Tuesday 21 April 2020

சிவ புராணம் ( 12 )

12. ஜோதிர் லிங்கங்களின் விவரம் 
நைமிசாரண்யவாசிகளான முனிவர்களுக்கு சூதர் மேலும் சிவமகாத்மியத்தைக் கூறத் தொடங்கினார்.
சிவபெருமானின் திவ்விய சரிதங்களை ஒருவன் கேட்பானாகில் அவன் சகல பாபங்களும் நீங்கிப் பரிசுத்தனாவான். அவன் மூலம் அவன் வம்சமே விளங்கும்.
நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருத்திராக்ஷமும் கொண்டு சதா சிவநாமங்களை உச்சரிப்பவனை ஒருவன் தரிசிப்பானாகில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் திருவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிட்டும். அவனிடத்தில் சிவநாமமே கங்கையாகவும், விபூதியே யமுனையாகவும், ருத்திராக்ஷமே சரஸ்வதியாகவும் விளங்குவதாகச் சொல்லப்படுகிறது.
ஆயிரத்தொருநூறு ருத்திராக்ஷங்களை ஒருவன் தரிப்பானாகில் அவன் ருத்திர ஸ்வரூபியாக விளங்குவான். ஐந்நூற்றைம்பது ருத்திராக்ஷங்களால் கிரீடம் செய்து அணிபவன் சிவ சாந்நித்தியத்தை அடைவான். உபவீதமாகத் தரிப்பதானால் முந்நூற்று அறுபது ருத்திராக்ஷங்களை அணிய வேண்டும். முக்திக்கு, சிகையில் மூன்றும், இரு காதுகளிலும் ஐந்து அல்லது ஆறும், கழுத்தில் நூற்றொன்றும், புஜத்தில் பதினொன்றும், இரு காதுகளைச் சுற்றிலும் பதினொன்றும், மணிக்கட்டில் பதினொன்றும், பூணூலில் மூன்றும் அணிய வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளது. ருத்திராக்ஷ மணிகளைக் கொண்டு ஒருவன் நூறு முறை சிவநாமங்களை ஜபிப்பானாகில், ஆயிரம் முறை ஜபித்த பலனை அடைவான்.
ருத்திராக்ஷங்களிலும் பலவகை இருக்கின்றது. ஒரு முகம் உடையது சகல காரிய சித்தியை அளிக்கும். இரு முகம் கொண்டது லக்ஷ்மி கடாக்ஷத்தை அளிக்கவல்லது. மூன்று முகம் உள்ளது, நினைத்த காரியத்தை விருத்தி செய்யும். நான்கு முகங்களை உடையதோ சதுர்வித புருஷார்த்தங்களையும் கொடுக்கக் கூடியதாகும். ஐந்து முகங்களோடு கூடியதோ சகல பாபங்களையும் போக்கி விடும்.
ருத்திராக்ஷங்களில் ஒருமுக மணி கிடைப்பது அரிதாம். அப்படிக் கிடைக்கும் பட்சத்தில், அது இலந்தம்பழம் அளவு இருக்குமானால் சுகம் அதிகமாகும். நெல்லிக்காய் அளவாக இருந்தால் துக்கங்கள் நீங்கும். கடலை அளவு உள்ளது மிகவும் விசேஷமானது. இம்மையில் சகல போகங்களையும் மறுமையில் மோக்ஷத்தையும் கொடுக்கவல்லது. குன்றுமணி அளவு உள்ளது காரிய சாதகம் செய்யும்.
ருத்திராக்ஷங்களை அணிய விரும்புபவன், அவற்றைப் பொருள் கொடுத்தே பெறவேண்டும். பிறரிடமிருந்து தானம் வாங்கக்கூடாது. பணம் கொடுத்து வாங்கச் சக்தியில்லாதவன் தன் புண்ணியத்தைத் தத்தம் செய்தாவது பெற வேண்டும். ருத்திராக்ஷமாலை அணிந்தவனைப் பார்த்தால் பூதப் பிரேத பிசாசங்கள் ஓடிவிடும்.
ருத்திராக்ஷ மகிமையைச் சொல்லி வந்த சூதர் அடுத்து ஜோதி லிங்கங்களைப் பற்றிக் கூறத் தொடங்கினார்.
ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டு உண்டு. சௌராஷ்டிரத்தில் சோமநாத லிங்கம் இருக்கிறது. ஸ்ரீசைலத்திலுள்ள லிங்கத்துக்கு மல்லிகார்ச்சுன லிங்கம் என்று பெயர். உஜ்ஜயினியில் மகாகாள லிங்கமும், ஓங்கார லிங்கமும் இருக்கின்றன. ஹிமோத்திரியில் கேதார லிங்கம் உள்ளது. டாகினியில் பீமசங்கர லிங்கமும், காசியில் விச்வேச்வர லிங்கமும், கோதாவரி தீரத்தில் திரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைத்தியநாத லிங்கமும் இருக்கின்றன. நாகேசுவர லிங்கம் தாருகாவனத்திலும், இராமேசுவர லிங்கம் சேதுவிலும், மஹாராஷ்டிரத்திலுள்ள வெரூலில் குச்மேச லிங்கம் உள்ளன.
ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டின் பெயரையும் எவனொருவன் விடியற்காலத்தில் எழுந்திருந்து பயபக்தி யோடு ஜபிக்கிறானோ அவன் பாபங்களிலிருந்து விடுபட்டுக் காரிய சித்தியை அடைவான். இவற்றைப் பூஜிப்பவர்கள் பிறவி ஒழிந்து பகவானின் சந்நிதானத்தை அடைவார்கள்.
மனத்தால் நினைத்தாலே பாபங்கள் விலகக்கூடிய பஞ்ச பூதலிங்கங்கள் ஐந்து ஆகும்.
காஞ்சீபுரத்தில் பிரதிவி மயமான ஏகாம்பர லிங்கம் இருக்கிறது. காவேரி தீரத்தில் உள்ள ஜம்புகேச்வரத்தில் அப்பு மயமான ஜம்புகேச்வர லிங்கம் உள்ளது. அக்கினி மயமான அருணாசல லிங்கம் அருணாசலம் எனப்படும் திருவண்ணா மலையில் இருக்கிறது. தக்ஷிண கைலாயம் என்று புகழ்பெற்ற சுவர்ணமுகீ தீரத்தில் உள்ள திருக்காளத்தியில், வாயு மயமான ஸ்ரீகாளத்தி லிங்கமும், பூலோக மகா கைலாயம் என்ற புகழ்பெற்ற தில்லையில் ஆகாய மயமான திருமூல லிங்கமும் உள்ளது. இவ்வைந்து  லிங்கங்களின் பெயரைக் கேட்டாலும், சொன்னாலும் மனத்தில் நினைத்தாலும் அப்போதே அவன் புனிதமடைகிறான் என்றும் சொல்லும்போது, கண்ணாரக் கண்டால் பலனை விவரிக்க வேண்டுமா?
ஜோதிர்லிங்கம் பன்னிரண்டுக்கும் உபலிங்கங்கள் உண்டு.
சோமநாத லிங்கத்துக்கு உபலிங்கம்,
மஹீநதி சமுத்திர சங்கம தீரத்தில் உள்ள அந்தகேசலிங்கம் ஆகும்.

பிருகு பர்வதத்துக்குச் சமீபத்திலுள்ள
ருத்திர லிங்கம் மல்லிகார்ச்சுன லிங்கத்தின் உபலிங்கமாம்.

மகாகாள லிங்கத்திற்குத் துக்தேச லிங்கமும், ஓங்காரேசுவர லிங்கத்திற்குக் கர்த்தமேச லிங்கமும், உப லிங்கங்களாகச் சொல்லப்பட்டுள்ளன.

யமுனை தீரத்தில் உள்ள பூதேச லிங்கம், கேதார லிங்கத்திற்கு உபலிங்கமாகும்.

பீமசங்கர லிங்கத்திற்கு பீமேசுவர லிங்கம்,  விசுவேச்வர லிங்கத்திற்குச் சரஸ்யேச்வர லிங்கமும், திரியம்பக லிங்கத்திற்குச் சித்தேச்வர லிங்கமும் வைத்தியநாத லிங்கத்திற்கு வைஜநாத லிங்கமும், நாகேசுவர லிங்கத்திற்கு, ஜில்லிகா சரஸ்வதி சங்கமத்திலிருக்கும் பூதேசுவர லிங்கமும், இராமேசுவர லிங்கத்திற்குக் குப்தேச்வர லிங்கமும், குஸ்மேச லிங்கத்திற்கு வியாக்கிரேசுவர லிங்கமும் உபலிங்கங்களாகும்.
இவை தவிர இன்னும் சில முக்கிய லிங்கங்கள் உள்ளன. கங்காதீரத்தில் கிருத்திவாகேச லிங்கம், விருத்த காலகேச லிங்கம், திலபாண்டேசுவர லிங்கம், தசாசுவமேத லிங்கம் ஆகியவை உள்ளன. கங்காசாகர சங்கமத்தில் சங்கமேசுவர லிங்கம், யமுனை தீரத்தில் கோதூமேசுவர லிங்கம், பிருந்தாவன சமீபத்தில் நீலேசுவர லிங்கம், கல்லகி தீரத்தில் கடுகேச லிங்கம், புஷ்கர நதி தீரத்தில் பூரேச லிங்கம், பல்குநதி தீரத்தில் மண்டகேச லிங்கம், கோமதி நதி சங்கமத்தில் சித்த நாதேசுவர லிங்கம், பத்தனம் எனப்படும் பாட்னாவில் தூரேச லிங்கம், மிருகேச லிங்கம், ஜகந்நாத லிங்கம் ஆகிய லிங்கங்கள் விசேஷமாகச் சொல்லப்பட்டவை.

நர்மதை நதி தீரத்திலும் அநேக லிங்கங்கள் இருக்கின்றன. நர்மதை நதியே சிவரூபமாகப் போற்றப்படுவதாகும்.

அங்குள்ள மலைகளில் ஆவர்த்தேசர், பத்மேசர், சிம்ஹேசர், ஸுமேசர், குமாரேசர், புண்டரீகேசர், மண்டபேசர், தீக்ஷணேசர், துந்தரேசர், சூலேசர், கும்பேசர், குபேரேசர், சோமேசர், நீலகண்டேசர், மங்களேசர், நந்திகேசர் ஆகிய லிங்கங்கள் உள்ளன.

அவற்றுள் நந்திகேசர் கோடி பிரம்மஹத்திகளையும் போக்கடிப்பார் எனப் போற்றப் படுகிறார். நர்மதையில் ஸ்நானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கப் பெறுவர்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment