Monday 6 April 2020

சிவபுராணம் ( 7 )

சிவபுராணம்  ( 7 )

7. பார்வதி பரிணயம் 
பார்வதிக்குத் தரிசனம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிய ஈசன் நேராக காசி க்ஷேத்திரத்தை அடைந்தார். மனத்திலே சப்த ரிஷிகளையும் நினைத்தார். அவர் நினைத்த மாத்திரத்திலேயே சப்த ரிஷிகளும் அருந்ததியோடு அங்கு வந்து சேர்ந்தனர்.
சர்வேசா! நாங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? எந்தக் காரியத்தை உத்தேசம் செய்து எங்களை மனத்தால் நினைத்து வரவழைத்தீர்கள்?" என்று அஞ்சலி செய்து வேண்டினர்.
முனிசிரேஷ்டர்களே! உங்களால் ஒரு காரியம் நடக்க வேண்டியிருக்கிறது. தாரகாசுரனால் தேவர்களும் முனிவர் களும் சொல்லொணாக் கொடுமைக்காளாகி வருகின்றனர். எனக்குப் பிறக்கும் குமாரனாலே தனக்கு அழிவு வேண்டும் என வரம் பெற்றுள்ளான் அசுரன். அவனை அழித்துத் தேவர்கள் துயரைத் துடைக்கக் குமாரன் அவதரிக்க வேண்டும். பர்வதராஜனாகிய இமவான் புத்திரியான பார்வதி என்னையே மணக்க வேண்டுமென்று கடுமையாகத் தவம் செய்துள்ளாள். ஆகவே, நீங்கள் பார்வதியின் பெற்றோரை சந்தித்து நம் விருப்பத்தை பக்குவமாக அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் சம்மதத்தைப் பெற்று வாருங்கள்" என்றார், ஈசன்.
மஹாதேவனின் உள்ளக் கிடக்கையை அறிந்த முனிவர்கள் எழுவரும், கிடைத்தற்கரிய பாக்கியமாக அப்பணியைச் சிரமேற் கொண்டு புறப்பட்டனர்.
கோடிசூரியப் பிரகாசமாய் முனிவர்கள் எழுவரும் ஆகாய மார்க்கமாக வந்து இறங்கியபோது, இமவான் அளவில்லா ஆனந்தம் கொண்டு மனைவியோடு ஓடிவந்து அவர்களை எதிர்கொண்டு அழைத்தான்.
தவசிரேஷ்டர்களே! நான் எத்தனையோ மகத்தான புண்ணியங்களைச் செய்திருக்கவேண்டும். அதன் காரண மாகவே புண்ணியாத்மாக்களான உங்கள் பாததுளி என் கிருகத்தில் படும் பாக்கியம் ஏற்பட்டது. உங்கள் எழுவரையும் ஒருங்கே தரிசிக்கும் பேறு சாமானியமாகக் கிடைக்குமா!" என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்து போற்றினான் இமவான். பின்னர் அவர்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று உபசரித்தான்
பர்வதராஜனே! எங்களைத் தரிசித்த காரணத்தால் கிருதார்த்தனாகி விட்டேன் என்று மகிழ்ந்து  கொண்டாடினாயே, இப்போது உன்னைத் தேடி மாபெரும் பாக்கியம் ஒன்று வந்துள்ளது. அதனால் உன் வம்சமே விளங்கப் போகிறது. கைலாசநாதனான சிவபெருமான் தங்கள் குமாரத்தி பார்வதி தேவியை மணம் புரிய விருப்பம் தெரிவித்துள்ளார். தங்கள் குமாரத்தியும் அவரையே நாதனாக வரித்துள்ளாள். தங்களிடம் அவர் விருப்பத்தைத் தெரிவித்து உங்கள் அனைவருடைய சம்மதத்தையும் பெற்று வருமாறு எங்களை அனுப்பி வைத்தார்" என்றனர்.
மகரிஷிகளின் வார்த்தைகளைக் கேட்டதும் பர்வதராஜன் புளகாங்கிதமடைந்தான். 
பெரியோர்களே! உங்கள் வார்த்தைகள் என்னைப் பெரிதும் மகிழ்ச்சியூட்டுகிறது. கைலாசநாதனை மருமகனாகப் பெறுவது என் முன்னோர்கள் செய்த புண்ணிய கர்மாக்களின் பலனே என்று நினைக்கிறேன். என் மனைவியின் அபிப்பிராயமும் தெரிந்து கொள்ள வேண்டாமா?" என்று மேனையைப் பார்த்தான்.
மேனையின் முகம் சிறிது வாட்டமடைந்திருந்தது. ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு இந்த விஷயத்தில் விருப்பமில்லை. மகளின் பிடிவாதம் காரணமாகவே அவள் ஒதுங்கி இருக்க நேர்ந்தது.
