Sunday 12 April 2020

சிவபுராணம் ( 9 )

9. சிவலிங்க பூஜை
ஈசனின் மகிமைகளைக் காணக் காண தேவர்கள் அவர் அருள்கடாக்ஷம் தங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினர். அவரை ஆராதித்துத் தினமும் பூஜிக்க தங்களுக்குச் சிவலிங்கங்கள் கிடைக்கச் செய்யுமாறு விஷ்ணுவைப் பிரார்த்தித்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று, தேவதச்சனை அழைத்து, தேவதச்ச, சகல காரணபூதரான சிவபெருமானின் திரு அருட்பிரசாதம் என்றும் கிடைக்கும்படி செய்ய, அவரைத் தினமும் ஆராதித்து வர, தேவர்களாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆகவே எங்கள் அந்தஸ்துக்கேற்ப ஒவ்வொருவருக்கும் சிவலிங்கங்கள் செய்து அளிக்க வேண்டும்" என்றார்.
தேவதச்சனாகிய விசுவகர்மா அவ்வாறே ஒவ்வொரு தேவருக்கும் அவரவர் அந்தஸ்துக்கேற்ப சிவலிங்கங்கள் செய்து அளித்தான்.
இந்திரனுக்குப் பத்மராகத்தால் செய்யப்பட்ட லிங்கம் கிடைத்தது. குபேரனுக்கு ஸ்வர்ண லிங்கமும், யமனுக்கு கோமேதக லிங்கமும் கொடுக்கப்பட்டன. வருணன் நீல லிங்கத்தைப் பெற்றான். விஷ்ணு இந்திர நீலத்தால் செய்யப்பட்ட அழகிய லிங்கத்தைப் பெற்றார். பிரம்மனும் ஸ்வர்ணத்தால் செய்யப்பட்ட லிங்கத்தைப் பெற்றார். அஷ்ட வசுக்களும் விசுவ தேவர்களும் வெள்ளியாலான லிங்கத்தைப் பெற்றார்கள். வாயுவுக்குப் பித்தளை லிங்கம் கிடைத்தது. பார்த்திவ லிங்கத்தை அசுவினி தேவர்கள் பெற்றார்கள். பார்த்திவ லிங்கம் மணியால் செய்யப்பட்டது. பிராமணர்கள் ஸ்படிக லிங்கத்தைப் பெற்றார்கள். துவாதசாதித்தர்களுக்கும், சோமனுக்கும் முத்து லிங்கத்தை வழங்கினான். இலக்குமி தேவிக்கு தாமிர லிங்கத்தையும், வஜ்ர லிங்கத்தை அக்னிக்கும் வழங்கினான். மயன் சந்தன லிங்கம் பெற்றான். அனந்தன் முதலிய நாகராஜர்கள் பவள லிங்கத்தையும், தைத்தியர்களும், அரக்கர்களும் கோமய லிங்கம் எனப்படும் சாணத்தால் செய்யப்பட்ட லிங்கத்தையும் பெற்றார்கள். பிசாசங்களுக்கு இரும்பு லிங்கம் கிடைத்தது. பார்வதி தேவிக்கு  நவநீத லிங்கத்தைக் கொடுத்தான் விசுவகர்மா. நிருதி, மரத்தால் செய்யப்பட்டதான தாரு லிங்கத்தை அடைந்தான். யோகிகள் பஸ்ம லிங்கத்தைப் பெற்றார்கள். சாயாதேவி மாவினால் செய்யப்பட்ட லிங்கத்தையும், சரசுவதி இரத்தின லிங்கத்தையும், யக்ஷர்கள் தயிரால் செய்யப்பட்ட லிங்கத்தையும் பெற்றனர். இந்த விதமாக விசுவகர்மா தேவர்களுக்கும் மற்றவர்களுக் கும் அவரவர் கௌரவத்துக் கேற்ப லிங்கங்ளைத் தயாரித்து அளித்தான். அவர்களும் அவனால் கொடுக்கப்பட்ட லிங்கங்களைப் பயபக்தியோடு பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். சிலர் அவற்றைத் தலைகளில் தாங்கி ஆனந்தக் கூத்தாடினார்கள். மற்றும் சிலர் அவற்றை மார்போடு சேர்த்து அணைத்துத் தங்கள் உள்ளங்களில் இருத்திக் கொண்டதாக ஆனந்தப்பட்டனர். ‘ஹரஹர சம்போ, சங்கரா’ என்ற கோஷம் எட்டுத் திசைகளிலும் சென்று மோதி எதிரொலித்தது. அவர்களுக்கிடையே தென்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்ட விஷ்ணு, தம்மை மறந்து ஈசனைத் தியானித்தார். மகிழ்ச்சிக்கிடையில் எவரும் வழிதவறி நடந்து சிவபராதிகளாகி விடக்கூடாதென்று அவர்களுக்குச் சிவ பூஜை பற்றி உபதேசிக்க முன்வந்தார் நான்முகன்.
எத்தனையோ பிறவிகளில் மானிடப் பிறவி அரிது. மானிடனாகப் பிறந்தவன், அவனவன் குலத்திற்கேற்ப விதிக்கப்பட்ட கர்மாக்களை விடாது கடைபிடித்து வரவேண்டும். ஆயிரம் கர்மாக்களைச் செய்வதைவிடத் தீர்த்த யாத்திரை விசேஷமாகச் சொல்லப்பட்டது. தவம் மேற்கொள்வது அதனிலும் மேம்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தியானம் இன்னும் மேலானதாகக் குறிக்கப்பட்டுள்ளது. தியானத்தின் மூலம் ஒருவன் பரப்பிரம்மத்தைத் தன் இதயத்திலேயே தரிசிக்கிறான். அவன் பிரம்மஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான்.
பரமானந்தத்தை உண்டு பண்ணுவதும், பரிசுத்தமானதும், அழிவு இல்லாததும், நிஷ்களமானதும் சர்வபரிபூரணமானது மான சிவலிங்கத்தை அவன் தன் மனத்திலேயே காண்கிறான். இது இருவகைப்படும். பாஹ்ய லிங்கம் என்றும், அந்தர லிங்கம் என்றும் அழைப்பர். அதாவது, ஸ்தூலமான கண்ணுக்குப் புலப்படக்கூடியது பாஹ்ய லிங்கம் என்றும், சூக்ஷமமான ஞானக் கண்ணுக்குப் புலப்படக்கூடியது அந்தர லிங்கம் என்றும் பொருள்படும்.
அஞ்ஞானிகளுக்குப் பாஹ்ய லிங்க பூஜை நியமிக்கப் பட்டிருக்கிறது. ஞானிகளுக்கு விக்கிரக ஆராதனை தேவையில்லை. உயரே செல்ல படிகள் அவசியம். அதுபோல ஞானம் இல்லாதவனுக்கு விக்கிரக ஆராதனை அவசியமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. பக்தியோடு பூஜித்தால் தான், ஒருவன் தான் கோரிய பலனை அடைவான். இல்லையேல் அவன் செய்யும் வழிபாடு வியர்த்தமாகும். அது மட்டுமல்ல, சிரத்தையின்றிப் பூஜை செய்வதால் அவன் கீழான நிலையையே அடைவான். 
உருவ வழிபாடு மூலம்  ஒருவன் தான் செய்த பாபங்களை ஒழித்த பின்னரே, ஞானமார்க்கத்தில் பிரவேசிக்க முடியும். யோகீஸ்வரர்களுக்கு ஞானமும், ஞானத்தை அடைய திடமான பக்தியும், பக்திக்குப் பிரதிமா பூஜையும், பூஜைக்கு ஸத்குருவை அடைவதும், ஸத்குருவை அடைய சத்சங்கத்தோடு உறவும் படிப்படியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வழிகளைத் தவறாது பின்பற்றுபவன் நிச்சயம் யோகீஸ்வரனாக விளங்கு வான். அவனுக்கு எப்போதும் பகவத்தரிசனம் கிடைக்கும். பேதமின்றி அவன் எல்லா மனிதர்களிடமும் தன்னையே காண்பான். சிவரூபமாயிருக்கும் அவனைக் கண்ட மாத்திரத்திலேயே சகலவிதமான பாபங்களும் நசிந்துப்போகும்.
கிரஹஸ்தாச்ரமத்தில் இருப்பவனுக்குப் பிரதிமா பூஜையே விதிக்கப்பட்டிருக்கிறது. வேரிலே ஊற்றப்படும் நீர் எப்படி தண்டு வழியாகக் கிளை, இலை மற்றும் இதர இடங்களுக்கும் பரவுகிறதோ அதைப்போல் சகலபுவன காரணரான சிவபெருமானைப்  பூஜிப்பதால் தேவர்கள் அனைவரும் திருப்தி அடைவர். சிவனைப் பூஜை செய்யாது தேவர்களைப் பூஜிப்பதால் யாதும் பயனில்லை. அது மரத்தின் கிளைகள் மீது விடப்படும் நீரைப் போன்று வியர்த்தமாகிவிடும்.
தினமும் சூரியோதயத்துக்கு முன்பு எழுந்திருந்து பகவானைத் துதித்து தேகசுத்தி செய்து கொண்டு பின்னரே நீராடவேண்டும். நீராடுவதுபற்றி சாஸ்திரங்களில் எத்தனையோ விதிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை, சிரார்த்த தினம், கிரகண தினங்கள், மஹாதானம் செய்யும் காலம், உபவாச தினங்கள் ஆகிய நாட்களில் வெந்நீரில் நீராடுவது கூடாதாம். அதே போல எண்ணெய் ஸ்நானத்துக்கும் விதிகள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் ரோகம் உண்டாகும்;  திங்கட்கிழமை தேஜசை அளிக்கும்; செவ்வாய்க் கிழமை ஆயுள் குறைவு படும். புதன்கிழமை லக்ஷ்மி கடாக்ஷம் கிட்டச் செய்யும். வியாழக்கிழமை ஸ்நானம் செய்வதால் தரித்திரம் பீடிக்கும். வெள்ளிக்கிழமை  தேகசுகம் கெடும்.  சனிக்கிழமை அன்று எண்ணெய் ஸ்நானத்தால் சுகம் ஏற்படும். எண்ணெய் ஸ்நானம் செய்யக் கூடாதென்று விதிக்கப்பட்ட நாட்களில் செய்யவேண்டிய அவசியம் நேரிட்டால் அந்தத் தோஷம் நீங்கச் சில பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமையில் புஷ்பமும், செவ்வாய்க்கிழமையில் சிறிது மண்ணும், வியாழக்கிழமை அருகம் புல்லும், வெள்ளிக் கிழமை ஒரு துளி ஜலமும் எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்
நீராடி, புத்தாடை உடுத்தி, நிர்மலமான மனத்தோடு பூஜைக்கு உட்கார வேண்டும். வெறும் தரையில் அமரக் கூடாது. மரத்தால் செய்யப்பட்ட பலகையைப் போட்டு அதன்மீது தூய்மையான வஸ்திரம் விரித்து அமரவேண்டும். மான்தோல் மிகவும் விசேஷமானது. நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது மிகவும் அவசியமானது. திலகமின்றிச் செய்யப்படும் பூஜை எவ்வித பலனையும் அளிக்காது. கங்கையைத் துதித்து மந்திர பூர்வமாக மூன்று தரம் ஆசமனம் செய்து பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் விநாயகரைச் சிவந்த மலர்களால் பூஜித்துப் பின்னர் முறைப்படி நந்திகேச்வரர், துவாரபாலகர்களான மகோதரர்கள், பார்வதி ஆகியோரைப் பூஜித்து, கடைசியில் லிங்கரூபத்தில் சிவபெருமானைப் பூஜிக்கத் தொடங்க வேண்டும்.
முறைப்படி சிவபெருமானை மந்திரங்களைச் சொல்லி லிங்கத்தில் ஆவாகனம் செய்து, அர்க்யம் முதலியன விட்டு, அத்தர், பன்னீர், சந்தனம் முதலிய பரிமள திரவியங்களால் அபிஷேகிக்க வேண்டும். பிறகு சுத்த நீரால் அபிஷேகம் செய்து திலகம் இட்டு, மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தாமரை, கொன்றை, ஆத்தி, மல்லிகை, ரோஜா, வில்வம், தர்ப்பை, அறுகு, கருவூமத்தை, துளசி ஆகியவற்றால் மகேச்வரனை அர்ச்சிக்க வேண்டும்.
அர்ச்சனை முடிந்ததும் தூப, தீப, நைவேத்தியங்கள் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு பகவானுக்குக் கற்பூர ஆரத்தி காட்டி உங்கள் மனோபீஷ்டத்தை நிறைவேற்றும்படி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். பின்னர் பஞ்சாக்ஷர ஜபம் செய்து சிவ ஸ்தோத்திரங்களைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்து பூஜையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தாமரை மலர், வில்வம், சதபத்திரம் ஆகியவற்றால் அர்ச்சிப்பவன் பெரும் தனத்தை அடைவான். பரிசுத்தமான பத்துகோடி மலர்களால் சிவனைப் பூஜிப்பவன், ராஜபோகத்தை அடைவான். ஐம்பதினாயிரம் மலர்களால் பூஜிப்பவன், ரோக நிவர்த்தி அடைவான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கப் பன்னிராயிரத்து ஐந்நூறு மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். சத்துரு பயம் நீங்கப் பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கோடி மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் ஞானம் உண்டாகும். ஐந்து கோடி மலர்களால் அர்ச்சிப்பவனுக்கு, முக்தி கிடைக்கும். அரைக் கோடி மலர்களால் அர்ச்சித்து, மிருத்யுஞ்சய மந்திரத்தை ஐந்து லட்சம் தடவை ஜபித்தால் சிவபெருமான் பிரத்தியட்சமாவார்.
லட்சம் அறுகம் புல்லால் அர்ச்சனை செய்பவனுக்குத் தீர்க்காயுசு ஏற்படும். லட்சம் கருவூமத்தையால் அர்ச்சித்தால் புத்திரப் பிராப்தி உண்டாகும். லட்சம் சரவீர புஷ்பங்களால் அர்ச்சிப்பவனுக்கு சர்வ ரோகங்களும் நீங்கிவிடும். மல்லிகை, அழகிய மனைவியையும், மலைமல்லி, தானிய சம்பத்தும் கொடுக்கும். செண்பகம், தாழம்பூ ஆகிய இரு மலர்களும் சிவபூஜைக்கு உகந்ததல்ல.
தாழை எவ்வாறு சிவபூஜைக்கு தகுதியில்லாமல் போயிற்று என்பதை இந்த புராண சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பிதுர்வாக்கிய பரிபாலனம் நிமித்தமாகத் தம்பி லக்ஷ்மணனுடனும் மனைவி சீதையுடனும் கானகம் வந்த போது ஒரு சமயம் பல்குநதி தீரத்தில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் ராமரின் பிதாவான தசரதனின் சிரார்த்த தினம் வந்தது.
தந்தைக்குச் சிரார்த்தம் செய்ய ஸ்ரீராமர் பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அரிசி முதலானவற்றைச் சேகரித்து வரும்படி லக்ஷ்மணனை அனுப்பி வைத்தார். புறப்பட்டுச் சென்ற லக்ஷ்மணன் வெகு நேரமாகியும் வராதது கண்டு ராமர் அவனைத் தேடிக்கொண்டு புறப்பட்டார்.
சிரார்த்த காலம் சமீபித்து விட்டது. இருவரும் திரும்பி வரவில்லை. சீதை தவியாய்த் தவித்தாள். குறித்த நேரத்தில் சிரார்த்தத்தை முடிக்காவிடில் அன்றைய தினம் வியர்த்தமாகி விடும் என்று வேதனைப்பட்டாள்.
தர்பசம், இங்குதி ஆகிய பழங்களைக் கொண்டுவந்து வேக வைத்து அவற்றால் கிடைக்கும் மாவினால் பிண்டம் செய்து பிதுர்களுக்குச் சமர்ப்பித்தால் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரத்தில் ஒரு விதி இருக்கிறது. சிரார்த்த காலம் முடிந்து விடப்போகிறதே என்று தவித்த சீதை, அந்த விதியை நினைவுக்குக் கொண்டுவந்து அவ்வாறே இங்குதிப் பழங்களைக் கொண்டு வந்து அக்கினியில் வேகவைத்து மாவு  எடுத்துப் பிண்டம் செய்து தயாராக வைத்தாள். அந்த நேரத்தில் ராம லக்ஷ்மணர்கள் திரும்பி வந்தாலும் சமைக்க நேரமாகி விடுமல்லவா!
பிண்டத்தைத் தயார் செய்ததும் சீதை, ‘பிதுர்கள் வர நேரமாகிவிட்டதே, கிராமத்துக்குச் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லையே’ என்று வருந்தினாள். அப்போது அவள் முன்பு தேஜோமயமாகப் பிரகாசிக்க பிதுர்கள் தோன்றினர்.
சீதே! பிண்டத்தை எங்களுக்குச் சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுகிறோம்" என்று தசரதர் கேட்டார்.
சுவாமி! என் கணவர் செய்யவேண்டிய காரியத்தை நான் செய்யலாமா? அவர் இல்லாத நேரத்தில் நான் செய்த காரியத்தை அவர் எவ்விதம் நம்புவார்?" என்று வருத்தத்தோடு கேட்டாள் சீதை.
சீதே! வருத்தப்பட வேண்டாம். காலம் கடந்து விடாமலிருக்க நீயே உன் கையால் எங்களுக்குப் பிண்டம் சமர்ப்பிக்கலாம். அதற்குத் தகுந்த சாட்சிகளை வைத்துக் கொள் போதும்" என்றார் தசரதர்.
அவ்வாறே பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நால் வரையும் சாட்சிகளாக வைத்துக் கொண்டு சீதை பிதுர்களுக்குப் பிண்டம் சமர்ப்பித்தாள். அவர்களும் அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு போய்ச் சேர்ந்தனர்.
சிறிது நேரத்துக்கெல்லாம் கிராமத்துக்குச் சென்றிருந்த ராம லக்ஷ்மணர் இருவரும் சாமான்களோடு திரும்பி வந்தனர்.
சீதே! நேரம் ஆகிவிட்டது. மேலும் தாமதம் செய்யாமல் விரைவில் சமையல் முடிக்க வேண்டும். அதற்குள் நாங்களும் நீராடித் திரும்புகிறோம்" என்றார் ராமர்.
அப்போது சீதை அவரைப் பார்த்து, நாதா! சிரார்த்தம் குறித்த காலத்தில் முடிந்துவிட்டது. நீங்கள் இப்போது செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று சொல்லி நடந்ததைக் கூறினாள்.
அதெப்படி முடியும், சீதை? கர்த்தாக்கள் நாங்கள் இல்லாமல் அது நடந்ததாக ஆகாதே!" என்றார் ராமர்.
பிதுர்கள் அதிக நேரம் காத்திருக்க முடியாதென்றனர். அவர்களின் பரிபூரண சம்மதத்தின் பேரில்தான் பிண்டம் அளித்தேன். சாட்சிகளும் இருக்கின்றன" என்று சொன்ன சீதை பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நான்கையும் சாட்சிகளாகக் கூறினாள்.
ராமருக்கு ஆச்சரியமாயிருந்தது, அப்படியும் நடந்திருக் குமா என்பதை அறிய சாட்சிகள் நால்வரையும் அழைத்துக் கேட்டார். பகவான் செய்ய வேண்டிய ஒரு காரியத்தில் அவர் வருவதற்குள் அவசரப்பட்டுக் கொண்டு சீதை முடித்து விட்டதற்குத் தாங்கள்  சாட்சிகளாக இருந்தோம் என்பதை அறிந்தால் அவர் கோபிப்பாரே என்ற பயத்தில் அவை நான்கும் தங்களுக்கு எதுவும் தெரியாதென்று சொல்லி விட்டன.
ராமருக்குக் கோபம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் மனைவியிடம் கடிந்து பேசக் கூடாதென்று, சமையலை முடிக்குமாறு சொல்லிவிட்டு நீராடித் தமது காரியங்களைத் தொடர்ந்தார். சங்கல்பம் செய்துகொண்டு பிதுர்களைச் சிரார்த்த பிராம்மணர்களில் ஆவாகனம் செய்யும்போது, வானிலே அசரீரி ஒன்று கேட்டது.
ஹே ராமா, நீ ஏன் இரண்டாம் முறை எங்களைச் சிரார்த் தத்துக்கு அழைக்கிறாய்? நாங்கள் ஒரு முறை சீதையின் கையால் பிண்டம் அளிக்கப்பட்டுத் திருப்தி அடைந்து விட்டோம்" என்று பிதுர்கள் அசரீரிபோல் அறிவித்தனர்.
அதைக் கேட்ட பின்னரே ராமர் நடந்ததை உணர்ந்து சாந்தமானார். அதே நேரத்தில் கணவர் தன்னை நம்பாதிருக்க நேரிட்டதே என்று சீதை வேதனைப்பட்டாள். அதற்குக் காரணமாக  இருந்த பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நான்கையும் அவைகளின் நடத்தைக்காகச் சாபமிட்டாள்.
உங்களைச் சாட்சிகளாக வைத்துக் கொண்டு நான் சிரார்த்தத்தை முடித்திருக்க, நீங்கள் அதை என் கணவருக்குத் தெரிவிக்காமலிருந்து வீட்டீர்களே! பல்கு நதியே, நீ அந்தர்வாஹிநியாக, அதாவது பிரவாகமே இல்லாது போகக் கடவது! பசுவே, உன் வாய் யோக்கியமாக இல்லாது போய் விட்டதால் உன் முகத்தில் இருக்கும் லக்ஷ்மீகரம் உன் பின் பக்கத்தில் போகக்கடவது. தாழம்பூவே! என்னால் பூஜிக்கப்படும் சிவபெருமானுக்கு நீ உகந்ததாக இல்லாமல் போகக்கடவது. அக்கினி தேவனே, எல்லா தேவர்கட்கும் முகஸ்வரூபியாக விளங்கும் நீ, ஸர்வ பக்ஷகனாகக் போகக்கடவது. சுத்தம் அசுத்தம் என்ற பாகுபாடு இன்றி அசுத்தத்தையும் ஸ்வீகரிக்கக் கூடியவனாக ஆகக்கடவது" என்று சபித்தாள் சீதை. அச்சாபம் காரணமாகவே சிவபூஜைக்குத் தாழம்பூ உகந்தது அல்ல எனக் கூறப்படுகிறது.
செண்பக மலர் சாபம் பெற்றதற்கும் புராண கதை உண்டு.
ஒருசமயம் கோகர்ணேச்வரர் எனத் திருப்பெயரொடு தென் திசையில் விளங்கிவரும் சிவபெருமானைத் தரிசிக்க வேண்டுமென்று நாரதர்  வந்தார்.  அவ்வாறு அவர் வரும் போது சிவபெருமானின் சந்நிதானத்துக்கு எதிரில் செண்பக விருக்ஷ மொன்றையும், அதில் மலர்ந்திருக்கும் மலரைப் பறிக்க வந்திருந்த அந்தணன் ஒருவனையும் கண்டார். நாரதர் மீட்டிக் கொண்டுவந்த இனிய இசையில் மயங்கிய அந்தணன், சிறிது நேரம் தன் வேலையை மறந்து அங்கேயே நின்றான்.
அவனைப் பார்த்த நாரதர், நீ யாரப்பா? எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?" என்று கேட்டார். அவனோ உண்மையைக் கூறாது, மலர் பறிக்கத் தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தைக் காட்டி,நான் பிச்சை யெடுக்க வந்திருக்கிறேன், ஐயா!" என்றான்.
அதற்குப் பிறகு நாரதரும் உள்ளே சென்று ஈசனைத் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அதே சமயம் அந்தப் பிராமணனும் செண்பக மலர்களைப் பறித்துச் சென்று பகவானை அர்ச்சித்து விட்டு வெளியே வந்தான்.
என்னப்பா, புறப்பட்டு விட்டாய்?" என்று கேட்டார் நாரதர்.
தான் செய்யும் காரியத்தை எவரும் அறியக் கூடாதென்று அந்தப் பிராமணன் அவரிடம் உண்மையைக் கூறாது, ஐயா! பிச்சையெடுக்க வந்த எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே வேதனையோடு திரும்பிச் செல்கிறேன்" என்று கூறினான்.
நாரதர் சாமானியமானவரா? அவர் முக்காலமும் உணர்ந்த ஞானியல்லவா! அந்தணன் பொய்யுரைத்தான் என்பதை ஞான திருஷ்டியின் மூலம் உணர்ந்து கொண்டார் அந்த திரிலோக சஞ்சாரி. அவருக்குக் கோபம் வந்தது. நேராகச் செண்பக விருக்ஷத்திடம் சென்று, ஏ விருக்ஷமே! இந்தப் பிராமணனுக்கு எத்தனை மலர்கள் கொடுத்தாய்?" என்று கேட்டார்.
அந்தப் பிராமணன் தன் செய்கையை யாருக்கும் உரைக்கக் கூடாதென்று ஏற்கனவே அதனிடம் கேட்டுக் கொண்டிருந்த படியால் அந்த விருக்ஷம் பதில் ஏதும் சொல்லாது இருந்துவிட்டது.
நாரதர் நேராகச் சிவபெருமானுடைய சந்நிதானத்தை அடைந்தார். அங்கே திருவுருவத்தின் முன்பு செண்பக மலர் அர்ச்சிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். அவற்றை எண்ணிய போது நூற்றியொரு மலர்கள் இருப்பதைக் கண்டார்.
நாரதரின் கோபம் உச்சத்தை எட்டியது. அதே சமயம் இன்னொரு பிராமணன் மலர்களை எடுத்துக்கொண்டு வந்தான். அவனைக் கண்டதும் நாரதர், வேதியனே, எக்காரணம் கொண்டு சிவனைப் பூஜிக்க வந்தாய்? இங்கு ஏற்கெனவே பூஜைகள் நடத்தப்பட்டிருக்கின்றனவே, இவை யாரால் நடத்தப்பட்டவை?" என்று கேட்டார்.
சுவாமி, நான் பிறவாப் பேரின்பம் அடைய வேண்டி சிவ பூஜை செய்து வருகிறேன். எனக்கு முன்பு வந்திருந்தவனோ தினமும் ஈசனை நூற்றியொரு செண்பக மலர்களால் பூஜித்தால் அரசனிடம் நல்ல மதிப்பு ஏற்படும் என்பதை அறிந்து அவன் பூஜிக்கத் தொடங்கி, அவ்வாறே அரசனிடம் நன் மதிப்பைப் பெற்றான். தினமும் அந்தணர்களுக்குத் தானம் செய்யும்போது மேற்பார்வையிடக் கூடிய அதிகாரத்தைப் பெற்றான். செண்பக மலர்களால் அர்ச்சிப்பதன் மூலம் அடையக்கூடிய பலன்களை அறிந்த அவன், விடாது அர்ச்சனை செய்து வருகின்றான். இருப்பினும் அவன் உள்ளத்தில் நேர்மை கிடையாது. பேராசை நிறைந்திருக்கிறது. அதன் காரணமாக, அவன் மற்ற பிராமணர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறான். அவன் நட்பைப் பெற்று அவன் சொல்படி கேட்பவர்களுக்கு மட்டுமே அரசாங்கத்தில் தானம் முதலியன கிடைக்கும்" என்று வருத்தத்தோடு தெரிவித்தான்.
செண்பக மலர்களால் பகவானை பூஜித்து நற்பலன் அடைந்த அந்தப் பிராமணன், இவ்விதம் பேராசை காரணமாகப் பிறருக்குத் தீங்கு இழைத்து வருகிறானே என்று எண்ணி நாரதர் வருந்திக் கொண்டிருந்தபோது, அங்கே அந்தண ஸ்திரீ ஒருத்தி வந்தாள். அவள் நேராகப் பகவானை நெருங்கித் தரையில் குனிந்து அவரை நமஸ்கரித்து எழுந்தாள். இரு கரங்களையும் கூப்பி, கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருக, சர்வேச்வரா! எங்களைக் காப்பாற்ற வழியே கிடையாதா? அந்தத் துஷ்டனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனவே. அதற்கு ஒரு முடிவு கிடையாதா?" என்று நெஞ்சம் உருகும் வண்ணம் பிரார்த்தித்தாள்.
நாரதர் அவளை மெல்ல அணுகி, தாயே! உனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம் என்ன? சொல்லு" என்று கேட்டார்.
அந்த அம்மாள் நாரதரை நமஸ்கரித்து, ஐயா, நான் நம்பியிருக்கும் இந்தக் கோகர்ணேசுவரரே நேரில் வந்திருப்பதாக உணருகிறேன். நாங்கள் பரம ஏழைகள். என் கணவருக்கு கால் முடமாகி எங்கும் அதிகமாக நடமாட முடியாதிருக்கிறது. வீட்டிலே வயசு வந்த பெண் இருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் செய்து கொடுத்தாக வேண்டும். ஆகவே வேறு வழியின்றி தானங்கள் வாங்கத் தொடங்கினார்; அரசாங்கத்தில் ஒரு துஷ்டன் இருக்கிறான். அவன் பிறந்தது அந்தணக் குலத்தில் என்றாலும் அதற்குரிய குணப்பண்புகள் கொஞ்சமும் இல்லாதவன். ஏதோ எங்கள் நிலையைக் கண்டு மனம் இரங்கி உதவுவது போல் அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரசரிடம் தானம் பெற்றுக் கொடுத்தான். ஆனால் அதில் பாதி தனக்குரியது என்று பிடிவாதமாக பிடுங்கிக் கொண்டு விட்டான். ஏதோ கொஞ்சமாவது கிடைக்கிறதே என்று நாங்களும் பேசாதிருந்து விட்டோம். இப்போது அவன் அட்டகாசம் அதிகமாகி விட்டது. இதையே அவன் ஒரு தொழிலாகக் கொண்டுவிட்டான். அரசனிடம் எவ்வளவோ முயன்றும் புகார் செய்ய முடியவில்லை. அவனை  மீறிக் கொண்டுதான் எதுவும் அரசனுக்கு எட்ட முடியும்.
இன்று அரண்மனையில் என் கணவருக்கு உபய கோமுகி தானம் கிடைத்தது. பசுவின் கர்ப்பத்திலிருந்து கன்றின் முகம் வெளிவரும் சமயம் அந்தணர்களுக்கு பசுவைக் கன்றோடு தானம் செய்வது பெரும் பாவங்களையெல்லாம் போக்கவல்லது எனச் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அந்தத் தானம் வாங்குவதும் பெரும் பாபமாகும். சாதாரணமாக யாரும் அதை வாங்க முன் வரமாட்டார்கள். நிறையப் பணம் கிடைக்கும் என்று சொல்லி என் கணவரை அழைத்துச் சென்று அந்தத் தானம் வாங்கிக் கொடுத்தான். எங்கள் நிலைமையைக் கருதி நாங்களும் அதற்குச் சம்மதித்துச் சென்றோம்.
வீட்டுக்குத் திரும்பியதும், பின்னாலேயே அந்தப் பிராமணன் வந்துவிட்டான். வழக்கப்படி தானம் கொடுக்கப்பட்ட பொருள்களில் தனக்குப் பாதி உரியது எனப் பொன்னிலும், பொருள்களிலும் பாதியைப் பிடுங்கிக் கொண்டுவிட்டான். அதுமட்டுமல்ல; அந்தப் பாவி பசு மாட்டிலும் தனக்கு உரிமை உண்டு என்று சண்டை போடுகிறான். நாங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை.
தானம் வாங்கிய பசுவை விலை மதிப்பதும், அதைப் பிறரோடு பங்கிட்டுக் கொள்வதும் பெரும் தோஷமாகும். இதை அவன் நன்கு உணர்ந்திருந்தும் பிடிவாதம் பிடிக்கிறான். அதற்கொரு மதிப்புப் போட்டு அதில் பாதியைத் தனக்குக் கொடுத்து விட வேண்டுமென்று சண்டை செய்கிறான்.
பசுவைப் பற்றி நம் சாஸ்திரங்கள் எப்படியெல்லாம் புகழ்கின்றன! பசுவின் உடலிலே சகல தேவர்களும் சாந்நித்தியம் பெற்றிருக்கிறார்கள் அல்லவா?
பசுவின் வலது கொம்பில் கங்கை இருக்கிறாள். இடது கொம்பில் யமுனை  இருக்கிறாள். மத்திய பாகத்தில் சரஸ்வதி இருக்கிறாள். முன் காலில் பிரம்மன் வீற்றிருக்கிறான். பிந்திய பாகத்தில் ருத்திரன் தன் பரிவாரங்களோடு இருக்கிறான். பின் பக்கத்தில் விஷ்ணு இருக்கிறார். பசுவின் பக்கங்களில் அனேக புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. வயிற்றின் வலது பக்கத்தில் மகரிஷிகளும், இடது பக்கத்தில் சகலமான தேவர்களும் இருக்கிறார்கள். வயிற்றின் கீழ்ப்பாகத்தில் புண்ணிய நதிகளும், குளம்பில் வேதங்களும் இடம் கொண்டிருக்கின்றன. பசுவின் பால் மடியில் சமுத்திரங்கள் இருக்கின்றன. இன்னும் இதுபோல் எத்தனையோ சொல்லப் பட்டிருக்கின்றன.
பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்த பலன் கிடைக்கும். கோதானத்துக்குச் சிறந்த பலன்களைச் சொல்லியிருக்கிறார்கள். கோதானம் செய்பவன் பூதானம் செய்த பலனை அடைவானாம். பிராயச்சித்தமே கிடையாது என்று சொல்லப்படும் பாவங்கள் கூட கோதானத்தில் நீங்கி விடக்கூடும். சாணமும் கோமூத்திரமும் உட்கொள்வதால் சகல பாவங்களும் நீங்கப் பெறுவான்.
பசுவைத் தரிசிப்பதாலேயே சில பாபங்கள் நீங்கிவிடும். அதைத் தியானித்துப் பூஜிப்பதோ இன்னும் மேலான பலன்களைக் கொடுக்கக் கூடியதாம். கொம்புக்குப் பொன், குளம்புக்கு வெள்ளி, புட்டத்திற்குத் தாமிரம், நேத்திரத்துக்குப் பவளம், கழுத்துக்கு ஆபரணம், உடலுக்கு வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து, பால் கறக்க வெண்கலப் பாத்திரத்தோடும், கொழு கொழுவென்று இருக்கக்கூடிய கன்றோடு, நன்றாக பால் கறக்கும் இளம் பருவமும் அழகும் கொண்ட பசுவை, அதை வைத்துப் பராமரிப்பவனும், நித்ய கர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டிருப்பவனும் சாஸ்திரங்களை உணர்ந்தவனுமான அந்தணனுக்குத் தானம் செய்வாராகில், அவ்வாறு தானம் செய்பவனுக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகும். தானம் பெற்றுக் கொண்டவன் செய்துள்ள புண்ணியத்தில் எட்டில் ஒரு பங்கு தானம்  கொடுத்தவன் அடைவான். கோதானம், பூதானம், வித்யா தானம் இம்மூன்றும் ஒருவனின் நூற்றொரு தலைமுறைகளைச் சொர்க்கவாசத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியவை யென்றால் இன்னும் விவரிப்பதற்கு என்ன இருக்கிறது?
சுவாமி, இவ்வளவு தூரம் சாஸ்திரங்களில் சொல்லப் பட்டிருப்பதை அந்தத் துஷ்டனாகிய பிராமணன் அறிய மாட்டானா, என்ன? அப்பேர்பட்டவன் செய்துவரும் பூஜையைப் பகவான் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்?" என்று மனமுருகக் கூறினாள்.
நாரதரின் உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. ஈசனைப் பார்த்து  பிரபோ! இந்த அக்கிரமத்தை நீங்கள் இன்னமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறீர்களா?" என்று பிரார்த்தித்தார்.
நாரதா! அவன் பெரும் பாவியாக இருக்கலாம். ஆயினும் சிவபூஜை செய்து சிவபக்தனாக விளங்கி வருகின்றான். அதனால் முதலில் தான் செய்த பாவங்களுக்குப் பலனை அனுபவித்துப் பின்னர் சிவபூஜை செய்த பலன் அனுபவிக்கட்டும்" என்றார் சிவபெருமான். நாரதர் உடனே அந்தப் பிராமணனைத் திரும்பவும் ஆலயத்துக்கு வரவழைத்தார்.
அடே அயோக்கியா, பகவத் ஆராதனை மூலம் கிடைத்த நல்ல பதவியை நீ துஷ்பிரயோகம் செய்து வந்திருக்கிறாய். உன் மூலம் தானம் பெற்றுச் செல்பவர்களின் பொருள்களில் ஒரு பாதியை பலாத்காரமாக அபகரித்து வந்திருக்கிறாய் ! உன் செய்கை அரக்கத்தன்மை வாய்ந்ததால் நீ அரக்கனாகப் போகக்கடவாய்" என்று சபித்தார்.
நாரதரின் சாபத்தைக் கேட்ட அவன் மிகவும் நடுநடுங்கி விட்டான். அதுகாறும் மமதை கொண்டு திரிந்து வந்த அவன் அப்போதுதான் தன் செய்கைகளின் விளைவை உணர்ந்தான். கண்களில் நீர் ஆறாக வழிய, நாரதரின் கால்களில் விழுந்து கதறித் தன்னை மன்னிக்கும்படி  வேண்டினான். நாரதரும் அவன் மீது இரக்கம் கொண்டு வேதியரே! நீ செய்து வந்த அக்கிரமங்களுக்கான பலனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதனால் விராடன் என்ற பெயரில் அரக்கனாகக் கானகத்தில் திரிந்து வரும் காலத்தில் உனக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் கிடைக்கும். அதனால் உன் பாவங்கள் அழிக்கப்படும். அரக்கப் பிறவி நீங்கி, நீ சிவ பூஜை செய்த பலனை அடைந்து திவ்விய ரூபத்தைப் பெறுவாய்" என்றார்.
பின்னர், நாரதர் செண்பக மரத்தினிடம் சென்று ஏ விருக்ஷமே! நான் கேட்ட போது நீ பதில் கூறாதிருந்து விட்டாய். அதன் பலனால் இன்று முதல் உன் மலர் சிவ பூஜைக்கு உகந்ததாக இல்லாது போகட்டும்" என்று சபித்தார்.
நாரதர் சாபத்தால்தான் செண்பக மலரைச் சிவ பூஜைக்கு உபயோகப்படுத்துவதில்லை.
சிவ பூஜைக்குப் பின்னர் இருபது அந்தணர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷமாம். நூற்றெட்டுத் தரத்துக்கும் குறையாமல் ருத்திர காயத்திரி ஜபிக்க வேண்டும்.
பகவானுக்கு அபிஷேகம் செய்யும்போது சல்லடைக் கண்களை உடைய தாராபாத்திரத்தால் அபிஷேகம் செய்தால் எத்தனையோ நன்மைகள் உண்டாகும். சதருத்திரம், ஏகாதசருத்திரம், ருத்திரம், புருஷஸூக்தம், மிருத்யுஞ்சயம், காயத்திரி, சிவ நாமங்கள் இவற்றைச் சொல்லி அபிஷேகிக்கலாம். சுத்தமான தீர்த்தத்தால் செய்யப்படும் தாரா பூஜையால் சந்தான விருத்தியும் கஷ்டங்கள் நீங்கி சுகமும் உண்டாகும். நெய்யைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகத் திற்கு சர்வரோக நாசம் பலனாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வமிச விருத்தியும் ஏற்படுமாம். சர்க்கரை கலந்த பாலை அபிஷேகித்தால் மந்திரப் பிரயோகங்கள் மூலம் உண்டாகும் கெடுதல்கள் எதுவும் அண்டாது.
வாசனைத் திரவியங்களோடு கலந்த தயிரை அபிஷேகிப்பதால் சத்துருக்கள் அழிவர், தேன் அபிஷேகம் வியாதிகளை நீக்க வல்லது. கருப்பஞ்சாறு சகலமான  துக்கங்களையும் நீக்கிச் சந்தோஷத்தை உண்டாக்கும்.
இவ்வாறு எத்தனையோ விதமாகப் பலன்கள் சிவ பூஜைக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. கணபதி, சுப்பிரமணியர் ஆகிய இருவரோடு கூடிய பார்வதி பரமேச்வரனை ஒருமுறை பூஜித்தாலும் இம்மையில் துன்பங்கள் ஒழிந்து மறுமையிலும் நற்கதி ஏற்படும்.
இந்த விதமாக பிரம்மதேவர் சிவபூஜை செய்வது பற்றி விளக்கிக் கூறிவிட்டுத் தமது லோகம் திரும்பினார். விண்ணவரும் மண்ணவரும் சிவபெருமானைப் பலவிதங்களில் போற்றிப் புகழ்ந்து அவரை பயபக்தியோடு ஆராதித்து வரத் தொடங்கினர்.

No comments:

Post a Comment