Tuesday 21 July 2020

சிவபுராணம் ( 60 )

60. உபமன்யு அருள் பெறுதல்




வியாக்கிரபாதர் என்னும் முனிவர், வசிஷ்டரின் சகோதரியை மணந்து கொண்டார். அந்தத் தம்பதிகளுக்கு வெகு காலம் பிள்ளை பிறக்கவில்லை. முனிவருக்கு பரமேச்வரனிடம் மிகுந்த பக்தி உண்டு. அவர் தினமும் ஈசனிடம் தன் வம்சம் விளங்கப் புத்திரன் பிறக்க அனுக்கிரகிக்குமாறு வேண்டி வந்தார்.

பகவானின் அனுக்கிரகத்தால் வியாக்கிரபாதருக்கு ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு உபமன்யு எனப் பெயரிட்டு வளர்ந்து வந்தனர். குழந்தையும் தாயும் வசிஷ்டரின் ஆசிரமத்திலேயே சிறிது காலம் இருந்து வந்தனர். அப்போது குழந்தைக்கு அந்த ஆசிரமத்திலிருந்த காமதேனுவிடமிருந்து பாலைக் கறந்து வந்து கொடுத்தனர்.
குழந்தை ஓரளவு பெரியவனானதும் வியாக்கிரபாதரின் மனைவி உபமன்யுவோடு தன் ஆசிரமத்துக்குத் திரும்பினாள். ஒரு நாள் உபமன்யு பாலுக்காக அழுதான். ஆசிரமத்திலோ பசுக்கள் இல்லை. ஆகவே, குழந்தைக்கு மாவைக் கரைத்துப் பால் எனப் புகட்டினாள் தாய்.

குழந்தைக்குப் பாலில் காணப்பட்ட வித்தியாசம் புரிந்து விட்டது. வசிஷ்டர் ஆசிரமத்தில் காமதேனுவின் பாலைக் குடித்து ருசி அறிந்திருந்த அவன், அந்தப் பாலே வேண்டும் என அடம்பிடித்தான்.

தாயார் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவன் கேட்கவில்லை.

நம்முடைய ஆசிரமத்தில் பசுக்களே இல்லையடா. நான் பாலுக்கு எங்கே போவேன்? நம் வசதிக்கு ஏற்பத்தானே நாம் இருக்க முடியும்" என்று ஆறுதல் கூறினாள் தாய்.
உபமன்யுவின் பிடிவாதம் அடங்கவில்லை.

அம்மா, இந்தப் பால்தான் நமக்குக் கிடைக்கவில்லை. அதனாலென்ன, திருபாற்கடலையே நான் பெற்று வருகிறேன்" என்று கூறி சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்ய அனுமதி கேட்டான்.

தாயார் என்ன செய்வாள்? மகனின் பிடிவாதத்தை அவள் நன்கு அறிவாளே! வருத்தத்தோடு அனுமதி கொடுத்தாள். மகனுக்குப் பஞ்சாக்ஷரி உபதேசித்துத் திருநீறும் கொடுத்து அனுப்பினாள்.

காட்டுக்கு வந்த உபமன்யு சிவபெருமானைக் குறித்துத் தவம் மேற்கொண்டான். உள்ளத்தில் ஈசனைத் தியானித்துக்  கண்மூடி ஜபத்தில் அமர்ந்தான். அவனுடைய தவத்தின் பலத்தால் அங்குப் பேயுருவில் சுற்றிக் கொண்டிருந்த மரீசி முனிவரின் புத்திரர்கள் தாங்கள் பெற்ற சாபம் நீங்கப் பெற்றவர்களாய் பேயுருவை விட்டு மானிட உருவை அடைந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு உபமன்யுவின் தவம் பூர்த்தியாகும்படி ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்கள்.

உபமன்யுவின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த பரமசிவன், தம் பக்தனைப் பரிசோதிக்க விரும்பினார். இந்திரனைப் போன்று வேடம் கொண்டு அவனிடம் வந்தார்.

குழந்தாய், இந்தக் கானகத்தில் துஷ்ட மிருகங்கள் சஞ்சாரம் செய்கையில், நீ பயமின்றித் தவம் செய்கிறாயே! யாரைக் குறித்துத் தவம் செய்கிறாய்!" என்று கேட்டார்.

கையிலாசநாதனான மகேச்வரனைக் குறித்துத் தவம் செய்கிறேன்" என்றான் உபமன்யு.

அவரோ ஆண்டி, உனக்கு என்ன வரம் கொடுக்கப் போகிறார்? இருக்க இடமில்லாது மயானத்திலே திரிகிறார். வேறு தேவர்கள் இல்லையா? அவர்களில் யாரையாவது குறித்துத் தவம் செய்வதுதானே" என்றார் இந்திரன் வடிவில் வந்திருந்த ஈசன்.

அத்துடன் நின்றுவிடவில்லை. சிவனைப் பற்றித் தூஷணையாகப் பேசினார்.

உபமன்யுவுக்குப் பிரமாத கோபம் வந்துவிட்டது.

பகவானின் மகிமையை உணராது அவரை நிந்தித்துப் பேசும் நீ, பெரும் பாவியாகிறாய். உன்னைத் தண்டிக்காது விடக்கூடாது" என்று கடிந்து பேசியபடி அகோராஸ்திரத்தை அவர் மீது ஏவித் திருநீற்றையும் வாரி இறைத்தான் உபமன்யு.

சட்டென்று நந்திதேவர் அங்குத்தோன்றி, பகவானின் மீது உபமன்யு ஏவிய அஸ்திரம் படாது தடுத்தார். அப்போது தான் உபமன்யுவுக்குத் தம்மைச் சோதிக்கவே பகவான் அவ்வாறு வந்தார் என்பது புரிந்தது. அவன் உள்ளம் வேதனையால் துடித்தது. ஆஹா, பகவான் மீதே அஸ்திரத்தை ஏவிப்பெரும் பாதகத்தைச் செய்து விட்டோமே!" என்று அனலிலிட்ட மெழுகுபோல் துடித்தான். இனி உயிருடன் இருப்பது எதற்கும் பிரயோசனமில்லை என்று முடிவு செய்து தீ முட்டி அதில் விழுந்து உயிரைவிடத் தயாரானான்.

தீயிலே குதிக்க யத்தனிக்கும் போது கையிலாசநாதன் பார்வதி சமேதராய் அங்குத் தோன்றி அவனைத் தடுத்து நிறுத்தினார்.

தேவி, உபமன்யு விரும்பியது போல் அவனுக்குத் திருப்பாற் கடலையே இருப்பிடமாக அளிக்கப் போகிறேன். உன் விருப்பம் என்ன?" என்று பார்வதியைக் கேட்டார். தேவிக்கு விருப்பமில்லாதிருக்குமா? அவன் மன உறுதியைப் பெரிதும் பாராட்டி, உயர்ந்த ஞானம் உண்டாக அருளினார்.


திருப்பாற் கடலை அடைந்த உபமன்யு பகவானைத் தியானித்து அவர் நினைவிலேயே தம் பொழுதைக் கழித்து வந்தான். இந்த உபமன்யு முனிவரிடம்தான், கண்ணன் உபதேசம் பெற்று சிவபூஜை செய்து தன் சந்ததி வளர சாம்பன் என்ற பிள்ளையைப் பெற்றார்.

ஹரி ஓம் !




No comments:

Post a Comment