Friday 24 April 2020

சிவபுராணம் ( 13 )

13. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் புண்ணிய தலம் 

நர்மதை நதி தீரத்தில் கர்ணகி என்றொரு நகரம் இருக்கிறது. அப்பட்டணத்தில் வசித்து வந்த அந்தணன் ஒருவன், காசி யாத்திரை போக விருப்பம் கொண்டான். அவனுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் பத்திரமாகப் பாதுகாத்து வரும்படியும் விரைவிலேயே தான் திரும்பி விடுவதாகவும் மனைவியிடம் சொல்லி, விடைபெற்றுக் கொண்டு  அவன் புறப்பட்டான்.
காசியை அடைந்ததும் அந்தப் பிராம்மணன் அங்கே சிறிது காலம் தங்க விரும்பினான். அவ்வாறு இருந்து வரும் போது ஒரு நாள் அவன் காலம் முடிந்து விட்டது.
கணவன் காசியில் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் மனைவி பெரிதும் துக்கித்தாள். கணவனைப் பிரிந்து வாழ அவளுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. இருந்தாலும், தன்னை நம்பி பாதுகாப்பில் விட்டுச்சென்ற இரு குமாரர்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைத்  தட்டிக் கழிக்க அவள் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே அவர்கள் நலனுக்காகவே அவள் உயிர் வாழ வேண்டியதாயிற்று.
நாட்கள் கடந்தன். பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். அவர்களுல்லுத் தகுந்தப் பெண்களைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள் அவள். சொத்துக்களை இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துத் தன் செலவுக்கும் சிறிது வைத்துக் கொண்டாள்.
காலம் உருண்டோடியது. தனக்கு அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் அவள். தான் அதிக நாட்கள் உயிரோடிருக்க முடியாதென்பதை உணர்ந்ததும், தனக்காக வைத்திருந்த பொருளைத் தரும காரியத்தில் செலவிட்டாள். அவள் நடமாட்டம் ஒடுங்கியது; படுத்த படுக்கையானாள். கண் பார்வை மந்தமாகியது; காது கேட்கவில்லை; பேசக்கூட முடிய வில்லை. ஆகாரம் இறங்காததால் உடல் நாறாக மெலிந்து விட்டது.
தாய் படும் வேதனையைக் கண்ட புதல்வர் இருவரும் மனம் வருந்தினர். எத்தனையோ தருமங்கள் செய்தும், தாய் தன் அந்திமக் காலத்தில் இவ்வாறு வருந்த நேருகிறதே எனத் துக்கித்தனர். ஒருநாள் புதல்வர் இருவரும் படுக்கையில் கிடந்த தாயை நெருங்கி அம்மா, ஏதோ ஒரு குறைதான் உன்னை இப்படி வருத்துகிறது. மனத்தில் எது இருந்தாலும் அதைச் சொன்னால் எங்களால் இயன்றவற்றைச் செய்வோம்" என்று கேட்டனர்.
குழந்தைகளே, எனக்குப் பெரிய மனக்குறை ஏதும் இல்லை. உங்கள் தந்தையார் காசியில் காலகதி அடைந்து மோக்ஷத்தைப் பெற்றார். அவரோடு சென்று கங்கா ஸ்நானம் செய்யவேண்டும் என விரும்பினேன். அன்றைய சூழ்நிலையில் அது நிறைவேறவில்லை. அவரோடு சென்றிருந்தால் நானும் காசியிலேயே உயிரை விட்டிருப்பேன். காசியில்தான் மரணம் கிட்டவில்லை. நான் இறந்த பின்னர் என் எலும்புகளை எடுத்துச் சென்று கங்கையில் சேர்ப்பீர்களா? அது ஒன்றுதான் என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது!" என்றாள் அவள்.
அம்மா, நீ கொஞ்சம் கூடச் சந்தேகப்பட வேண்டாம். நாங்கள் சொன்ன காரியத்தைச் செய்யாது விடமாட்டோம் என்பது உனக்கே தெரியும். உன் எலும்புகளை அவசியம் கங்கையில் சேர்ப்பிப்போம்" என்றனர் புதல்வர் இருவரும்.
அவள் தன் மூத்த மகனான சுவாதனை அழைத்து, சுவாதா, நீதான் பெரியவன். ஆகவே நீதான் கங்கையை அடைந்து என் அஸ்தியைக் கரைக்க ணே்டும்" என்றாள்.
அவனும் அவ்வாறே செய்வதாக அவளுக்கு வாக்குக் கொடுத்தான். அந்த மன நிறைவிலே அவளும் இவ்வுலக வாழ்வை நீத்தாள்.
தாய்க்குச் செய்யவேண்டிய கருமங்களை ஒரு குறைவு மில்லாது செய்து முடித்தான் சுவேதன். முதல் மாசியத்துக்குப் பிறகு, சேமித்து வைத்திருந்த தாயின் எலும்புகளை ஒரு துணியில் முடிந்து கொண்டு காசிக்குப் புறப்பட்டான். அவனோடு துணைக்காக ஒரு வேலைக்காரனும் புறப்பட்டான்.
காலையில் புறப்பட்ட இருவரும் அஸ்தமிக்கும் வேளையில் ஒரு கிராமத்தை அடைந்தனர். அன்றிரவு அக்கிராமத்திலுள்ள அந்தணன் ஒருவனின் வீட்டில் தங்கி காலையில் மீண்டும் புறப்பட நிச்சயித்தனர்.
சுவேதன் நீராடி சந்தியாவந்தனம் முதலானவற்றை முடித்துக் கொண்டு சிவ நாமங்களை ஜபித்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வீட்டுக்காரன் பால் கறக்கப் பசுவின் கன்றை அவிழ்த்து விட்டான். அடுக்களையில் இருந்த மனைவியை அழைத்துப் பால் கறக்குமாறு சொல்லி விட்டுக் கன்றை  பிடித்துக் கொண்டு பசுவிடம் சென்றான். கன்று அவன் காலை மிதித்து விட்டது. அதனால் வலி பொறுக்க முடியாத அவன் கம்பினால் கன்றைப் பலமுறை அடித்துவிட்டான். அப்போதும் அவன் கோபம் தீரவில்லை. பாலைக் கறந்து கொண்டதும், பாலூட்ட விடாமல் கன்றைப் பிடித்து இழுத்துக் கட்டி விட்டான்.
கன்று படும் கஷ்டத்தைக் கண்டு பசு அழுதது. அதைக் பார்த்த கன்று அம்மா, ஏதோ கர்ம வசத்தால் நான் இன்று இத்துன்பம் அடைந்தேன். அதற்காக நீ ஏன் அழுகிறாய்?" என்று கேட்டது.
குழந்தாய், நீ வேதாந்தம் பேசுகிறாய். எனக்கு அது தெரியாததல்ல. முன் ஜன்மத்தில் சிரித்துக் கொண்டே செய்த பாவத்தை இந்த ஜன்மத்தில் அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டும். இருப்பினும் சம்சார மாயை ஒன்று இருக்கிற தல்லவா, அதில் சிக்காதவர் யார்? நான் படும் அவஸ்தையை அவனும் உணர்ந்தால் என் துக்கம் தீரும். நாளை காலையில் பால் கறக்க அவன் குமாரன் உன்னை அவிழ்த்துவிட்டு என்னிடம் வருவான். அவனை என் கொம்புகளால் முட்டிக் கொன்று விடப் போகிறேன். அவன் தகப்பனுக்கு அப்போது தெரியும் என் வேதனை!" என்றது பசு.
அம்மா, என்ன காரியம் செய்யப் போகிறாய் நீ? நினைத்துப் பார்த்தாயா? பிரம்மஹத்தியை வலியத் தேடிக் கொள்ள முடிவு செய்துவிட்டாயா? ஏற்கனவே நாம் செய்த கர்மாக்களுக்குத் தான் இப்போது அனுபவிக்கிறோமே. இன்னும் வேறு பாவம் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா?" என்று பதைபதைத்துக் கேட்டது கன்று.
