Monday 27 July 2020

சிவபுராணம் ( 66 )

66. அத்ரி முனிவருக்கு அருளுதல்


அத்ரி முனிவர் வமிச விருத்திக்காகப் பரமசிவனை குறித்துத் தவம் செய்தார். அவர் முன்பு மும்மூர்த்திகளும் ஒருங்கே தோன்றித் தரிசனம் கொடுத்தனர். நான் பரமசிவனைக் குறித்துத் தானே தவம் செய்தேன். மூவரும் வந்திருக்கிறீர்களே" என்று ஆச்சரியத்தோடு கேட்டார் முனிவர்.

நாங்கள் மூவரும் ஒருவரே அன்றி வேறல்லர். எங்கள் மூவருடைய அம்சங்களாக உமக்கு மூன்று பிள்ளைகள் உண்டாவார்கள்" என்று அனுக்கிரகித்துச் சென்றனர் மும்மூர்த்திகளும். சிவனுடைய அருளால் துர்வாசரும்விஷ்ணுவின் அருளால் தத்தாத்ரேயரும். பிரம்மதேவன் அருளால் சந்திரனும் முனிவருக்கு உண்டானார்கள்.
துர்வாசர் மிகுந்த சிவபக்தர். அருகம் புல்லால் அவர் ஜலத்தை அருந்தியதால் துர்வாசர் என்ற காரணப்பெயரைப் பெற்றார். சிவபெருமானின் அனுக்கிரகம் அவருக்குப் பரிபூரணமாகக் கிட்டியிருந்தது. சாபம் அளிக்க அளிக்க அவர் தவம் பெருகும்.

ஒருசமயம் அவர் நதியில் நீராடிக் கொண்டிருக்கும் போது பிரவாகத்தின் வேகத்தில் அவர் அணிந்திருந்த வஸ்திரம் இழுத்துக் கொண்டு போகப்பட்டுவிட்டது. இடுப்பில் வஸ்திரம் இல்லாமல் வெளியே வர வெட்கப்பட்டுக் கொண்டு அவர் வெகு நேரம் ஜலத்திலேயே நின்றார்

இதை அறிந்த திரௌபதி உடனே தன் பட்டு வஸ்திரத்தைக் கிழித்து அவரிடம் செல்லுமாறு பிரவாகத்தில் விட்டாள். அதை அணிந்து கொண்டு கரையேறினார் தூர்வாசர்.

சமயம் அறிந்து வாய் திறவாமல் உதவி செய்ததற்காக அவர் திரௌபதியைப் பலவாறு கொண்டாடினார்.

திரௌபதி, என் மானத்தைக் காத்தாய். சமயத்தில் உன் மானத்தைக் காக்க இது ஆயிரம் வஸ்திரமாக வரும்" என்று அனுக்கிரகித்தார்பின்னர் ஒரு சமயம் துரியோதனன் சபையில் துச்சாதனன் அவளைத் துகில் உரியும்போது வஸ்திரம் முடிவே இல்லாது நீண்டு அவனைச் சோர்ந்து விழச் செய்தது முனிவரின் அனுக்கிரகமே.

 ஹரி ஓம் !!









No comments:

Post a Comment