அவள் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் எண்ணத்தை அறிந்த முனிவர் எழுவரும், அம்மா, மேனை! சர்வேச்வரனான சிவபெருமானைச் சாதாரணமாக எண்ணாதே. தேவர்களுக்கும் கிட்டாத பாக்கியம் உங்களுக்குக் கிடைத்துள்ளது" என்றனர்.
அருந்ததி, மேனையை அப்பால் அழைத்துச் சென்று ஈசனின் குணாதிசயங்களைப் பலவாறாக எடுத்துக் கூறி அவள் மனம் சம்மதிக்கச் செய்தாள். மனைவியின் விருப்பத்தையும் பெற்றுவிட்ட இமவான் தம் புத்திரியை அழைத்து வந்து ரிஷி புங்கவர்களையும், அருந்ததியையும், நமஸ்கரிக்கச் செய்தான்.
குழந்தாய் பார்வதி! உன் விருப்பப்படியே கைலாசநாதன் விரைவில் வந்து உன் கைப்பற்றுவார்!" என்று ஆசீர்வதித்தனர்.
பின்னர் எல்லோருமாகக் கூடிப் பேசித் திருமணத்துக்கு ஒரு சுபதினத்தைக் குறித்தனர். அங்கிருந்து அவர்கள் புறப் படும் போது இமவான் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாது தவித்தான். சப்த ரிஷிகளும் அவனை அனேக விதங்களில் சிலாகித்துப் பேசிப் பிரியாவிடை பெற்றுப் புறப்பட்டனர்.
காசியை அடைந்ததும் சப்த ரிஷிகளும் சர்வேச்வரனை அடைந்து இமவானின் அரண்மனையில் நடந்தவற்றை விவரித்துத் திருமணத்துக்கான தேதியையும் அறிவித்தனர்.
முனிசிரேஷ்டர்களே! திருப்தி ஏற்படும்படியாகத்தான்  செய்தி கொண்டு வந்துள்ளீர்கள். இதே போல் நீங்கள் அனைவரும் திருமணத்தைச் சிறந்த முறையில் நடத்திக் கொடுக்க வேண்டும்" என்றார் சிவபெருமான்.
சப்த ரிஷிகளுக்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டுக் கைலாசம் திரும்பிய ஈசன், நாரதரை வரவழைத்தார்.
பிரம்மபுத்திரா! இமவானின் குமாரத்தி பார்வதி தேவியை மணம் முடிப்பதென்று நிச்சயித்திருக்கிறேன். சகல தேவர் களுக்கும் செய்தி அனுப்பித் திருமணத்துக்கு வரவழைக்க வேண்டிய பொறுப்பு உன்னைச் சேர்ந்தது. முனிவர்கள், சித்தர்கள், கிம்புருடர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் எல்லோரையும் எப்படியெப்படி அழைக்க வேண்டுமோ அதன்படி கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
நாரதர், ஈச்வரனை நமஸ்கரித்து அவர் ஆசி பெற்றுப் புறப்பட்டார். அந்த க்ஷணமே அவர் பார்வதி பரமேசுவரன் திருக்கல்யாணம் பற்றித் தேவர்கள் முதலானவர்களை அழைக்கப் புறப்பட்டார். யார்  யாரை நேரில் சென்று அழைக்க வேண்டுமோ அவர்களை நேரில் சென்று கல்யாணத்துக்கு வந்திருந்து நடத்தி வைக்குமாறு அழைத்தார். ஓலை அனுப்ப வேண்டியவர் களுக்குத் தகுந்த தூதுவர்கள் மூலம் அனுப்பி வைத்தார். செய்தி அனுப்ப வேண்டியவர்களுக்கும் செய்தி விடுத்தார். இப்படியாக ஒருவரைக்கூட மறக்காமல் எல்லோரையும் கல்யாணத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு  அழைத்தார்.
இமவானாகிய பர்வதராஜனின் பட்டணம் திமிலோகப்பட்டது. மக்களுக்கு உற்சாகம் சொல்லி முடியாது. அரசனுடைய ஏற்பாடுகளில் தாங்களும் மும்முரமாக ஈடுபட்டனர்.
வீதிகள்தோறும் அழகு நிறைந்த தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன. ஆங்காங்கே பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்பட்டிருந்தன. திறந்தவெளிகளில் எல்லாம் பெரிய பெரிய கொட்டகைகள் போடப்பட்டு வரப்போகும் விருந்தினர்களுக் காகத் தயாராக இருந்தன. எங்கே திரும்பினாலும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம் கரை புரண்டோடியது. கல்யாணம் என்ற செய்தியைக் கேட்ட நாளிலிருந்து மக்கள் ஒவ்வொரு நாளையும் கோலாகலமாகக் கொண்டாடி வந்தார்கள்.
அரண்மனை சொர்க்கலோகமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. வண்ண வண்ணப் பட்டாடைகளையும் ஆபரணாதிகளையும் அணிந்து கொண்டு பெண்கள் போவதையும் வருவதையும் பார்க்கப் பார்க்கச் சலிப்பே ஏற்படவில்லை. உலகெங்கிலுமுள்ள பர்வதங்கள் அனைத்தும் மானுடரூபம் தாங்கி, பர்வதராஜனுக்கு உதவ வந்து சேர்ந்தன. நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அனைவரும் வேலை செய்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுத் திருமணமாகவே எண்ணி நிறைந்த உள்ளத்தோடு கல்யாண ஏற்பாடுகளில் கலந்து கொண்டனர்.
பர்வதராஜன், மகிழ்ச்சியால் பூரித்துப் போய் ஒரு சுற்று பெருத்து விட்டான் எனலாம். திருமணத்துக்காக வந்து குவியும் நண்பர்களையும், உறவினர்களையும் ஏற்பாடுகளின் நடுவில் கண்டு குசலம் விசாரித்து வந்தான்.
இங்கே இவ்வாறிருக்கக் கைலாசத்திலும் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்திரன் முதலான தேவர்களும், கந்தர்வர்களும், அப்ஸரஸ் ஸ்திரீகளும் கைலாசத்தில் வந்து கூடினர். பிரம்மதேவர் சரஸ்வதி ஸகிதமாக ஹம்ஸ வாகனத்தில் சகல ரிஷகளும் புடை சூழ வந்து சேர்ந்தார். வைகுந்தத்திலிருந்து விஷ்ணு சர்வாபரணபூஷிதராய் வந்து சேர்ந்தார். அஷ்ட வசுக்கள், துவாதச ஆதித்தர்கள், திக்பாலகர்கள் ஆகியோரும் தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தனர்.
மங்கள நீராடலுக்குப் பிறகு சிவபெருமான் மாப்பிள்ளைக் கோலத்தில் தயாரானார். திருமுடியிலிருந்த பிறைச்சந்திரன் கிரீடத்தின்  மத்தியில் அழகிய ஆபரணமாகத் திகழ்ந்தான். நெற்றிக்கண் திலகமாகப் பிரகாசித்தது. இடுப்பிலே அணிந்திருந்த தோல் ஆடை, அழகிய பட்டாடையாக மாறியது. காதுகளில் அணிந்திருந்த சர்ப்பங்கள் இரத்தின குண்டலங்க ளாயின. அவ்வாறே கைகளிலும் கால்களிலும் அணிந்து கொண்டிருந்த சர்ப்பங்களும் பொன்னாபரணங்களாகப் பிரகாசித்தன. விஷ்ணு, பிரம்மன் முதலானோர் சர்வேச்வரனை தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அலங்காரம் செய்தனர்.
குறித்த வேளையில் சிவகோஷம் எட்டுத் திசைகளிலும் எதிரொலிக்க, மணமகன் கோஷ்டியினர் இமவானின் பட்டணத்துக்குக் புறப்பட்டனர். பூதகணங்களும் தேவர்களும் சிவநாமத்தைப் பஜனை செய்து கொண்டு முன்னால் சென்றனர். அப்ஸரஸ் ஸ்திரீகள், ஈசுவரனின் குணாதிசயங்களைப் போற்றிப் புகழ்ந்து பாடி ஆடியபடி சென்றனர். மத்தளம், மிருதங்கம், சங்கம், எக்காளம் முதலான வாத்தியங்கள் முழங்கின. ஆதிசேஷன் தன் ஆயிரம் முகங்களாலும் சங்கத்வனி முழங்கினான். வாயு தேவன் ஆலவட்டம் பிடித்தான். அக்கினி தூபம் ஏந்தினான், வருணன் பூர்ண கும்பம் ஏந்தினான். குபேரன் வழியெங்கும் நவநிதிகளை இறைத்தான். நாகராஜர்கள் மாணிக்க தீபம் ஏந்தி வந்தனர். வேதங்கள் பகவானின் திருவடியைத் தாங்கின. கங்கை முதலான புண்ணிய நதிகள் பகவானுக்குச் சாமரம் வீசின, குண்டோதரன் பகவானுக்குக் குடை பிடித்தான். விஷ்ணுவும், பிரம்மாவும் இரு பக்கங்களிலும் வந்தனர். ரிஷிகளும் முனிவர்களும் வேத கோஷம் செய்தபடி பின்தொடர்ந்தனர். நந்திதேவர் பொற்பிரம்பைக் கையிலேந்திக் கூட்டத்தினரை ஒழுங்காக நடத்திச் சென்றார். இத்தனை கோலாகலத்தோடு சர்வாலங்கார பூஷிதராகச் சிவன், ரிஷப வாகனத்தில் அமர்ந்து புறப்பட்டார்.
கைலயங்கிரியிலிருந்து பகவான் தம் கணங்கள் புடை சூழப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறாரென்றும் நகரைச் சமீபித்து விட்டாரென்றும் செய்தி கேட்டுப் பர்வதராஜனின் அரண்மனையில் பரபரப்பு மிகுந்தது. பகவானைத் தகுந்த முறையில் எதிர்கொண்டழைக்க இமவான் எல்லோரையும் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான்.
ஊரும் உலகமும் ஒருங்கே கொண்டாடும் சிவனைப் பார்க்க விரும்பிய மேனை, உப்பரிகையின் உச்சியில் ஏறி நின்றாள். அவள் அருகில் நின்ற நாரதர் தூரத்தே வந்து கொண்டிருக்கும் சங்கரனின் கோஷ்டியினரைக் காட்டிக் கொண்டிருந்தார்.
கந்தர்வரும், தேவதாசிகளும் புடைசூழ அலங்காரமாக வந்து கொண்டிருந்த கந்தர்வராஜன் விசுவாவசுவைக் கண்ட மேனை, நாரதரிடம், மகரிஷி! இதோ வருகின்றாரே, அவர்தானே பார்வதியை மணக்கப் போகும் பரமன்?" என்று கேட்டாள்.
நாரதர் சிரித்து விட்டார்.
ஏன் சுவாமி, சிரித்தீர்கள்?" என்று கேட்டாள் மேனை.
தேவி, இவன் யார் தெரியுமா? ஈசனின் சந்நிதானத்தில் கீதம்பாடும் கந்தர்வராஜன் விசுவாவசு!" என்றார் நாரதர்.
மேனை ஆச்சர்யத்தால் ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் விட்டாள். சந்நிதானத்தில் இசைபாடும் இவனே இத்தனை சௌந்தர்யவானாக இருப்பானாகில், சங்கரன் எப்படித் தோன்றுவாரோ என்று வாயைப் பிளந்தாள். எல்லோரும் புகழ்வதற்கேற்ப, பார்வதி யாராலும் அடைய முடியாத பாக்கியத்தைத் தான் அடைந்திருக்கிறாள் என்று எண்ணிய போது அவள் உள்ளம் நிறைந்தது.
அடுத்தபடியாக யக்ஷர்கள் புடைசூழ குபேரன் வந்தான்.
இவர் தானா, சுவாமி?" என்று கேட்டாள் மேனை.
இல்லை, அம்மா! இவன் நவநிதிகளுக்கும் அதிபதியான குபேரன்!" என்றார் நாரதர்.
குபேரனைத் தொடர்ந்து வந்த வருணன், தர்மராஜன், இந்திரன் முதலானோரையும் ஒவ்வொருவராக ‘இவர் தான் பரமசிவனா?’ என்று கேட்டு வந்தாள் மேனை. அவள் கேட்ட போதெல்லாம் நாரதர் இல்லை" என்று மறுத்துக்கூறி அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் எடுத்துச் சொல்லி வந்தார். அவர் கூறுவதைக் கேட்கக் கேட்க மேனையின் உற்சாகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ‘பார்வதி, உனக்குக் கிடைத்துள்ள பாக்கியம் இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை. இனி யாருக்கும் கிடைக்கப் போவதும் இல்லை’ என்றெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
சகல தேவர்கள் சூழ்ந்து வர, கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தோடு வந்த சூரியனைக் கண்டதும், மேனை கண்களை அகலவிரித்து, மகரிஷி! இவர் தானா நீங்கள் புகழ்ந்து போற்றும் பரமேச்வரன்?" என்று கேட்டாள்.
மேனை, இவன் தான் சூரியன். இவர்களெல்லாம் பகவானை எப்போதும் அடிபணிந்து போற்றக் கூடியவர்கள். அவரது ஆக்ஞைக்குட்பட்டுச் சதா காலமும் இயங்கி வருகிறார்கள்" என்றார்.
மேனைக்குப்  பெருமை தாங்கவில்லை. தன்னைச் சுற்றி ஒரு தரம் பார்த்துக் கொண்டாள். குனிந்து அரண்மனை வெளி முற்றத்தைப் பார்த்தாள். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்ததும் அவள் நெஞ்சம் பெருமையால் நிமிர்ந்தது. ம்.... இருங்கள் நீங்களும் என்னைப் போல் தான் ஏமாந்து போகப் போகிறீர்கள் !" என்று சொல்லிக் கொண்டாள்.
சந்திரனுக்கு பின்னால் ஹம்ஸவாகனத்தில் நான்முகன் வந்தார்.
சுவாமி, சகலகலாவல்லவராகத் தோற்றமளிக்கும் இவர் தானா ஈசன்?" என்று கேட்டாள் மேனை.
சிருஷ்டி கர்த்தாவான நான்முகன் இவரே!" என்றார் நாரதர்.
அடுத்தாற்போல் சங்கு சக்ரகதாதாரியாய், நீலமேக சியாமள வர்ண ரூபரான விஷ்ணு, கருட வாகனத்தில் வந்ததைக் கண்ட போது மேனை துள்ளிக் குதித்தாள்.
மகரிஷி! நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டாம். இவரே பார்வதியை மணக்க வரும் பரமேச்வரன்!" என்று குதூகலத்தோடு கூறினாள்.
அம்மா, மேனை! நீ நினைப்பது போல் இல்லை!" என்று நாரதர் சொன்னதும் அவள் திடுக்கிட்டுப் போய் அவரைப் பார்த்தாள்.
என்ன சொல்லுகிறீர்கள் சுவாமி?" என்று கேட்டாள் மேனை.
ஆம், அம்மா! க்ஷீராப்தி சயனரான விஷ்ணு இவர். ஈசன் இன்னமும் வரவில்லை" என்றார் நாரதர்.
மேனையின் உள்ளம் குதிநடை போட்டது.
சுவாமி இவ்வளவு பேருக்கும் மேம்பட்டவரா சிவன்?" என்று கேட்டாள்.
வாஸ்தவம், தேவி. கைலாசநாதன் இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டவர். தினமும் விஷ்ணு பிரம்மாதியரால் வணங்கப்படுபவர்" என்றார் நாரதர்.
அடுத்து பிரகஸ்பதி, ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்கள் புடை சூழ வந்தார். அவருக்குப் பின்னால் பூதகணங்கள் சூழ்ந்திருக்க, ரிஷப வாகனத்தில் வந்தார் சங்கரன்.
இத்தனை நேரமாக ஆனந்தத்தால் அலைபாய்ந்து கொண்டிருந்த மேனை, அவர்களைச் சரியாகப் பார்க்கவே இல்லை. அவர்களுக்கும் அப்பால் யார் வருகிறார்கள் என்று எழும்பிப் பார்த்தாள்.
கோலாகலமாக வந்து கொண்டிருந்த கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது. ரிஷப வாகனத்தில் வருபவருக்கு அப்பால் ஒரு சில முனிவர்கள் வேத கோஷமிட்டு வந்தனர். ஏன் அதோடு கூட்டம் முடிந்து விட்டது? கைலாசநாதன் அவர்களை முன்னே செல்ல விட்டுப் பின்னால் தனியாக வருகிறாரோ என்று எண்ணினாள் அவள். எல்லோருக்கும் மேம்பட்டவரான அவர் கூட்டத்தோடு கூட்டமாக எப்படி வருவார்? தனியாக இருப்பதுதான் உகந்தது என அவள் உள்ளம் மகிழ்ச்சியோடு விடை அளித்தது.
எழும்பி எழும்பிக் கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை பார்க்கும் மேனையைக் கண்ட நாரதர், மேனை, இன்னும் என்ன பார்க்கிறாய்?" என்று கேட்டார்.
சுவாமி சிவனைக் காணவில்லையே! அவர் தனியாக வருவாரா?" என்று கேட்டார்.
தேவி, சிவனை நீ பார்க்கவில்லையா? அதோ போகிறாரே! அவரைப் பார்த்த பிரமிப்பில் நீ பேசவில்லை என்றல்லவா நான் எண்ணியிருக்கிறேன்" என்றார் நாரதர்.
நான் பார்க்கவில்லையே, சுவாமி. சிவன் எங்கே போகிறார்?" என்று பரபரப்போடு கேட்டாள் மேனை.
அதோ, தேவி!.... ரிஷப வாகனத்தில் செல்கிறாரே அவர்தான்!" என்று சங்கரனைக் காட்டினார் நாரதர்.
மகரிஷி சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த மேனை  ஒரு கணம் தன் செயலிழந்து நின்று விட்டாள்.
ஐந்து முகங்களோடும் பத்துக் கரங்களோடும், ஜடை அவிழ்ந்து நாற்புறமும் தொங்க, இடுப்பிலே தோல் ஆடையும், கைகளிலும் காதுகளிலும் சர்ப்பங்களை ஆபரணங் களாகவும் அணிந்து, உடலெங்கும் விபூதி விளங்க, கழுத்திலே காபாலிக மாலையும், கைகளில் கங்காளமும், சங்கமும், உடுக்கும், மானும், மழுவும், சூலமும், டமருகமும், அக்கினியும் ஏந்திப் பூதகணங்கள் புடைசூழ ரிஷப வாகனத்தில் செல்லும் சங்கரனைக் கண்டதும் அவள் மூச்சே நின்றுவிட்டது எனலாம். இந்த ஆண்டியையா எல்லோரும் போற்றிப் புகழ்ந்தனர்? இவரா அவளுடைய மருமகனாக  வரப்போகிறவர்?
மேனையின் உள்ளத்தில் இத்தனை நேரமும் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த உற்சாகம் இருந்த இடம் தெரியாது அடங்கிப் போய் விட்டது. எந்தக் கணத்திலும் உடைந்து சுக்கு நூறாகி விடக்கூடிய அளவுக்கு துக்கம் அவள் இதயத்தில் நிறைந்தது. பிறர் எள்ளி நகையாடக் கூடிய நிலைக்கு அவள் வந்து விட்டாளே என்பதை நினைக்கும் போது அவள் கண்களில் நீர்மூட்டியது. ‘ஏன்டி மேனை, சர்வ லக்ஷணங்களோடு கூடிய இத்தனை பேர்களில் இந்த ஆண்டியையா உன் மகளுக்குத் தேர்ந்தெடுத்தாய்?’ என்று அவள் தோழிகளும் உறவினர்களும் கேட்டால், அவள் என்ன பதில் சொல்வாள்? அவளால் துக்கக்தை அடக்க முடிய வில்லை. இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு ‘ஓ’ வென்று குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கிவிட்டாள்.
பதில் ஏதும் சொல்லாது மேனை அழத்தொடங்கியதும் நாரதர் திடுக்கிட்டு மேனை, இது என்ன? எதற்காக அழுகிறாய்?" என்று கேட்டார்.
சுவாமி ! நான் மோசம் போய் விட்டேன். எல்லோருமாகச் சேர்ந்து என்னை மோசம் செய்து விட்டனர். கைலாசநாதனை என் குமாரத்தி மணப்பதால் எங்கள் கௌரவம் பல விதங்களிலும் உயரக்கூடும் என்றெல்லாம் கூறினீர்களே, சுவாமி! இந்த ஆண்டியை என் மகள் மணப்பதால் எங்கள் கௌரவம் எந்த விதத்தில் உயரப் போகிறது? அதல பாதாளத்திற்கல்லவா போய்விடும்!  பிறர் எள்ளி நகையாடக் கூடிய நிலையில்  அல்லவா என்னை வைத்து விட்டீர்கள்?" என்று விசித்தபடி கேட்டாள் மேனை.
மேனை, என்ன வார்த்தை பேசுகிறாய்? சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் ஆகிய மூன்றுக்குமே காரண கர்த்தாவான சிவபெருமான் யாருக்கும் எந்தவிதத்திலும் குறைந்தவரல்ல. இதை உணராது நீ துக்கப்படுவது சரியல்ல" என்றார். 
மேனை நாரதரின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டவளாகத் தெரியவில்லை. ‘ஓ’ வென்று கதறியபடி உப்பரிகையிலிருந்து இறங்கி ஓடி வந்தாள். ‘மேனை அழுது கொண்டு வருகிறாள்’ என்ற செய்தியை உடனடியாக இமவானுக்குத் தெரியப்படுத்தினர்.
கைகால்கள் வெலவெலக்க ஒன்றும் புரியாதவனாய் ஓடி வந்தான் இமவான்.
நாதனைக் கண்டதும் மேனையின் துக்கம் மேலும் அதிகமாகி விட்டது.
நாதா, என்னை மோசம் செய்துவிட்டார்கள்? எல்லோருமாக வஞ்சித்து விட்டார்கள்" என்று அலறியபடி ஓடி  வந்து அவன் பாதங்களில் விழுந்து கதறினாள்.
பர்வதராஜன் மனைவியை இரு கைகளாலும் தாங்கி மெல்லத் தூக்கி நிறுத்தினான்.
மேனை, என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்?" என்று பரபரப்போடு கேட்டபடி அவள் கண்களிலிருந்து வழிந்தோடும் நீரைத் துடைத்தான்.
நாதா! நமக்கு வரப்போகும் மருமகனைப் பாருங்கள். இந்த ஆண்டிதான் நமக்குக் கிடைத்தாரா? சப்தரிஷிகள் என்னென்னவோ புகழ்ந்தார்களே! அவ்வளவும் வெறும் புகழ்ச்சி தானே! கையையும் காலையும் பாருங்கள், சுவாமி! இத்தனை படாடோபத்தோடு இருக்கும் அவருக்கு ஆபரணங்களா கிடைக்கவில்லை. சர்ப்பங்களை அணிந்து கொண்டிருக்கிறாரே! இவரோடு நம் குமாரத்தி எவ்வாறு வாழ்க்கை நடத்துவாள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?" என்று மாலை மாலையாகக் கண்ணீரை உகுத்தாள்.
மேனை, அவரது தோற்றத்தைக் கண்டா நீ இவ்வாறு துக்கிக்கிறாய்? இங்கே வந்து குழுமியிருக்கும் சகல தேவர்களும் சர்வாலங்கார பூஷிதர்களாக  இருக்கும் போது, அவரது இந்த எளிய தோற்றம் உன் அறிவை மயக்கி விட்டது தேவி. அண்ட சராசரங்களுமே அவரிடம் ஐக்கியம் என்பதை நீ அறியாயோ? இந்தத் தேவர்கள் எல்லோருமே அவரது சக்தியால் விளங்குகின்றார்கள் என்பதை மறந்து விட்டாயா? அவரது ஆத்ம சொரூபத்தை நம்மாலெல்லாம் காண முடியுமா? ஞானிகள் எத்தனையோ வருடங்கள் கடும் தவம் செய்தும் காண முடியாது தவிக்கிறார்களே!" என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னான் இமவான்.
இவையெல்லாம் என் திருப்திக்குச் சொல்லும் வார்த்தைகளே அன்றி வேறில்லை" என்று குமுறினாள் மேனை.
அப்போது அங்கே வந்த சப்தரிஷிகளும் மேனையை நெருங்கி, தேவி, துயரம் வேண்டாம். இமவான் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. பகவானின் ஆத்ம சொரூபத்தை ஞானக்கண் கொண்டுதான் காண முடியும். விதையிலிருந்து செடி உண்டாகி, வளர்ந்து விருக்ஷமாகி அனேகக் கிளைகளுடனும், இலை, காம்பு, பூ முதலியவற்றாலும் விளங்குவதுபோல, தேவர்கள், நாங்கள் எல்லோருமே அப்பரப்பிரம்மத்தினிடமிருந்து உண்டானவர்களே!" என்று சொல்லி அவளைத் தேற்றினர்.
அப்போதும் மேனையின் துக்கம் நீங்கியதாகத் தோன்றவில்லை. பார்த்தார் நாரத முனிவர். நேராகச் சங்கரனிடம் சென்றார்.
சர்வேச்வரா! இதென்ன திருவிளையாடல்? கைலாசத்திலிருந்து புறப்படும்போது சர்வாலங்கார பூஷிதராகத் தோற்றமளித்துப்  புறப்பட்ட தாங்கள், மேனையின் பார்வைக்கு ஏன் வேறு விதமாகத் தோற்றமளித்தீர்கள்? அதன் காரணமாக மேனை பெரும் துக்கத்துக்கு ஆளாகிவிட்டிருக்கிறாள். அவள் உள்ளம் சமாதானம் அடையும்படியாகத் தாங்கள் திருக்கோலம் கொள்ளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்.
நாரதா, அவள் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தை வெளிப்படுத்தவே, அவ்வாறு அவள் கண்களுக்குத் தோற்றமளித்தேன். இப்போதே போய் அவளை அழைத்து வா!" என்றார் சங்கரன்.
நாரதரும் மகிழ்ச்சியோடு அரண்மனைக்கு ஓடினார்.
அங்கே இன்னமும் மேனையை விஷ்ணு, பிரம்மா முதலானோர் தேற்ற முயன்று கொண்டிருந்தனர். ஓடி வந்த நாரதர், மேனை, இப்போது வந்து பார் உன் மருமகனை. உன் துக்கம் போன இடம் தெரியாது போய் விடும். பகவானின் திவ்விய சொரூபத்தை இப்போது பார்" என்று கூப்பிட்டார். மேனையோ இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.
என்னைத் திருப்திப்படுத்த என்னென்னவோ சொல்லுகிறீர்கள். இதனாலெல்லாம் என் உள்ளம் ஆறுதல்  அடைந்து விடுமா?" என்றாள் குமுறிய உள்ளத்துடன்.
மேனை என் வார்த்தையை நம்பு. உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தை வெளிப்படுத்த வேண்டியே பகவான் உன் கண்களுக்குத் தம் சொரூபங்களில் ஒன்றைக் காட்டினார். இப்போது வந்து அவரது திவ்விய மங்கள ரூபத்தைக்  காண்பாய்! என்று மீண்டும் அவளை வற்புறுத்தினார் நாரதர்.
வேண்டா வெறுப்போடு மேனை அவரோடு சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து, இமவானும் மற்ற தேவர்களும் சென்றனர். 
அரண்மனை வாயிலை அடைந்த மேனை மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
அவள் பார்வை அப்படியே நிலைத்து நின்று விட்டது. சற்று முன்பு கண்ட ஆண்டி எங்கே? ரிஷபவாகனத்தின் மீது இருக்கும் புதிய மனிதர் யார்? ஐந்து முகங்களும், பத்துக் கரங்களும் எங்கே போயின? திருமுகம் ஒன்றோடும், இரு கைகளுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் யார்? அந்த இளைஞனைச் சுற்றி அதென்ன ஒரே பிரகாசம்? அங்குக் குழுமியிருந்த தேவர்களில் எவரையும் அவனுடைய அழகுக்கு இணையாகச் சொல்ல முடியாது!
மேனையின் உள்ளம் சிலிர்த்தது. திரும்பித் தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். விஷ்ணு பிரம்மாதி தேவர்கள் இருகரங்களையும் கூப்பி, ஹர ஹர சங்கரா!" என்று கோஷமிட்டனர். மேனையின் இரு கரங்களும் அவளையறியாமல் கூப்பின. கண்களிலிருந்து நீர் பெருக, பிரபோ! அடியாளை மன்னித்து விடுங்கள்!" என்று பிரார்த்தித்தாள்.
பக்கத்திலே நின்றிருந்த இமவான் எங்கே பூர்ணகும்பம்? எடுத்து வாருங்கள்" என்று துரிதப்படுத்தினான். விஷ்ணு, ரிஷபத்திலிருந்த பகவானைப் பிரார்த்தித்தபடி கைலாகு கொடுத்து அவரைக் கீழே இறக்கினார். இமவான் ஓடி  வந்து அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான்.
பிரபோ, நான் தன்யனானேன்?" என்று மகிழ்ச்சியோடு கூறி, மேனையின் கையிலிருந்து தீர்த்த பாத்திரத்தை வாங்கிப் பகவானின் கால்களை அலம்பினான். நறுமணம் கமழும் மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, பாதத்திலிருந்து வழிந்தோடும் நீரைக் கைகளில் எடுத்துத் தன் தலைமீது ப்ரோக்ஷித்துக் கொண்டு மேனையின் தலையிலும் தெளித்தான்.
சர்வேசா! தாங்கள் என் குமாரத்திக்கு வாக்குக் கொடுத்த படி அவளை ஏற்றுக் கொண்டு எங்களை அனுக்கிரகிக்க வேண்டும்" என்று அஞ்சலி செய்து வேண்டினான் இமவான்.
அவ்வாறே செய்வேன்" என்று அருளினார் சங்கரன்.
பின்னர் மணமகன் கோஷ்டியாருக்கு என ஏற்பாடு செய்திருந்த அரண்மனைக்கு அவர்களை அழைத்துச் சென்று உபசரித்தான். அவர்கள் சௌகரியங்களைக் கவனித்துக் கொள்ள ஆயிரக்கணக்கானவர்களை ஏற்பாடு செய்திருந்தான்.
பட்டணம் முழுவதுமே குதூகலத்தில் மூழ்கியிருந்தது. எங்கே திரும்பினாலும் நிருத்தியமும் கீதமும் வந்திருந்த விருந்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. யாரைப் பார்த்தாலும் பகவானின் திவ்விய மங்கள சொரூபத்தையே வர்ணித்துக் கொண்டிருந்தனர்.
கங்கை முதலான புண்ணிய நதிகள், இமவானின் அரண்மனைக்கு வந்து பார்வதியை மங்கள நீராட்டி சௌந்தரிய தேவதையாக அலங்கரித்தன. லக்ஷ்மியும், சரஸ்வதியும் இரு புறங்களிலும் தாங்கிப் பிடித்தவாறு பார்வதியை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.
பந்தலில் இருந்தவர்கள் தேவியின் ரூபலாவண்யத்தைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டனர். மணமகன்-மணமகள் இருவருடைய அழகும் ஒன்றுக்கொன்று இணையாக விளங்குவதைக் கண்டு பிரமித்தனர்.
பிரம்மதேவன் புரோகிதராக முன்னின்று நடத்த மேனை நீர் வார்த்துக் கொடுக்க, இமவான் பார்வதியைக் கன்யா தானம் செய்து கொடுத்தார்.
சர்வேச்வரா, என் குமாரத்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று பகவானை வேண்டினார்.
சங்கரன் முகமலர்ச்சியோடு பார்வதியின் கையைப் பற்றித் தம் பக்கத்தில் அழைத்து வந்து அமர்த்திக்கொண்டார். துந்துபிகள் முழங்கின. பிரம்மன் அக்கினி வளர்த்து மந்திரங்களைச் சொல்லி, பந்தலில் குழுமியிருந்தோரின் மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரத்துக்கிடையே ஈசன், தேவியின் கழுத்திலே திருமாங்கல்யதாரணம் செய்தார். வேத கோஷங்கள் வான்முகட்டை எட்டின.  தேவர்கள் மலர்மாரி பெய்தனர். மங்கையர் மங்கல கீதம் இசைத்தனர்.
இமவான் மேனையுடன், வந்திருந்த ஒவ்வொரு தேவர்களையும் அவரவர் பரிவாரங்களோடு நேரில் போய் சந்தித்து உபசரித்தான். நந்திகேச்வரரின் மேற்பார்வையில் விருந்து பரிமாறப்பட்டது. பலவகைப்பட்ட ருசிமிக்க உணவு வகைகளை, வந்தவர்கள் அனைவரும் வயிறார உண்டனர். விருந்துக்குப் பின்னர் சந்தன தாம்பூலம் வழங்கப்பட்டது.
தேவர்கள் தங்கள் தங்கள் தேவியரோடு வந்து, மண மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்த பார்வதி பரமேச்வரரை வலம் வந்து வணங்கி அவர்களது ஆசி பெற்றுப் புறப்பட்டனர்.
அனைவரும் புறப்பட்ட பிறகு, ஈசனும் பார்வதியுடன் கைலாசத்துக்குப் புறப்பட்டார். இமவானும் மேனையும் குமாரத்தியை விட்டுப் பிரிய மனமில்லாமல் நீர் துளிக்கும் கண்களோடு எல்லைவரை உடன்சென்று அவர்களை வழி அனுப்பிவிட்டுத் திரும்பினர்.
கைலயங்கிரி திரும்பிய பரமேச்வரன் தேவியுடன் ஆனந்தமாகக் காலத்தைக் கழிந்து வந்தார்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment