேட்டு ஆனத்தியுங்கள் “ எனக் கூறி, சிவனின் அற்புத அவதார காரணங்களைக் கூறத் தொடங்கினார்.
ஞானிகள் ஞானக் கண்கொண்டு பார்த்து மகிழும் பிரம்மம் என்பது அழிவற்றதாகும். அது ஸ்தூலமும் அல்ல. சூக்க்ஷுமும் அல்ல. சத்தியத்தையும் அறிவையும் உடையது. எல்லாம் அது: அதுவே எல்லாம் !
அப்பிரமத்திற்கு இச்சை உண்டாயிற்று. அப்போது பிரம்மத்திடம் இருந்து பிரகிருதி எனப்படும் மாயாதேவி எட்டுக் கைகளும், பூரண சந்திரனின் பொலிவு கொண்ட அவள் நிகரற்ற அழகுடன் அனேகவித ஆபரணங்களை அணிந்தவண்ணம் தோன்றினாள். அதே சமயம் பிரம்மத்திடம் இருந்து ஓர் அழகிய புருஷணும் தோன்றினான்.
மாயாதேவியும் புருஷனும் தாங்கள் தோற்றுவிக்கப்பட்டதின் காரணமென்ன என்று யோசிக்கும்போது.
“ உங்களின் தோற்றத்தின் காரணத்தை அறிய தவம் செய்யுங்கள் “ என்று அசரீரி ஒலித்தது.
அசரீரியின் வாக்குப்படி தவத்தில் ஈடுபட்ட மாயாதேவியும் புருஷனும் வெகு காலத்திற்குப் பின் தங்கள் யோக நிஷ்டையில் இருந்து விழித்துக் கொண்டனர். கணக்கற்ற வருடங்கள் தாங்கள் தவம் செய்திருப்பதை அறிந்தபோது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்போது அவர்கள் தேகத்தில் இருந்து ஜலப்பிரவாகம் எடுத்தது. அப்பிரவாகம் சகல லோகங்களிலும் வியாபித்து, எங்கும் ஜலமயமாக நின்றது. மிகவும் இளைப்பு அடைந்த அந்த மஹா புருஷன் பிரகிரிதியுடன் சேர்ந்து மகிழ்வுடன் அநேக காலம் ஜலத்திலே நித்திரைக் கொண்டான். அதுமுதல் அவனுக்கு நாராயணன் என்ற பெயர் விளங்கலாயிற்று. பிரகிருதி நாராயணி என்ற திருநாமத்துடன் விளங்கினாள்.
பின்னர், பிரகிருதியிடம் இருந்து மாறத் என்பது உண்டாயிற்று.
மாறத்திடம் இருந்து ஸத்வம், தாமஸம், இராஜஸம் என்ற முக்குணங்கள் உண்டாயிற்று. அவற்றில் இருந்து பஞ்சத மாத்திரைகளான சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் ஆகிய ஐந்தும் உண்டாயிற்று.
பஞ்சதன் மாத்திரையில் இருந்து ஆகாசம், வாயு, தேயு, அப்பு, பிர்திவி எனப்படும் பஞ்ச பூதங்களும் உருவாயின.
பஞ்ச பூதங்களில் இருந்து கர்மேந்திரியங்களான வாக்கு, பாத, பாணி, பாயுறு, உபஸ்தம் ஆகிய ஐந்தும், ஞானேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவையும், மனம் , புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தகரணங்கள் நான்கும் உருவாயின.
இந்த 24 தத்துவங்களையும் தன் சுவாதீனம் செய்து கொண்ட நாராயணன், ஜலத்தில் உறங்கும்போது அவருடைய நாபியில் இருந்து , எண்ணற்ற இதழ்களோடும், அநேக யோசனை அகலமும், அனேக யோசனை உயரமும், நறுமணத்துடன் கூடியதுமான அழகிய தாமரை மலர் தோன்றியது. அம்மலரில் இருந்து ஹிரண்யதர்ப்பரான நான்முகன் அவதரித்தார்.
பிரமனுக்கு, மாயை காரணமாக, பிரமனுக்கு தாம் யார் என்பதும், எங்கிருந்து வந்தோம் என்பதும், என்ன காரியத்திற்காக தான் தோற்றுவிக்கப்பட்டோம், யாரால் தோற்றுவிக்கப்பட்டோம் என்பது புரியவில்லை. தன்னைத் தோற்றுவித்தவர் யார் என்பதை அறியும் ஆவலில், தாமரை மலரின் அடிப்பாகத்திற்கு இறங்கத் தொடங்கினார்.
செல்லச் செல்ல முடிவே இல்லாது பயணம் நீண்டது. எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் பிரமனின் பயணம் முடியவில்லை. களைப்பு மேலிட்ட பிரமன், கீழே செல்வதை நிறுத்திவிட்டு மேலே செல்லத் தொடங்கினார். அங்கும் அவர் அவர் நாடிய காரியம் முடியவில்லை. தாமரை மலரைச் சுற்றிச் சுற்றி வந்ததுதான் மிச்சம். யாரையும் காணாது மூர்ச்சை அடைந்து விழுந்தார். பிரமன் மூர்ச்சை தெளீந்து எழுந்தபோது “ தவம் செய்தால், விரும்பும் காரியம் நிறைவேறும்” என அசரீரி ஒலித்தது.
அதன்படி 12 வருடங்கள் தவம் செய்ய, சங்கு சக்ர பீதாம்பரதாரியாய் கோடி சூரியப்பிரகாசத்துடன் நாராயணன் பிரமனுக்கு காட்சியளித்தார். நாராயணனைக் கண்டும் ஒன்றும் விளங்காத பிரமன், அவரைப் பார்த்து “ நீ யார்” என வினவினார்.
“ வத்ஸ, உன்ன்னைத் தோற்றுவித்தவன் நானே ! சர்வ வியாபியான நான் விஷ்ணு. உலக சிருஷ்டியின் நிமித்தம் உன்னைத் தோற்றுவித்தேன் “ என்றார் நாராயணன்.
கல கலவென்று சிரித்தார். பிரமன். “ சிருஷ்டிக்காக நான் உண்டாயிருப்பது உண்மையானால். என்னுடைய சம்பந்தம் இல்லாது நீர் உருவாயிருக்க முடியாது. அப்படி இருக்க என்னைப் பார்த்து “ குழந்தாய் “ என அழைத்தீரே.. உமக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் என்றார் பிரமன்.
பிரமனைப் பார்த்து ஒரு மோகனப் புன்னகையை வீசிய நாராயணன், “ நான்முகா…..மாயையால் சூழப்பட்டிருக்கும் நீ உண்மையை உணராது பேசுகின்றாய். உன்னைத் தோற்றுவித்தவன் நானே ! 24 தத்துவங்களும் என்னுள் அடக்கம். நான் இன்றி நீ இல்லை “ என்றார்
இந்த வார்த்தைகளை ஏற்காத பிரமன், தன் காரியத்திற்கு நாராயணன் இடையூறு விளைவிப்பதாகக் கருதி, நாராயணனுடன் சண்டையிட எத்தனிகின்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கண்ணைப் பறிக்கும் ஜோதி ஒன்று தோன்றியது.
திடுக்கிட்ட இருவரும் விலகி நாற்புறமும் பார்த்தனர். ஒன்றும் விளங்கவில்லை. கோடி சூரியப் பிரகாசத்துடன் பிரமாண்டமான லிங்கம் ஒன்று அவர்களிடையே நிற்பது மட்டும் புரிந்தது.
அப்போது பிரமனைப் பார்த்து நாராயணன், “ நான்முகா… தற்போதைக்கு நம் பூசலை நிறுத்திக் கொள்வோம். இப்போது நம்மிடையே மூன்றாவதாக ஒருவர் தோன்றி இருக்கிறார். முதலில் இவர் யார் என்பதை அறிந்து கொள்வோம் எனக் கூற, பிரமனும் சம்மதித்தார், இருவரும் ஒற்றுமையுடன் அந்த லிங்கத்தைச் சுற்றி வந்தனர். ஒன்றும் புரியாது, அடி நுனி தெரியாமல் பிரமாண்டமாக நிற்கும் லிங்கம் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.
மாயை சற்று விலக, தங்களின் சக்தியைப்பற்றி  பெருமை கொண்டிருந்த இருவரும் தனளுக்கும் மேலாக ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து தங்களின் மமதையை அழித்து, பிரார்த்திக்கத் தொடங்கினர்.
“ ஸ்வாமி ! தாங்கள் யார் யார் என்பதை நாங்கள் அறியோம். யாது காரணம் கொண்டு இந்த தோற்றம் கொண்டீர்கள் என்பதையும் அறியோம். தாங்கள் எங்களுக்குத் தோற்றமளித்து அருட்கடாட்ஷம் புரிய வேண்டும் “ என பிரார்த்தித்தனர்.
அப்போது “ ஓம் ” என்ற சப்தம் தோன்றியது. இந்த சப்தம் எங்கிருந்து வந்தது என்று அறிய முடியாமல் இருவரும் திகைத்து நிற்க, லிங்கத்தின் தென்புறம் முதலாவதும் அழிவில்லாததுமான அக்ஷரத்தையும், வட பாகத்தில் உகாரத்தையும், அவ்விரண்டிற்கும் நடுவில் மகாரத்தையும், உயரத்தில் ஓம் அன்ற சப்த விஷேசத்தையும் கண்டனர் நாராயணனும், பிரமனும்.
முதலெழுத்தாகிய அகாரம் சூரிய மண்டலம் போலவும், , இரண்டாமெழுத்தாகிய மகாரம் அக்னியின் பிரகாசத்தைப் போலவும், நடுவிலிருக்கும் மகாரம் சந்திர மண்டலம் போலவும் விளங்க, அதன்மேல் ஸ்படிகம் போல் ஒளியோடுகூடிய பரம்பொருளைக் கண்டனர். அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அதி ஆச்சர்யமான அழகோடும், ஐந்து முகங்களோடும், பத்து கரங்களோடும், அநேக வித ஆபரணங்களோடும் கம்பீரமாக பரம்பொருளாகிய சிவபெருமான் அவர்களிடையே தோன்றினார்
--0O0—

No comments:

Post a Comment