Saturday 25 July 2020

சிவபுராணம் ( 64 )


64. ஜாலந்தரன் வதம்





ஒரு சமயம் பரமேச்வரனைத் தரிசிப்பதற்காகத் தேவேந்திரன் கையிலயங்கிரிக்குச் சென்றான். அவன் சென்ற சமயத்தில் சிவன் மிகவும் உக்கிரமாகவும், திகம்பரனாகவும் இருந்தார். அவரைத் தேவேந்திரனால் கண்டுகொள்ள முடியவில்லை. அடே, திகம்பரனாகத் திரியும் நீ யார்? கையிலாசபதி எங்குச் சென்றார்?" என்று கேட்டான் இந்திரன்.
ஈசன் அவன் கேள்விக்குப் பதில் கூறவில்லை. இந்திரன் சினம் கொண்டு மறுபடியும் அவரை அதட்டிக் கேட்டான். அப்போதும் ஈசன் வாய் திறக்கவில்லை. இந்திரன் பொறுமை இழந்து மூன்றாம் முறையாக அவரைக் கேட்டான். அப்போதும் அவர் பதில் சொல்லாதிருக்கவே, தன்னிடமிருந்த வஜ்ஜிராயுதத்தை எடுத்து அவர் மீது வீசினான்.
கைலாசநாதன் கோபத்தோடு இந்திரனை நோக்கினார். அப்போதே இந்திரன் சாம்பலாகி விட்டான். சிவகோபத்துக்கு இந்திரன் பலியாகிவிட்டதை அறிந்ததும் பிருஹஸ்பதி ஓடி வந்தார். பிரபோ, சர்வேச்வரா, சாந்தம் கொள்ள வேண்டும். இந்திரன் இல்லாவிடில் தேவர்களுக்கு நன்மை இல்லை. பூவுலகமும் அதனால் பாதிக்கப்படும். கருணாமூர்த்தியான தாங்கள் அவன் செய்த தவறை மன்னித்து அவனை உயிர்பெற்று எழச் செய்யவேண்டும். உங்கள் கோபத்தைக் கடலிலே எறியுங்கள்என்று வேண்டினார்.
சர்வேச்வரனான சங்கரனும் அவர் கோரிக்கையை ஏற்று இந்திரனை உயிர்பெற்று எழச் செய்து, தம்முடைய கோபத்தைக் கடலிலே எறிந்தார். கடலிலே விழுந்த சிவகோபம் பயங்கர ராக்ஷஸக் குழந்தையாகி மூவுலகங்களுக்கும் கேட்கும்படி அழத்தொடங்கியது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டுப் பிரம்மதேவன் சமுத்திர தீரத்துக்கு வந்தார். சமுத்திர ராஜன் அவர் வருகையை அறிந்து ஓடி வந்து நான்முகனை வரவேற்றான்.
பிரபோ, இந்தக் குழந்தையை ஆசீர்வதித்து நாமகரணம் செய்ய வேண்டும்" என்று வேண்டியவனாய் அசுரக் குழந்தையை எடுத்து வந்து அவர் மடி மீது கிடத்தினான். குழந்தை சட்டென்று எழும்பி பிரம்மதேவனின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு விட்டது. நான்முகனின் கண்களில் ஜலம் தளும்பிவிட்டது. அதையே காரணமாகக் கொண்டு அவர் குழந்தைக்கு ஜாலந்தரன் எனப் பெயரிட்டார். சிவபெருமான் ஒருவரால்தான் மரணம் சம்பவிக்கும் என்று அக்குழந்தைக்கு வரம் கொடுத்து சென்றான் பிரம்மதேவன்.

ஜாலந்தரன் காலநேமி என்பவரின் மகளான பிருந்தையை மணம் செய்து கொண்டான். பிருந்தை கற்பு நெறி தவறாதவள். அதன் காரணமாக ஜாலந்தரன் பெரும் பலத்தைப் பெற்றான். சமுத்திரத்தைக் கடைந்து அதிலிருந்து உண்டான  பொருள்களான அமிர்தம், கல்பகவிருக்ஷம் ஆகியவற்றைத் தேவர்கள் கைகொண்டது அநியாயம் எனச் சீறினான் அவன். கடலிலிருந்து தோன்றிய தனக்கே அவை உரிமை என்றும், சுவர்க்கலோகத்தோடு அனைத்தையும் தன்னிடமே திருப்பிக் கொடுத்து விடுமாறும் இந்திரனிடம் சண்டையிட்டான் ஜாலந்தரன். இந்திரனின் உதவிக்கு வந்த தேவர்கள் எல்லோரையும் கொன்று குவித்தான்.

தேவர்களின் குருவான பிரஹஸ்பதி துரோணாசலத்தில் உள்ள ஔஷதங்களைக் கொண்டுவரச் செய்து அவற்றால் இறந்த தேவர்களை உயிர் பிழைக்கச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட ஜாலந்தரன் பெரும் சீற்றத்தோடு சென்று அந்த மலையையே பெயர்த்துக் கடலிலே எறிந்து விட்டான்.

தேவர்களால் அவனை எதிர்த்துப் போரிடவே முடிய வில்லை. வைகுந்தத்துக்குச் சென்று நாராயணனிடம் சரண் புகுந்தனர். அவர்களைக் காப்பாற்ற விஷ்ணு, அசுரனோடு யுத்தத்துக்கு வந்தார். அவர் புறப்படும்போது லக்ஷ்மி ஓடி வந்து தடுத்தாள்.
பிரபோ, ஜாலந்தரன் என் உடன் பிறந்தவன். அவன் உயிருக்கு ஆபத்து ஏதும்வராமல் காக்க வேண்டும்" என்று வேண்டினாள். மகாவிஷ்ணுவாலும் அசுரனை வெற்றி கொள்ள முடியவில்லை. அவனிடம் தம் தோல்வியைக் காட்டாது சாமர்த்தியமாக, அசுரேந்திரா, உன் வலிமையைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். உனக்கு வேண்டிய வரம் என்ன? அதைக் கேள் நான் தருகிறேன்" என்றார்.
அசுரனுக்கு மகாவிஷ்ணுவின் தந்திரம் புரிந்து  விட்டது. ஆகவே, அவன் அவரை நோக்கி, நாராயணா, என்னிடம் மகிழ்ச்சி கொண்டு எனக்கு வரம் கொடுக்க முன் வந்திருப்பது உண்மையானால், தாங்கள் எப்போதும் பாற்கடலிலேயே சயனம் கொண்டிருக்க வேண்டும், என்பதே என் வரம்" என்றான்விஷ்ணு அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவனை எதிர்ப்பதை விட்டுப் பாற்கடலுக்குச் சென்றார்.
நாராயணனாலும் அசுரனை வெற்றி கொள்ள முடியவில்லை என்பதைக் கண்ட தேவர்கள், நாரதரைக் தூண்டி கைலாச நாதனிடம் தங்கள் நிலைமையை எடுத்துக் கூறி அசுரனின் அழிவுக்கு வழி செய்யுமாறு வேண்டினர். தேவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லி நாரதர் பரமசிவனிடம் சென்றார்.

கைலாசபதே, அரக்கனைத் தாங்கள் ஒருவர்தான் சம்கரிக்க முடியும் என பிரம்மதேவன் ஏற்கனவே அவனுக்கு வரம் கொடுத்திருக்கிறார். நாராயணனும் அசுரனிடம் வெற்றி காண முடியாது திரும்பி விட்டார். பிரபோ, இனி நீங்கள் தான் தேவர்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டினார்.

நாரதா, உனக்குத் தெரியாத வழியா? இப்போதே சென்று அசுரனுக்கு என்மீது கோபம் ஏற்படும்படி செய்; உன்விருப்பம் தானே முடிந்துவிடும்" என்று கூறினார். நாரதர் ஜாலந்தரனின் அரண்மனையை அடைந்தார். என்றும் இல்லாத திருநாளாகத் தன்னை தேடி நாரதர் வந்திருக்கிறாரே என அவரை அன்போடு வரவேற்று உபசரித்தான் அசுரன்.

நாரதர் அசுரனின் உபசாரங்களைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்தார். அவனுடைய உன்னதமான நிலைமையைப் பாராட்டினார். பேச்சின் நடுவே தாம் வந்த காரியத்தையும் அவர்முடித்துக் கொண்டார்.

ஜாலந்தரா, உன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இங்கு வந்து நேரில் பார்த்த பின்னர் அவை அனைத்தும் மிகவும் குறைவாகவே கூறப்பட்டுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. இத்தனை போகங்களுடன் வாழும் உன்னிடம் சகலமான ரத்தினங்களும் இருக்கின்றன. ஆனால் கைலாயத்தில் உள்ள உமா ரத்தினம் அதாவது பார்வதி உன்னிடம் இருப்பாளேயானால் உன் பெருமைக்கு இணை சொல்ல முடியாது" என்று புகழ்ந்தார்.
நாரதரின் புகழ்ச்சி ஜாலந்தரனின் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. பார்வதியை அடைய வேண்டுமென்ற ஆசை அவனைப் பற்றிக் கொண்டது. உடனே வீரர்களுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டான்பார்வதியை என்னிடம் ஒப்படைத்துவிட்டால் யாருக்கும் தீங்கு செய்யாது திரும்பி விடுகிறேன். இல்லையேல் கைலாசத்தையே நொறுக்கித் தவிடாக்கி விடுவேன்" என சிவபெருமானிடம் தூதுவர்களை அனுப்பினான் அசுரன்.

ஈசனும் கணங்களோடு யுத்தத்துக்குத் தயாரானார். இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். சிவகணங்கள் அரக்கர் படைகளினூடே புகுந்து, வீரர்களை அழித்து துவம்சம் செய்தனர். கணங்களால் அழிக்கப்பட்ட அசுர வீரர்களை, சஞ்ஜீவனி மந்திரத்தால் எழுப்பிக் கொண்டிருந்தார், அசுர குருவான சுக்ராச்சாரியார். அதனால் அசுரர்கள் முன்னிலும் பன்மடங்கு வேகத்துடன் கணங்களோடு சண்டையிட்டனர். பார்த்தார் ஈசன். சுக்கிராச்சாரியார் இருக்கும் வரை அசுரப் படைக்கு அழிவு உண்டாகாது என்பதைக் கண்டார். தாமதிக்காமல் உடனே தமது முகத்திலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி சுக்கிராச்சாரியை மயக்கிக் கொண்டு செல்லுமாறு பணித்தார். அவளும் இட்ட வேலையை செவ்வனே செய்து முடித்தாள்.

பின்னர் சிவபெருமான் பெரும் கோபத்தோடு ஜாலந்திரனை எதிர்த்தார். அவனது இரதத்தை முறித்துத் தள்ளினார். அசுரனும் மயங்கிக் கீழே விழுந்தான். ஆயினும், ஒரு கணத்தில் சமாளித்து எழுந்து விட்டான். மாயாஜால வித்தையில் பெயர் பெற்றவர்களாயிற்றே அசுரர்கள். அவனும் தனது மாய சக்தியினால் மோகினியை உருவாக்கி சிவனை மயக்க அனுப்பினான்.

மோகினி சிவனை மயக்கி விடுவாள் என்ற நம்பிக்கையில், சிவனின் வேடம் பூண்டு பார்வதியிடம் சென்றான். ஆனால், வந்தது அசுரன்தான் என்பதை சட்டென்று உணர்ந்த பார்வதி அங்கிருந்து உடனேயே மறைந்தாள். பார்வதியும் அவன் மாயையில் சிக்கவில்லை. போர் முனையிலிருக்கும் சிவனும் மோகினியின் மாயையில் சிக்கவில்லை.

அசுரனை அழிப்பது சுலபமான காரியமல்ல என்பதை அறிந்தாள் பார்வதி. மனைவியின் கற்பே அவனுக்குப் பெரும் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்த தேவி விஷ்ணுவை நினைத்தாள். நாராயணனும் அங்கே தோன்றினார். நாராயணனை சிவனுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டாள். உடனே, நாராயணனும் மாயையின் உதவியால் ஜாலந்திரனின் மனைவியான பிருந்தை நித்திரை செய்யும் வேளையில் துர்ஸ்வப்னம் தோன்றச் செய்தார்.

கண்விழித்த பிருந்தை, தான் கண்ட பயங்கரக் கனவை எண்ணி மனம் கலங்கினாள். ஏதோ பெருத்த அபாயம் ஏற்படக் கூடிய சூழ்நிலை இருப்பதையே கனவு கோடிட்டுக் காட்டியிருக்கிறதென்றும், அதற்குப் பரிகாரம் ஏதாகிலும் செய்ய வேண்டுமென்றும் அவள் விரும்பினாள். யாராவது பெரிய மனிதரைக் கண்டு விசாரிக்கலாமென அவள் புறப்பட்டு வரும்போது, அந்த வழியில் விஷ்ணு, முனிவராக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட பிருந்தை அருகில் நெருங்கி, வணங்கினாள்.

யாரம்மா, நீ ? என்ன வேண்டும்?" என்று கேட்டார் விஷ்ணு. சுவாமி, நான் அசுரேந்திரனின் மனைவி பிருந்தை. நேற்றிரவு நான் பயங்கரக் கனவு ஒன்று கண்டேன். அதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. அதனால் ஏதும் ஆபத்து ஏற்படாதிருக்கப் பரிகாரம் செய்தால் தேவலை. அது பற்றித் தெரிந்து செல்லவே வந்தேன்" என்றாள் பிருந்தை.

அதே சமயம் விஷ்ணுவின் மாயையால் இரு அரக்கர்கள் திடீரென்று தோன்றி பிருந்தையைத் தூக்கிச் செல்ல முயற்சித்தனர். சுவாமி, இந்தப் பாதகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கதறினாள் பிருந்தை. முனிவராக அமர்ந்திருந்த விஷ்ணு, பெண்ணே, கவலைப்படாதே. நான் காப்பாற்றுகிறேன்" என்று அபயம் அளித்து, அந்த அரக்கர்களைப் பார்த்து ஹூங்காரம் செய்தார். அந்த க்ஷணமே இரு அரக்கர்களும் எரிந்து சாம்பலானார்கள்.

பிருந்தைக்கு முனிவரிடம் அசைக்க முடியாத பக்தி உண்டாக்கி விட்டது. அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்தாள்.

சுவாமி, என் கணவர் கைலாசநாதனோடு யுத்தம் செய்யச் சென்றுள்ளார். அவர் நிலைமை எப்படி இருக்கிறது? யுத்தத்தில் அவர் ஜயம் பெறுவாரா? தயவு செய்து உங்கள் யோக பலத்தால் அறிந்து சொல்லுங்கள், சுவாமி" என்று அவரை வேண்டினாள். இதோ காட்டுகிறேன், பெண்ணே!" என்று சொன்னார் நாராயணன்.

அப்போது இரு குரங்குகள் வெட்டுண்டு இறந்த ஜாலந்தரனுடைய உடலை அங்கே கொண்டு வந்து போட்டன. கணவனது உடலைக் கண்டதும் பிருந்தை கண்ணீர் விட்டுக் கதறினாள். சுவாமி, இன்னொரு வேண்டுகோள். இந்த அபலையைப் பாருங்கள். எனக்காக என் பதியை எழுப்பித் தாருங்கள்" என்று முனிவரை வேண்டினாள் பிருந்தை.

நாராயணன் அந்த உடலிலே புகுந்து ஜாலந்திரனாக மாறி அவளோடு கூடினார். பிருந்தையின் கற்புக்கு பங்கம் உண்டாகி விட்டது. அதை உணர்ந்தபோது பிருந்தை துடிதுடித்து விட்டாள். தன்னைக் கபடமாக வஞ்சித்துவிட்ட நாராயணனைச் சபித்தாள். மனிதனாகப் பிறந்து, மனைவியை ராக்ஷஸனிடம் இழந்து திரியும்படியும், உதவிக்குக் குரங்குகளையே நாடவேண்டியதாயும் சாபமிட்டாள். இதுவரை கற்புக் கரசியாகத் திகழ்ந்து வந்த அவள், தன் உடலைப் பிறர் தீண்டியதால் ஏற்பட்டக் களங்கத்தைப் போக்கத் தீ முட்டி அதிலே குதித்து உயிரை விட்டு விட்டாள். நாராயணன் பித்துப் பிடித்தாற்போல் பிருந்தே பிருந்தே" என்று கூவிக் கொண்டு அவள் சாம்பலில் விழுந்து புரண்டார்.

நாராயணனின் துக்கத்தைப் போக்கப் பார்வதி, பிருந்தையின் சாம்பலைத் துளஸியாக்கினாள். அந்த துளசியைத் தரித்துக் கொண்டு பித்தம் நீங்கியவரானார் மகாவிஷ்ணு. இங்கு ஜாலந்திரனுடனான போர் தொடர்ந்து கொண்டிருந்தது. மனைவியின் கற்பு பலம் தான் அவனை இதுவரை காப்பாற்றிக் கொண்டு வந்தது. இனி அவனை கொல்வது எளிது என்பதை ஞானத்தால் உணர்ந்த ஈசன், தரையிலே கால் கட்டைவிரலால் ஒரு சக்கரத்தை எழுதினார்.


ஜாலந்தரா, நீ சுத்த வீரனானால் இந்தச் சக்கரத்தை எடு, பார்க்கலாம் "என்றார். அசுரன் அதை எடுக்க எவ்வளவு முயன்றும் முடிய வில்லை. அதைப் பெயர்க்கக்கூட அவனால் இயலவில்லை. சிவபெருமான் அதை அநாயாசமாக எடுத்து அசுரன் மீது எறிந்தார். அப்போதே அவன் அழிந்தான். தேவர்கள் மலர்மாரி பெய்து ஈசனைப் போற்றிக் கொண்டாடினர்.


ஹரி ஓம் !








No comments:

Post a Comment