Tuesday 13 May 2014

அபிராமி அந்தாதி ( 72 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  72


என்  குறை  தீர,
நின்று  ஏத்துகின்றேன் !

இனி  யான்  பிறக்கின் ,
நின்  குறையே  அன்றி ,
யார்  குறை காண் ?

இருநீள்   விசும்பின் 
மின் குறை காட்டி ,
மெலிகின்ற 
நேரிடை  மெல்லியலாய் ! 

தன் குறை தீர,
என்கோன் ,
சடைமேல்  வைத்த 
தாமரையே !  



இருண்ட  வானத்தில்  தோன்றும்  
மின்னலும்  நாணும்  வண்ணம் ,  
மெல்லிய  இடையை  உடையவளே !

சிவனும்,  தன்  குறை  தீர்வதற்காக ,
தன்  சடாமுடிமேல்  வைத்துக் கொண்ட 
உன் திருவடி தாமரைகளை ,

என் குறைகளெல்லாம்  தீரும்  
வண்ணம்  வணங்குகின்றேன் ! 

இப்பூவுலகில், 
யான்  மறுபடியும் பிறந்தால், 
அது  உன் குறையே  அன்றி,
வேறு யார்  குறையும் அல்ல ! 

தொடரும் ....







அபிராமி அந்தாதி ( 71 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  71



அழகுக்கு ,
ஒருவரும்  ஒவ்வாத  வல்லி !

அருமறைகள் ,
பழகிச் சிவந்த  பாதாம்புயத்தாள் ! 

பனி மாமதியின்  
குழவித் திருமுடிக்  கோமள,   
யாமளைக் கொம்பிருக்க, 

இழவுற்று  நின்ற  நெஞ்சே !
இரங்கேல் !
உனக்கென்  குறையே .... ? 


பற்றிக் கொள்வதற்கு ,

தன் அழகுக்கு  நிகரில்லாதவளும்,

நான்கு  வேதங்களையும்  அணிகலன்களாக 
பாதத்தில் அணிந்து,  சிவந்திருக்கும்  பாதங்களை 
உடையவளும்,  

குளிர்ச்சியும், பெருமையும் உடைய  பிறையை 
தன் திருமுடியில்  சூடியிருக்கும் , 
அழகிய , யாமளை எனும் திரு நாமம் கொண்ட .
கொம்பு  இருக்க, 
நடந்ததை  எண்ணி  வருந்தி நிற்கும்  நெஞ்சமே !
கலங்காதே !
இனி,  உனக்கு ஒரு உறையும் இல்லை ! 


தொடரும் ......







அபிராமி அந்தாதி ( 70 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  70



கண்  களிக்கும்படி 
கண்டு கொண்டேன் ! 

கடம்பாடவியில் ,
பண்களிக்கும் குரல்  வீணையும்,
கையும் ,
பயோரமும் , 
மண்  களிக்கும் 
பச்சை  வண்ணமுமாகி , 

மதங்கர் குலப் 
பெண்களில்  தோன்றிய 
எம்பெருமாட்டி தன் 
பேரழகே  !  


கடம்ப  வனத்தில்,
பாடலும்   மகிழும்  வண்ணம்  குரலெழுப்பும்    வீணையும் ,
அதனை  ஏந்திய  கைகளும்,
திருத்தன  பாரமும் , 
இப்பூவுலகம்  மகிழும்  பச்சை நிறமும்  கொண்டு ,
மதங்கர்  எனும்  யாழ் பாணர்  குலப் பெண்களில் 
ஒருத்தியாக  தோன்றிய  எம்பெருமாட்டியை ,
கண்குளிர  தரிசனம் செய்தேன் ! 


தொடரும் ........





Sunday 11 May 2014

அபிராமி அந்தாதி ( 69 )

அபிராமி  அந்தாதி

பாடல்  69



தனம் தரும் ,
கல்வி தரும்,
ஒரு நாளும்  தளர்வறியா
மனம் தரும்,
தெய்வ  வடிவும் தரும்,
நெஞ்சில்  வஞ்சமில்லா
இனம் தரும் ,
நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்,

பூங்குழலாள்
அபிராமி  கடைக்கண்களே !

மணக்கும்  பூக்களைச் சூடிய  
அபிராமியின்  கடைக்கண்  பார்வை, 
அவள்  அடியவர்களுக்கு  பெருமையைத் தரும்,
நிலையான  செல்வத்தைத் தரும்,
அழியாத  கல்வியைத் தரும்,
ஒருநாளும் தளர்ச்சி அடையாத
உறுதியான மன வலிமையத் தரும் ,
தெய்வீக  அழைத் தரும் , 
நெஞ்சில்  வஞ்சமில்லாத 
உறவினரையும், நண்பரையும் தரும் ,
மற்றுமுள்ள  நல்லன எல்லாவற்றையும்  தரும், 


தொடரும் .....






அபிராமி அந்தாதி ( 68 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  68



பாரும்,
புனலும்,
கனலும்,
வெங்காலும் ,
படர்  விசும்பும்.
ஊரும்,  
முருகு,
சுவை,
ஒளி, 
ஊறொலி  
ஒன்றுபடச்  சேரும் , 
தலைவி சிவகாம சுந்தரி  
சீரடிக்கே ! 

சாரும்  தவமுடையார்  
படையாத 
தனமில்லையே !  

ஐம்பெரும் பூதங்கள் ,  தங்களின்  இயற்கை குணங்கள் 
அனைத்தையும் ஒன்றாக  இணைத்துக் கொண்டு 
தஞ்சமடைவது , தலைவி  சிவகாம சுந்தரியின் 
சிறப்புமிக்க  திருவடிகளை !  
இத்தகைய  சிறப்பு மிக்க  அபிராம வல்லியின் 
பாதங்களைச்  சேரும்,   அவளருள்  பெற்ற 
அடியார்கள் , தனக்கே  உரியதென்று 
பெறாத செல்வம்  ஒன்றுமே   இல்லை .


தொடரும் ..... 





Saturday 10 May 2014

அபிராமி அந்தாதி ( 67 )

அபிராமி  அந்தாதி 
பாடல்  67



தோத்திரம் செய்து ,
தொழுது, 
மின்போலும்  நின் தோற்றம் 
ஒருமாத்திரைப் போதும் 
மனத்தில்  வையாதவர் ,

வண்மை,
குலம் ,
கோத்திரம் ,
கல்வி,
குணம்  குன்றி ,

நாளும் குடிகள் தோறும் 
பாத்திரம் கொண்டு 
பலிக்கு  உழலா நிற்பர்,
பாரெங்குமே !


தேவி !  
உன்னைத் தொழாமலும், 
துதிக்காமலும்,
மின்னலைப் போன்று 
சுடர் விடும் உன் தோற்றத்தை, 
ஒரு மாத்திரைப் பொழுதாவது 
( ஒரு கண  நேரமாவது  )
நினைக்காமல்  இருப்பவர்கள் , 
இவ்வுலகத்தில்  எங்கிருப்பினும்,
பெருமை, 
குடிப் பிறப்பு,
கோத்திரம்,
கல்வி, 
நற்குணம்  ஆகியவற்றில் குறைபெற்று, 
வீடுகள் தோறும்   பாத்திரமெடுத்து  
பிச்சையெடுக்கும்  கதிக்கு  ஆளாவர் !  

தொடரும்......











அபிராமி அந்தாதி ( 66 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  66



வல்லபம்  ஒன்றறியேன்  சிறியேன் ,
நின் மலரடிச்  செம் பல்லவம் அல்லது 
பற்றொன்று இலேன் ,

பசும் பொற் பொருப்பு 
வில்லவர் தம்முடன்  வீற்றிருப்பாய் ! 

வினையேன்  தொகுத்த 
சொல்  அவமாயினும், 
நின்  திரு நாமங்கள்  
தோத்திரமே ! 



தங்க நிறம் கொண்ட  மேரு மலையை 
வில்லாகக் கொண்ட  சிவபெருமானுடன் 
வீற்றிருக்கும், அபிராம  வல்லியே !

சிற்றறிவினை  உடைய  நான், 
உன் பெருமை வாய்ந்த செயல்கள் 
ஒன்றையும்   அறியேன்.

சிவந்த தளிரைப் போன்ற  
நின் திருவடியைத்தவிர  
வேறொன்றின் மேல்  பற்றில்லை, எனக்கு .

உன்மேல், அந்தாதியாக  தொகுத்த 
பல  சொற்களுக்கு  அர்த்தமில்லாது  போனாலும்,
இடையிடையே  கூறிய 
உன்  திருப்பெயர்களெல்லம் 
உன்னைத் தொழுது  போற்றும்,
தோத்திரங்களே ! 


தொடரும்  .....










அபிராமி அந்தாதி ( 65 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  65 



ககனமும், வானமும் , 
புவனமும்  காண , 
விற் காமன்  அங்கம்  
முன் தகனம் செய்த  
தவம் பெருமாற்கு 

தடக்கையும், செம்முகமும் 
முந்நான்கு , இரு மூன்றெனத் 
தோன்றிய மூதறிவின் 
மகனும் உண்டாயதன்றோ ? 
வல்லி !
நீ செய்த  வல்லபமே ! 


  
இந்த  பூவுலகும், வானுலகும், மற்றுமுள்ள 
அண்டங்களும்  அறியும்வண்ணம், 
காமனை  தகனம் செய்த  , 
சிறந்த  தவ யோகியான  சிவ பெருமானுக்கு, 
ஓராறு  முகமும், ஈராறு கரங்களையும் 
கொண்ட சிறந்த ஞானியுமான   
குமரனை  உண்டாக்கியது, 
உன் செயல் அல்லவா ?
அபிராம வல்லியே ! 


தொடரும் .....






Wednesday 7 May 2014

அபிராமி அந்தாதி ( 64 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  64 



வீணே , 
பலிகவர் தெய்வங்கள்  பால் சென்று ,
மிக்க  அன்பு  பூணேன் !

உனக்கு  அன்பு பூண்டு கொண்டேன் !

நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் !

ஒருபொழுதும்  திருமேனிப் பிரகாசம் 
அன்றிக் காணேன்,  
இருநிலமும்,
திசை நான்கும் ,
ககனமுமே !

வீணாக உயிரைக்  கொல்லும்  ,
சிறு தெய்வங்களிடம்  பக்தி  கொள்ளேன் !

உன்னிடம் மட்டுமே  பக்தி  கொள்வேன் !

ஒரு காலத்திலும்  உன்னையன்றி , 
வேறொருவரைத் துதியேன் !

இப்பூமியிலும்,
நான்கு திசைகளிலும் , 
ஆகாயத்திலுமாய் 
எங்கும்  நிறைந்திருக்கும் 
நின் திருமேனியின் திரு ஒளியைத் தவிர 
வேறொன்றையும்  காணேன் !


தொடரும் .....





அபிராமி அந்தாதி ( 63 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  63 


தேறும்படி  சில  ஏதுவும்  காட்டி 
முன்செல் கதிக்கு கூறும் பொருள் 
குன்றில்  கொட்டும் தறி குறிக்கும் !

சமயம்  ஆறும் 
தலைவி  இவளாய் இருப்பது 
அறிந்திருந்தும்,
வேறு சமயம்  உண்டென்று 
கொண்டாடிய,  வீணருக்கே ! 

பெரியோர்களால்  போற்றப்பட்ட  
ஆறு சமயங்களுக்கும், 
தெய்வமாய் இருப்பது  
அபிராமியே  என்று  அறிந்திருந்தும், 
வேறு சமயங்களும்  உண்டென்று  கருதி ,
அதனைக் கொண்டாடும்  வீணர்களுக்கு, 
அவர்கள்  நற்கதி அடையும் பொருட்டு,
சில பிரமாணங்களைக் காட்டி  
அறிவிரை கூறியது,
குன்றினை தகர்ப்பது போன்றது !


தொடரும் ......



அபிராமி அந்தாதி ( 62 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  62


தங்கச் சிலை கொண்டு 
தானவர்  முப்புரம்  சாய்த்து ,
 மத வெங்கண் 
கரியுரி  போர்த்த செஞ்சேவகன் 
மெய் அடைய 
கொங்கைக் குரும்பைக் 
குறியிட்ட நாயகி !

கோ கனகச் 
செங்கைக் கரும்பும்,
மலரும் ,
எப்போதும்  என்  சிந்தையதே !


தங்க நிறம் கொண்ட  மேருமலையை  
வில்லாகக் கொண்டு ,
அசுரர்களின்  திரிபுரத்தை அழித்தவனும் ,
சிவந்த கண்களையுடைய மத யானையின் 
தோலைப் போர்த்தியவனுமாகிய 
சிவனின் உடலில்,
உன் அங்கங்களின் அடையாளத்தை 
பதித்திட்ட  நாயகியே !

தாமரை மலரைப் போன்ற
சிவந்த உன் கைகளில் உள்ள 
கரும்பு வில்லும், 
மலரம்புகளும் 
எப்போதும் என் மனதில்  நிற்கும் !

தொடரும் .....












Saturday 3 May 2014

அபிராமி அந்தாதி ( 61 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  61


நாயேனையும், 
இங்கு  ஒரு பொருளாக 
நயந்து வந்து,
நீயே, 
நினைவின்றி  ஆண்டு கொண்டாய் ! 

நின்னை, 
உள்ள  வண்ணம் 
பேயேன் அறியும் 
அறிவு தந்தாய் !

என்ன  பேறு  பெற்றேன் !

தாயே !
மலைமகளே !
செங்கண் மால் 
திருத் தங்கச்சியே  !!  

உலகத்து  உயிர்களுக்கெல்லாம்  அன்னையே !
மலை மகளே !!
அழகிய  சிவந்த  கண்களை உடைய  திருமாலின்  தங்கையே !! 

நாயைப்  போன்ற  என்னையும், 
உன் திருவருளுக்கு  உரியவனாகக் கருதி, 
எனக்குத் தெரியாமலேயே ,  என்னை  ஆட்கொண்டாய் ! 

உன்னை,  நீ  உள்ள வண்ணம் ,  இந்தப் பேயேனும் அறிய,  அறிவு  தந்தாய் !

அடியேன் ,  எத்தகைய  பாக்கியத்தை  அடைந்தேன், தாயே !!! 


தொடரும்  ......