Monday 30 March 2020

சிவபுராணம் ( 5 )


சிவ புராணம்
அத்தியாயம் 5



மன்மத தகனம்

சோணிதபுரியில் தாரன் என்னும் அசுரன் இருந்தான். அவன் மகன் தாரகன் என்பவன் ஒரு சமயம் தன்னுடைய ஆசிரியரிடம் சென்று, ’தேவர்கள் எல்லோராலும் பணிந்து கொண்டாடப்படக்கூடிய பராக்கிரமம் அடைய என்ன செய்யலாமென்று கேட்டான். அவரும் பிரம்மதேவனைக் குறித்துக் கடுமையாக தவம் செய்யும்படி கூறினார்.

ஆசிரியரின் வார்த்தைப்படி தாரகன் தவம் செய்யப் புறப்பட்டான். மது என்னும் அசுரனுடைய அழகிய வனத்தில் இரு கைகளையும் உயரே தூக்கியபடி ஒரு காலை மடக்கிக் கொண்டு மற்றொரு காலைப் பூமியில் ஊன்றியவாறு நூறு வருடங்கள் தவம் செய்தான். பிரம்மதேவன் பிரத்தியக்ஷமாக வில்லை. அதன்பிறகு கால் பெருவிரலை மட்டும் ஊன்றியபடி ஜலத்தை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு தவம் செய்தான். அப்போதும் பிரம்மா அவன் முன்பு தோன்றவில்லை. பிறகு, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டும், நீரில் இருந்து கொண்டும், வெய்யிலில் இருந்தபடியும், பஞ்சாக்னியின் மத்தியில் இருந்தவாறும் அனேக ஆண்டுகள் தவம் செய்தான். அவன் சிரசிலிருந்து யோகாக்னி கிளம்பி தேவலோகம் வரை சென்று தகித்தது. அதன் வெப்பத்தைத் தாங்க மாட்டாது தேவர்கள் வருந்தினர். எல்லோரும் பிரம்ம தேவனிடம் சென்று பூலோகத்தில் தாரகன் மேற்கொண்டுள்ள தவத்தைப் பற்றியும் அதன் கொடுமை தாங்காது தாங்கள் தவிப்பதையும் முறையிட்டு அவனுக்கு வரங்கள் கொடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டனர்.

தேவர்களின் கோரிக்கை அர்த்தமற்றதாக இருந்தது. வரங்களைப் பெறும் வரையில் தாரகனும் தான் செய்யப் புகுந்த தவத்தை நிறுத்தப் போவதில்லை. நாளுக்கு நாள் அதன் உக்கிரம் அதிகமாகி தேவலோகத்துக்கே நாசம் வந்துவிடும் என தெரிந்ததும், கடைசியில் வேறு வழியின்றிப் பிரம்மதேவன் அசுரனுக்கு தரிசனம் கொடுத்து, தாரகா! உன் தவத்தை மெச்சினேன், உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

தாரகன் அவரை வலம் வந்து வணங்கி, பிரபோ ! தாங்கள் தயை கூர்ந்து நான் கேட்கும் இரண்டு வரங்களை அளிக்க வேண்டும். முதலாவது, எனக்கு இணையாகப் பராக்கிரமம் உள்ளவன் விண்ணுலத்திலும் சரி, மண்ணுலகத்திலும் சரி எங்குமே இருக்கக்கூடாது. இரண்டாவதாக, சிவபெருமானுடைய வீரியத்திலிருந்து உண்டாகின்ற பிள்ளையாலன்றி வேறு எவராலும் எனக்கு அழிவு கூடாது. இந்த இரண்டு வரங்களையே நான் விரும்பிக் கேட்கிறேன்" என்றான்.

பிரம்மதேவன் அவ்வாறே அவன் கோரிய இரு வரங்களையும் அளித்துவிட்டு மறைந்தார். அசுரன் பெருமகிழ்ச்சியோடு தன் பட்டணமாகிய சோணிதபுரிக்குத் திரும்பினான்.

தாரகன் கடுமையாகத் தவம் செய்து பிரம்மதேவனிட மிருந்து அழிவற்ற ஆசிகளைப் பெற்று திரும்பியிருக்கிறான் என்ற செய்தியை அறிந்ததும், உலகெங்கிலும் வியாபித்திருந்த அரக்கர்கள் அவனை வந்தடைந்து, அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக் கொண்டனர். இதனால் கர்வம் அடைந்த அசுரன், பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் எனப்படும் நான்கு வருணத்தாரையும், தேவர்கள், யக்ஷர்கள், கிம்புருடர்கள் ஆகியோரையும் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினான். அனைவரும் அவனுக்கு பணிந்தனர்.

இந்திரனிடமிருந்து உச்சைச்ரவஸ் எனப்படும் குதிரையும்,
யமனிடமிருந்து தண்டமும், ருணனிடமிருந்து உத்தம ஜாதி குதிரைகளையும்,  குபேரனிடமிருந்து  கதை, நவநிதிகள் ஆகியவையும், மகரிஷிகளிடமிருந்து காமதேனுவையும் அவன் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொண்டான். மற்றும் எங்கெல்லாம் உயர்ந்த பொருள்கள் இருந்தனவோ அவற்றை யெல்லாம், அவன் தனதாக்கிக் கொண்டான். ஸமுத்திரராஜன் அவனுக்குப் பயந்து தன் மடியிலிருந்த ரத்தினங்களைக் கொடுத்தான். அசுரனின் சௌகரியத்துக்கேற்ப சூரியன் உஷ்ணத்தைப் பரப்பினான். சந்திரன் சதா அசுரனின் பக்கத்திலேயே இருந்தான். வாயுவோ தன் சக்தியைக் காட்டப் பயந்து அசுரனின் விருப்பப்படி வீசினான். தேவர்களுக்கு அளிக்கப்படும் அவிர்ப்பாகமும், பிதுர்களுக்கு அளிக்கப் பட்டவையும் அசுரனையே அடைந்தன.

இந்தவிதமாகச் சகல லோகங்களையும் தன் ஆக்கினைக்கு உட்படுத்தி அசுரன்அட்டகாசம் செய்து வரும்போது, ஒரு நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பிரம்மதேவனிடம் சென்று தங்கள் துயரை அறிவித்தனர்.

பிரபோ! எங்களைக் காத்து ரக்ஷிக்க வேண்டிய தாங்கள் இவ்வாறு கவனிக்காதிருப்பது தர்மமா? தாரகனின் அட்டகாசங்களுக்கு இனியும் எங்களால் ஈடுகொடுக்க முடியாது. தேவரீர்தான் அவனை அழித்து எங்களை ரக்ஷிக்க வேண்டும்" என்று பிராத்தித்தனர்.

தேவர்களே! அசுரனின் அழிவுக்கு நம்மால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. சிவபெருமானுடைய வீர்யத்திலிருந்து உண்டாகின்ற குமாரனால்தான் தனக்கு அழிவு ஏற்பட வேண்டும் எனத் தாரகன் வரம் பெற்றுள்ளான். ஈசனோ இமயபர்வதத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவர் நிஷ்டையைக் கலைப்பது என்பது சாமானிய காரியமா? அவராக எப்போது கண் விழிப்பார் என்பதும் தெரியாது. அவருடைய பணிவிடைக்காக இமவான், தன் குமாரத்தியான பார்வதியை இரு தோழிமாரோடு நியமித்திருக்கிறான். கைலாசநாதனது நிஷ்டை கலைந்து பார்வதியும் அவரும் ஒன்று சேர்வார்களானால் அசுரனின் அழிவுக்குக் காரண பூதரான குமாரர் அவதரிப்பார்" என்று தெரிவித்தார் நான்முகன்.

அவர் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தவர்களாய் தேவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பினர். அடுத்தபடியாகக் கைலாசநாதரின் நிஷ்டையைக் கலைத்து அவரையும் பார்வதியையும் ஒன்று சேர்க்க என்ன வழி என்பதை அவர்கள் ஆலோசித்தனர். அப்போது தேவேந்திரன் மனத்தால் மன்மதனை நினைத்தார்.

அந்த க்ஷணமே மன்மதன் தன் மனைவி இரதியோடு அவர் முன்பு வந்து நின்றான். இந்திரனை வணங்கி அமரர் கோனே, என்னால் ஆகவேண்டிய காரியம் என்ன?" என்று கேட்டான் மன்மதன்.

மன்மதா, மகரத்வஜா! உன்னால் ஓர் அரிய காரியம் முடிய வேண்டியிருக்கிறது. தேவர்களுக்கு ஆப்தனாக விளங்கும் உன்னால்தான் அக்காரியம் செய்யமுடியும். எனக்கும் உன்னைவிட நெருங்கிய நண்பன் வேறு எவருமில்லை. எதிரிகளை அழிப்பதற்காகப் பிரம்மதேவன் எனக்கு இரண்டு அஸ்திரங்களைக் கொடுத்தார். ஒன்று வஜ்ஜிராயுதம், மற்றொன்று உன்னையே எனக்கு உதவியாகத் தோற்று வித்திருக்கிறார். வஜ்ஜிராயுதத்தைவிட உன்னை மேம்பட்டதாக உயர்த்திக் கூறலாம். ஏனெனில் வஜ்ஜிராயுதம் கூட தன் சக்தியை இழந்து நிற்பதுண்டு. ஆனால் நீயோ தோல்வி என்பதையே கண்டதில்லை. உன் மன்மத பாணங்களுக்குப் பணியாதவர் யார் இருக்கிறார்கள்?" என்றெல்லாம் இந்திரன் தம்முன் நிற்கும் மன்மதனைப் புகழ்ந்தான்.

தேவேந்திரனின் புகழ்ச்சி நிறைந்த வார்த்தைகளால் உள்ளம் களிப்புற்ற மன்மதன் அவனைப் பார்த்து, தேவராஜா, நீ உண்மையைத்தான் எடுத்துச் சொல்கிறாய், நான் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல். இப்போதே அதை நிறைவேற்றக் காத்திருக்கிறேன். உன் பதவிக்கு ஆபத்து உண்டாகும்படி யாராவது தவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா? அவர்கள் இருக்குமிடத்தைச் சொல். உடனே அங்குச் சென்று அத்தவத்தைக் கலைத்து உனக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை நிவர்த்திக்கிறேன். என் மன்மத பாணங்களுக்கு அடிமையாகாத உள்ளம் கிடையாது. கைலாசநாதனே கூட அதற்குப் பணியக் கூடியவர்" என்று பெருமையாகக் கூறினான்.

மன்மதா! எங்கள் உள்ளத்தில் இருப்பதைத் தான் நீயும் சொல்லுகிறாய். உலகத்தில் கொடையாளிக்குப் பஞ்சம் ஏற்படும் போதும், வீரனுக்கு யுத்தத்திலும், நண்பனுக்கு ஆபத்துக் காலத் திலும் தான் தங்கள் உறுதியைக் காட்டக்கூடிய சந்தர்ப்பம் உண்டாகிறது. பெரும் துன்பத்தில் இருக்கும் தேவர்களுக்கு உன் உதவி இன்றியமையாததாக இருக்கிறது. நீ செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேள். தாரகன் என்னும் அசுரன், சிவபெருமானுடைய வீரியத்தில் இருந்து தோன்றும் குமாரனால் தான், தனக்கு அழிவு ஏற்பட வேண்டும் என்று வரம் பெற்றுள்ளதால், அவனை அழிக்க எங்களால் எதுவும் செய்ய முடியாதிருக்கிறது. ஈசனோ ஹிமாசலத்தில் யோக நிஷ்டையிலிருக்கிறார். அவருக்குப் பணிவிடை செய்ய, இமவான் தன் குமாரத்தி பார்வதி தேவியை இரு தோழிகளுடன் பணித்துள்ளான். அவருடைய யோகம் கலைந்து, தேவியிடம் மோகம் கொள்ளும்படி நீ செய்ய வேண்டும். தேவர்களின் துயரம் நீங்க இந்த உதவியை நீ செய்தாக வேண்டும்" என்று அவனைக் கேட்டுக் கொண்டான் இந்திரன்.

மன்மதனும் அவ்வார்த்தைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மனைவியோடும், நண்பன் வசந்தனோடும் ஹிமாசலத்துக்குப் புறப்பட்டான்.
மன்மதன் இமய பர்வதத்துக்கு வந்தபோது சிவபெருமான் கண்களை மூடி யோக நிஷ்டையிலமர்ந்திருந்தார். அப்போது வசந்த காலம். எங்குப் பார்த்தாலும் மரங்களும் கொடிகளும் மலர்களைச் சொரிந்திருந்தன. பக்ஷி ஜாதிகள் ஆனந்தமாகக் கூவிக்கொண்டும் பறந்து கொண்டுமிருந்தன.
வனத்திலிருந்து மலர்களைக் கொய்து எடுத்து வந்த பார்வதி தேவி, சிவபூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். எழில் பொங்கும் அவள் சௌந்தர்ய ரூபத்தைக் கண்ட மன்மதன் இதுவே தகுந்த தருணமென்று எண்ணி, கையில் பிடித்திருந்த வில்லை வளைத்து நாணேற்றிப் பாணங்களை எய்தான்.
வில்லிலிருந்து புறப்பட்ட பாணங்கள், யோகத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமானைத் தாக்கியதும் அவர், நிஷ்டை கலைந்து கண்களைத் திறந்தார். எதிரே அற்புத ரூப சௌந்தர்யத்தோடு நிற்கும் பார்வதியைக் கண்டதும் அவளை அடைய அவர் உள்ளம் விழைந்தது.
அடுத்தக் கணமே அவருக்கு அந்த எண்ணம் மாறியது. யோகத்தில் அமர்ந்திருந்த தம்மைக் கண் விழிக்கச் செய்தது யார் என்பதை அறிய நாற்புறமும் பார்த்தார். பக்கத்திலே கரும்பு வில்லுடன் நிற்கும் மன்மதனைக் கண்டதும் அவருக்குச் சொல்லவொண்ணாக் கோபம் உண்டாயிற்று. எவராலும் வெற்றி கொள்ள முடியாத தம்மை, ஒரு கணத்தில்  மன்மதன் வெற்றி கொண்டு விட்டானே என்பதை நினைத்தபோது அவர்  கோபம் பன்மடங்காகியது. அப்போது அவரது நெற்றிக் கண்ணிலிருந்து ஜ்வாலையோடு கூடிய அக்கினி வெளிப்பட்டது. மன்மதன் அதில் எரிந்து சாம்பலாகி விட்டான். சிவபெருமான் இனி அங்கு அமர்ந்து யோகம் செய்ய முடியாதென்று வேறு இடம் சென்றார். பார்வதி தேவியும் ஈசனின் வடிவிலே லயித்தவளாய், அவர் நினைவால் அலைக் கழிக்கப்பட்ட மனத்தோடு பெற்றோரிடம் திரும்பினாள்.
இது இப்படியிருக்க, கணவனுக்கு நேரிட்ட கதி கண்டு, இரதி தேவி ஆறாத்துயரம் கொண்டாள். வனத்திலே அவள் தலைவிரி கோலமாகக் கீழே விழுந்து புரண்டு அழுதாள்.

தேவர்களே! உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்! ஏன் இப்படி என்னை வஞ்சித்துவிட்டீர்கள்? உங்கள் கஷ்டங்கள்  நீங்குவதற்காகத்தானே அவரை அனுப்பி வைத்தீர்கள்? இப்போது நான் அவரை எவ்வாறு அடைவேன்?" என்றெல்லாம் கதறினாள்.

ஹே பிரபோ! சர்வேச்வரா! இது நியாயம் தானா? என் கணவர் என்ன தவறு செய்தார்? தேவர்களின் வேண்டுகோ ளுக்கிணங்கி அவர்களுக்கு நன்மை செய்யவே இப்பணியை அவர் மேற்கொண்டார். இது தவறென்றால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தேவர்கள் அன்றோ" என்று பிரலாபித்தாள்.

இரதி  தேவியின் அழுகுரலைக் கேட்டு அந்த வனமே துயரம் கொண்டது. செடி கொடிகள் தங்கள் பூரிப்பை விட்டு, வாடித் தலைகுனிந்து நின்றன. பட்சிகளும், மிருகங்களும் குதூகலத்தை விட்டு விட்டுச் சோகமே உருக் கொண்டன.

தேவர்களும் விவரிக்க முடியாத துயரம் அடைந்தனர். அனைவரும் இந்திரனின் தலைமையில் ஒன்று கூடி ஈசனை அடைந்தனர்.

சர்வேச்வரா! தாங்கள் தான் அபயமளிக்க வேண்டும். தங்கள் யோகத்தைக் கலைக்க மன்மதன் மேற்கொண்ட காரியம், தங்களிடம் அவன் திறமையைக் காட்டுவதற்காக அல்ல. பிரபோ! தாரகாசுரனால் நாங்கள் பட்டு வரும் அவதியைக் குறைக்கவே இந்தக் காரியத்தில் அவன் இறங்க நேர்ந்தது. உலகம் க்ஷேமமுற வேண்டும் என்பதற்காகவே அவன் இக்காரியத்தில் ஈடுபட்டான். தேவரீர் கோபம் கொள்ளக் கூடாது. இரதி தேவி படும் துயரை எங்களால் சகிக்க முடியவில்லை. தயவு செய்து மனமிரங்கி அவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும்" என்று பிராத்தித்தனர்.

தேவர்களே! இரதியின் துக்கத்தை நான் அறிவேன். இருப்பினும் நடந்தது நடந்ததுதான். மன்மதனை உயிர்ப்பிப்பது என்பது இயலாத காரியம். ருக்மிணிபதியான கிருஷ்ணன் துவாரகையில் வசிக்கும் காலத்தில், அவளிடத்தில் பிரத்தியும்னன் என்ற பெயரோடு மன்மதன் பிறப்பான். அப்போதுதான் அவனுக்கு உருவம் ஏற்படும். அதுவரை அவன் அருவமாகவே இருந்து வருவான். பிரத்தியும்னன் பிறந்து வளர்ந்து வரும் சமயத்தில் ஒரு நாள், சம்பரன் என்னும் அசுரன் இரதியை அபகரித்துச் செல்வான். மன்மதனும் சம்பரனை யுத்தத்தில் அழித்து அவனுடைய அளவற்ற திரவியங்களோடு இரதியை அழைத்துக் கொண்டு துவாரகை அடைவான். இரதியும் அதுவரை அவன் பட்டணத்தில் இருந்து வரட்டும்" என்று அருளினார், சிவபெருமான். அவர் வார்த்தைகளைக் கேட்ட தேவர்களும், இரதிதேவியும் துக்கத்தை விட்டு ஒருவாறாக மனத்தைத் தேற்றிக் கொண்டு தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பினர்.



ஹரி ஓம் !


No comments:

Post a Comment