Sunday 19 April 2020

சிவ புராணம் ( 11 )

11. கணபதி விவாகம்

கைலயங்கிரியில் பார்வதி பரமேச்வரர் இருவரும் புத்திரர்களோடு ஆனந்தமாக இருந்துவரும் நாளில், குழந்தைகளுக்கு விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டனர். அதைப் பற்றி அறிந்த குமாரனும் கணேசனும் தனக்கே முதலில் விவாகம் செய்துவைக்க வேண்டுமென்று கேட்டனர். அவர்கள் போட்டியைக் கண்டு பார்வதி, பரமேச்வரர் இருவரும் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.
அவர்களிடையே எழுந்துள்ள இந்தப் போட்டியைத் தவிர்க்க சங்கரன் ஒரு யோசனை தெரிவித்தார். அதாவது இருவரில் யார் முதலில் பூலோகத்தைச் சுற்றிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கே முதலில் திருமணம் செய்து வைப்பதாகத் தெரிவித்தார். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆறுமுகன் மயிலேறி பூபிரதக்ஷிணத்திற்குப் புறப்பட்டார்.
கணேசனுக்கோ சகோதரனோடு போட்டி போட முடியாதென்று தெரிந்துவிட்டது. ஆகவே யோசித்தார். பின்னர், நீராடி நியம நிஷ்டையோடு தாய் தந்தையரை அணுகினார்.
நீங்கள் இருவரும் இப்படி ஆசனத்தில் அமருகிறீர்களா?" என்று சற்று பணிவோடு கேட்டார்.
எதற்குக் குமாரா?" என்று கேட்டாள் பார்வதி.
உங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்துப் பூஜிக்க விரும்புகிறேன்" என்றார் கணேசன்.
அவர் வார்த்தைப்படி பார்வதி பரமேச்வரர் இருவரும் ஆசனங்களில் வந்து அமர்ந்தனர். கணேசன் அவர்கள் இருவரையும் பூஜித்து மன நிறைவோடு ஏழு முறை வலம் வந்து வணங்கினார்.
தந்தையே, எனக்கு விரைவில் மணம் முடிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.
குமாரா! நான் சொன்ன சொல்லை மறந்து விட்டாயா? பூமியை வலம் வந்தால் திருமணம் செய்து வைக்கிறேன். குமரன் உன்னை முந்தி விடுவான். சீக்கிரமாகப் போ" என்றார் சங்கரன்.
ஆம், குமாரா! சீக்கிரம் புறப்பட்டுப் போய் வா" என்றாள் பார்வதி.
அம்மா, தந்தை சொல்வது போலத்தான் தாங்களும் கூறுகிறீர்கள். நான் உங்கள் விருப்பப்படி நடந்து கொண்டு விட்டேனே" என்றான் கணேசன்.
 பார்வதிக்கு அவன் கூறுவது விளங்கவில்லை.
என்ன சொல்லுகிறாய், குழந்தாய்?" என்று கேட்டாள் பார்வதி.
ஒரு முறை அல்ல; ஏழு முறை பூமியை வலம் வந்து நிற்கிறேன்" என்றான் கணேசன்.
அதெப்படி குழந்தாய்?" என்று கேட்டாள் பார்வதி.
கணேசன் ஈசனை மீண்டும் பணிந்து வணங்கி விட்டுச் சொன்னான்.
தந்தையே, வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதை மறந்து விட்டீர்களா? மாதா பிதாவைப் பூஜித்துப் பிரதக்ஷிணம் செய்து வணங்கினால் அவன் பூபிரதக்ஷிணம் செய்த பலனை அடைவதாக வேதங்கள் சொல்லவில்லையா? தீர்த்த யாத்திரையில் கிடைக்கும் பலனை ஒருவன் வீட்டிலிருக்கும் தன் தாய் தந்தையரைப் பூஜிப்பதால் அடைகிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் பாதங்களை அலம்பி அந்தத் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டால் கங்கா தீர்த்தத்துக்குச் சமம் என்றும் கூறப்பட்டுள்ளது. வேதங்கள் தங்கள் திருமுகத்திலிருந்து உண்டானவை அல்லவா. தங்களை வலம் வந்தது பூமியைப் பிரதக்ஷிணம் செய்ததற்கு ஒப்பாகாது என்றால் வேதங்கள் பொய் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?"
கணேசனின் சாதுர்ய மிகுந்த வார்த்தைகளைக் கேட்ட பார்வதி பரமேச்வரர் இருவரும் களிப்புற்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டனர்.
குமாரா ! உன் அறிவுத் திறனை எவ்வாறு புகழ்வது என்றே தெரியவில்லை. சத்தியமான வார்த்தைகளைத்தான் கூறினாய். உன் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகிறேன்" என்றார் சிவபெருமான்.
விசுவரூபனுடைய புத்திரிகளான சித்தி புத்தி இருவரையும் கணேசனுக்கு மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்யப் பட்டது. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. எல்லோரும் வந்திருந்து மகிழ்ச்சி தெரிவிக்கக் கணேசனின் திருமணம் கோலாகலமாக நடந்தது. சித்தியிடம் லக்ஷம் என்னும் பெயருள்ள குமாரனும், புத்தியிடம் லாபம் என்னும் குமாரனும் உண்டானார்கள்.