குழந்தாய், உனக்குத் தெரியாது. நீயோ சிறுவன். என் மடியில் பால் இருப்பினும் உன்னை நெருங்கவிடாது, கட்டிப் போட்டிருக்கிறானே அந்தப் பாவி, தாயுள்ளம் என்ன வேதனைப் படுகிறது என்பது அவனுக்குத் தெரியுமா?" என்றது பசு.
கன்று வேதனையோடு சிரித்தது.
அம்மா உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நீ என் தாய், நான் உன் மகன், இந்த உறவு எல்லாம் எதுவரை? அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பிறவிப் பயனை அடைந்து துன்பமோ இன்பமோ அடைகிறார்கள். அப்படியிருக்க என் பொருட்டு நீ எதற்காகப் பிரம்மஹத்தியைத் தேடிக் கொள்ள வேண்டும்" என்றது.
குழந்தாய், நான் உறுதியாக இந்த முடிவுக்கு வந்தாகி விட்டது. பிரம்மஹத்தி தோஷத்துக்காக நான் பயப்படவில்லை. வரட்டும்; என் வெண்மை உடல் கருமையாகிவிடும். அந்தத் தோஷத்தை நீக்கிக் கொள்ளும் மார்க்கம் எனக்குத் தெரியும். அதன்படி கருமையாகிவிட்ட என் உடலை மறுபடியும் வெண்மையுடையதாகச் செய்துவிட முடியும்" என்றது.
பசுவுக்கும் கன்றுக்கும் நிகழ்ந்த வாதத்தைக் கேட்ட சுவாதன் பெரிதும் ஆச்சரியமடைந்தான். அவனுக்குத்தான் மிருக பாஷை தெரியுமே! விடியற்காலையிலேயே எழுந்து பிரயாணப்பட வேண்டுமென்று நினைத்திருந்தான். பசுவின் வார்த்தைகளைக் கேட்ட அவனுக்கு அந்த நிகழ்ச்சியைக் காண வேண்டுமென்று விருப்பம் உண்டாயிற்று. மேலும் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொள்ளும் மார்க்கம் தனக்குத் தெரியுமென்று பசு கூறியதைக் கேட்டது முதல், அந்த வழியைத் தானும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவன் துடித்தான். ஆகவே, விடியற்காலைப் பிரயாணத்தைத் தள்ளிப் போட்டு விட்டான்.
விடியற்காலையில் வீட்டுக்காரன் வந்து சுவாதனை எழுப்பினான்.
ஐயா, சூரியோதயத்துக்கு முன்னரே புறப்பட வேண்டுமென்று சொல்லியிருந்தீர்களே, மறந்து விட்டீர்களா? எழுந்திருங்கள்" என்று எழுப்பினான்.
 
வேலைக்காரனுக்கு ஓய்வு போதவில்லை. நேற்று பிற்பகல் அதிக நேரம் இளைப்பாறவில்லை. அதனால் மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னான். ஆகவே, கொஞ்சம் மெதுவாகவே புறப்படலாம் என்றிருக்கிறேன்" என்றான் சுவாதன்.
அதற்குப்பிறகு வீட்டுக்காரன், தன் மகனை அழைத்து, மாடு பால் கறப்பதற்காக கன்றை அவிழ்த்து விடச் சொல்லி விட்டு வெளியே சென்றான். பையனும் எழுந்து வந்து கன்றை அவிழ்த்துவிட்டு விட்டுப் பசுவை நெருங்கினான். அவன் எதிர்பாராத நேரத்தில் பசு ஒரு பாய்ச்சல் பாய்ந்து அவனைக் கொம்புகளால் குத்தித் தூக்கி எறிந்தது. பையன் குடல் சரிந்துஐயோ!’ என்று அலறிக் கொண்டே தரையில் விழுந்தான்.
மைந்தனின் கூக்குரல் கேட்டு உள்ளிருந்து அவன் தாய் ஓடி வந்தாள். பக்கத்து வீடுகளிலிருந்து ஆட்கள் ஓடிவந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த பையனைத் தூக்கினர். அதற்குள் அவன் ஆவி பிரிந்து விட்டிருந்தது.
செய்தி கேட்டு வீட்டுக்காரன் அலறிக் கொண்டு ஓடி வந்தான். மைந்தன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பினான். பசுவைக் காணக் காண அவன் ஆத்திரம் பன்மடங்காகியது. மூங்கில் தடியால் பசுவை அடித்து நொறுக்கி, அதை  வீட்டை விட்டு விரட்டினான்.
பிரம்மஹத்தி தோஷத்தால் உடல் கருமையாகி விட்டப் பசு அந்தணன் வீட்டை விட்டுப் புறப்பட்டு வெகு வேகமாகச் சென்றது. சுவாதன் அதையே கவனித்துக் கொண்டு அதனை பின்தொடர்ந்து சென்றான். சேவகனும் அவனைப் பின் தொடர்ந்தான்.
அந்தணன் வீட்டை விட்டு புறப்பட்ட பசு நேராக நர்மதை தீரத்தை அடைந்தது. அங்கே நந்திகேச்வரர் சாந்நித்தியம் கொண்டிருக்கும் இடத்தை அடைந்து நதியில் நீராடி வெளிப் பட்டது. கரையேறியதும் அதன் கருமை வெண்மையாகி இருந்தது.
அதைக் கவனித்த சுவாதன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவனாய், ‘ஆஹா, இந்த க்ஷேத்திரத்தில் இவ்வளவு மகிமை குடி கொண்டிருக்கிறதா!’ என்று வியந்தான்.
அப்போது அவன் முன்பு சர்வாலங்கார பூஷிதையான பெண் ஒருத்தி தோன்றினாள்.
ஐயா, தாங்கள் யார்? எங்கு போகிறீர்கள்?" என்று கேட்டாள் அவள்.
சுவாதன் அவளிடம் எதையும் மறைக்கவில்லை. தான் ஊரை விட்டுப் புறப்பட்ட காரணத்தையும், வழியில் அந்தணன் வீட்டில் நடந்த சம்பவத்தையும், பசுவைப் பின் தொடர்ந்து தான் வந்ததையும், பிரம்மஹத்தி தோஷத்தால் கருமை அடைந்திருந்த பசுவின் உடல், நதியில் நீராடியதன் காரணமாகத் தோஷம் நீங்கி, வெண்மையாகியதைக் கண்டு தானும் நதியில் நீராடிப் புண்ணியத்தை அடையப் போவதாகத் தெரிவித்தான்.
அதைக் கேட்ட அந்தப் பெண் முகம் மலர, ஐயா, இந்த இடத்தின் விசேஷம் சொல்ல முடியாது. நந்திகேச்வரர் தம்மைத் தரிசிப்பவரின் சகல பாவங்களையும் நீக்கி அஷ்ட ஐசுவரியங் களையும் அளிக்கிறார். நீ கங்கைக்குச் சென்று உன் தாயின் அஸ்தியைச் சேர்க்கக் கிளம்பி வந்தாய். உன் பிரயாணம் இதோடு முடிவடைந்துவிட்டது. இன்று வைசாக சுத்த சப்தமி நாள். இன்றைய தினம் கங்கா தேவியே நந்திகேச்வரரைத் தரிசிக்க இங்கு வருகிறாள். நர்மதையில் அவள் நீராடிப் பகவானைப் பூஜிக்க வருகிறாள்ஆகவே, நீ நர்மதையிலேயே உன் தாயின் எலும்புகளைச் சேர்ப்பித்து விடலாம். கங்கையில் சேர்த்த பலனைப் பெற்று உன் தாய் திவ்விய தேகம் அடைந்து விண்ணுலகம் செல்வாள். முன்பு ஒரு சமயம் ருஷிகை என்பவள் இங்குத் தினமும் நீராடி நந்திகேச்வரரை ஆராதித்து வந்தாள். அவள் இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்ட படியால், உள்ளத்தில் பகவானை இருத்தி, சதா அவன் நினைவிலேயே காலத்தைக் கழித்து வந்தாள்.
பக்கத்திலிருந்த மூடன் என்னும் அரக்கன் அவளைச் சிவபூஜை  செய்யாது இருக்குமாறு தொந்தரவு செய்து வந்தான். அவளோ அவன் வார்த்தைகளைச் சிறிதும் சட்டை செய்யாது பூஜையை நடத்தி வந்தாள். நர்மதை நதியைக் கங்கையாகப் பாவித்து பூஜை செய்து நீராடியும் பகவானை வழிபட்டும் வந்தாள்.
எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் தன் வார்த்தைகளைக் கேட்காமல் சிவபூஜை செய்வதைக் கண்ட அந்த அரக்கன் கோர ரூபத்தை எடுத்துக் கொண்டு அவளை நெருக்கிப் பயமுறுத்தினான். ருஷிகை தான் பூஜித்து வந்த சிவலிங்கத்தை அணைத்தபடி, சர்வேசா, இந்த அரக்கன் என்னைப் பூஜை செய்யவிடாது அச்சுறுத்துகிறானே. பக்தர்களைக் காத்து ரக்ஷிக்கும் பிரபுவான தாங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று பிரார்த்தித்தாள்.
நந்திகேச்வரர் அங்குப் பிரத்தியக்ஷமாகி அரக்கனைத் துரத்தி அவளைக் காப்பாற்றினார். பின்னர் அவள் பூஜித்து வந்த லிங்கத்திலேயே சாந்நித்தியம் கொண்டார். ருஷிகை பூஜித்து வந்த கங்கையும் அவள் முன்பு தோன்றி உனக்கு வேண்டிய வரம் கேள்" என்றாள். அவள் கங்கையை  வணங்கி, தாயே, என் பூஜையை ஏற்று என் முன் தோன்றிய உன் கருணையை எவ்வாறு போற்றுவது? இன்று வைசாக சுத்த சப்தமி நாள். இன்று என் முன்பு தோன்றியது போல் ஒவ்வொரு வருஷமும் இங்கு நீ பிரத்யக்ஷமாகி நர்மதையில் நீராடும் பக்தர்களுக்கு கங்கையில் நீராடிய பலனை அளிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். கங்கை அவ்வாறே செய்வதாக அவளுக்கு வரமளித்துச் சென்றாள். அதன்படி ஒவ்வொரு வருஷமும் வைசாக சுத்த சப்தமி அன்று கங்கை பிரத்யக்ஷமாகிறாள். ஆகவே நீ உன் தாயாரின் அஸ்தியை இன்றைய தினம் இங்கேயே சேர்ப்பிக்கலாம்" என்று சொன்ன அந்த மாது மறுபடியும் அவனைப் பார்த்து ஐயா! நான்தான் கங்கை, நர்மதையில் கலப்பதற்காக  வந்திருக்கிறேன்" என்று சொல்லி மறைந்தாள்.
சுவாதன் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவில்லை. பகவானின் கருணையை எண்ணி வியந்தவனாய் முறைப்படி செய்ய வேண்டியவற்றைச் செய்து தாயின் எலும்புகளை நதியில் சேர்ப்பித்தான்! அதே நேரத்தில் அவன் தாய் திவ்விய ரூபம் பெற்று வானிலே தோன்றினாள்.
மைந்தா! இன்று உன் செய்கையால் நான் பூரண திருப்தி அடைந்து மேலுலகம் செல்கிறேன். உனக்கு சர்வ மங்களங்களும் உண்டாகட்டும்" என்று வாழ்த்திவிட்டு மறைந்தாள்.
மன நிறைவோடு சுவாதன் நீராடி நந்திகேச்வரரைத் தரிசித்து அவரைப் பூஜித்து ஊர் திரும்பினான்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment