Sunday 26 July 2020

சிவபுராணம் ( 65 )

65. தேவர்கள் கர்வபங்கம் 



தேவாசுர யுத்தத்தில் வெற்றிபெற்ற தேவர்களுக்கு அளவில்லாத அகங்காரம் ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சக்தியாலேயே அசுரர்களை வென்றதாகக் கூறிக் கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு நடுவே ஒரு யக்ஷம் தோன்றிற்று. அதன் நுனியோ, அடியோ தெரியவில்லை.

தேவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அதைப் பார்த்து, நீ யார்? எதற்கு இங்கு வந்திருக்கிறாய்? " என்று கேட்டனர்.

யக்ஷமோ அவர்களைப் பார்த்து, நீ யார் என்பதை முதலில் சொல்" என்று கேட்டது.

ஒவ்வொரு தேவரும் தங்கள் பெருமைகளைக் கூறிக் கொண்டார்கள்.

யக்ஷம் ஒரு தர்ப்பையைத் தரையில் போட்டது.

எத்தனையோ பெருமைகளைக் கூறிக்கொள்ளும் நீங்கள் அனைவருமே முயற்சி செய்து பாருங்கள். யாராவது இதை எடுக்க முடிகிறதா என்பதைப் பார்ப்போம்" என்றது.

தேவர்கள் அலட்சியமாக அந்தப் தர்ப்பையை எடுக்கக் குனிந்தனர். ஹூஹூம். தர்ப்பையைக் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. வருணன் மழையைக் கொட்டினான்; தர்ப்பை நனையவில்லை. அக்கினி அனலைக் கக்கினான்தர்ப்பையைக் கொளுத்த முடியவில்லை. வாயுதேவன் புயலாக வீசினான்; தர்ப்பையோ இருந்த இடத்தைவிட்டுக் கொஞ்சமும் நகரவில்லை.

இந்த விதமாக ஒவ்வொரு தேவரும் முயற்சித்துத்  தோல்வி கண்டனர்.

அவர்கள் கர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்றது. அவர்கள் அனைவரும் இவையெல்லாவற்றையும் ஒரு பக்கமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தி தேவனிடம்  சென்றார்கள்.

இதென்ன மாயையாக இருக்கிறது. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையே, இந்த யக்ஷம் யார்? " என்று கேட்டனர்.

சர்வேச்வரனே இவ்வாறு தோன்றியிருக்கிறார். அவரில்லாமல் எதுவுமே இல்லை. தேவாசுர யுத்தத்தில் அவருடைய அனுக்கிரகத்தாலேயே நீங்கள் வெற்றி கண்டீர்கள். அதை உணராது அகங்காரத்தோடு இருந்த உங்களுக்கு நிலைமையை விளக்கவே பகவான் இம்மாதிரி தோன்றினார்" என்றார் நந்திதேவன்.


தேவர்கள் உண்மை உணர்ந்து தங்கள் தவறுக்கு வருந்தி, மன்னிக்கும்படி சர்வேச்வரனை வேண்டித் துதித்தனர்.

ஹரி ஓம் !!











No comments:

Post a Comment