Saturday 18 July 2020

சிவபுராணம் ( 57 )


57. ஹரிகேசன் சரிதை




பூர்ணபத்திரன் என்றொரு யக்ஷன் இருந்தான். அவனுக்கு ஹரிகேசன் எனப் பெயர் கொண்ட மகன் இருந்தான். ஹரிகேசன் பிறந்தது முதல் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தர்மவழியில் நடந்து வந்தான். தங்களுடைய குலதர்மத்துக்கு மாறாக மகன் நடப்பதைக் கண்ட  பூர்ணபத்திரன் கோபம் கொண்டு அவனைத் தன் வீட்டை விட்டு விரட்டி விட்டான்.

தந்தையால் விரட்டப்பட்ட ஹரிகேசன் நேராகக் காசி க்ஷேத்திரம் சென்று அங்கொரு உத்தியான வனத்தில் ஓரிடத்தில் சிவபெருமானைக் குறித்துக் கண்மூடி நிஷ்டையில் அமர்ந்தான். நாட்கள் சென்றன. ஹரிகேசன் தான் அமர்ந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. அவன் உடலைச் சுற்றிலும் புற்று வளர்ந்து  அதில் பாம்புகள் வசிக்கத் தொடங்கின.

பக்தனின் பெருமையைப் பார்வதிக்கு உணர்த்த நினைத்த சிவபெருமான், தேவியை அழைத்துக் கொண்டு உத்தியான வனத்துக்கு வந்தார். ஒவ்வோர் இடமாகச் சுற்றிக் காண்பித்து வருகையில் ஹரி கேசன் தவம் செய்யும் புற்றை நெருங்கியதும்தேவி, இப்புற்றினுள் என் பக்தன் வெகு காலமாகத் தவம் செய்து வருகிறான்!" என்று சொல்லிப் புற்றைக் கலைத்து, ஹரிகேசா!" என்று அழைத்தார்.

கண்களை விழித்த ஹரிகேசன் தன் எதிரில் ரிஷபாரூடராகக் காட்சி அளித்த பரமசிவனைப் பார்வதியோடு கண்டு களித்துப் பணிந்தான்.

ஹரிகேசா! உன் பக்திக்கு மெச்சுகிறேன்! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார் பகவான்.

பிரபோ, தங்களைத் தரிசித்த எனக்கு என்ன வேண்டியிருக்கப் போகிறது? அழிவில்லாத பேறும் இந்தக் காசி க்ஷேத்திரத்திலே தங்கள் அருகிலேயே நித்தியவாசம் செய்யும் பாக்கியமும் கொடுக்க வேண்டும்" என்று வேண்டினான் ஹரிகேசன்.

பகவான் மகிழ்ந்து, ஹரிகேசா, உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். இன்று முதல் நீ தண்டபாணி என்ற பெயரோடு சிவகணமாக இந்த க்ஷேத்திரத்தில் என்றும் விளங்கி வருவாயாக. என்னைத் தரிசிப்பவர்கள் உன்னையும்  தரிசித்தால் தான், தாங்கள் கோரிய பலனை அடைவார்கள். உத்பிரமன் சம்பிரமன் என்ற இரு அடிமைகளோடு இந்த க்ஷேத்திரத்தில் என் பக்தர்களை ரக்ஷித்து வருவாயாக" என்று அருளி மறைந்தார்.

ஹரி ஓம் !!!





No comments:

Post a Comment