Tuesday 10 March 2020

சிவபுராணம் அத்தியாயம் 2

சிவ புராணம் 


2. சிவ தத்துவம்

லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்த சிவபெருமானைக் கண்டதும் நான்முகனும், நாராயணனும் அவரை வணங்கினர்.

“ பிரபோ.. தாங்கள் யார் ? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லையே, கருணை கூர்ந்து எங்களுக்கு விளக்க வேண்டும் “ என்று பணிவோடு வேண்டினர்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்த ஈசன் சொல்லலுற்றார்.

“ உங்கள் இருவருக்கும் மூல காரணன் நான். என்னை சிவன் என்றும் பிரம்மம் என்றும் கொள்ளலாம். அனைத்துமே என் வடிவம்தான். என் சம்பந்தமின்றி எதுவும் உண்டாவதில்லை. அண்ட சராசரங்களும் என்னால் தோற்றுவிக்கப்பட்டவையே! “

இவ்வாறு தெரிவித்த சிவன் நான்முகனைப் பார்த்து “ பிரம்மதேவா! உலக சிருஷ்டிக்காக என் ஆக்ஞையால் விஷ்ணு உன்னைத் தோற்றுவித்தான்.” என கூறினார். பின்னர் விஷ்ணுவைப் பார்த்து “ நாராயணா… ! சிருஷ்டிகளின் பாதுகாப்புக்காக நீ என்னால் உருவாக்கப்பட்டாய் என்பதனை அறிந்து கொள்.

என்னுடைய மற்றொரு அம்சமே ருத்திரன். அவன் அழிவுக்குக் காரணமாவான். பிரகிருதியிடமிருந்து பிராம்மணி என்ற சக்தி தோன்றி பிரமனை அடைவாள். அவ்வாறே லக்ஷ்மி தோன்றி உன்னை அடைவாள். காளி என்பவள் ருத்திரனை அடைவாள். நீங்கள் மூவரும் உங்கள் சக்தியரோடு சேர்ந்து சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் எனப்படும் மூவகைக் காரியங்களையும் செய்து வருவதற்காகவே என்னால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் “ என்றார்.

அப்போது விஷ்ணு மறுபடியும் சிவனை வணங்கி” பிரபோ.. ! எங்களைத் தோற்றுவித்ததற்கான காரணங்களைக் கூறினீர்கள். இருப்பினும், நாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், அதற்கான சக்தியை நாங்கள் எவ்வாறு அடைவோம் ? என்பன போன்றவற்றையும் விவரிக்க வேண்டுகிறோம் “ என பிராத்தித்தார்.

அவர் வார்த்தைகளால் மகிழ்சியுற்ற ஈசனும், “ ஓம் தத்வமசி “ என்ற மஹா வாக்கியத்தையும், மிருத்தியுஞ்சயம், பஞ்சாக்ஷரம், சிந்தாமணி தக்ஷிணாமூர்த்தி மந்திரம் ஆகிய மஹா மந்திரங்களை விஷ்ணுவிற்கு உபதேசித்தார். பின்னர், சுவாச மார்கமாக வேதத்தையும் அவருக்கு உபதேசம் செய்தார். அவற்றைக் கிரகித்து விஷ்ணுவும் சுவாச மார்கமாகவே நான்முகனுக்கு உபதேசம் செய்தார்..

பின்னர், எதிரில் இருக்கும் ஈசனைப் பணிந்து “ பிரபோ…! தங்களுடைய தரிசன பாக்கியத்தால் நாங்கள் கிருதார்த்தர்களான நாங்கள் எக்காலத்தும் தங்களிடம் இடைவிடாத பக்தி கொண்டிருக்குமாறு அருள வேண்டும், தங்களை எந்தவிதமாக தியானித்தால் தாங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும் “ என்று கேட்டார்.

“ நாராயணா… ! நான் இப்போது எவ்வாறு காட்சி தந்துகொண்டிருக்கின்றேனோ, அதே தோற்றத்தில் லிங்கத்தில் இருப்பதாக எண்ணி தியானித்தால் போதும். என்னை தியானிப்பவர்களுக்கு நான் சகல காரிய சித்தியையும் அளிப்பேன். பிரமன் எனது வலது பக்கத்திலும், நீ என் இடது பக்கத்திலும், ருத்திரன் எனது இதயத்திலுமாக மூவரும் என்னுடன் ஐக்கியமாகி இருக்கிறீர்கள். நீங்கள் மூவரும் என் வடிவமே அன்றி வேறு அல்ல. சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் ஆகிய முத்தொழில்களும் நடைபெறவே மூவராகப் பிரித்திருக்கின்றேன். நீங்கள் சிவ ரூபத்தில் இருந்து உண்டானவர்கள். சத்தியமாயும், ஞானரூபமாயும் அழிவு என்பதே இல்லாததுமான என்னுடைய சிவ ரூபமே ஆதி காரணம் ஆகும். ஜோதியானது எப்படி ஜலம் முதலான சம்பந்தம் இருப்பினும் நாசமின்றி இருக்கிறதோ, அதுபோல நிர்குணமான எனக்கு உங்களோடு சம்பந்தம் இருப்பினும், பந்தனம் கிடையாது, சிவரூபம் தானே உற்பத்தியானது. பிரகிருதியால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. உங்களால் உண்டாக்கப்படும் உலகங்களுக்கு சுகம் ஏற்படவும், உங்களைப் பார்த்து உலகத்தார் பூஜிக்கவும், நீங்கள் இந்த லிங்கரூபத்தை என்றும் குன்றாத பக்தியோடு பூஜித்து வாருங்கள். உங்களுக்கு சர்வ வல்லமைகளும் கைகூடும் “

இவ்வாறு கூறிய ஈசன், அவர்களுக்கு அநேக வரங்களைக் கொடுத்து அநுக்கிரகம் செய்துவிட்டு மறைந்தார்
--0O0—

No comments:

Post a Comment