Tuesday 28 April 2020

சிவ புராணம் ( 14 )

14. அத்ரி ஆசிரமத்தில் கங்கை


நந்திகேச்வர லிங்கத்தின் மகிமையை உரைத்த சூதர், நைமிசாரண்ய வாசிகளுக்கு மேலும் அனேக லிங்கங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

தப்திநதி தீரத்திலும் அனேக லிங்கங்கள் இருக்கின்றன. குமாரேசுவரர், சித்தேசுவரர், ஸ்தநேசுவரர், ராமேசுவரர், ரூஷீசுவரர், பம்பேசுவரர், நந்தேசுவரர், பஞ்ச புஞ்ஜேசுவரர் ஆகிய லிங்கங்களைத் தரிசிப்பவன் சர்வாபீஷ்டங்களும் நிறைவேறப் பெறுவான்.

பூர்ண நதி தீரத்தில் பூர்ணகேசுவரரும், விரேசுவரரும் இருக்கின்றனர்.
கோதாவரி நதி தீரத்தில் கபாலேசுவரர், சக்கரேசுவரர், சந்திரேசுவரர், தௌதபாபேசுவரர்,  பீமேசுவரர், சூரியேசுவரர் ஆகியோர் இருப்பிடம் கொண்டுள்ளனர்.

திருப்திகா நதி தீரத்திலே, திரியம்பகேசுவரர், கோகர்ணேசுவரர், நாருகேசுவரர், ராமேசுவரர், நந்தேசுவரர், விமலேசுவரர், கண்டகேசுவரர் ஆகியோரைத் தரிசிக்கலாம். இவர்களைப் பூஜித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். திருப்திகா நதி கடலிலே சேரும் சங்கமத்தில் தர்மேசுவர லிங்கம் இருக்கிறது.

மேற்குக் கடற்கரையிலே சித்தேசுவரர், பிவேசுவரர், அந்தகேசுவரர் இருக்கின்றனர். அற்புதாசலத்தில் சங்கரேசுவரர், நர்த்தமேசுவரர், கோடீசுவரர் ஆகியோரைக் காணலாம்.
கௌசிகா
நதி தீரத்திலே அசலேசுவரர், நாகேசுவரர், அநந்தேசுவரர், யோகேசுவரர், வைத்திய நாதேசுவரர், கோடீசுவரர், சப்தேசுவரர், பத்ரேசுவரர், சண்டீசுவரர், சங்கமேசுவரர் ஆகியோரை  வழிபடலாம்.

தென் திசையில் காமதம் என்றொரு வனம் இருக்கிறது. அங்கே பிரம்மாவின் புத்திரரான அத்திரி முனிவர் தம் மனைவி அனுசூயையோடு தவம் செய்து வந்தார்.

ஒரு சமயம் எங்கும் மழை பெய்யவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக மழை பெய்யாததால் வறட்சி உண்டாயிற்று. குளம், ஆறு, கிணறு ஆகிய நீர் நிலைகளில் தண்ணீர் சுத்தமாக வற்றி விட்டது. பயிர்ப் பச்சைகள் கருகின. பசுமை என்பதே பார்க்க முடிய வில்லை. அதன் காரணமாக உஷ்ணக் காற்று வீசத் தொடங்கியது. ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆடுமாடுகள் மடிந்தன. தண்ணீர் கிடைக்காததால் மக்கள் நித்திய கர்மாக்களை விட்டனர்.

அத்திரி முனிவரின் ஆசிரமத்திலும் இந்தக் கஷ்டம் நீடித்தது. முனிவரின் சிஷ்யர்கள் அங்கே தங்க முடியாது வெளியிடங்களுக்குப் போய்விட்டனர். அனுசூயை மட்டும் கணவனோடு இருந்தாள். அவருக்கு வேண்டிய பணிவிடை களைச் செய்து கொண்டு சிவபூஜையும் நடத்தி வந்தாள். மண்ணைக் கொண்டு சிவலிங்கம் செய்து அதற்குத் தினமும் பூஜை செய்து வந்தாள். தண்ணீர் வற்றிப்போய் செடிகொடிகள் கருகியதும் அனுசூயை பூஜைக்கு வேண்டிய மலர் முதலானவை கிடைக்காமல் கஷ்டப்பட்டாள். இருப்பினும் அதற்காக அவள் பூஜையை நிறுத்தி விடவில்லை. மானசீகமாகவே சிவ லிங்கத்துக்குப் பூஜை செய்து வந்தாள்.
அத்திரி முனிவர் கண்ணை மூடி யோகத்தில் அமர்ந்து விட்டார். அனுசூயைக்கு வேலை எதுவும் இல்லை. ஆகவே அவளும் தன்னுடைய சிவலிங்கத்தைக் கணவனின் முன்பு நிறுத்தி, இருவரையும் வலம் வந்து வணங்கித் தானும் யோகத்தில் அமர்ந்தாள்.
நாட்கள் மெதுவாக நகர்ந்தன; ஒரு வருடம், இரண்டு வருடம் என்று ஐம்பத்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுடைய தவத்தைக் கலைக்க ஒரு சில அரக்கர்கள் முனைந்தனர். ஆனால் அவர்களால் முனிவரையும் அவர் பத்தினியையும் நெருங்க முடியவில்லை. அனுசூயையின் பதிவிரதைத் தன்மையால் அவள் உடலிலிருந்து வீசிய யோகாக்கினி, அரக்கர்களை நெருங்க விடாது தடுத்து நிறுத்தியது.
அத்திரி முனிவரும், அனுசூயையும் செய்யும் தவத்தைப் பற்றித் தேவர்கள் அறிந்தனர். அதைக் காண அவர்கள் காமதம் எனப்படும் அவ்வனத்துக்கு ஓடி வந்தனர். யோகத்தில் அமர்ந்திருக்கும் முனிவரையும், அவர் முன்பு கண் மூடித் தியானத்தில் இருக்கும் பதிவிரதையையும் கண்டு அவர்கள் மகிழ்ச்சி கொண்டனர். அவர்களைப் பலவிதத்திலும் பாராட்டித் திரும்பினர்.
ஆனால் சிவபெருமானும், கங்கையும் மட்டும் திரும்ப வில்லை. தம்மை உள்ளன்போடு பூஜித்த அவர்களுக்கு அருள வேண்டுமென இருவரும் காத்திருந்தனர்.
நிஷ்டையிலிருந்து கண் விழித்த அத்திரி முனிவர், அனுசூயா, ஆசமனத்துக்கு நீர் கொண்டு வா" என்றார்.
தியானம் கலைந்த அனுசூயை, இதோ கொண்டு வருகிறேன், சுவாமி" என்று சொல்லி, பாத்திரத்துடன் ஆசிரமத்துக்கு வெளியே வந்தாள். அங்கு தண்ணீர் ஏது? பல காலமாக எங்கும் வறட்சி நீடிப்பது அவளுக்குத் தெரியாதா என்ன? கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதிருக்கிறதே!" என்று மனத்தில் வேதனையோடு எண்ணித் துக்கித்தாள்.
அப்போது அவள் முன்பு கங்கை தோன்றினாள்.

அனுசூயா, உனக்கு என்ன வேண்டும்? கேள், தருகிறேன்" என்றாள்.

அம்மா, நீங்கள் யார்?" என்று கேட்டாள் அனுசூயை.

அனுசூயா, நான் தான் கங்கா தேவி, உன் பதிவிரதா தர்மத்தையும், நீ கணவனையும், சிவலிங்கத்தையும் பூஜை செய்யும் விதத்தையும் காண வந்தேன்" என்றாள் கங்கை.

தேவி, உங்களைத்  தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது பற்றி என் உள்ளம் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறது. என் கணவர் நிஷ்டை கலைந்து ஆசமனம் செய்ய நீர் வேண்டும் எனக் கேட்டார். எங்கும் நிலவும் வறட்சியால் ஒரு  சொட்டுத் தண்ணீர் கூடக்கிடைக்கவில்லை. எனக்குக் கொஞ்சம் நீர் வேண்டும்" என்று விண்ணப்பித்தாள் அனுசூயை.

பூமியில் ஒரு சிறு குழியை உன் கையால் தோண்டு, நீ விரும்பியபடி தண்ணீர் கிடைக்கும்" என்றாள் கங்கை.

மகிழ்ச்சியோடு அனுசூயை பூமியில் தோண்ட, அந்தச் சிறு குழியிலிருந்து ‘குபுகுபு’ வென்று நீர் குமிழிட்டு வெளிப்பட்டது. பாத்திரத்தில் நீரை நிரப்பிக்கொண்ட அனுசூயை பணிவோடு  கங்கையை வலம் வந்து வணங்கி, தேவி, ஒரு விண்ணப்பம். எங்கள் தவம் நிறைவேறும் வரை தாங்கள் இங்கு இருக்க வேண்டும்" என்று வேண்டினாள்.

கங்கை மெல்லச் சிரித்தபடி, அனுசூயா, உன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமானால், உன் கணவருக்குப் பணிவிடை செய்து அடைந்த பலனில் ஒரு மாதத்துக்கான பலனை எனக்குத் தரவேண்டும். தருவாயா?" என்று கேட்டாள்.

அனுசூயை பெரிதும் சந்தோஷித்தபடி, அவ்வாறே ஒரு மாதப் பலனை உங்களுக்குத் தந்தேன்" என்று தத்தம் செய்தாள். பின்னர், நீர் மொண்டிருந்த பாத்திரத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பினாள்.

ஆசமனம் செய்த அத்திரி முனிவருக்கு வியப்பாக இருந்தது. இத்தனை காலமாக அவர் உபயோகித்து வந்த தண்ணீரைப் போல் அல்லாமல் மிகுந்த ருசியோடு அல்லவா இருக்கிறது. அன்றையத்தினம் கொண்டு வந்த நீர்! மனைவியை அழைத்தார்.
பிரியே! இன்று நீ கொண்டு வந்த நீர், புதிய ருசியோடு விளங்குகிறதே. இது நம் ஆசிரமத்தில் கிடைக்கக் கூடிய நீர் அல்ல. எங்கிருந்து கொண்டு வந்தாய்?" என்று கேட்டார்.
அனுசூயை பதில் சொல்லாது தலையைத் தாழ்த்தியபடி நின்றிருந்தாள். தன் பதிவிரதா தர்மத்தைப் புகழ்ந்து கங்கையே வந்திருக்கிறாள் என்று சொல்வதால் கணவனின் முன்னிலையில் தன்னை உயர்த்திக் கூறுவதாக ஆகிவிடுமே என்று பயம் அவள் மனத்தில் நிறைந்திருந்தது. முனிவரோ மீண்டும் அவளைக் கேட்டார்.
தயங்கித் தயங்கி அனுசூயை நடந்ததைத் தெரிவித்து, பிரபோ, என்னை மன்னிக்க வேண்டும்" என்று வேண்டினாள்.

மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட முனிவர் அத்திரி ஆச்சரியமடைந்தார்.
பிரியே, கேட்கவே வியப்பாக அல்லவா இருக்கிறது. முனிவர்களுக்கும் ஞானிகளுக்கும் கிட்டாத பாக்கியம் உனக்கு ஏற்பட்டுள்ளது கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சியுற்றாலும், பூரணமாக நம்ப முடியாதிருக்கிறது. கங்கையை எனக்குக் காட்டுவாயா?" என்றார்.
அனுசூயை கணவனை வணங்கி, தான் நீர் எடுத்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றாள். குழியிலிருந்து நீர் குமிழிட்டுக் கிளம்புவதைக் கண்ட அவர் பரவசமாகி விட்டார்.
பிரியே! உன்னைப் போல் பாக்கியசாலி இருந்திருக்க முடியாது. கங்காதேவியே உனக்குப் பிரத்தியக்ஷமாகி இருக்கிறாள் என்றால் என் தவம் பூர்த்தியாகி விட்டதாக ஆகிறது" என்று மகிழ்ச்சியோடு கூறிய முனிவர் கங்கா நீரிலே நீராடி, ஆசமனம் முதலான செய்து கங்கையை மனத்தால் தியானித்தார்.
அப்போது கங்காதேவி அவர்கள் முன்பு சர்வாலங்கார பூஷிதையாகத் தோன்றினாள். முனிவரும் அவர் பத்தினியும் அவளை வலம் வந்து நமஸ்கரித்தனர்.
அனுசூயா, என் வாக்குப்படி உன் கணவரின் தவம் பூர்த்தியாகும் வரை இங்கிருந்து விட்டேன். சற்று முன்பு முனிவர் தம் வாயாலேயே தவம் பூர்த்தியாகி விட்டதாகச் சொல்லவில்லையா? இனி நான் திரும்பிச் செல்லலாமா" என்று கேட்டாள்.
அனுசூயை அவளை மறுபடியும் நமஸ்கரித்து அஞ்சலி செய்தாள்.
தேவி, உலகிலே மக்கள் படும் துயரம் சகிக்க முடிய வில்லை. தொடர்ந்து மழையில்லாததால் எங்கும் வறட்சியாகி பயிர்ப் பச்சைகள் கருகிவிட்டன. தாங்கள் தயவு செய்து இங்கே நிலைத்து இருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தாள். முனிவரும் அங்கேயே தங்கும்படி கங்கையைப் பலவாறு வேண்டினார்.
அனுசூயை, நான் என்றும் இங்கேயே நிலைத்திருக்க வேண்டுமானால், கணவனைப் பூஜித்து அடைந்துள்ள உன் பலனில் ஒரு வருஷப் பலனை எனக்கு அளிக்கச் சம்மதிப்பாயா?
தானம்
, புண்ணிய தீர்த்த ஸ்நானம், யாகம் ஆகியவற்றால் அடையும் பலனைக் காட்டிலும், பதி விரதையைத் தரிசிப்பவர்கள் மேலான பலனை அடைவார்கள். ஆகவே தினமும் உன்னைத் தரிசித்துக் கொண்டே இங்கிருப்பேன்" என்றாள்.
தங்கம், இரும்பு, சந்தனம் இம்மூன்றும் தன்னை வருத்திக் கொண்டாவது பிறருக்கு நல்லதைக் கொடுக்கின்றன. உயர்ந்தவர்கள் இத்தன்மை வாய்ந்தவர்கள். அதுபோலவே அனுசூயையும் மகிழ்ச்சியோடு கங்கைக்குத் தன் பதி சேவையின் பலனில் ஒருவருடப் பலனைத் தத்தம் செய்தாள். கங்கையும் ஆனந்தத்தோடு அங்கேயே நிலைத்து விட்டாள்.
அப்போது அனுசூயை பூஜித்து வந்த சிவலிங்கத்திலிருந்து ஈசன் ஐந்து திருமுகங்களோடு எழுந்து அவர்களுக்கு காட்சி தந்தார்.
அனுசூயை, உன் பூஜையால் நான் மகிழ்ச்சி அடைந் துள்ளேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.
முனிவரும் அனுசூயையும் ஈசனையும், கங்கையையும் ஒருங்கே வலம் வந்து வணங்கி ஸ்தோத்திரங்களால் துதித்தனர்.
பிரபோ, சர்வேசுவரா, எங்கள் மீது கருணை கொண்டு தாங்கள் தோன்றியிருக்கும் பட்சத்தில், தாங்கள் இந்த ஆசிரமத்திலேயே என்றும் இருந்து மக்களுக்கு சகல சுகங்களையும் அருளி வரவேண்டும்" என்று பிராத்தித்தனர்.
ஈசன் அவர்கள் கோரிக்கையை ஏற்று அவ்வாறு அருளி மறைந்தார். சர்வேச்வரனும் கங்காதேவியும் அத்திரி ஆசிரமத்தில் இருப்பிடம் கொண்டதால் ஆசிரமம் தழைத்து விளங்கத் தொடங்கியது.
வெளியிடங்களிலிருந்தெல்லாம்
முனிவர்கள் அந்த வனத்தில் தவம் செய்து முக்தி பெற வேண்டுமென்று வந்து கூடினர். எல்லோரும் பகவானை ஆராதித்து வழிபட்டனர். ஈசனும்  அவர்கள் பூஜைக்கு மகிழ்ந்து நாட்டிலே நிலவி வந்த வறட்சி நீங்க மழை பொழியச் செய்தார். பயிர்ப் பச்சைகள் தோன்றின. மக்கள் குதூகலத்தோடு பகவானை ஆராதித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். அத்திரி முனிவர் வேண்டிக் கொண்டதன் பேரில் அந்த ஆசிரமத்தில் இருப்பிடம் கொண்ட ஈசன் அத்திரீசுவரர் என்று போற்றப்பட்டார்.


ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment