Thursday 16 July 2020

சிவபுராணம் ( 55 )


55. சிவன் சுடலையாண்டியான விருத்தாந்தம்




ஒரு சமயம் பார்வதி தன் நாதனைப் பார்த்து, சுவாமி எத்தனையோ ஆபரணங்கள் இருக்க, அவை அனைத்தையும் துறந்துவிட்டு விபூதியை உடலெங்கும் பூசிக்கொண்டு பூத கணங்களுடன் மயானத்தில் நடனம் செய்து கொண்டிருப்பது ஏன்? " என்று கேட்டாள். தேவியின் சந்தேகத்தைப் பரமசிவன் நிவர்த்திக்க இந்த விருத்தாந்தத்தைச் சொன்னார்.

ஒரு சமயம் பிருகு வமிசத்தில் பிறந்த வேதியன் ஒருவன் தீவிரமாக நியமநிஷ்டைகளை வகுத்துக் கொண்டு கடுமையான தவம் செய்தான். அவன் தவத்துக்கு இரங்கி பக்ஷிகள் பழங்களைக் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தன. அவனோ சருகாக உலர்ந்தவற்றை மட்டுமே உண்டு வந்தான். அதனால் அவனுக்குப் பர்ணாதன் என்ற பெயர் விளங்கலாயிற்று.

பின்னர் சிறிது காலத்தில் அவன் அதையும் விடுத்து எதையும் உண்ணாது உடலில் உள்ள இரத்தம் சுண்டிப் போகுமளவு கடுமையாக விரதம் இருந்தான்.

ஒருநாள் அவன் தர்ப்பை அறுக்கும்போது, அது அவன் கையில் பட்டுக் கிழிக்கவே காயம் ஏற்பட்டு இரத்தம் பெருக்கெடுத்தோடியது. அதைக் கண்ட அவன் ஆனந்தம் தாங்காமல் குதிக்கத் தொடங்கினான்.

சிவபெருமான் ஓர் பிராமணனாக வேடம் கொண்டு அவன் முன்பு தோன்றி, ஏனப்பா, இவ்விதம் குதிக்கிறாய்? உன் தவம் சித்தியாகிவிட்டது என்ற ஆனந்தமோ?" என்று கேட்டார். அவனோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் தன் மகிழ்ச்சியிலேயே குறியாயிருந்தான்.

சிவபெருமான் இரத்தம் கொட்டும் அவன் கையை இறுகப் பிடித்தார். அப்போது இரத்தம் வழிவது நின்று பால் வழியத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் அதுவும் நின்று விபூதி கொட்டியது. அதைப் பார்த்ததும் ஆச்சரியம் அடைந்த அவன் ஐயா, தாங்கள் யார் இதென்ன மாய வித்தையாக இருக்கிறது?" என்று கேட்டபடி அவர் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்தான்.

சிவபெருமான் அவனுக்குத் தரிசனம் கொடுத்து சிவ கணங்களில் ஒருவனாக ஆகும் பாக்கியத்தையும் அருளினார். பர்ணாதனுக்காகப் பகவான் உண்டாக்கிய விபூதி அவருக்குச் சந்தனம்போல அதிக விருப்பம் உடையது. பிரயாகை, புஷ்கரம், ருத்திரவாசம், துவாரகை, ஹரித்துவாரம், பிரபாசம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனை ஒருவன் தன் உடலில் விபூதியைத் தரித்துக் கொள்வதால் அடைகிறான். விபூதி தரிப்பவர்கள், பூதப் பிரேத பிசாசங்களால் பயமுறுத்தப்பட மாட்டார்கள்.

வாயவியம், வாருணம், ஆதபம், ஆக்நேயம், அவகாஹம் ஆகிய ஐந்துவகை ஸ்நானங்களில் விபூதி தரிப்பது ஆக்நேயம் எனப்படும் வகையைச் சேர்ந்ததாகும். கங்கைக்குச் சமமான தீர்த்தம் இல்லை. வேதத்துக்குச் சமமான பிரமாணம் கிடையாது. மிருத்யுவுக்கொத்த தண்டிப்பான் இல்லை. அதேபோல விபூதி தரிப்பதற்கு ஒப்பான ஸ்நானம் இல்லை. அசுயாய் இருப்பவர்களும், வியாதியால் பீடிக்கப்பட்டவர்களும் விபூதியைத் தரிப்பதால் புனிதம் அடைவார்கள்.

உலகிலுள்ள பிராணிகளுக்குப் பிரளயம் நான்கு வகைப் பட்டு நிகழ்கின்றது. நித்தியம், நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என அவை நான்கும் வழங்கப்படுகின்றன. நித்தியம் என்பது ஒருவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் முடிந்து அவன் இறப்பதாகும். நைமித்தகமோ, சில காரணங்களால் பலர் கூடி மரிப்பதாகும். பிராகிருதம் பிரம்ம கற்பம் அழிவதாகும். இவ்வகையாக அழிந்து அழிந்து தோன்றும் அனைத்தும் முக்தியடையும்படி சர்வ சம்கார காலத்தில் அண்டாண்ட பிரமாண்டங்களையும், பிரம்மன் முதலான சகலமான தேவர்களையும் அழிக்கத்தக்கதாகப் பஞ்ச பூதங்களில் ஒன்றால் சம்கரித்து யாவும் அழியும்படி ஒருவனாகவே நின்று சர்வேசுவரன் சம்கார நிருத்தியம் செய்வது ஆத்தியந்திகம் எனப்படும். அப்போது தேவி பகவானின் பக்கத்தில் இருந்து அவர் நடனத்திற்கு ஏற்பக் கைத்தாளம் போடுவாள். தேவர்களுடைய உடல்கள் விழுந்து கிடக்கும் மயானம் முழுவதும் சுற்றி ஆடுவதால் பகவானுக்குச் சுடலையாண்டி என்ற பெயர் விளங்குவதாயிற்று.

ஒரு சமயம் பகவான் அவ்வாறு மயானத்தில் நடனம் செய்கையில் பூதப் பிரேதப் பிசாசங்கள் யாவும் அவரைச் சுற்றி நின்று அவருக்குத் தொண்டு செய்தன. பகவானின் நர்த்தனத்தைக் காண, தேவர்களுடன் வந்த விஷ்ணு அவரைப் பணிந்து, சர்வேச்வரா, தாங்கள் இங்கு நடனமாடுவதால் பூதப் பிரேதப் பிசாசங்கள் தங்கள் சந்நிதானத்திலேயே தங்கி உள்ளன. அவை மக்களுக்குக் கெடுதல்கள் எதுவும் செய்யாதிருக்கத் தாங்கள் அதனுடனேயே இங்கே இருப்பது உத்தமம்" என்று வேண்டினார். பகவானும் அதற்குச் சம்மதித்து மயானத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டார்.
சகலரையும் பயமுறுத்தும் பூதப்பிரேத பிசாசங்களைக்  கட்டுப்படுத்தியிருப்பதால் ருத்திரன் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. சர்வ சம்கார காலத்தில் அனைவரையும் சம்கரிப்பதால் ஹரன் என்றும் அவருக்குப் பெயர் உண்டாயிற்று.


சூதர் நைமிசாரண்ய முனிவர்களுக்குச் சிவபெருமான் விபூதியை சர்வாபரணமாகத் தரிப்பது பற்றியும் மயானத்தில் நிருத்தியம் செய்வது பற்றியும் விளக்கிவிட்டு மேற்கொண்டு அறுபத்தெட்டு ஸ்தலங்களில் எழுந்தருளியிருப்பது பற்றிக் கூறத் தொடங்கினார்.

ஹரி ஓம் !!










No comments:

Post a Comment