Sunday 19 July 2020

சிவபுராணம் ( 58 )


58. பிரதாப மகுடன் முக்தி அடைந்தது.





பிரதாப மகுடன் என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு வெகு நாட்களாகப் பிள்ளை பிறக்கவில்லை. எத்தனையோ தான தருமங்களுக்குப் பின்னர் சிவபெருமான் அருளால் அவனுக்கு ஓர் ஆண்மகன் பிறந்தான்.

அந்தப் பிள்ளை பிறந்தது முதலே ஞான மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தான். எந்தக் காரியத்திலும் கொஞ்சமும் விருப்பமின்றி விரக்தியோடு பகவானை ஸ்மரிப்பதிலேயே அவன் மனம் சென்றது. அதைக் கண்ட அரசன் பெரிதும் வருந்தி, குமாரா, எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு, எத்தனையோ தான தருமங்களுக்குப் பிறகு, உன்னைப் பிள்ளையாகப் பெற்றேன். நம் முன்னோர்கள் கடைத்தேற நீ கிருகஸ்தனாகி புத்திர பௌத்திரர்களோடு  தருமங்களை நடத்தி வர வேண்டும். இவ்வாறு விரக்தியோடு இருப்பது சரியல்ல" என்றான்.

அதைக் கேட்ட அரசகுமாரன், அப்பா, உங்கள் வார்த்தைகளைக் கேட்க எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இந்த ஜன்மம் எத்தனையாவது என்பது தெரியாது. எத்தனையோ பிறவி எடுத்தேன். எத்தனையோ திருமணங்கள் செய்து கொண்டு புத்திர பௌத்திரர்களைப் பெற்றெடுத்தேன். எத்தனையோ பிதுர்களைக் கரையேற்றியுள்ளேன். இந்தப் பிறவி போதும், பிறந்து பிறந்து மரணத்தை அடையும் இந்த வாழ்க்கை போதும், பிறவாப்பேற்றை அடையவே எண்ணம் கொண்டுள்ளேன்

அதற்காகவே பகவானைத் தியானித்து வருகிறேன். இதற்கு முன் மூன்றாவது ஜன்மத்தில் நான் ஒரு துரிதனின் குமாரனாகப் பிறந்தேன். தீர்த்த யாத்திரை செய்து வரும் போது காசி க்ஷேத்திரத்தை அடைந்தேன். அங்கு இருக்கும் போது ஒருநாள் இரவு நித்திரை வராது கண் விழித்திருக்கையில் தேவர்கள் யக்ஷர்கள் முதலானோர் வந்து ஓங்காரேசுவரரைத் தரிசித்துச் செல்வதைக் கண்டேன். அந்தப் புண்ணியத்தால் அடுத்த பிறவியில் ஓர் அரசகுமாரனாகப் பிறந்து பூர்வஜன்ம ஞானத்தால் காசியை அடைந்து அங்கேயே உயிரை விட்டேன். இந்த ஜன்மத்திலும் அரச குமாரனாகப் பிறந்திருக்கிறேன்

இத்துடன் என் பிறவியையே ஒழித்து மோக்ஷத்தை அடைய முயற்சிக்கப் போகிறேன். என்னைத் தயவு செய்து இன்றே  காசிக்குச் செல்ல அனுமதிக்க  வேண்டும்" என்று வேண்டினான்.

அதைக்கேட்ட பிரதாப மகுடன், மைந்தா, எனக்கும் மோக்ஷத்தை அடைய வேண்டும் என்பதே ஆசை. ஆனால் இந்த சம்சார பந்தத்திலுள்ள ஆசையை ஒழிக்க முடியவில்லை. உன்னோடு நானும் வருகிறேன். என்னையும் அழைத்துச் சென்று முக்திக்கான வழியைக் காட்டு" என்றான்.


பின்னர் தன் இளைய மகனுக்கு முடிசூட்டி விட்டு, மூத்த மகனுடன் காசிக்குச் சென்ற பிரதாப மகுடன் அங்கே பகவானைத் தியானித்து உயிரை விட்டு முக்தியை அடைந்தான்.


ஹரி ஓம் !!






No comments:

Post a Comment