Friday 10 July 2020

சிவபுராணம் ( 51 )

சிவபுராணம்  ( 51 )





51. யமனிடம் வாதாடிய சாவித்திரி
மந்திர தேசத்தில் அஸ்வபதி என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு வெகுகாலம் வரை குழந்தை ஏதும் பிறக்காததால் அரசன் சரஸ்வதியைக் குறித்து உபாசித்தான். சரஸ்வதி அவன் பூஜையில் மகிழ்ச்சியுற்று அவன் முன்பு தோன்றி அவன் விரும்புவது யாதெனக் கேட்டாள். அரசன் தேவியைப் பணிந்து தனக்குத் குழந்தை பிறக்க அருளுமாறு  கோரினான். சரஸ்வதி அவன் வம்சம் வளரப் புத்திரி பிறப்பாள் என்று அருளி மறைந்தாள். அவ்வாறே சிறிது காலத்துக் கெல்லாம் அரசனுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு சாவித்திரி எனப் பெயரிட்டுக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான்.
சாவித்திரி மங்கைப் பருவத்தை அடைந்தபோது அரசன் அவளுக்குத் திருமணம் செய்ய விரும்பினான். அவள் புத்தி சாதுரியத்துக்கும் அழகுக்கும் தகுந்த கணவன் எங்கிருக்கி றானோ என எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒருநாள் அரசனின் அரண்மனைக்கு நாரதர் வந்தார். அரசன் முனிவரை வரவேற்று உபசரித்தான். அவன் முகம் வாட்ட மடைந்திருப்பது கண்டு நாரதர் அதற்கான காரணத்தைக் கேட்டார். அரசன் தன் பெண்ணின் திருமண விஷயமே கவலைக்குள்ளாக்கியுள்ளதென்பதைக் தெரிவித்தான்.
அஸ்வபதி! சாவித்திரியின் அழகுக்கும் அவள் அறிவுக்கும் ஏற்ற வரன் எங்கிருக்கிறான் என்பதைப் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்? அவள் உள்ளத்தில் யாரை விரும்பியிருக்கிறாள் என்பதை அறிந்து அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கலாமே" என்றார்.
அரசனும் அவ்விதமே தன் மகளைத் தனியே அழைத்து அவள் மனத்தில் யாரையாவது விரும்பியிருக்கிறாளா என்பதைக் கேட்டான். சால்வ தேசத்தரசன் சத்தியவானே தனக்குக் கணவனாக வர வேண்டுமென்று விரும்புவதாகக் கூறினாள் சாவித்திரி.

 அஸ்வபதி திரும்பி வந்து நாரதரிடம் மகளின் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்தான். அதைக் கேட்ட நாரதர் திடுக்கிட்டார். அஸ்வபதி, வேடிக்கையாக இருக்கிறதே, சத்தியவானுக்கு இன்னும் ஓராண்டுதான் ஆயுள் இருக்கிறது. மேலும் அவனுக்கு இப்போது நாடு எது? சத்துருக்களிடம் நாட்டை இழந்துவிட்டு பார்வையற்ற தந்தையோடு கானகத்திலல்லவா இருக்கிறான். உலகத்தில் வேறு அரசர்களே இல்லையா?" என்று சொன்னார் நாரதர்.

அஸ்வபதி மகளை அழைத்து நாரதர் கூறியதைத் தெரிவித்து அவள் விருப்பம் நிறைவேறக் கூடியதல்ல என்பதைச் சொன்னான். வேறு அரசகுமாரனைக் குறிப்பிட்டால் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினான். அப்பா, என் உள்ளத்தில் அவரையே மணாளனாக வரித்த பிறகு இன்னொருவருக்கு எப்படி இடம் அளிக்க முடியும்? அவரைப் பற்றி என் தோழிகள் எத்தனையோ சிறப்பாக கூறியுள்ளார்கள். அதைக் கேட்டு அவரையே கணவனாக அடைவதென்று முடிவு செய்துவிட்டேன். எப்படி இம்முடிவை மாற்றுவது? அது நேர்மையுமல்ல?" என்றாள் சாவித்திரி

கண்ணே, அவனுக்கு ஜீவியமே ஓராண்டுதானே!" என்றான் அரசன் வருத்தத்துடன். எப்படியிருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படவில்லை" என்றாள் சாவித்திரிஅவள் மன உறுதியை மாற்ற முடியாதென்பதைக் கண்ட நாரதர், அஸ்வபதி, உன் குமாரத்தி கற்பிற் சிறந்தவளாக இருப்பாளாகில் கணவனின் ஆயுளை விருத்தி செய்து கொள்ளட்டுமே. அவள் மனம் கோணாதபடி சத்தியவானுக்கே திருமணம் செய்து கொடு" என்றார்.

முனிவரின் வார்த்தையை ஏற்று சத்தியவானுக்கே தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதென முடிவுக்கு  வந்தான் அரசன். மனைவி மாளவியையும் புத்திரியையும் அழைத்துக் கொண்டு இரதத்திலேறி சத்தியவான் தன் பெற்றோர்களுடன் தங்கியிருக்கும் நீரத வனத்துக்குச் சென்றான் அஸ்வபதி. மந்திர தேசத்து அதிபதி வந்திருக்கிறான் என்பதை அறிந்ததும் சத்தியவானின் தந்தை முன் வந்து அவனை வரவேற்று உபசரித்தான். அஸ்வபதி அவனிடம் தான் வந்திருக்கும் விஷயத்தைப் பற்றித் தெரிவித்தான்.

அஸ்வபதி, உன் முடிவு அவசரப்பட்டுச் செய்த முடிவு என்றே நினைக்கிறேன். எனக்கோ நாடும் இல்லை, பார்வையும் இல்லை. சத்தியவான் ஜீவித்திருக்கப் போவது ஓர் ஆண்டுதான். உன் குமாரத்திக்கு எத்தனையோ நல்ல வரன்கள் கிடைப்பார்களே!" என்றான் சால்வாதிபதி மிகுந்த துக்கத்துடன்.

எல்லா விஷயங்களையும் நாங்கள் நன்கு அறிவோம். தீர ஆலோசித்தே தங்களிடம் வந்துள்ளோம். தட்டாது என் கோரிக்கையை ஏற்க வேண்டும். என் குமாரத்தியின் விருப்பமே எங்கள் விருப்பமும்" என்று சத்தியவான் தந்தையின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு வேண்டினான் அஸ்வபதி.

சால்வாதிபதி என்ன சொல்வான்? அஸ்வபதியின் கோரிக்கைக்கு இணங்கினான். ஒரு நல்ல சுப முகூர்த்தத்தில் சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் கோலாகலமாகத்  திருமணம் நடந்தேறியது.

திருமணத்துக்குப் பிறகு சாவித்திரி தந்தையின் அரண்மனையில் இருக்கவில்லை. கணவன் இருக்குமிடமே சிறந்ததென நீரத வனத்துக்கே வந்துவிட்டாள். அரச போகங்களைத் துறந்துவிட்டுக் கணவனுக்கும் மாமியார் மாமனாருக்கும் பணிவிடைகள் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு இருந்து வந்தாள். கணவனின் ஆயுள் விருத்தியாக வேண்டுமென அவள் உமாதேவியைக் குறித்து விரதம் இருந்து வந்தாள்.

ஒருநாள் சாவித்திரி தன் கணவன் சத்தியவானுடன் காட்டிற்குக் கனி கொய்துவரச் சென்றாள். அவர்கள் இருவரும் பழங்களைப் பறித்துக் கொண்டும், சமித்து, தர்ப்பை முதலான வற்றைச் சேர்த்துக் கொண்டு வரும் போது, சத்தியவான் தனக்கு மிகவும் களைப்பாக இருப்பதாகவும், எங்காவது மர நிழலில் ஒதுங்கலாமென்றும் தெரிவித்தான். சாவித்திரி கணவனை அழைத்துக் கொண்டு மர நிழலை அடைந்தாள். அங்கே சென்றதும் அவன் தனக்கு மயக்கமாக வருகிறதென்று அவள் மடியில் படுத்தான். அந்த க்ஷணமே அவன் ஆவி பிரிந்து விட்டது.

மார்பிலே வாடாத மலர் மாலையோடும் கையில் தண்டமும் பாசமும் கொண்ட தர்மராஜன் நெருங்கி வந்து சத்தியவானின் உயிரைக் கவர்ந்து கொண்டு புறப்பட்டதைக் கண்டதும் சாவித்திரி, தேவ புருஷா!..." என்று அழைத்தாள். தர்மராஜன் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி கணவனின் உடலை மடி மீதிலிருந்து நகர்த்தித் தரையில் கிடத்தி விட்டு எழுந்திருந்தாள்.

தேவ புருஷா! என் கணவரின் உயிரைக் கவர்ந்து செல்லக் காரணம் என்ன?" என்று கேட்டாள்.

பெண்ணே, அவன் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. மிகவும் தருமவானான அவனை நானே அழைத்துச் செல்ல வந்தேன்" என்றான் தர்மராஜன். அவரை என்னிடமே விட்டுவிடு" என்று கேட்டாள் சாவித்திரி.

பெண்ணே, அவன் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. மிகவும் தருமவானான அவனை நானே அழைத்துச் செல்ல வந்தேன்" என்றான் தர்மராஜன். அவரை என்னிடமே விட்டுவிடு" என்று கேட்டாள் சாவித்திரி.

தர்மராஜன் அதற்கு இணங்காது சென்றான். அவனைப் பின் தொடர்ந்து சென்ற சாவித்திரி, தர்மராஜா! என் நிலையைப் பார். நான் என்ன பாபம் செய்தேன்? எனக்கு ஏன் இந்தத் துன்பம்? என் மீது இரக்கம் கொண்டு அவரை விட்டுவிடு" என்று கேட்டாள். சத்தியவானின் பூலோக வாழ்வு முடிந்துவிட்டது. இனி அவன் இங்கிருக்க முடியாது" என்றான் தர்மராஜன்.

அப்படியானால் நானும் வருகிறேன். என்னையும் அவரோடு கூட்டிச் செல். கற்புடைப் பெண்டிர் கணவனை விட்டுப் பிரிந்திருக்க மாட்டார்களே!" என்றாள் சாவித்திரி. உன்னை அழைத்துச் செல்வது முடியாது. உனக்கு இன்னும் பூலோக வாழ்வு முடிவு பெறவில்லை. அதனால் நீ திரும்பிச் செல்" என்றான் தர்மராஜன்சாவித்திரி அப்போதும் விடாது அவனைப் பின் தொடர்ந்தாள்.

ஐயா, தர்மத்துக்கு அதிபதியே, எனக்கொரு விஷயத்தைத் தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்டாள் சாவித்திரி. கேள், பெண்ணே!" என்றான் தர்மராஜன். பெரியோர்களின் தரிசனம் கிடைத்தவர்க்கு எவ்விதத் துன்பமும் நேரிடாது என்று வேதம் சொல்லவில்லையா? அந்த வேதவாக்குப் பொய்த்து விடுமா?" சாவித்திரியின் கேள்வி தர்மராஜனுக்கு விளங்கவில்லை.
என்னம்மா கூறுகிறாய்? வேதவாக்குப் பொய்த்து விடுமா? அது ஒருக்காலும் பொய்க்காதே!"
என் விஷயத்தில் பொய்த்து விடும் என்றே தோன்றுகிறது!"
எப்படி?"

தர்மதேவனான உன்னைத் தரிசனம் செய்த பின்னும் கூட எனக்குக் கைம்பெண்ணாகும் நிலைமை உண்டாகப் போகிறதே, எனக்கேற்படப் போகும் துன்பம் வேதவாக்கைப் பொய்த்துவிடச் செய்துவிடும்." சாவித்திரி, கற்பிலே சிறந்தவள் நீஅதன் காரணமாகவே என் தரிசனம் உனக்குக் கிட்டியது." எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டுமே....."

சாவித்திரி, உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள். நான்  அளிக்கிறேன்" என்றான் தர்மராஜன். சாவித்திரி தன் மாமனாருக்குப் பார்வையும் இழந்த நாட்டையும் அளிக்குமாறு கோரினாள். தர்மராஜன் அவள் கேட்ட வரத்தைக் கொடுத்து அவளைத் திரும்பிச் செல்லுமாறு கூறினான்

சாவித்திரியோ அவனைப் பின் தொடர்ந்து வந்தாள்.

இன்னொரு வரம் வேண்டும்" என்று கேட்டாள். ஒன்றென்ன? இரண்டுவரம் கேள். தருகிறேன். என்னைப் பின் தொடர்ந்து வருவதை நிறுத்தி உன் இருப்பிடம் திரும்பு" என்றான் தர்மராஜன்.

என் தந்தைக்குப் புத்திரர் இல்லை. பிள்ளை பிறக்க அருள வேண்டும்" என்று கேட்டாள் சாவித்திரி

நூறு பிள்ளைகள் பிறந்து மேன்மையோடு வாழ்வார்" என்று  அருளினான் தர்மராஜன். அடுத்து, நான் கற்பிலிருந்து வழுவாமல், பிள்ளைகளோடும் மாமனார் மாமியாரோடும் மகிழ்ச்சியோடு வாழ அருள வேண்டும்."

சாவித்திரியின் வரத்தைக் கேட்டுத் தர்மராஜன் அசந்து போய்விட்டான். சாமர்த்தியமாக அவள் தன்னை  மடக்கி விட்டதை உணர்ந்தபோது அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான்பெண்ணே, நீ என்னை வெற்றி கொண்டு விட்டாய். உன் கணவன் உயிர் பெற்று எழுவான். நீங்கள் இருவரும் நீண்ட காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவீர்கள்" என்று அனுக்கிரகித்து சத்தியவானின் உயிரை விட்டு விட்டுச் சென்றான் தர்மராஜன்.

கணவனின் உடலைக் கிடத்தியிருந்த மரத்தடிக்குத் திரும்பிய சாவித்திரி ஜலத்தை எடுத்து வந்து அவன் முகத்திலே தெளிக்க, சத்தியவான் தூக்கத்திலிருந்து எழுபவன் போல எழுந்திருந்தான். அவனிடம் நடந்ததை அவள் தெரிவித்த போது சத்தியவான் கொண்ட ஆனந்தம் சொல்லி முடியாது. அவர்கள் இருவரும் பெற்றோர்களிடம் திரும்பினர். சால்வாதிபதி இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றிருந்தான். சாவித்திரி தன் கற்பின் பலத்தால் கணவனின் உயிரை மீட்டதை அறிந்தபோது அவர்கள் அவளைப் பலவிதத்திலும் கொண்டாடினார்கள். சத்தியவான் படை திரட்டிச் சென்று சத்துருக்களை அழித்து நாட்டையும் மீட்டான்.


ஹரி ஓம்  !!!

No comments:

Post a Comment