Saturday 28 March 2020

சிவபுராணம் ( 4 )

சிவபுராணம்
அத்தியாயம் 4


4. தக்ஷன் கர்வ பங்கம்

தக்ஷனுக்கு பிறந்த அறுபது பெண்களில் ஸதிதேவியும் ஒருத்தி. அவளை ஈசனுக்கு மணம் செய்து கொடுத்தான் அவன். சகல தேவர்களாலும் வணங்கப் பெறும் கைலாச நாதனான ஈசன், தனக்கு மருமகனாகக் கிடைக்கப் பெற்றது கண்டு அவன் அளவில்லா ஆனந்தமடைந்தான். இந்த சம்பந்தத்தின் மூலம், தான் தேவர்களுக்கும் மேலான வனாகி விட்டோம் என்ற பெருமை அவனிடம் குடிகொண்டது. அதன் காரணமாக அவனிடம் மமதை உண்டாகிவிட்டது.

மமதையே அழிவுக்குக்  காரணகர்த்தா என்பதைத் தக்ஷன் உணரவில்லை. ஒரு சமயம் அவன் கைலயங்கிரிக்குச் சென்ற போது ஈசன் தன்னைச் சரியாக கவனிக்கவில்லை என்று அவரிடம் விரோதம் கொண்டான். கைலாசநாதன் தக்ஷப் பிரஜாபதியைத் தம்முடைய மாமனார் என்ற முறைக்குச் சிறிதும் பங்கம் வராது கௌரவம் அளித்து வந்தார். ஆனால் தக்ஷன் எண்ணியது போல் அவன் மகளை மணந்தது காரணமாக அவன் அவரினும் உயர்ந்தவனாகி விட்டான் என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. இதனால் இருவரிடையேயும் வேற்றுமை அதிகமாகியது.

ஈசனிடம் விரோதம் கொண்டு தன் இருப்பிடம் திரும்பிய தக்ஷன் விஷயத்தை அத்தோடு விட்டு விடவில்லை. ஈசன் தன்னைவிடத் தாழ்ந்தவன் என்பதை நிரூபித்து விடுவது என்ற உறுதியில் யாகம் ஒன்றைத் தொடங்கினான். அந்த யாகத்தில் ஈசனுக்கு அவிர்ப்பாகம் கிடையாதென்று முடிவு செய்தான். தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பினான். பெண்களையும், மருமகன்களையும் யாகத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு சொல்லி அனுப்பினான். ஆனால் சிவனையும், ஸதி தேவியையும் மட்டும் அழைக்கவில்லை.

தந்தை செய்யப் போகும் பிரம்மாண்டமான யாகத்தைப் பற்றி ஸதி கேள்விப்பட்டாள். தந்தையிடமிருந்து அழைப்பு வரா விட்டாலும் யாகத்துக்கு தான் போக வேண்டுமென்று விருப்ப மேற்பட்டது தேவிக்கு. கணவனிடம் தன் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்தாள்.

சிவபெருமானும் தக்ஷன் செய்யப்போகும் யாகம் பற்றி அறிந்திருந்தார். தமக்கு அவிர்ப்பாகம் இல்லையென்ற உறுதியோடு செய்யப்போகும் அந்த யாகம் நிறைவேறப் போவதில்லையென்றும் அழையா வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்வதால் அவமானம் ஏற்படும் என்றும் தெரிவித்து, தேவியைப் போக வேண்டாம் எனத் தடுத்தார். தேவியோ அதற்கு இணங்காது யாகத்துக்குப் புறப்பட்டாள்.

யாகசாலையில் தேவியை யாரும் மகிழ்ச்சியோடு வரவேற்க வில்லை. கணவன் தெரிவித்ததுபோல் அவமானம் ஏற்பட்டதைக் கண்டு சீற்றமடைந்த தேவி, கைலயங்கிரி திரும்ப விரும்பாமல் அங்கேயே யாக குண்டத்தில் குதித்து தமது தேகத்தை விடுத்தாள்.

எவ்வளவோ தடுத்தும் கேளாமல் புறப்பட்ட தேவி, அங்கே அவமானமுற்று யாக குண்டத்திலேயே தன் தேகத்தை விடுத்து விட்டாள், என்பதை அறிந்த சிவபெருமான் சொல்ல முடியாத கோபம் அடைந்தார். அவரது கோபத்திலிருந்து வீரபத்திரன் தோன்றினான்.

வீரபத்திரா! இப்போது தக்ஷன் யாகம் செய்யுமிடத்துக்குச் சென்று அவன் யாகத்தைத் துவம்சம் செய்து அவனையும் அழித்து வா!" என்று உத்திரவிட்டு அனுப்பி வைத்தார் ஈசன்.

அவ்வாறே புறப்பட்டுச் சென்ற வீரபத்திரன், தக்ஷனுடைய யாகசாலையை அடைந்தான். மிகவும் உக்கிரமான தோற்றத்துடன் யாக சாலையினுள் நுழைந்து, அதைப் பல விதங்களிலும் அழித்து நாசமாக்கினார். சிவனுக்கு அவிர்ப்பாகம் தராமல் நடத்தப்படும் யாகத்துக்கு வந்திருந்த இதர தேவர்களையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவர்களுக்குக் கொடுமைகள் பல இழைத்தான். தக்ஷனை இழுத்து வந்து அவன் தலையைத் துண்டித்து எறிந்தான்.

தண்டிக்கப்பட வேண்டியவன் தக்ஷனாக இருக்க, யாகத்துக்கு வந்திருந்த இதர தேவர்களும், முனிவர்களும் வீரபத்திரனால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்ட முனிசிரேஷ்டர்கள், கைலாசநாதனைச் சரண் அடைந்து அவரைத் துதித்தனர். ஈசனும் அவர்கள் பால் கருணை கொண்டு அனைவரையும் உயிர்ப்பித்து அவரவர் இருப்பிடம் செல்ல அனுமதித்தார். தக்ஷனும் தன் தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

யாக குண்டத்திலே தேகத்தை இட்ட ஸதிதேவி, ஜ்வாலையாக விளங்கினாள். இந்திரன் முதலான தேவர்கள் அந்த ஜ்வாலையை வழிபட்டனர். இந்த ஜ்வாலை, பூலோகத்தில் ஹிமவத் கிரியில் வந்து விழுந்தது. அந்த இடமே ஜ்வாலாமயமாக ஆயிற்று.

கணவனின் வார்த்தைகளைக் கேட்காமல் சென்றதால் அவமானமுற்ற ஸதி, தக்ஷனின் மகளாக இருக்கும் அந்தப் பிறவியில் மறுபடியும் ஈசனை அடைய விருப்பப்படாது, திரும்பவும் பூலோகத்தில் பிறந்து ஈசனை மணக்கவே ஆசைப் பட்டாள். இமவானின் வெகுநாளைய ஆசையை நிறைவேற்ற, அவன் புத்திரியாக அவன் மனைவி மேனையிடம் பார்வதியாக வந்து அவதரித்தாள்.



ஹரி ஓம்!!!


No comments:

Post a Comment