இது இப்படியிருக்க, பூமியை வலம் வரச் சென்ற குமரன், தான் மேற்கொண்ட காரியத்தை முடித்துக் கொண்டு கைலாயம் திரும்பினார். கலகமே தம் பேச்சாகக் கொண்ட நாரதர் அவரைச் சந்தித்து, குமரா! உன்னைப் பார்க்க எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா? உன்னை பூமியை வலம் வருமாறு அனுப்பிவிட்டுக் கணேசனுக்கு இரு பெண்களை மணம் முடித்து விட்டார்கள் உன் பெற்றோர்கள். இது நன்றாகத் தோன்றவில்லை. இது பெருத்த அநியாயம் அல்லவா! இவ்வாறு அநியாயம் செய்தவர்கள் முகத்தில் விழிக்கவே கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது" என்று சொல்லி குமரனின் உள்ளத்தில் கோபத்தை உண்டாக்கி விட்டுப் போய்விட்டார்.
குமரனின் வருத்தம் எல்லை மீறிவிட்டது. கணேசனுக்குத் தான் முதலில் திருமணம் செய்ய வேண்டும் என்ற விருப்ப மிருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே! அவ்விதம் சொல்லாமல் தன்னை பூபிரதக்ஷிணத்துக்கு அனுப்பி விட்டுத் திருமணத்தை நடத்தி விட்டனரே! என வருந்தினார்.
அதை நினைக்க நினைக்க அவன் உள்ளம் குமுறியது. வேண்டுமென்ற செய்த செயலாக எண்ணினான் குமரன். கோபத்தால் அவன் உடல் துடித்தது. கைலாயத்தில் நுழைய அவனுக்கு விருப்பமில்லை. ஆடம்பரமான உடைகளைக் களைந்து எறிந்தார். கோவணத்தை அணிந்து கொண்டு தாய் தந்தையிடம் சென்றார்.
நீங்கள் செய்வது நியாயம்தானா என்பதை யோசித்துப் பாருங்கள். என் கோரிக்கையை நிறைவேற்ற உங்களுக்கு விருப்பமில்லை எனில் முதலில் கணேசனுக்குத்தான் விவாகம் எனச் சொல்லியிருக்கலாமே. இப்படி என்னை வஞ்சித்திருக்க வேண்டாம். இனி எனக்குத் திருமணமும் தேவை இல்லை; இந்த ஆடம்பரமும் வேண்டாம். என்னை யாரும் கொண்டாடவும் வேண்டியதில்லை" என்று சொல்லி விட்டுக் கோபமாகப் புறப்பட்டார்.
பார்வதி பரமேச்வரர் இருவரும் அவனைத் தடுத்து நிறுத்தினர்.
குமரா! வீண் கோபம் கொள்ளாதே. நாங்கள் சொன்னது உண்மைதான். அதன்படி நீயும் பூமியை வலம் வரச் சென்றாய். ஆனால் கணேசனோ தன் அறிவின் மூலம் உன்னை  முந்தி விட்டான். தாய் தந்தையரைப் பூஜித்து வலம் வந்து நமஸ்கரித்தால் ஒருவன் பூபிரதக்ஷிணம் செய்த பலனை அடைவான் என்று வேதம் கூறுகிறது. அதன்படி அவன் எங்கள் இருவரையும் பூஜித்து ஏழுமுறை பிரதக்ஷிணம் செய்து தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கூறினான். இப்போது நீயும் பூமியை வலம் வந்துவிட்டாய். உனக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். சாந்தம் கொள்" என்றனர்.
ஆறுமுகனோ பெற்றோர்களின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை; அவர்கள் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து புறப்பட்டு கிரவுஞ்ச மலைக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். அது முதல் குமரக் கடவுளுக்கு குமாரப் பிரம்மசாரி என்ற பெயர் நிலவத் தொடங்கியது.
கார்த்திகை பௌணர்மி, குமரக் கடவுளுக்கு மிகவும் விசேஷமானது. அன்றையத் தினம் தேவர்களும் முனிவர்களும் கிரவுஞ்ச கிரிக்குச் சென்று ஆறுமுகனைத் தரிசித்து மகிழ்ந்தனர். அன்று குமரக் கடவுளைத் தரிசிப்பவர்கள், பாபங்கள் ஒழிந்து தங்கள் மனோபீஷ்டம் நிறைவேறப் பெறுவர்.
குமரன் கோபித்துக் கொண்டு போனது பார்வதிக்கு மிகவும்  மனவேதனையைக் கொடுத்தது. புத்திரனைக் காண வேண்டுமென்று அவளும் கிரவுஞ்சகிரிக்குச் சென்று விட்டாள். சிறிது காலத்தில் சிவபெருமானும், மல்லிகார்ஜுனன் என்ற பெயரில் ஜோதிர்லிங்க ரூபத்தில் கிரவுஞ்ச மலைக்கு வந்தார்.
பெற்றோர் இருவரும் தன்னைத் தேடி வந்து விட்டனர் என்பதைக் கண்டதும் குமரன் அங்கிருந்து புறப்பட்டு வேறிடம் செல்லும் விருப்பம் கொண்டான். ஆனால் தேவர்கள் அவனைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து அவ்வாறு கோபித்துக் கொண்டு செல்லக் கூடாதென்றும் மனச் சாந்தியோடு அங்கேயே தங்க வேண்டுமென்றும் பிரார்த்தித்தனர். குமரனும் அவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அங்கேயே தங்கினார். கோபம் நீங்கி அவர் உள்ளம் சாந்தமடைந்தது.
அமாவாசை அன்று சிவபெருமானும், பௌர்ணமி தினம் பார்வதியும் குமரனைக் காண கிரவுஞ்ச மலைக்கு வந்து செல்கிறார்கள்.


ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment