Wednesday 18 March 2020

சிவ புராணம் ( 3 )

சிவ புராணம்
அத்தியாயம் 3


3. உலக சிருஷ்டி
சிவபெருமானின் அநுக்கிரகத்தால் சர்வ சக்திகளையும் பெற்ற பிரமதேவன் தம்முடைய பணியைச் செய்ய, பிரளயமாக எங்கும் வியாபித்திருக்கும் ஜலத்தை அடைந்தார். முதலில் தன்னைத் தோற்றுவித்த விஷ்ணுவை தியானித்துப் பின்னர் ஈசனை அஞ்சலி செய்து தமது சக்தியை நீரில் விட்டார். அந்த க்ஷணமே அது 24 தத்துவங்களோடு கூடிய அண்டமாகத் தோன்றியது. அசைவு ஏதும் இன்றி ஜடமாக இருந்த அதைக் கண்டதும் பிரமதேவன் பெரிதும் வருத்தம் கொண்டு நாராயணனைக் குறித்து பன்னிரண்டு வருடங்கள் கடுமையாக தவம் செய்தார்.
நான்முகனின் தவத்தால் மகிழ்சியுற்ற விஷ்ணு அவரெதிரில் தோன்றி “ நான்முகா… உனக்கு வேண்டுவது யாது?” என கேட்டார்.
நாராயணனைப் பலவிதங்களிலும் தோத்தரித்த பிரமதேவன்  “ பிரபோ.. ஈசன் ஆக்ஞைப்படி உலக சிருஷ்டியைத் தொடங்கிய நான் என் சக்தியைக் கொண்டு இந்த அண்டத்தைத் தோற்றுவித்தேன். ஆனால் இதுவோ உயிரற்ற ஜடமாக இருக்கிறது. தாங்கள்தான் இதற்கு உயிரூட்ட வேண்டும் “ என வேண்டினார்.
பிரமதேவனின் பிராத்தனைக்கு இணங்கிய நாராயணன் அந்த அண்டத்துள் பிராணவாயுவாக பிரவேசித்தார். உடனே அண்டம், பாதாள லோகம் முதல் சத்தியலோகம் வரை வியாபித்து பிராணனை உடையதாக ஆயிற்று. பெரு மகிழ்ச்சி உடையவராய் பிரமதேவன் சிருஷ்டியைத் தொடங்கினார்.
மனதால் சிலரைத் தோற்றுவித்தார் பிரமதேவன். மானஸ புத்திரர்களான அவர்களோ ஊர்த்துவரேதஸாக விளங்கினார்கள். அதாவது, தங்கள் சக்தியை வீணடிக்காமல் மனதைக் கட்டுப்படுத்தி ஞானமார்கத்தில் ஈடுபட்டவர்களாக விளங்கினார்கள். அதைக் கண்ட நான்முகன் மறுபடியும் சிலரை உருவாக்கினார். அவர்களும் இச்சையற்றவர்களாய் முன்னால் தோன்றியவர்களைப்போல் பகவத் தியானத்தில் லயித்துவிட்டனர்.
பிரமதேவனுக்கு பெரும் குழப்பமாகிவிட்டது. உலக சிருஸ்டி காரணமாக தம்மால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் அப்பணியில் ஈடுபடாது ஞானமார்கத்தில் இறங்கிவிட்டனரே என மிகவும் துக்கித்தார். அப்போது சிவனின் அம்சமாகிய ருத்திரன் அவர் முன்பு தோன்றினார்.
“ நான்முகா.. விசனம் ஏன் ? நான் உனக்கு துணை இருக்கிறேன் “ என்றார் ருத்திரன்.
நான்முகன் அவரை நோக்கிக் கரம் கூப்பி, “ பிரபோ.. எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். முதலில் உண்டாக்கப்பட்டவர்கள் ஞானமார்கத்தில் சென்றுவிட்டனரே என்று மீண்டும் சிலரைத் தோற்றுவித்தேன். அவர்களும் எனக்குக் கட்டுப்படாமல் பகவானைத் தியானிக்கவே தங்களுக்கு விருப்பம் என்று கூறிவிட்டனர். சிருஷ்டியில் இடையூறு நேராது அனுக்கிரகிக்க வேண்டும் “ என்று பிரார்த்தித்தார்.
“ கவலையை விடுத்து இனி சிருஷ்டியைத் தொடங்கலாம். இனி இடையூறு இருக்காது “ என ருத்திரன் அருளினார்.
பின்னர் நான்முகன் ஈசனைத் தியானித்து சிருஷ்டியைத் தொடங்கினார். சப்த ரிஷிகளைத் தோற்றுவித்தார். தமது மடியில் இருந்து நாரதரை உருவாக்கினார். தமது நிழலில் இருந்து கர்தம ரிஷியைத் தோற்றுவித்தார். பிரமனின் பெருவிரலில் இருந்து தக்ஷப் பிரஜாபதி தோன்றினார்.
சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவரிடத்தில் மரீசி உண்டானார். மரீசி காசிபரைத் தோற்றுவித்தார். காசிபர் மூலம் உலகம் விருத்தி அடைந்தது.
தக்ஷப்பிரஜாபதிக்கு அறுபது பெண்கள் பிறந்தனர். அவர்களில் பதின்மூன்று பேரை காசிபருக்கு மணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு தேவர்கள், அசுரர்கள் முதலானோர் பிறந்தனர். இன்னும் விருக்ஷங்களும், பக்ஷிகளும், சர்ப்பங்களும், பர்வதங்களும் அவர்களிடத்தில் உண்டாகி உலகெங்கும் வியாபித்தன.



ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment