Thursday 2 April 2020

சிவபுராணம் ( 6 )

சிவபுராணம் 

6. பர்ண சாலையில் புதிய காட்சி 



ஈசனின் வடிவிலே உள்ளத்தைப் பறி கொடுத்தவளாய் பெற்றோர்களிடம் திரும்பிய பார்வதி, அவர் நினைவாகவே வாடினாள். ஊண் உறக்கம் இல்லாது தோழிகளுடன் உத்தியான வனத்துக்கு வந்தாலும், மனம் பொழுது போக்குகளில் ஈடுபடவில்லை. சிவபெருமானையே மணப்பது என்று உறுதி கொண்டாள் தேவி.
இப்படி இருந்து வரும்போது ஒருநாள் நாரத முனிவர் அங்கு வந்தார். பார்வதி அவரை வரவேற்றுப் பலவாறு உபசரித்தாள். பூரித்து விளங்கிய தேவி, உற்சாகமின்றி வாடிய முகத்தோடு இருப்பதைக் கண்டு அதன் காரணத்தை வினவினார் நாரதர்.
மகரிஷே, கைலாசநாதன் யோகத்தில் அமர்ந்திருந்த போது அவருக்குப் பணிவிடை செய்து வரும் பொறுப்பை என் தந்தையார் எனக்கு அளித்திருந்தார்கள். ஈசனின் திருவடிவம் என் உள்ளத்தில் அழியா வடிவமாகப் பதிந்து விட்டது. அவரையன்றி வேறு  யாரையும் என் உள்ளம் ஏற்காது. தயவு செய்து அவரை அடையும் மார்க்கத்தைத் தாங்கள் எனக்குக் காட்டவேண்டும்" என்று வேண்டினாள்.
உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. சிவனைக் குறித்துத் தவம் செய். அவரும் மகிழ்ச்சி அடைந்து உன் வேண்டுகோளை நிறை வேற்றுவார்" என்று சொல்லி நாரதர் கைலாசநாதனைக் குறித்துத் தவம் செய்யும் வழிகளை அவளுக்கு விளக்கி விட்டுச் சென்றார்.
நாரதர் சென்றதும், பார்வதி தோழிகளை அழைத்துத் தன் விருப்பத்தை இமவானிடம் தெரிவிக்குமாறு அனுப்பினாள். 
பார்வதியின் விருப்பத்தைத் தோழிகள் வந்து கூறிய போது இமவான் அளவில்லா ஆனந்தமடைந்தான்.
தேவர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் கைலாச நாதனே, என் குமாரத்திக்கு ஏற்ற மணாளனாவார். அவரைக் கைப்பிடிக்கக் குழந்தை கடுமையான தவம் மேற்கொள் வதாகக் கூறுகிறாளே? அதை அவள் தாய் மேனை அனுமதிக்க மாட்டாளே, அவள் சம்மதித்துவிட்டால் எனக்கென்ன ஆக்ஷேபணை?" என்றான்.
அவன் எதிர்ப்பார்த்தவாறே மேனை அதற்கு உடன்பட வில்லை. உடனே மகளை அழைத்து, அவள் செய்யப் போகும் காரியம் சரியல்ல, என தன் ஆட்சேபத்தைத் தெரிவித்தாள்.
பார்வதி, இங்கே உனக்கு என்ன குறை? எதற்காக நீ தவம் செய்யக் காட்டுக்குப் போக வேண்டும்? கைலாசநாதன் யோகத்தில் அமர்ந்திருந்த போது அவருக்குப் பணிவிடை செய்து வந்தாயே, அப்போது அவருக்கு உன்னிடம் மகிழ்ச்சி உண்டாகவில்லை என்றால், இப்போது மட்டும் எப்படி உண்டாகப்போகிறது? உன் மலரினும் மென்மை நிரம்பிய தேகம் அதைத் தாங்காது. இம்மாதிரி நமக்கு ஏற்காதக் காரியங்களை விட்டுவிட்டு மற்ற வேலைகளைக் கவனி" என்றாள் மேனை.
தாய் கூறிய புத்திமதிகள் எதுவுமே, பார்வதி எடுத்த முடிவை மாற்ற இயலவில்லை. ஈசனைக் குறித்துத் தவம் மேற்கொள்ளத் தன்னை அனுமதிக்காவிடில், தான் அதே ஏக்கத்தில் இருந்து உயிரை விட்டு விடுவதாகக் கூறினாள் பார்வதி. பெண்ணின் மன உறுதியைக் கண்ட மேனை, முடிவில் அவள் விருப்பத்துக்குச் சம்மதித்தாள்.
அழகிய மலைச் சிகரம் ஒன்றில் பர்ணசாலை அமைத்துக் கொடுத்தான் இமவான். குமாரத்திக்கு உதவியாக அவளது இரண்டு தோழிகளையும், அவளோடு பர்ணசாலையில்  இருக்க செய்தான். பர்ண சாலையைச் சுற்றிலும் கனி தரும் மரங்களையும், அழகிய மலர்ச் செடிகளையும் பயிராக்கினாள் பார்வதி. கடுமையாகத் தவம் மேற்கொண்டாள். பர்ணசாலைக்கு வரும் அதிதிகளை அவள் உபசரிக்கத் தவறுவதில்லை.

ஈசனைக் குறித்துத் தேவி மேற்கொண்டுள்ள தவத்தை அறிந்த தேவர்கள் கைலாசநாதனிடம் சென்று பிரார்த்தித்தனர்.

சர்வேச்வரா! தங்களை மணாளனாக அடையும் எண்ணம் கொண்டு இமவானின் புத்திரி கடுமையாகத் தவம் மேற்கொண்டுள்ளாள். உலகம் க்ஷேமமுற தேவியின் விருப்பத்தைத் தாங்கள் நிறைவேற்ற வேண்டும்" என்று எல்லோருமாகச் சிவபெருமானை வேண்டினர்.
வானவர்களே! விரைவிலேயே பார்வதிக்குத் தரிசனம் கொடுத்து அவள் விருப்பத்தை நிறைவேற்றுவேன்" என்று அபயம் அளித்தார் சிவன்.

தேவர்கள் சென்றதும், முதிய அந்தணரைப் போன்று வடிவம் கொண்டு, பார்வதி தவம் செய்யும் பர்ணசாலையை அடைந்தார் ஈசன்.

பர்ண சாலைக்கு யாரோ அதிதி வந்திருப்பதைக் கண்டதும் தோழியர் இருவரும் அவரை அன்போடு வரவேற்று பார்வதியிடம் அழைத்து வந்தனர். தேவி அவரை வணங்கி அர்க்கியம் முதலானவைகளைக் கொடுத்து உபசரித்தாள்.
சுவாமி, பிரயாணத்தால் மிகவும் களைப்படைந்துள்ளீர்கள் போல் தோன்றுகிறது. தாங்கள் இங்குத் தங்கி இளைப்பாறி நாளை போகலாம்" என்று வேண்டினாள் பார்வதி.
பரமனும் அதற்கு உடன்பட்டவராய் பர்ண சாலையில் தங்கினார். நடந்து வந்த களைப்பு நீங்கச் சிறிதுநேரம் தூங்கி எழுந்தார். தேவியும் அவர் பாதங்களை மெல்ல வருடியபடி தரையில் அமர்ந்திருந்தாள்.

உறக்கம் நீங்கி அந்தணர் எழுந்ததும், அவருக்குத் தீர்த்தம் முதலியன கொண்டு வந்து கொடுத்து உபசரித்தாள்.

சுவாமி, தாங்கள் யார் என்று சொல்லவில்லையே! இந்தத் தள்ளாத வயதில் இம்மலைப் பிராந்தியத்தில் பிரயாணம் செய்து வரக் காரணம்  என்ன? உங்களைச் சேர்ந்தோர் யாரும் கிடையாதா?" என்று கேட்டாள் பார்வதி.

குழந்தாய், நான் என்ன சொல்வேன்? நானோர் எழை அந்தணன். உற்றார் உறவினர் யாரும் இல்லை. வயிற்றுப்பாடு இருக்கிறதே. சும்மா உட்கார வைத்து யார் சாப்பாடு போடுவார்கள்? ஏதோ ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த வழியாக வரும்போது நீ இங்கு பர்ணசாலை அமைத்துக் கொண்டு தவம் செய்வதாகச் சொல்லக் கேட்டு, உன்னைப் பார்த்துச் செல்லலாம் என வந்தேன்" என்று சிவபெருமான் மெல்ல தாம் வந்த காரியத்தைத் தொடங்கினார்.

குழந்தாய்! என்னைக் கேட்டாயே, உன் விஷயம் என்ன? உடலை வருத்தும் கடுமையான தவம் மேற்கொள்ளும் வயதா உனக்கு? உன் சௌந்தர்யத்துக்கு ஏற்ற கோலமா நீ கொண்டிருக்கிறாய்? உன் வயதில் உள்ள பெண்கள் எத்தனையோ ஆபரணாதிகளை அணிந்து கொண்டு சிட்டுக் குருவிகளைப் போன்று குதூகலமாக இருக்கவில்லையா? நீ ஏன் இப்படிக் குடிசையில் அடைந்து கிடக்கிறாய்? இந்தத் தோல் ஆடை உனக்கு ஏற்றதில்லையே. ‘கல கல’வென்று சப்திக்கும் வளையல்களை அணிய வேண்டிய உன் கரங்களில் மலர் வளையங்கள். அழகாக, வாசனைத் தைலங்களால் சீவி முடித்துப் பலவகையாக அலங்கரிக்கப்படவேண்டிய உன் கேசம், இப்படி அலங்காரம் ஏதுமின்றி வாரி முடிக்கப்பட்டிருக் கிறதே. இந்தக் கோலம் எதற்காக? உன் உள்ளத்தில் இருப்பது தான் என்ன? உன் குணப் பண்புகளுக்கேற்பத் தகுந்த நாயகனை அடைவதற்காக நீ இந்தத் தவம் மேற்கொண்டிருந்தால், இதை இப்போதே நிறுத்தி விடு. உன் போன்ற சௌந்தர்ய தேவதைகளுக்கு இது ஏற்றதல்ல" என்றார்.
முதியவரின் வார்த்தைகளைக் கேட்ட தேவி நாணத்தால் தலை குனிந்தவளாய், தோழியை பார்த்துக் கண் ஜாடை காட்டினாள்.
சுவாமி, அரச குமாரி தவம் மேற்கொண்டிருப்பது எதற்குத் தெரியுமா? கைலாசநாதனைக் கணவனாக அடைய வேண்டும் என்ற விருப்பத்தால் தான்" என்றாள் தோழி.
அவள் வார்த்தைகளைக் கேட்டதும் அந்தணரான ஈசன் ‘கல கல’ வென்று சிரித்தார்.
தேவியின் முகத்தில் கடுகடுப்பு நிறைந்தது.
எதற்கடி அவர் சிரிக்கிறார்? இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? காரணத்தைக் கேள்" என்றாள் தோழியிடம்.
குழந்தாய்! சிரிப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன? உன் குலம் என்ன? அந்தஸ்து என்ன? உங்கள் குலத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள எத்தனையோ பேர் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரமாட்டார்களா? அப்படி என்ன உனக்கு அழகு இல்லையா? உன் அழகுக்கு ஈடு சொல்ல யாருமே இல்லையெனலாம்..."
தேவி அவர் பேச்சில் குறுக்கிட்டாள், 
கைலாசநாதனிடம் என்ன குறை கண்டார் என்பதைக் கேளடி!" என்று தோழியை அதட்டினாள்.
பார்வதி, உன் விருப்பம் எப்படி இருக்கிறது தெரியுமா? நறுமணம் கமழும் சந்தனம் இருக்க, அதை விட்டு விட்டுச் சேற்றை அள்ளிப்பூசிக் கொள்வது போல் இருக்கிறது. யானை வாகனமிருக்க, எருமை வாகனமாகவும், கங்கா ஜலமிருக்கக் கிணற்று நீரைப் பருகவும், சூரிய ஒளியை விட்டு விட்டுப் பூச்சிகளின் மினுமினுப்பையும், அழகிய பட்டு வஸ்திரமிருக்க தோலால் ஆகிய ஆடையையும், வீட்டு வாசத்தை விட்டுக் கானக வாசத்தையும் விரும்பி ஏற்றுக் கொள்வது போல விசித்திரமாக இருக்கிறது. எத்தனையோ தேவர்கள் இல்லையா? அவர்களில் ஒருவரையும் பிடிக்காது இந்தச் சுடலையாண்டியிடம் உனக்கு எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது ? கருவண்டுகளை நிகர்த்த உன் இருவிழிகளுக்கு அம் முக்கண்ணனின் விழிகள் ஈடு சொல்ல முடியுமா? அதிசயமாக நெற்றியிலும் ஒரு கண். பார்க்க அசிங்கமாக இல்லை. அவருக்கென்ன சந்தனாதி வாசனைத் தைலங்கள் கிடைக்கவில்லையா? சாம்பலைப் பூசிக் கொண்டு திரிகிறாரே. விலங்கின் தோலை உடலில் சுற்றிக் கொண்டு, கைகளில் நெளியும் பாம்புகளையும் அணிந்து கொண்டிருக்கிறார். அவர் தான் இப்படி இருக்கிறாரென்றால் அவரைச் சுற்றியுள்ளவர் களோ பூதம் பிசாசங்கள்..."

பார்வதியின் கண்கள் ‘ஜிவு ஜிவு’ என்று சிவந்தன.

சுவாமி...!" என்று அதட்டிக் கூப்பிட்டாள்.
உங்களை இன்னாரென்று அறியாது அழைத்து உபசரித்து விட்டேன். நீங்கள் சிவத்துவேஷி என்பது இப்போதுதான் தெரிகிறது..." என்றாள்.

பார்வதி, எனக்கொன்றும் சிவனிடம் துவேஷமில்லை. எத்தனையோ தேவர்கள் இருக்கிறார்களே; அவர்களுள் ஒருவரை விரும்பி அடையாது, இந்தப் பித்தனை விரும்புகிறாயே என்று தான் சொல்ல வந்தேன்" என்றார் அவர்.

பெரியவரே, அந்தப் பித்தன் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் நீங்கள் இப்படிச் சொல்லியிருப் பீர்களா? ஏதோ மற்ற தேவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னீர்களே? அந்த தேவர்கள் அனைவருமே சிவனால் உண்டாக்கப்பட்டவர்கள் தாமே? சகல புவனங்களும் கைலாச நாதனின் படைப்புகளாய் இருக்கும்போது அவர் நினைத்த மாத்திரத்தில் அவருக்கு ஆபரணங்கள் கிடைக்காமலா போய்விடும்? பட்டுப் பீதாம்பரங்கள் அவருக்கு இல்லையா என்ன? வேண்டுமென்று நினைத்த மாத்திரத்தில் வந்து குவிந்து விடுமே. சாம்பலைப் பூசிக் கொண்டு சுடலையில் பித்தனாக ஆடுகிறார் என்றால் உங்களைப் போன்ற அறிவிலிகளின் பித்தத்தைப் போக்கத்தான். சர்வ லோக சரண்யனான கைலாசநாதனுக்குப் பிறப்பு இறப்பு உண்டா? பரப்பிரம்மமான அவரிடமிருந்தல்லவா மற்றவை தோன்றி யுள்ளன. சகல தேவர்களும் அடிபணிந்து வணங்கும் அவரை நான் விரும்பியதில் தவறொன்றும் இல்லை" என்று சொன்ன பார்வதி, தோழியின் பக்கம் திரும்பி, ஸகி, அவருடைய உண்மைச் சொரூபத்தை அறிந்த பிறகும் நாம் அவருக்கு இருப்பிடம் கொடுக்கக்கூடாது. அவரைச் சீக்கிரம் இங்கிருந்து வெளியேறச் சொல். சிவ நிந்தையைக் காது கொடுத்துக் கேட்ட பாபம் நீங்க, நீராடிப் பூஜை செய்ய வேண்டும்" என்றாள்.

அந்தணர் வடிவிலிருந்த ஈசன் மெல்ல சிரித்தபடி எழுந்திருந்தார்.
குழந்தாய் ! நீ போகச் சொல்லி விட்ட பிறகு நான் ஏன் இங்கே தங்க வேண்டும் ? நான் போய் வருகிறேன், பார்வதி !" என்று சொல்லியபடி அவள் அருகில் வந்தார்.
சீக்கிரம் போய் விடுங்கள்! உங்களைப் பார்ப்பது கூட என் விரதத்துக்குப் பங்கம் விளைவித்து விடும்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள், பார்வதி.
பார்வதி! வெகுநேரம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தால் கழுத்து வலிக்கும். நான் செல்வதற்கு முன் நன்றாக என்னை ஒருமுறை திரும்பிப்பார்!" என்றவராய் பர்ண சாலையின் வாயிலை அடைந்தார்.
அடுத்தக்கணம் தோழியர் இருவரும், ஹோ!..." என்று திடுக்கிட்டு அலறியதைக் கேட்டு முகத்தைத் திருப்பிய பார்வதி சிறிது நேரம் ஸ்தம்பித்து விட்டாள். அங்கே அந்தணரைக் காணவில்லை. ரிஷப ரூபராய் பரமசிவன் காட்சி கொடுத்தார்.

பார்வதியின் கைகள் இரண்டும் கூப்பின.
சுவாமி... தாங்களா...!" என்று மனதிலிருப்பதைச் சொல்ல முடியாது குழறினாள்.

ஆம், பார்வதி! சற்று முன்பு அந்தணராக வந்தது நான் தான். என்னைக் குறித்துத் தவம் செய்யும் உன் மன உறுதியைச் சோதிக்கவே அவ்வாறு வந்தேன்!" என்றார் ஈசன்.

கண்கள் ஆனந்த பாஷ்பத்தைப் பெருக்க, ஈசனைப் பல விதங்களிலும் ஸ்தோத்திரம் செய்தாள்.

பிரபோ! அடியாளின் எண்ணத்தை நிறைவேற்றத் தரிசனம் தந்தீர்களோ! உற்றார் உறவினர் மகிழ என்னைத் தாங்கள் கை பிடிக்க வேண்டும். பிரபோ, சர்வேசா! என் விருப்பம் நிறைவேற அனுக்கிரகம் செய்ய வேண்டும்!" என்று வேண்டினாள் பார்வதி.

பர்வத ராஜகுமாரி! அவ்வாறே செய்கிறேன்.  போதும் உன் தவம். அரண்மனைக்குத் திரும்பு. விரைவிலேயே உன்னைத் திருமணம் பேச உன் தந்தையைச் சந்திக்கிறேன்" என்று அருளி மறைந்தார் சிவபெருமான்.
பார்வதி அடைந்த மகிழ்ச்சியை விவரிப்பது இயலாத காரியம். தோழிகளை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினாள்.
ஹரி ஓம் !!!!

No comments:

Post a Comment