Friday 10 April 2020

சிவ புராணம் ( 8 )

8. தாருகன் வதமும்
திரிபுர தகனமும் 
வருடங்கள் நகர்ந்தன. தேவர்கள் பொறுமை இழக்கத் தொடங்கினர். எந்தக் காரியத்தை உத்தேசித்து அவர்கள் கைலாசநாதனின் திருமணத்துக்கு முயற்சித்தார்களோ அந்தக் காரியம் நிறைவேறாது தாமதப்பட்டு வந்தது. காலம் சீக்கிரமே கனியும் என்று எதிர்பார்ப்புடன் நாட்களைக் கடத்தி வந்தனர். நாட்கள் கடந்தனவே ஒழிய குமாரனின் அவதாரம் நிகழவில்லை.
இனியும் தாமதிக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்ட தேவர்கள், அக்கினி பகவானைப் பார்த்து, அக்கினி தேவா,  நீதான் ஈசனிடம் சென்று குமாரக் கடவுளின் அவதார அவசியத்தை அவருக்கு நினைவூட்ட வேண்டும்" என்று வேண்டினர்.
அக்கினியும் அவர்கள் கோரிக்கைக்கு இணங்கி புறாவாக வடிவம் கொண்டு கைலயங்கிரிக்குப் பறந்து சென்றார்.
தேவியோடு ஆனந்தமாகப் பொழுதைப் போக்கி வந்த பரமேச்வரன் அங்கு வந்த புறாவைக் கண்டதும், யாரடா வந்திருப்பது?" என்று கேட்டபடி கோபமாக எழுந்தார். அப்போது அவரிடமிருந்து வீரியம் வெளிப்பட்டது. அடுத்த கணம், வந்திருப்பது அக்கினி தேவன் என்பதும், அவன் வந்த நோக்கம் குமாரக் கடவுளின் அவதார நிமித்தம் என்பதையும் அறிந்த ஈசன், சாந்தமடைந்து தம்முடைய வீரியத்தைக் கொண்டு சென்று கங்கையில் விடுமாறு தெரிவித்தார்.
அக்கினியும் அவ்வாறே புறா வடிவத்தோடு, ஈசனின் வீரியத்தை அவர் ஆணைப்படி, கங்கையில் விட்டார். கங்கையாலும் அதன் உக்கிரத்தை தாங்க முடியாமல் போனதால் அது தர்ப்பைப் புற்கள் வளர்ந்திருந்த சரவணப் பொய்கை எனப்படும் மடுவில் அதை சேர்த்தது. அந்த க்ஷணமே அழகிய ரூபத்தோடு குமாரன் தோன்றினான்.
அப்போது மடுவுக்கு நீராட வந்த கன்னியர் அறுவர், புற்களிடையே நீரில் மிதக்கும் குழந்தையைக் கண்டு ஓடி வந்து, ‘என் குமாரன்’ என்று தூக்க வந்தனர். அவர்களிடையே பூசலை உண்டாக்க விரும்பாத சிவகுமாரன் ஆறு முகங்களோடு அவர்களுக்குத்  தோற்றமளித்தான். ஒவ்வொருவரும் அவரை வாரி எடுத்து முலைப்பால் கொடுத்தனர். அதன் காரணமாக அவருக்கு ஷண்மாதுரன் (ஷண்முகன்) என்ற பெயர் விளங்கலாயிற்று. மேலும் குமாரக் கடவுளுக்குப் பார்வதி மைந்தன், அக்கினி புத்திரன், ஸ்கந்தன், சரவணபவன், கங்காபுத்திரன் என்ற நாமங்களும் விளங்கலாயின.
கன்னியர் அறுவரும் குமாரனை அன்போடு வளர்த்து வந்தனர். குமாரனின் அவதாரத்தையும், கன்னியர் அறுவரிடம் அவர் வளர்ந்து வருவதையும் நாரதர் மூலம் அறிந்த பார்வதி ஈசனோடு புறப்பட்டுச் சென்று மகனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். குமாரன்அவதரித்து விட்டான் என்பதைக் கேட்ட தேவர்களும் அங்கு வந்து கூடினர். எல்லோரும் தேவியையும் குமாரனையும் பலவாறு தோத்திரங்கள் செய்து வணங்கி, அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக் கொண்டு தாருகனோடு யுத்தத்துக்குப் புறப்படுமாறு வேண்டினர்.
பரமன், குமாரனுக்கு அனேக வித அஸ்திரங்களைக் கொடுத்து, யுத்தத்தில் அசுரனை வெற்றி கொள்ளுமாறு அருளினார். தேவியும் தமது சக்தியை மைந்தனுக்கு அளித்தாள். விஷ்ணு பிரம்மாதியரும் தங்கள் அஸ்திரங்களைக் குமாரக் கடவுளுக்கு அளித்து, அவர் தலைமையில் தங்கள் பரிவாரங்களுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டனர்.
தேவர்கள் பயத்தை விடுத்து யாரோ ஒரு சிறுவன் தலைமையில் யுத்தத்துக்கு வருகிறார்கள் என்பதை அறிந்தபோது தாருகன் பெரும் சீற்றம் கொண்டான். உடனே  வீரர்களைத் திரட்டிக் கொண்டு அவனும் யுத்த சன்னத்தமானான்.
நகருக்கு வெளியே அசுரப் படைகளும் தேவர் படைகளும் சந்தித்துக் கொண்டன. மிகவும் பயங்கரமான யுத்தம் தொடங்கியது. அசுரன் எத்தனையோவித மாய உருக்களைக் கொண்டு  குமாரனுடன் போரிட்டான். குமாரக் கடவுளும் அவ்வப்போது தமது அஸ்திரங்களால் அசுரனின் மாயத் தோற்றத்தை வெளிப்படுத்தித் திக்குமுக்காடி ஓடும்படி செய்தார். ஒரு நாள், இரண்டு நாள் என்று ஆரம்பித்த யுத்தம் பத்து நாட்கள் வரை நீடித்தது. அசுரன் கொஞ்சமும் சளைக்காது சிவகுமாரனோடு யுத்தம் செய்தான். யுத்தத்தை மேலும் நீடிக்க விரும்பாத குமாரக் கடவுள், பத்தாவது நாள் தம் பெற்றோர்களை மனத்தால் தியானித்து, அசுரனின் அழிவு நிறைவேறப் பிரார்த்தித்துக் கொண்டு அஸ்திரம் ஒன்றை விடுத்தார். அசுரனின் மாயாஜாலங்களை அது அழித்து, முன்னேறிச் சென்று அவனைத் தாக்கி, அவன் உயிரைக் குடித்துத் திரும்பியது.
தாருகன் அழிந்தான் என்பதை அறிந்தபோது, தேவர்கள் ஆனந்தப் பரவசமாகி ஓடி வந்து குமாரக் கடவுளின் அடிபணிந்து துதித்தனர். முனிவர்கள் பலவாறு குமாரனின் பெருமைகளைப் போற்றிப் புகழ்ந்தனர். பயம் ஒழிந்து சகல லோகங்களிலும் நிம்மதி ஏற்பட்டது.
தாருகன் வதத்தால் ஏற்பட்ட நிம்மதி, அதிக காலத்துக்குத் தொடர்ந்து இருக்கவில்லை.
தாருகனின் புத்திரர்களான வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் அம்மூவரும், தந்தையின் மரணத்துக்குப் பிறகு தேவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று பிரம்ம தேவனைக் குறித்துத் தவம் மேற்கொண்டனர். கணக்கற்ற வருடங்கள் உடலைப் பலவிதத்திலும் வருத்திக் கொண்டு அவர்கள் காற்றையே உணவாக்கிக் கடுமையாகத் தவம் செய்தனர்.
அவர்கள் மேற்கொண்டிருக்கும் தவத்தை மேலும் நீடிக்க விட்டால், சகல லோகங்களும் யோகாக்கினியில் தகிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்த பிரம்மன் அவர்கள் முன்பு காட்சி தந்து, அசுர குமாரர்களே! உங்களுக்கு வேண்டிய வரம் என்ன?" என்று கேட்டார்.
பிரபோ! எங்களுக்கு யாராலும் எந்த வழியிலும் மரணம் சம்பவிக்காதிருக்குமாறு அனுக்கிரகிக்க வேண்டும்" என்று  மூவரும் நான்முகனை வேண்டினர்.
அசுரகுமாரர்களே! உங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாததாயிருக்கிறது. பிறப்பு என்று இருந்து விட்டால் மரணம் சம்பவித்துத்தான் ஆகும். யாராலும் அதைத் தடுக்க முடியாது. ஆகவே வேறு வரம் ஏதாவது கேளுங்கள்" என்றார் சதுர்முகன்.
மூவரும் சிறிது ஆலோசித்துப் பின்னர் பிரம்மதேவனை வணங்கி, பிரபோ! நாங்கள் கேட்ட அந்த வரத்தைக் கொடுக்க முடியாதென்றால் நாங்கள் விரும்பும் இந்த வரத்தையாவது எங்களுக்கு அளிக்கவேண்டும். நினைத்த மாத்திரத்தில் பறந்து செல்லும் வலிமையுடைய பொன், வெள்ளி, இரும்பாலான மூன்று பட்டணங்கள் எங்களுக்குக் கிடைக்க அருள வேண்டும். அம்மூன்றும் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை ஒன்று சேர வேண்டும். அவ்வாறு மூன்று பட்டணங்களும் ஒன்று சேர்ந்துள்ள சமயத்தில் ஒரே பாணத்தால் அவற்றை ஒருங்கே அழிக்கக் கூடிய சக்தி உள்ள ஒருவனாலேதான் நாங்கள் கொல்லப்பட வேண்டும். இந்த வரத்தைத் தாங்கள் எங்களுக்கு அருள வேண்டும்" என்று வேண்டினர்.
நான்முகன் அவர்கள் கேட்ட வரத்தை அளித்தார். பின்னர் தேவதச்சனான மயனை அழைத்துச் சகல வசதிகளோடு மூன்று பட்டணங்களையும் நிர்மாணித்து அசுர குமாரர்களிடம் ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டுத் தம் இருப்பிடம் சென்றார்.
பிரம்மன் இட்ட உத்தரவுப் பிரகாரம் மயன் பொன், வெள்ளி, இரும்பாலான பட்டணங்களை நிர்மாணித்தார். தாரகாக்ஷனுக்கு பொன்னாலான பட்டணத்தையும், கமலாக்ஷனுக்கு வெள்ளியாலான பட்டணத்தையும், வித்யுன்மாலிக்கு இரும்பாலான பட்டணத்தையும் அளித்தான். பொன்னாலான பட்டணமாகிய காஞ்சனபுரி சுவர்க்கத்திலும், வெள்ளியாலான இரசிதபுரி வானவெளியிலும், இரும்பாலான ஆயசபுரி பூமியிலும் சஞ்சரிக்கும் சக்தி பெற்றிருந்தன.
அசுரகுமாரர்கள் மூவரும், தங்கள் பட்டணங்களில் உற்றார்  உறவினரோடு குடியேறினர். உலகெங்கிலும்  இருந்த அரக்கர்கள் அவர்களை அடைந்தனர்.
ஆயசபுரியான இரும்புப் பட்டணத்திற்கதிபதியான வித்யுன்மாலி, நினைத்த மாத்திரத்தில் தன் பட்டணத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டு சென்றான். இவ்விதமாக அவன் உலகின் பல பாகங்களிலும் சுற்றினான். திடீர் திடீரென உயரே எழுந்து பறந்து சட்டென்று பட்டணத்தை கீழே இறக்குவான். பட்டணத்தின் அடியில் சிக்கிக் கொண்ட மக்களும் பிராணிகளும் கூட்டம் கூட்டமாக உயிரை இழந்தனர். எந்தச் சமயத்தில் பட்டணம் தங்கள் மீது இறங்குமோ என்ற பயத்தில் பூலோகவாசிகள் நடுங்கி வந்தனர். அதனால் அவர்கள் தங்கள் கர்மாக்களைச் சரிவரச் செய்ய முடியாது தவித்தனர். தர்மாசாரங்கள் நசியத் தொடங்கின.
பூலோகத்தில் யாகம் முதலான கர்மாக்கள் சரிவர நடக்காததால், தேவர்களுக்குக் கிடைத்து வந்த அவிர்ப்பாகம் குறைந்து விட்டது. அதனால் அவர்கள் வலிமை குன்றியவர் களானார்கள். அது மட்டுமல்ல; அவர்களால் நிம்மதியாக நடமாடவும் முடியவில்லை. எந்த நேரத்தில் வானமார்க்கமாகப் பறந்து செல்லும் அசுர பட்டணங்கள் தங்கள் மேல் விழுமோ என்ற பயம் அவர்களையும் பீடித்திருந்தது.
எல்லோருமாகப் பிரம்மலோகம் சென்று நான்முகனைச் சரண் அடைந்தனர்.
அன்புமிக்கத் தேவர்களே! அசுரர்கள் மூவரும் எளிதில் அழிக்க முடியாதவாறு வரம் பெற்றுள்ளனர். நாராயணனைக் கேட்போம். அவரால்  இதற்கொரு உபாயம் காண முடியும்" என்று கைவிரித்த நான்முகன், தேவர்களை விஷ்ணுவிடம் அனுப்பி வைத்தார்.
க்ஷீராப்தி சயனரான மகாவிஷ்ணுவும் தேவர்களின் துயரைக் கேட்டுத் தானும் வருந்தினார்.
தேவர்களே! அசுரர்களை அழிப்பதானது நம்மால் இயலாத காரியம். ஆதிபரம்பொருளான சிவபெருமான் ஒருவரே அவர்களை அழிக்கவல்லவர். அவரை ஆராதித்து அனுக்கிரகம் பெறுவோம்" என்று சொன்ன விஷ்ணு, தேவர்களைச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யுமாறு சொன்னார். தேவர்களும் அவரையே முன்னின்று பூஜையைக் குறைவின்றி நிறைவேற்றித் தருமாறு வேண்டினர்.
நாராயணனும் அதை மகிழ்ச்சியோடு ஏற்று சிவ லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். தேவர்களும் அவரோடு தூய உள்ளத்தோடு தங்கள் துயரம் நீங்கப் பரமேச்வரனைத் தியானித்து சிவலிங்கத்தைப் பூஜை செய்தனர்.
பூஜையின் முடிவில் சிவலிங்கத்தினின்று கோர ரூபத்தோடு எண்ணற்ற பூதங்கள் தோன்றி, தேவர்களைப் பணிந்து நின்றன.
சிவானுக்கிரகம் பெற்ற பூதகணங்களே! நீங்கள் அனைவரும் இப்போதே புறப்பட்டுச் சென்று முப்புரங்களையும் எரித்து விட்டு வாருங்கள்" என்றார் விஷ்ணு.
பூதகணங்கள் அசையாது நிற்பதைக் கண்ட விஷ்ணு ஆச்சரியத்தோடு அவைகளைப் பார்த்தார்.
ஏன் நிற்கிறீர்கள்? இப்போதே புறப்படுங்கள்" என்றார்.
பிரபோ, அசுரர் மூவரும் ஈசனிடம் பக்தி பூண்டவர்கள். அவன் பட்டணத்திலிருப்பவர்களும் சிவபூஜை செய்பவர்கள். அவர்கள் எவ்வளவு பாவியாக இருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல, அவர்களுடைய பாபங்கள் அவர்களை நெருங்க முடியாது இருக்கின்றன. அந்த இடத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாதே!" என்றன பூதகணங்கள்.
அப்படியானால் நீங்கள் போகலாம். வேறு உபாயம் பற்றித்தான் யோசிக்க வேண்டும்!" என்றார் விஷ்ணு.
பூதகணங்கள் மறைந்ததும் தேவர்களைப் பார்த்து, நீங்கள் அனைவரும் ஒன்று கூடி அந்தப் பரம்பொருளைத் தியானியுங்கள். அவர் அனுக்கிரகம் இருந்தால் தான் நாம் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும்" என்றார்.
தேவர்கள் நாராயணனைப் பணிந்து விடைபெற்றுச் சென்றனர். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பரமேச்வரனைத் தியானித்தனர். இதனிடையில் விஷ்ணு ஒரு தனியிடத்தில் ஏகாந்தமாகத் தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவரிடமிருந்து ஒரு மாயாபுருஷன் தோன்றினார். மேலும் நால்வரை உண்டாக்கி அப்புருஷனுக்குச் சிஷ்யர்களாகப் பணித்தார்.
பிரபோ! நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தெரிவிக்கலாம்" என்று அவர்கள் ஐவரும் நாராயணனின் தாள் பணிந்தனர்.
இப்போதே நீங்கள் புறப்பட்டுச் சென்று அசுரன் தாருகன் புத்திரர்களான தாரகாஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி ஆகியோருடைய பட்டணங்களை அடைந்து, அங்குள்ள மக்களுக்கும், அசுரர்களுக்கும் இதமான வார்த்தைகளைச் சொல்லி அவர்கள் மனத்தை மயக்கி, சிவபூஜையிலிருந்து வழுவும்படி செய்ய வேண்டும். சிவபூஜையை அலட்சியப் படுத்துவதன் மூலம் அவர்கள் தாங்கள் அடைந்திருக்கும் பகவத் அனுக்கிரகத்தின் வலிமை குறைந்தவர்களாக வேண்டும்" என்றார் நாராயணன்.
அதே சமயம் பிரபோ! பன்னகசயனா!... சகல புவனங்களும் தங்களால் ரக்ஷிக்கப்பட வேண்டும்" என்று பிரார்த்தித்தபடி அங்கே வந்து சேர்ந்தார் நாரதர்.
அவரைக் கண்ட நாராயணன் மகிழ்ச்சி அடைந்து, நாரதா! நல்ல சமயத்தில் தான் வந்திருக்கிறாய். இங்கு உள்ள மாயா புருஷர்கள் என்னால் தோற்றுவிக்கப்பட்டவர்கள். தாருகனின் குமாரர்கள் மூவரும் செய்து வரும் அட்டகாசங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அசுரர்களும் அவனைச் சேர்ந்தோர்களும் சிவபூஜை தவறாது செய்து வருகின்றபடியால் அவர்களை எந்தத் தேவர்களாலும் அசைக்க முடியாது. அவர்கள் தாங்கள் செய்து வரும் நித்திய கர்மாக்களை விடுத்து சிவபராதிகளாக மாறுவதற்காக இவர்களைத் தோற்றுவித்து அங்குச் சென்று பிரசாரம் செய்யுமாறு சொல்லியிருக்கிறேன். நீயும் உடன் சென்று இவர்களுக்குத் தேவையான உதவி செய்ய வேண்டும்" என்றார்.
பிரபோ, தங்கள் விருப்பம் என் சித்தம்" என்று பணிந்த நாரதர், அவரது ஆசி பெற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
விஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்ட மாயா புருஷன் மதாசாரியாராகவும் அவனுடன் வந்த நான்கு பேரும் அவருடைய பிரதம சீடர்களாகவும் நாரதரோடு வித்யுன் மாலியின் ஆயசபுரியுள் நுழைந்தனர். நாரதர் அவர்களை நேராக அசுரனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
நாரதரைக் கண்டதும் வித்யுன்மாலி அவரை வரவேற்று உபசரித்தான்.
சர்வலோக  சஞ்சாரியான நாரதமுனிவரே! ஏது இவ்வளவு தூரம்? காரியம் ஏதுமின்றி இங்கே வரமாட்டீர்களே!" என்று கேட்டான்.
வித்யுன்மாலி! இப்படிச் சஞ்சாரித்துக் கொண்டு வரும் போது இந்த ஆசாரியாரைச் சந்தித்தேன். பகவத் விஷயமாகப்  பிரசாரம் செய்து வருவதாகவும் உன் பட்டணத்துக்கும் போக வேண்டும் என என்னிடம் விருப்பம் தெரிவித்தார். போகும் வழியில் இங்கு அழைத்து வந்து விட்டுவிட்டுச் செல்லலாமென வந்தேன்" என்றார் நாரதர்.
வித்யுன்மாலி மாயாபுருஷனையும் அவனுடன் சிஷ்யர்களாக வந்திருந்த நால்வரையும் வரவேற்று நன்கு உபசரித்தான்.
வித்யுன்மாலி, இந்த மனிதர் சாதாரணமானவரல்ல, மிகுந்த பக்திமான். தர்மோபதேசம் செய்வதில் இவருக்கு நிகர் இல்லை எனலாம்.  நானே இவருடைய உபதேசத்தைக் கேட்டு மனம் களித்து இவரிடம் தீக்ஷை பெற்றேன்" என்றார் நாரதர்.
அப்படியா, சுவாமி! ..." என்று ஆச்சரியத்தோடு கேட்டான் அசுரன்.
ஆம், நீயும் இவரிடம் தீக்ஷை பெற்றால் உன் மகிமை மேலும் பிரகாசிக்கும் என்பது என் அபிப்பிராயம்!" என்றார் நாரதர்.
பட்டணத்தை நினைத்த மாத்திரத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு சென்று கூட்டம் கூட்டமாக மக்களைக் கொலை செய்து வந்த வித்யுன்மாலி, அந்தப் பாபம் காரணமாக புத்தி கூர்மை மழுங்கி இருந்ததால் நாரதருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ள மர்மத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. மேலும் விஷ்ணுவின் உத்தரவினால் அவர் களோடு ஜேஷ்டாதேவியும் பட்டணத்தில் நுழைந்திருந்தாள்.
நாரதரின் வார்த்தைகளில் மயங்கிய வித்யுன்மாலி, மாயா புருஷனை வணங்கி, சுவாமி, அடியேனுக்கும் தீக்ஷை செய்விக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.
மாயாபுருஷன் அசுரனின் வேண்டுகோளை ஏற்று அவனுக்குத் தர்மோபதேசம் செய்தான். அசுரனின் கொடுமை நிறைந்த உள்ளத்துக்கு இதமளிக்கும் வகையில், தர்மங்களை இருபொருள் படும் வகையில் எடுத்துக் கூறினான். விக்கிரக ஆராதனை தேவை இல்லை எனப் பல மேற்கோள்களுடன் எடுத்துக் காட்டினான் மாயாபுருஷன். பூஜை, வழிபாடு முதலானவை, செலவுக்குத் தான் வழி கோலுமே தவிர மற்ற வழிகளில் உதவக் கூடியவை அல்ல எனத் தெரிவித்தான். இன்னும் பல வகைகளில் அசுரன் மனம் களிக்கும் வகையில் எடுத்துச் சொல்லி வந்தான்.
அபரிமிதமான பாபங்களால் முடிவுக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த அசுரன், மாயா புருஷனின் வார்த்தைகளில் மதி மயங்கினான். அவன் உபதேசங்களை வேத வாக்காக  எடுத்துக் கொண்டான். அத்துடன் மட்டுமல்ல, தன் பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் அத்தர்மத்தை உபதேசிக்கச் செய்தான். தன்னுடைய சகோதரர்கள் இருவருடைய பட்டணங்களுக்கும் மாயாபுருஷனை அனுப்பி அங்கும் உபதேசம் செய்யச் சொன்னான்.
விஷ்ணுவால் அனுப்பப்பட்ட மாயா புருஷன், அசுரப் பட்டணங்கள் மூன்றிலும் விதைத்துவிட்டு வந்தவை, நன்கு முளைத்துத் துளிர்விடத் தொடங்கின. மக்கள் சிவபூஜையை விட்டுவிட்டனர். நல்ல காரியங்களில் செலவிட்டு வந்த பொழுதைத் தர்மத்துக்கு விரோதமான காரியங்களில் செலவழித்தனர். இதனால் தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கியது.
இது இவ்வாறிருக்க, சிவபெருமானைத் தியானித்துத் தவம் மேற்கொண்ட தேவர்களுடன் விஷ்ணுவும் சேர்ந்து கொண்டார். அவர்கள் செய்யும் சிவநாமபஜனை கைலாசம் வரை சென்று மோதியது. ஈசன் மகிழ்வுற்றுத் தேவர்கள் முன்பு தோன்றினார்.
உங்களுக்கு என்ன வேண்டும்? என்னைக் குறித்துத் தவம் மேற்கொண்டதன் காரணம் என்ன?" என்று வினவினார்.
பிரபோ, சர்வேச்வரா! தாருகனின் குமாரர்களான அசுரர்கள் மூவரும், தங்கள் தவப் பயனால் நினைத்த மாத்திரத்தில் பறந்து செல்லும் திரிபுரங்களில் இருந்து கொண்டு, எங்களுக்கும் பூலோக வாசிகளுக்கும் இழைத்து வரும் கொடுமைகள் சொல்லி முடியாது. சதா பயத்தில் இருக்கும் முனிவர்களாலும் பூலோகவாசிகளாலும் தங்கள் கர்மாக்களைச் சரிவரச் செய்ய முடியாதிருக்கின்றது. அதனால் நாங்கள் வலுகுன்றி விட்டோம். சுலபத்தில்  சாதிக்க முடியாத அழிவைக் கேட்டுப் பெற்றுள்ள அசுரர்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆயிரம் வருடங்களுக்கொருமுறை முப்புரங்களும் ஒன்று சேரும் போது, ஒரே பாணத்தால் அவற்றை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவனே தங்களை அழிக்கவல்லவன் என அவர்கள் வரம் பெற்றுள்ளார்கள். மகேச்வரா! எங்களைத் தோற்றுவித்தத் தாங்களே எங்களை இத்துயரிலிருந்து மீட்டுக் காக்க வேண்டும்" என்று கோரினர்.
மகாவிஷ்ணு பலவித ஸ்தோத்திரங்களால் ஈசனைப் புகழ்ந்து போற்றி கைலாசநாதா! மாயையால் ஒரு புருஷனைத் தோற்றுவித்து நான்கு சீடர்களோடு அசுரனின் பட்டணங்களுக்குச் சென்று தர்மோபதேசம் செய்யும் மார்க்கமாக அதர்மத்தை அவர்களுக்கு உபதேசித்து அதில் அவர்களை நாட்டம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன். தங்களைக் குறித்து அவர்கள் செய்து வந்த பூஜைகள் அனைத்தும் நின்றுவிட்டன. மேலும் தங்களுக்கு அபசாரம் செய்வது போல் தங்கள் மூர்த்தங்களை அலட்சியப் படுத்தியிருக்கின்றனர். தேவரீர் எங்களுக்குக் கிருபை செய்ய வேண்டும். அசுரர்களின் அழிவு தங்களால் தான் சாதிக்கக் கூடியது"என்று விக்ஞாபித்தார்.
ஈசனின் முகம் மலர்ந்தது, துயரத்தை இப்போதே விடுங்கள். அசுரர்களின் அழிவு நெருங்கிவிட்டது. அவர்களது அட்டகாசத்தை நானும் கவனித்து வருகின்றேன். என்னைக் குறித்துச் செய்து வந்த பூஜையின் பலன், இதுவரை அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து வந்தது. இப்போது அந்தப் பாதுகாப்பு அகன்று விட்டது. அவர்கள் அதர்மங்களால் சூழப்பட்டிருக்கிறார்கள். முப்புரங்களும் ஒன்று சேர ஆயிரம் வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அசுரர்களோடு யுத்தம் செய்யத் தகுந்த இரதம் ஒன்றைத் தயார் செய்யுங்கள். இரதம் தயாராகிவிட்டால் அப்போதே அசுரர்களின் அழிவுக்காலம் தொடங்கிவிட்டது என்பதை அறியுங்கள்" என்று அருளி மறைந்தார்.
சகலமான தேவர்களும் ஆனந்தத்தால் நிறைந்த உள்ளத்தோடு ஈசனைப் பலவாறு துதித்து, தேவ தச்சனான விசுவகர்மாவை அழைத்து இரதம் உருவாக்கும் வேலையை அவனிடம் ஒப்படைத்தனர். விசுவகர்மா மகிழ்ச்சியோடு விஷ்ணு பிரம்மாதி தேவர்களின் பரிபூரண ஆசிபெற்று இரதத்தை உருவாக்குவதில் முனைந்தான். விரைவிலேயே அசுரர்களுடன் யுத்தத்துக்குச் செல்ல ஈசன் ஆரோகணிக்க வேண்டிய இரதம் பிரமிக்கத்தக்க வகையில் உருவாகியது.
அசுரர்களை வதம் செய்வதற்காக ஈசன் ஏறிச் செல்ல இருக்கும் இரதமாக தேவர்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டனர்.
சூரியர், சந்திரர் இருவரும் இரதத்தின் சக்கரங்களானார்கள். அஸ்தகிரியும், உதயகிரியும் இருசுகளாயினர். மந்திரகிரியே இரதமாகியது. ஆகாயம் கொடுமுடியாகியது. தேவர்கள் இரதத்தின் அலங்காரப் பொருள்களானார்கள். நக்ஷத்திரங்களும் திரைச்சீலை மற்றும் அனேக அலங்காரப் பொருள்களாக விளங்கின. விந்தியமலை குடையாகியது. பிரம்மதேவன் கடிவாளத்தைக் கையிலேந்தி சாரதியானார். பிரணவம் குதிரைகளை ஓட்டிச் செல்லும் சாட்டையாக மாறியது. வேதங்கள் நான்கும் குதிரைகளாயின. மேருமலை வில்லாக, வாசுகி அதன் நாணாகியது. சரஸ்வதி வில்லின் நுனியிலே ‘கலகல’ வொலிக்கும் சிறு மணிகளாக விளங்கினாள். விஷ்ணு பாணமானார்.
இந்த விதமாக இரதம் தயாரானதும் தேவர்கள் சிவபெருமானைத் தியானித்தனர். பகவானும் யுத்தத்துக்குப் புறப்படும் அலங்காரங்களோடு அவர்கள் முன் தோன்றி இரதத்தில் ஆரோகணித்தார். முனிசிரேஷ்டர்கள், பகவானின் மங்கள சொரூபத்தைத் தரிசித்து ‘ஜய ஜய’ என்று கோஷமிட்டு நல்வாக்கு அருளினர். தேவியும் திரிபுர சம்காரத்தைக் காணவேண்டுமென்று ஈசனின் அருகில் வந்து அமர்ந்தாள். கங்கை முதலான புண்ணிய நதிகள், பார்வதி பரமேச்வரருக்குச் சாமரம் வீசின.
இரதத்தில் ஆரோகணித்த சங்கரன், ம், இரதம் புறப்படட்டும்" என்று பிரம்ம தேவனுக்கு அனுமதி அளித்தார். நாற்புறமும் தொங்கிக் கொண்டிருந்த மணிகள் ‘கல கல" வென்று சப்திக்க இரதம், அசுரகுமாரர்களின் பட்டணங்களை நோக்கிச் சென்றது. சாரணர், சித்தர் முதலானோர் மலர் மாரி பெய்தனர்.
அசுரப் பட்டணத்தை நெருங்கியதும் ஈசன் வில்லை வளைத்து ஹூங்காரம் செய்தார். அந்தச் சப்தத்தில் அண்ட சராசரங்களும் கிடுகிடுத்தன. தனித்தனியே இருந்த திரிபுரங்களும் காந்தத்தால் ஒன்றையொன்று ஆகர்ஷிப்பது போல் ஈசனின் ஹூங்கார சப்தத்தின் வேகத்தால் தானாக ஒன்று சேர்ந்தன.
பிரபோ! இதுவே தகுந்த சமயம்!" என்று சாரதியம் செய்த பிரம்ம தேவன் கூறினார்.
பாணத்தை நாணிலே இருத்திய சிவபெருமான் பெரும் கோபத்தோடு நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து புறப்பட்ட தீ ஜ்வாலை முப்புரங்களையும் ‘திகு திகு’ வென எரியச் செய்தது. பரமேச்வரன் வில்லை வளைத்துப் பாணத்தை எய்தார். இமைக்கும் நேரத்தில் வில்லிலிருந்து புறப்பட்ட பாசுபதாஸ்திரம் முப்புரங்களையும் அடியோடு நாசமாக்கி அதிலிருந்தோர் அனைவரையும் அழித்துத் திரும்பியது.
ஜய விஜயீபவ!" என்ற கோஷம் அண்டசராசரங்களிலும் எதிரொலித்தது. பிரம்மன், விஷ்ணு முதலானோர், பெரும் சீற்றத்தோடு ருத்திரமூர்த்தியாய் கனல் கக்கும் விழிகளோடு நிற்கும் சிவபெருமானைப் பார்த்துத் தேகம் நடுங்கியவர்களாய் பிரார்த்தித்தனர்.
பிரபோ, சர்வேசா, சர்வலோக சரண்யா, பார்வதி நாதா! அசுரர்கள் மூவரும் அழிந்துவிட்டனர். தேவர்களை ரக்ஷிக்கத் தாங்கள் மேற்கொண்ட காரியம் நிறைவேறி விட்டது. தேவர்கள் பயம் நீங்கியவர்களாய் தங்களை அடிபணிந்து வணங்குகிறார்கள். மகேஸ்வரா, கோபத்தை விடுத்து சாந்தம் கொள்ள வேண்டும்! அப்போதுதான் சகல புவனங்களும் பிழைக்கும்" என்று நெஞ்சுருகிப் பிரார்த்தித்தனர்.
தேவர்களும் பகவானின் உள்ளம் களிப்படையும்படி அவர் நாமங்களைப் பூஜித்தனர்.
விஷ்ணு முதலானோரின் பிரார்த்தனைகளால் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைய, பகவான் கோபத்தை விட்டுச் சாந்தமடைந்தார். தேவர்கள் அவர் பாதங்களில் தலை தாழ்த்திப் பணிந்தனர். ஈசன் அவர்களுக்கு அனேக வரங்களை அளித்து அனுக்கிரகம் செய்துவிட்டு,    தேவியுடன் கைலாயம் திரும்பினார்.

hari Om

No comments:

Post a Comment