Wednesday 15 July 2020

சிவ புராணம் ( 54 )


54. அஷ்டமி விரத மஹிமை




சிருஷ்டிப் பிரபாவத்தை விஸ்தாரமாகச் சொல்லி முடித்த சூதர் அடுத்து, சிவபெருமானுக்குப் பிடித்தமான அஷ்டமி விரதத்தைப் பற்றி விவரிக்கலானார். ஒவ்வொரு மாதமும் அஷ்டமிகளில் உபவாசமிருந்து சிவபெருமானைப் பூஜிப்பவன் அவரைத் திருப்திப் படுத்தியவனாகி சகல சௌபாக்கியங்களையும் அடைகிறான்.
மார்கழி மாதம் கிருஷ்ணபக்ஷத்து அஷ்டமியில் கோமூத்திரத்தை அருந்தி உபவாசமிருந்து, மறுநாள் பாரணை செய்தவன் சகல பாவங்களிலுமிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைகிறான். தை மாதத்தில் பசுவின் நெய்யை அருந்தி உபவாசமிருந்து பகவானைப் பூஜிப்பவன், பிரம்மஹத்தி முதலிய பாவங்களிலிருந்து விடுபடுவான். மாசி மாதம் பசும்பாலில் பாயசம் செய்து தக்ஷிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்து விரதம் இருப்பவனுக்கு சுவர்க்கலோக வாசம் கிடைக்கும். பங்குனி மாதம் எள்ளுப் பொடியைச் சாப்பிட்டு விரதம் இருந்தால் நல்ல கதி கிடைக்கும். சித்திரை மாதம் வால்கோதுமையால் செய்யப்பட்ட ஆகாரத்தை மட்டும் அருந்தி விரதம் இருந்தால் அனேக தர்மங்களைச் செய்த பலன் கிட்டும். அதேபோல வைகாசி மாதம் சுத்த ஜலம், ஆனி மாதம் கோமூத்திரம், ஆடியில் பழங்கள், ஆவணியில் உப்பு ஜலம், புரட்டாசியில் தயிர், ஐப்பசியில் வெந்நீர், கார்த்திகையில் தேன் ஆகியவற்றை மட்டும் உட்கொண்டு விரதமிருந்து சிவபெருமானைப் பூஜிப்பவர்கள் அனேக பாவங்களிலிருந்து விடுபட்டு நற்கதி அடைவார்கள்.

மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமிக்கு சங்கராஷ்டமி என்று பெயர். தை மாத அஷ்டமிக்கு தேவதேவாஷ்டமி என்று பெயர். மாசி மாத அஷ்டமிக்கு மகேசுவராஷ்டமி என்று பெயர். திரியம்பகாஷ்டமி என்பது பங்குனி மாதத்தில் வரும் அஷ்டமிக்குப் பெயர் ஆகும். சித்திரையில் வரும் அஷ்டமிக்கு ஸநாதனாஷ்டமி என்று பெயர். வைகாசி அஷ்டமிக்கு  சதாசிவாஷ்டமி என்றும், ஆனியில் வரும் அஷ்டமிக்கு பகவதாஷ்டமி என்றும் பெயர். நீலகண்டாஷ்டமி ஆடியிலும், ஸ்தாணு அஷ்டமி ஆவணியிலும் வரும் அஷ்டமிகளுக்குப் பெயர். சம்புகஷ்டமி புரட்டாசி மாதத்தில் வரும் அஷ்டமிக்குப் பெயர். ஈசுவராஷ்டமி, ருத்திராஷ்டமி இரண்டும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் அஷ்டமிகளுக்குப் பெயர். தக்ஷிணாமூர்த்தியின் சந்நிதியில் பகவானை அர்ச்சித்து விரதமிருந்து, பிராமண போஜனம் செய்வித்து மறுநாள் பாரணை செய்தல் வேண்டும். இவ்விதம் பன்னிரண்டு அஷ்டமிகளிலும் விரதம் இருந்து பகவானைத் தியானிப்பவர்கள் முக்தி அடைவார்கள். பூஜை செய்யும்போது பகவானைப் பாதாதிகேசமாக அங்கங்களை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். அவ்விதம் செய்பவர்கள் சுந்தர வடிவத்துடன் அங்கஹீனம் ஏதுமின்றிச் செல்வத்தோடு வாழ்வார்கள்.

பகவானைக் குறித்து விரதம் இருப்பவர்கள் நியமத்தோடு இருந்து விரதத்தை முடிக்கவேண்டும். நியமத்தில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அவற்றில் இந்திரிய நிக்கிரகமே முக்கியமானது. நியமப்படி நடப்பவர்களே தெய்வத் தன்மை அடைகிறார்கள்.

முன்பு காசி நகரத்தில் ஓர் அந்தணன் இருந்தான். அவன் குரூர சுபாவம் உடையவனாய் இருந்தான். சகல விதமான தீய குணங்களும் அவனிடம் குடிகொண்டிருந்தன. அவனைப் பார்த்தவர்கள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். அத்தனை பெரும்பாவியாக இருந்தான் அவன்.

அந்நகரத்தில் உள்ள ஓங்காரேசுவரரை ஒரு சித்தன் தினமும் பஞ்சாக்ஷர ஜபம் செய்து பூஜித்து வந்தான். ஒரு நாள் அவனைப் பாபியான அந்த பிராமணன் கண்டான். சித்தனை நெருங்கி, ஐயா, நீர் யார்? உன்னைப் பார்த்தால் விண்ணுலக வாசியோ என எண்ணத் தோன்றுகிறது" என்று கேட்டான் அந்தணன்.

ஆம், ஐயா, நீர் நினைப்பதுபோல நான் சுவர்க்கத்திலிருந்து வந்தவனே. தினமும் இங்கு வந்து ஓங்காரேசுவரரைத் தரிசித்துச் செல்வேன். என்னை எப்படி அறிந்தாய்? உனக்கு வேண்டியவர் சுவர்க்கத்தில் யாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டார் சித்தன்.
அந்தணன் சிறிது யோசித்துவிட்டு ஐயா, சுவர்க்கத்தில் அப்சரசுகள் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ரம்பை என்பவளை உனக்குத் தெரியுமா? " என்று கேட்டான். தெரியும், அவளிடம் ஏதாவது செய்தி தெரிவிக்க வேண்டுமா?" என்று கேட்டார் சித்தன்.

சித்தன் பிராமணனைப் பற்றி ஒன்றும் அறியாதவன். ஆகவே, உண்மையில் அவனுக்கு ரம்பை தெரிந்தவளே என்று எண்ணினான். அந்தணனோ, வேடிக்கையாக அவளை நான் விசாரித்ததாகச் சொல்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அன்றைய தினம் பூஜை முடிந்து சுவர்க்கலோகம் திரும்பிய சித்தன், ரம்பையைக் கண்டு பிராமணனின் வார்த்தையைத் தெரிவித்தான். அவளோ தனக்கு யாரையும் தெரியாது என்று சொல்லிவிட்டாள்.

மறுநாள் சித்தன் பிராமணனைக் கண்டபோது ரம்பை அவனைப் பற்றித் தெரியாதென்று கூறியதைத் தெரிவித்தான். நீ திரும்பவும் அவளைப் பார்த்தால் தினந்தோறும் நான் அவளை விசாரித்து வருவதாகச் சொல்" என்றான் பிராமணன்.

சித்தன் மறுபடியும் ரம்பையைக் கண்டு பிராமணன் நாள் தவறாமல் அவளை விசாரிப்பதாகக் கூறினான். அப்சரஸ் பெண்களின் ரூபலாவண்யம் பற்றி அறிந்து, அந்த ஆசையினால் தன்னோடு வாழ வேண்டுமென்று விரும்பும் பிராமணனது எண்ணத்தை அறிந்து அவள், அவனைப் பார்த்தால், நியமத்தோடு இருந்து என்னை அடையலாம் என்று தெரிவி" என்றாள்.


சித்தனிடமிருந்து ரம்பையின் பதிலை அறிந்த பிராமணன் அன்று முதல் தீய காரியங்களை விடுத்து அவளை அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நியமமாக இருந்துவரத் தொடங்கினான். கொஞ்ச நாட்களில் அவன் புனிதத்தன்மை அடையவே ரம்பை அவனை அடைந்து மகிழ்ச்சியுறச் செய்தாள்.


ஹரி ஓம் !!







No comments:

Post a Comment