Saturday 11 July 2020

சிவபுராணம் ( 52 )

52. சிருஷ்டி விஸ்தாரம்



சாவித்திரி சத்தியவான் விருத்தாந்தத்தைச் சொல்லி முடித்த சூதரைப் பார்த்து நைமிசாரண்ய முனிவர்கள் கேட்டனர். சுவாமி, முன்னர் உலக சிருஷ்டியை மிகவும் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள். அதைச் சற்று விஸ்தாரமாகச் சொல்ல  வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர். முனிவர்களின் வார்த்தைகளால் மகிழ்ச்சியுற்ற சூதர், உலக சிருஷ்டியை விஸ்தாரமாகச் சொல்லத் தொடங்கினார்.

சிருஷ்டி நிமித்தமாகப் பிரம்மதேவன் ஜலத்திலே தன் வீரியத்தைவிட அது ஓர் கண்டமாயிற்று. அதை இரண்டாக்கி ஒன்றை சுவர்க்க லோகமாகவும் மற்றொன்றை பூமி முதலான பதினான்கு லோகங்களாகவும் சிருஷ்டித்தார். பூமியில் காலம், மனது, வாக்கு, காமம், குரோதம், ஆசை முதலானவற்றைத் தோற்றுவித்தார். பின்னர் மரீசி, அத்திரி, ஆங்கிரஸ், புலஸ்தியர், புலதர், கிருது, வசிஷ்டர் ஆகிய ஏழு புத்திரர்களை மானசீக மாகத் தோற்றுவித்தார். அவர்கள் ஸப்தப் பிரம்மாக்கள் என்று அழைக்கப்படுவர். அவர்களுக்குப் பின் சனத்குமாரரைத் தோற்றுவித்தார். அந்த ரிஷிகள் எழுவர் மூலமும் அனேக வம்சங்கள் உண்டாயின. நான்கு வேதங்களையும், மின்னல், இடி, மேகம், இந்திர தனுசு ஆகியவற்றையும் உண்டாக்கினார்.

பிரம்மனின் முகத்திலிருந்து தேவர்கள் உண்டானார்கள், மார்பிலிருந்து பிதுர் தேவர்கள் தோன்றினார்கள். மானிடர்கள் அவருடைய இடையிலிருந்து உண்டானார்கள். புட்டத்திலிருந்து அசுரர்கள் பிறந்தனர். இதர அவயவங்களிலிருந்து அனேகவித பூதங்கள் தோன்றின.

இவ்வாறு பிரம்ம தேவனால் படைக்கப்பட்ட சிருஷ்டிகள் மேலும் விருத்தியடையாது க்ஷீணிக்கத் தொடங்கின. அதனால் வருத்தமுற்ற பிரம்மதேவன் தமது தேகத்தையே இரண்டாக்கி ஆணும் பெண்ணுமாகச் செய்து மனுவைத் தோற்றுவித்தார். வைராஜன் என்னும் பெயர் பெற்ற அம் மனு உலக சிருஷ்டியை விருத்திபெறச் செய்தார்.
பிரம்ம தேவனால் உண்டாக்கப்பட்ட சதரூபையென்னும் பெண் சுவாயம்பு மனுவை மணந்து பிரியவிரதன், உத்தான பாதன் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றாள். சுவாயம்பு மனுவினால் தான் எழுபத்தோறு யுகங்கள் ஒரு மனுவின் காலம் என்று வரையறுக்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவருக்கும் அனேகப் பெண்கள் பிறந்தனர். காம்யை என்பவள் காத்தம பிரஜாபதிக்குப் பிறந்தாள். அவளுக்கு சாம்ராட், அஷி, விராட், பிரபு என்னும் பிள்ளைகள் பிறந்தனர். உத்தான பாதனுக்கும் சுநீதிக்கும் துருவன் தோன்றினான்.

துருவனுக்கு இருவர் பிறந்தனர். பெண்ணுக்குப் புஷ்டி என்றும், பிள்ளைக்கு தான்யன் என்றும் பெயர். புஷ்டியின் மூலம் ரிபுஞ்சயன், லிப்பிரன், விரகலன், விரகதேஜஸன் ஆகிய ஐவர் பிறந்தனர். புஷ்கரிணி என்பவளை ரிபு மணந்தான் அவனுக்கு சாக்ஷீஸன் என்னும் மனு பிறந்தான்.

வைராஜ மனு, அநத்கலை என்பவளை மணந்தான். அவர்களுக்குப் பத்து குமாரர்கள் உண்டானார்கள். அவர்கள் ருரு, பூரு, சதத்திவிம்னன், தமஸ்வி, கத்யஜித்து, கவி, அக்னிஷ் டோமன், அதிராத்திரன், அதிமன்யு, சுயேசசன் ஆகியோர் ஆவர்.

ருரு என்பவன் ஆக்நேயி என்பவளை மணந்து அங்கன், சுமனஸ், கியாதி, கிருதி, ஆங்கிரஸ், ஸ்ரஜி என்னும் ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அங்கன் ஸுநீதியை மணந்து வேனராஜனைப் பெற்றான். வேனராஜனுக்குச் சந்ததி கிடையாது. ஆகவே வேதியர் அவன் கையிலிருந்து பிருது சக்கரவர்த்தியைத் தோன்றச் செய்தனர். அவன் பெயரிலிலேயே பூமிக்குப் பிருதிவீ என்ற பெயர் ஏற்பட்டது. அவனுக்குச் சூதர், மாகதர் என்னும் இரு புத்திரர்கள் பிறந்தனர். பின்னும் சிறிது காலத்துக்கெல்லாம் ஹவிர்த்தானி, ஹவிர்த்தாமன் என்னும் இரு பிள்ளைகள் பிறந்தனர்.

ஹவிர்த்தாமனுக்கும் சிகண்டிக்கும் பிராசீனபர்ஹி என்பவன் பிறந்தான். பிராசீனபர்ஹி, சமுத்திர தனயை என்பவளை மணக்க அவர்களுக்கு பிரசேதன் முதலான பத்துக் குமாரர்கள் பிறந்தனர்.

அக்காலத்தில் உலகிலே பிரஜைகள் குறைந்து வருவது கண்டு தசப்பிரசேதர்களும் பெரும் கோபம் கொண்டனர். சந்திரன் அவர்கள் கோபத்தைத் தணித்து, தான் வளர்த்து வரும் பெண்ணை அளிக்க, அவர்கள் அவளை மணந்து அவளிடம் தக்ஷப் பிரஜாபதியை உண்டாக்கினார்கள். தக்ஷன் அனேகப் பெண்களை உண்டாக்கி அவர்கள் மூலம் பிரஜைகளை விருத்தி செய்தான்.

தக்ஷனுக்கு அறுபது பெண்கள் பிறந்தனர். அவர்களுள் பத்துப்பேரைத் தர்ம பிரஜாபதிக்கும், பதிமூன்று பேரைக் காசிப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும், நான்கு பெண்களை அரிஷ்ட நேமிக்கும், பிரம்மபுத்திரர் ஆங்கிரஸ், கிருசாசுவர் ஆகிய மூவருக்கு இரண்டு இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தான்.

தர்மப்பிரஜாபதி மணந்த பத்துப் பெண்களில் விசுவை, என்பவள் விசுவே தேவர்களையும், ஸாத்யா என்பவள் ஸாத்யர் களையும், மருத்துவதி மருத்துகளையும், வசு, வசுக்களையும், பானு, பானுக்களையும், முகூர்த்தம் முகூர்த்தங்களையும், லம்பை என்பவள் கோஷத்தையும், ஜாமி என்பவள் நாகவீதி என்னும் பெண்ணையும் அருந்ததி என்பவள் பூப் பிரதேசங் களையும் சங்கல்பா சங்கற்பத்தையும் சத்தியத்தையும் பெற்றனர்.

வசுக்கள் எட்டு பேர். அயன், துருவன், சோமன், தரன், அநிலன், அநலன், பிரத்தியூஷன், பிரபாசன் ஆகியோரே அவர்கள். அயனுக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் வேதண்டன், சிரமன், சாந்தன், முகி என்பவர். துருவனுக்குக் காலன், வேதப் பிரபாலன் என இருவர் பிறந்தனர். சோமனுக்கு வர்ச்சான் என்ற ஒரே பிள்ளைதான்.

தரன் மனோஹரை என்பவளை மணந்தான். அவளிடம் திரவிணன், ஹூதஹவ்ய வரஹன், சிசிரன், பிராவான், ரமஸன் ஆகியோர் பிறந்தனர். அநிலனுக்கும் சிவை என்பவளுக்கும் புரோஜவன் பிறந்தான். அநலன் கார்த்திகைப் பெண்கள் அறுவரை மணந்தான். அக்கினி புத்திரன், குமாரன் சரஸ்தம்பன்சாகன், விசாகன், நைகமேயன் என்னும் ஆறு பிள்ளைகள் அவர்களுக்குப் பிறந்தனர். பிரத்தியூஷனுக்குத் தேவலன் என்னும் ரிஷி பிறந்தார். தேவலனுக்கு இரு பிள்ளைகள்.

பிரகஸ்பதியின் தங்கையை பிரபாசன் மணந்தான். அவர்களுக்குத் துவஷ்டா என்பவன் பிறந்தான். துவஷ்டாவுக்கு விசுவகர்மன் பிறந்தான். காசியபரின் மனைவியர் பதின்மூன்று பேர். அவர்கள் அதிதி, திதி, தநு, அரிஷ்டை, சுரசை, இலை, சுரபி, விந்தை, தாமரை, குரோதை, சமை, கத்துரு, சனி ஆகியோர் ஆவர்.

அதிதி என்பவளிடத்தில், சாக்ஷீச மன்வந்திரத்தில், விஷ்ணு சக்ரன், அரியமான், தரதா, த்வஷ்டா, பூஷா, விஸ்வான், சவிதா, மித்ரா வருணர், அம்சோபகன், அதிதேஜன் என்பவர்கள் பிறந்தனர். இவர்களே ரைவதமன்வந்திரத்தில் துவாதச ஆதித்தர்களாக விளங்கினார்கள். திதி என்பவளிடம் ஹிரண்யகசிபு, ஹிரண்யாஷன் என்ற இரு புதல்வர்களும், சிம்ஹிகை என்னும் கன்னிகையும் தோன்றினார்கள். அவர்களில் ஹிரண்ய கசிபுவுக்கு அனுக்கிலாதன், ஹிலாதன்பிரகலாதன், ஸம்கிலாதன் என்று நான்கு பிள்ளைகள் பிறந்தனர். ஹிலாதனின் பிள்ளை ஸ்ரீவதன். அவனுக்கு மூன்று புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்கள் ஆயுஷ்மான், சிபி, தாலன் எனப்படுவர். பிரகலாதனுக்கு விரேசனன் என்னும் மகன் பிறந்தான். அவனுக்குப் பலி பிறந்தான். பலிக்கு வாணாசுரன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தனர்.

ஹிரண்யாக்ஷனுக்கு ஐந்து புத்திரர்கள் பிறந்தனர். குருகரன், சகுனி, பூதசந்தாபனன், மகாநாதன், காலநாபன் எனப்படும் ஐவரே அவர்கள். காசியபரின் மற்றொரு மனைவி தநு, நூறு புதல்வர்களைப்  பெற்றாள். அவர்களுள் முக்கியமானவர்கள் திவிமூர்த்தன், சகுரன், பலிசிவன், பிரபு, அயோமுகன், சம்பரன், கபிலன், வாமனன், விகுவாநரன், புலோமன், வித்திராவணன், மகாசரன், ஸ்வர்ப்பானா, விருஷபர்வன், விப்பிரஜித்து ஆகியோர் ஆவர். அவர்களுள் ஸ்வர்ப்பானுக்கு பிரபாவை என்ற பெண் பிறந்தாள், புலோமனுக்கு பெண்தான் பிறந்தாள். அவள் பெயர் சசி என்பதாகும். விருஷபர்வாவின் புத்திரி சர்மிஷ்டை என்பவள்.

விப்ரஜித்து, சிம்ஹிகை என்பவளை மணந்தான். அவர்களுக்கு சைமிகேயர்கள் எனப்படும் பதின்மூன்று புத்திரர்கள் பிறந்தார்கள். சல்லியன், சுபலி, பலன், மகாபலன், வாதாபி, நமுச்சி, வில்வன், சுவசுருபன், அரசன், நரசன் காலநாபன், சரமாணன், சரகற்பன் ஆகியோர் சைமிகேயர்கள் எனப்படுபவர்.

தாமரை, காசியபரிடம் பக்ஷி ஜாதிகளைப் பெற்றாள். வினதைக்குக் கருடனும் அருணனும் பிறந்தனர். கத்துருவுக்கு நாகர்களான சேஷன், வாசுகி, தக்ஷகன், ஜராவதன், மகாபத்மன், கம்பளன், அசுவரதன், ஏலாபுத்திரன், பத்மன், கார்க்கோடகன், தனஞ்செயன், மகாநீலன், மகாவர்ணன், திருதராஷ்டிரன், பலாக்கன், குகன், புஷ்பதந்தன், துர்முகன், சுமுகன், பகுசன், கரரோமன், வாணி முதலானோர் பிறந்தனர். சுரபை என்பவளுக்கு முயல்களும் எருமை வகைகளும் பிறந்தன. இலை என்பவளின் மூலம் புல் பூண்டு ஔஷதிகள் விருத்தியாயின. சுரசைக்கு யக்ஷர், ராக்ஷதர் முதலானோர் தோன்றினர். சனி என்பவள் அப்சரசுகளையும், அரிஷ்டை என்பவள் இதர ஜந்துக்களையும் பெற்றனர்.
சந்திரன் மூலம் அனேக புத்திரர்கள் பிறந்தனர். அரிஷ்ட நேமி தன் மனைவியர் நால்வரிடமும் பதினாறு பிள்ளைகளைப் பெற்றாள். கிருகாசுவன் அஸ்திர சாஸ்திரங்களைத் தோற்று வித்தான். பிராமணர், நக்ஷத்திரம், நவக்கிரகம், ஔஷதிகள், யக்ஞம், தவம் முதலியவற்றிற்குச் சந்திரன் அதிபதியானான். ஜலத்திற்கு அதிபதி வருணன். குபேரன் அரசர்களுக்கு அதிபதி. ஆதித்தர்களுக்கு விஷ்ணு, அஷ்டவசுக்களுக்கு அக்கினி, பிரஜாபதிகளுக்குத் தக்ஷன், மருத்துக்களுக்கு இந்திரன், அசுரர்களுக்குப் பிரகலாதன், பிதுர்களுக்கு யமன், விரதங்கள், மாதாக்கள், மந்திரம், யக்ஷர், ஆகியோருக்குப் பரமசிவன், பர்வதங்களுக்கு ஹிமவான், நதிகளுக்குச் சமுத்திர ராஜன், மிருகங்களுக்குச் சார்த்துலம், பசுக்களுக்கு ரிஷபம், கொடி செடிகளுக்கு விருக்ஷங்கள் ஆகியோர் அதிபதிகளானார்கள்.

பிருது சக்கரவர்த்தி ஆட்சி புரிந்து வருகையில், ஒருமுறை பிரம்மதேவன் ஓர் யாகம் செய்தார். பூர்ணாஹுதி சமயத்தில் யாகக் குண்டத்திலிருந்து சூதர், மாகதர் என்னும் இருவர்  தோன்றினர். அங்கிருந்த மகரிஷிகள் அவ்விருவரையும் பார்த்து, பிருது சக்கரவர்த்தியைத் துதியுங்கள்" என்றனர். அவர்களோ, மகரிஷிகளே, நாங்கள் இருவரும் இப்போது தான் உண்டானோம். அப்படியிருக்கச் சக்கரவர்த்தியின் பிரபாவத்தை எவ்விதம் அறிந்திருக்க முடியும்?" என்று கேட்டனர்

அப்படியானால் நடக்கப் போவதை எடுத்துச் சொல்லித் துதியுங்கள்" என்றனர் முனிவர்கள்.

இருவரும் அவ்வாறே துதிக்க, அதைக்கேட்ட பிருது பெரிதும் மகிழ்வுற்றான். அநுப தேசத்தை சூதனுக்கும் மகத தேசத்தை மாகதனுக்கு அளித்து அவர்களை அரசராக முடி சூட்டினான்.

அக்காலத்தில் பூமி சீர்திருத்தப்படாதிருந்தது. எங்கும் பேதமின்றி இருந்தது. கிராம, நகர, அக்ரகாரம் முதலான பாகுபாடு ஏதும் இல்லாமலிருந்தது. ஆகவே சூதர், மாகதர் இருவரும் பிருது சக்கரவர்த்தியை அடைந்து தங்களுக்கு ஜீவனோபாயத்துக்கு வழி வகுக்க வேண்டுமென்று கேட்டனர். பிருது வில்லையும் அம்பையும் எடுத்து பூமியைப் பிளக்க எண்ணம் கொண்டான். அதை உணர்ந்த பூமாதேவி பசுவாக உருவெடுத்து ஓடத்தொடங்கினாள். அரசனோ அவளை விடாது துரத்தினான். பூமாதேவி தேவர்களைச் சரண் அடைந்தாள். அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை என்பதைக் கண்டதும் கடைசியில் பிருது சக்கரவர்த்தியையே சரண் அடைந்தாள்

அரசே! என்னை ஹிம்ஸிக்காதே. நான் பெண் என்பதை மறந்து விட்டாயா?" என்று வேண்டினாள். பிறருடைய நன்மைக்காகப் பெண்ணாக இருந்தாலும் உன்னை ஹிம்சிப்பது தர்மமே" என்றான் அரசன்.

அரசே! என்னை ஒன்றும் செய்யாதே. உயரமான சிகரங்களும் கிடுகிடு பாதாளங்களும் நிறைந்த இப்பூவுலகைச் சீர்திருத்து. நான் என் பாலை வர்ஷிக்கிறேன். அதனால் பயிர் முதலான வளரும் மக்களின் ஜீவனத்துக்காக ஆகார வகைகள் உண்டாகும்" என்று பிரார்த்தித்தாள்.

அவ்வாறே பிருது தன் வில்லின் முனையால் சிகரங்களையும் மலைகளையும் தகர்த்துப் பள்ளங்களை நிரப்பி பூமியைச் சீர்படுத்தினான். அதன் காரணமாகவே பூவுலகத்துக்கு அவன் நினைவாகப் பிருதிவீ என்ற பெயர் உண்டாயிற்று.

அரசனின் பிரார்த்தனைக்கிணங்க சுவாயம்பு மனு கன்றாக வந்து பசுவின் பாலை பருகினான். பசுவின் மடியிலிருந்து பால் பெருகி பூவுலகம் முழுமையும் நனைத்தது. அதிலிருந்து பயிர்கள் வளர்ந்தன. காய் கனிகளோடு விருக்ஷங்கள் தோன்றின.

முனிவர்கள் சந்திரனைக் கன்றாகக் கொண்டு, கோமாதாவிடமிருந்து வேதம், தவம், விரதம் முதலானவற்றைப் பெற்றார்கள். இந்திரனைக் கொண்டு தேவர்கள் தங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைப் பெற்றார்கள். சூரியன் தங்கப் பாத்திரத்தில் பாலைக் கறந்து தன் தேஜஸை விருத்தி செய்து கொண்டான். பிதுர்தேவர்கள் மயனைக் கன்றாக்கி அந்தகன் மூலம் வெள்ளிப் பாத்திரத்தில் சுதாவென்னும் பாலைக் கறந்தனர். நாகர்கள் ஐராவதனால் தக்ஷகனைக் கன்றாக்கி  சுரை பாத்திரத்தில் விஷத்தைக் கறந்து கொண்டார்கள். அசுரர்கள் விரோசனனைக் கன்றாக்கி, மதுவென்னும் அசுரனைக் கொண்டு இரும்புப் பாத்திரத்தில் மாயையாகிய பாலைக் கறந்தனர். யக்ஷர்கள் குபேரனைக் கன்றாக்கி ஆம பாத்திரத்தில் மறைதலாகிற பாலைக் கறந்தனர். இராக்ஷதர்கள் சுமாலியைக் கன்றாக்கி இரத்தமயமான பாலைக் கறந்தனர். அப்சரசுகளும், கந்தர்வர்களும் சித்ராதனைக் கன்றாக்கி  வசுர்ஜியைக் கொண்டு தாமரை இலையில் தங்களுக்கு வேண்டிய பாலைக் கறந்தனர். பர்வதங்கள் ஹிமவானைக் கன்றாக்கி மேருவைக் கொண்டு இரத்தினங்களையும் ஔஷதிகளையும் கறந்து கொண்டனர்.

இந்தப் பிருது சக்கரவர்த்தியின் பிரபாவம் சிறப்பாக வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய சிறப்புடைய பிருது சக்கரவர்த்தியின் புகழை, க்ஷத்திரியன் போர்முனையில் ஸ்மரித்தால் போரில் வெல்வான், வைசியன் ஸ்மரித்தால் தன லாபம் அடைவான், சூத்திரன் ஸ்மரித்தால் புண்ணியம் அடைவான். கீர்த்தியை அடைய விரும்புவோர் யாராயினும் பௌர்ணமியில் பிருது சக்கரவர்த்தியைத் தியானித்து பலன் அடையலாம்" என்ற சூதர், நைமிசாரணிய முனிவர்களுக்கு வைவசுதமனுவைப் பற்றி கூறத் தொடங்கினார்.

வைவசுதமனுக்கு ஒன்பது புத்திரர் பிறந்தனர். அவர்கள் இஷ்வாகு, சிபி, அம்பரீஷன், திருஷ்ரை, சையாதி, நரிஷியந்தன், நாபாகன், கருஷன், பிரியவிரதன் ஆகியோர் ஆவர். மேலும் புத்திரர்களை அடைய விரும்பி மனு, யாகம் செய்தான். யாகத்தின் முடிவில் இளை என்னும் பெண் தோன்றினாள். தன்னை மணந்து புத்திரர்களை உண்டாக்கும்படி அவளை மனு கேட்டான். அவளோ தான் மித்திரா வருணருக்காக உண்டானவள் என்பதைத் தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டு மித்திரா வருணரை அடைந்தாள். அவர்களிடம், நான் உங்களுக்காகவே மனுவின் யாகத்தில் உண்டாக்கப்பட்டேன். ஆகையால், என்னை ஆதரிக்க வேண்டும்" என்றாள். அதற்கு மித்திரா வருணர்கள், தர்மம் தெரிந்தவளே! உன் ஒழுக்கத்தையும், நேர்மையையும் கண்டு வியக்கிறோம். நீ மனு சக்கரவர்த்தியின் குலத்தை விருத்தி செய்யக் கூடிய சுத்தியும்னன் என்னும் பெயருடைய புத்திரனாவாய்" என்று அருளினார்கள்.

அவர்கள் வார்த்தையைக் கேட்டு இளை, வரும் வழியில் சந்திரனின் புதல்வனான புதன் அவளைக் கண்டு மோகித்து அவளோடு கூட, புரூவரன் என்னும் புதல்வன் அவர்களுக்குத் தோன்றினான். அதன் பின்னர் இளை ஆண் வடிவம் பெற்று சுத்தியும்னன் என்ற பெயரோடு மனுவை அடைந்தாள். பின்னர் அவள் தன் ஆண் பெண் இரு வடிவங்களின் மூலம் உத்கலன், கயன், விருதாசுவன் ஆகிய மூன்று புத்திரர்களை உண்டாக்கினாள். உத்கலன் தென் பகுதியையும், விருதாசுவன் மேற்குப் பகுதியையும் அடைந்தனர். கயனுக்கு கயநாடு கொடுக்கப் பட்டது.

வைவசுதமனு தன் நாட்டைப் பத்துப் பிரிவாக்கித் தன் புத்திரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான். மூத்தவனான இஷ்வாகு மத்திய நாட்டை அடைந்தான். அங்கே பிரதிஷ்டானம் என்னும் ஊரை உண்டாக்கி அதிலிருந்து ஆட்சி புரிந்து வந்தான். சுத்தியும்னன் பிரதிஷ்டம் என்னும் நகரத்தைத் தோற்றுவித்து அதில் புரூவரனை அரசனாக்கினான்.

புரூவரனுக்கு ஷகை என்னும் பெண்ணை மணம் செய்து வைத்தான் சுத்தியும்னன். அம்பரீஷனுக்கு மாக்கிலீகன் என்னும் பிள்ளை பிறந்தான். சையாதிக்கு அநர்த்தன் முதலானோரும், சுகன்யா  என்னும் பெண்ணும் பிறந்தனர்.

சுகன்யா, சியவன மகரிஷியை மணந்தாள். அநர்த்தனுக்கு ரேவன் என்னும் புதல்வன் பிறந்தான். அநர்த்த ராஜ்ஜியத்தில் உள்ள குசஸ்தலி என்னும் பட்டணத்துக்கு ரேவன் அரசனாக்கப் பட்டான். அவனுக்கு ரைவதன், ககுத்மி என்னும் இரு பிள்ளைகள் பிறந்தனர். ரைவதனுக்கு ரேவதி என்றொரு மகள். அவளைப் பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான் ரைவதன்.

ககுத்மி இறவாப்பேற்றை அடையக் கருதித் தவம் செய்யக் காட்டுக்குச் சென்றிருக்கையில் அரக்கர்கள் அவன் நாட்டைக் கைக்கொண்டனர். அவன் புதல்வர்கள் நூறுபேரும் பல இடங்களிலும் பரவி வாழ்ந்தனர். நாபாகனுக்குக் காரூடன் என்றொரு மகன் பிறந்தான்.

இஷ்வாகுவுக்கு நூறு புதல்வர்கள். அவர்களில் மூத்தவன் விருஷி என்பவன். ஒரு சமயம் சிரார்த்த தினத்தன்று சமைக்கப் பட்ட உணவை விருஷி முன்னதாகச் சாப்பிட்டு விட்டான். அதனால் மனம் வருந்திய இஷ்வாகு இது குறித்து ஆசாரியரைக் கேட்க, அவர் அரசுரிமையை விட்டு நீங்கும்படி தெரிவித்தார். ஆகவே, இஷ்வாகுவுக்குப் பிறகு அயோத்தியில் ஆயோதனன் என்பவன் அரசனானான். ஆயோதனன் பிள்ளை சகுத்ஸன்; அவன் மகன் அரிநாபன். அவன் மகன் பிருது, பிருதுவின் பிள்ளை விஷ்டராதிவன். அவன் மகன் இந்திரன்; இந்திரனின் புதல்வன் யுவநாகவன்; அவன் பிள்ளை சிராவன் ஆகியோர் அடுத்தடுத்து அரசாண்டனர். சிராவன் தன் பெயரில் சிராவஸ்தி என்னும் பட்டணத்தை உண்டாக்கினான்.

சிராவனுக்குப் பிறகு அவன் மகன் பிரகதாசுவன் பட்டம் ஏறினான். அவனுக்குப் பிறகு அவன் பிள்ளை குவலாசுவன். குவலாசுவனுக்கு நூறு பிள்ளைகள். அவர்களிடம் நாட்டை ஒப்புவித்துவிட்டுக் குவலாசுவன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றான். அப்போது உத்தங்க முனிவர் வந்து எதிர்ப்பட்டு குவலாசுவனிடம், அரசே, மது என்னும் அசுரனின் மைந்தனான துந்துபி என்பவன் பூமியின் கீழ் இருந்துகொண்டு தேவர்களாலும் வெல்ல முடியாத வல்லமையைப் பெறத் தவம் செய்கிறான். வருஷத்துக்கு ஒருமுறை அவன் விடும் சுவாசத்தால் பூமி ஏழு நாட்கள் வரை நடுங்குகிறது. அவனைக் கொல்ல நான் தவம் இயற்றியபோது விஷ்ணு உன்னைக் கொண்டு அசுரனைக் கொல்லுமாறு தெரிவித்தார் " என்றார்.

முனிசிரேஷ்ட, நான் ஆயுதங்களை இனித் தொடுவதில்லை எனச் சபதம் எடுத்துள்ளேன். என் புதல்வர்களை அனுப்புகிறேன்" என்று சொல்லி முனிவரோடு புதல்வர்களைஅனுப்பி வைத்தான் குவலாசுவன். ஆனால், புதல்வர்களால் அசுரனை மாய்ப்பது அரிது" என்று முனிவர் தெரிவிக்கவே தானும் உடன் சென்றார்.

அசுரன் அவர்களைப் பார்த்ததும் சுவாசம் விட, அதன் வேகத்தில் முனிவர் தவிர அனைவரும் இறந்தனர். முனிவர் விஷ்ணுவைப் பிரார்த்தித்தார். விஷ்ணு தம் அம்சத்தைக் குவலாசுவன் உடலில் செலுத்த, குவலாசுவன் உயிர் பெற்று எழுந்து துந்துபியுடன் போரிட்டு அவனைக் கொன்று துந்துமாரன் என்ற பெயரை அடைந்தான்.

துந்துபியால் கொல்லப்பட்டவர்களில் குவலாசுவனின் புத்திரர்கள் மூவர் மட்டும் உயிர் தப்பினர். அவர்கள் திருடாசுவன், ஹம்சன்கபிலன் என்போர் ஆவர்.

திருடாசுவனுக்கு, ஹரியசுவன் பிறந்தான். ஹரியசுவனுக்கு நிகும்பனும், நிகும்பனுக்கு அங்கதாசுவனும் பிறந்தனர். அங்கதாசுவனுக்கு அக்ஷாசுவன், கிருதாசுவன் என்ற புத்திரர்களும், திருஷ்தவதி என்னும் பெண்ணும் பிறந்தார்கள். திருஷ்தவதிக்கு பிறந்தவன்தான் பிரசேனஜித்.

பிரசேனஜித், கௌரி என்னும் பெண்ணை மணந்து, யுவனாசுவன் என்னும் பிள்ளையை பெற்றான். யுவனாசுவனுக்கு மாந்தாதா பிறந்தான். மாந்தாதா, சசிபிந்துவின் மகளான சைத்திராதை என்பவளை மணந்து அவள்மூலம் புருகுற்சன், முசுகுந்தன் என்னும் இரு புதல்வர்களை அடைந்தான். புருகுற்சனுக்கு நர்மதை என்னும் பெண்ணிடத்தில் திரிசதசியு என்பவன் பிறந்தான். அவன் மகன் திரிதன்வா. அவன் மகன் திரையாருணி. அவனுக்குச் சத்தியவதனன் என்பவன் பிறந்தான்.

சத்தியவதனன் துஷ்திருந்தியங்களில் ஈடுபடவே, அவனை நாட்டைவிட்டுக் காட்டிற்குத் துரத்தினான் திரையாருணி. அப்போது துவாதச வருஷ க்ஷாமம் உண்டாயிற்று. அதாவது பன்னிரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து பஞ்சம் உண்டாயிற்று. அதனால் மக்கள் பெரும் கஷ்டப்பட்டனர். அப்போது அங்கே தவம் செய்து கொண்டிருந்த விசுவாமித்திரர், தன் புதல்வர்களை விட்டுவிட்டுச் சமுத்திர தீரத்தை அடைந்து அங்கே தவம் செய்யத் தொடங்கினார். முனிபத்தினியோ தன் புதல்வர்களை வைத்து ரக்ஷிக்க முடியாமல், அவர்களில் ஒருவனைக் கழுத்தில் கட்டிக் கொண்டு போய் சத்தியவதனுக்கு விற்றாள். களமாகிய கழுத்தில் கட்டிக் கொண்டு வந்ததால், காலவன் எனப்பெயர் பெற்ற அப்புதல்வனை சத்தியவதனன் காப்பாற்றி வந்தான். அத்துடன் காட்டிலே மிருகங்களை வேட்டையாடி முனி பத்தினிக்கும் அவளுடைய மற்ற புதல்வர்களுக்கும் கூட உதவி வந்தான்.

திரையாருணி, வசிஷ்டரை அடைந்து தன் மகன் சத்திய வதனின் நடத்தையைப்பற்றிக் கூறி, தனக்குப்பின் அரசாட்சியை ஏற்கச் சந்ததி இல்லையே என வருந்தினான். வசிஷ்டர் அவனைத் தேற்றி, இன்னும் சிறிதுகாலம் அவன் வனத்திலிருந்தால் நல்லவனாக மாறி விடுவான் என்றும் அதன் பின்னர் அவனிடமே அரசாட்சியினை ஒப்புவிக்க லாமெனத் தெரிவித்தார்.

பின்னர், வசிஷ்டர் சத்தியவதனனிடம் தான் பன்னிரண்டு வருஷம் தீக்ஷையிலிருக்கப் போவதாகவும், அதுவரை தனக்குப் பணிவிடை செய்துவருமாறும் கேட்க, அவனும் அதற்குச் சம்மதித்து அவருக்குத் தொண்டு செய்து வந்தான். அப்போது ஒரு சமயம், விசுவாமித்திரரின் குடும்பம் உணவின்றித் தவித்தபோது, சத்தியவதனன் வசிஷ்டர் ஆசிரமத்திலிருந்த காமதேனுவின் வம்சத்தில் வந்த ஓர் பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை அவர்களுக்குக்  கொடுத்ததோடு, தானும் புசித்து விட்டான். இதை அறிந்த வசிஷ்டர் பெரும் கோபம் அடைந்தார்.

அடே, துஷ்டா, உன் தீயச் செய்கைகளுக்காக இப்போதே உன்னைக் கொன்றுவிடுவேன். ஆனால் உன் தகப்பனுக்கு நான் வாக்குக் கொடுத்தது தடையாயிருக்கிறது. முதலில் நீ அன்னிய ஸ்திரீகளைக் கெடுத்துத் துஷ்கிருத்தியம் செய்து அதனால் காட்டுக்கு விரட்டப்பட்டாய். இங்கும் நீ ஜீவஹிம்சை செய்து வந்துள்ளாய். இப்போது பசுவைக் கொன்றுவிட்டாய். இம்மூன்று குற்றங்களுக்கும் உன் சிரசில் மூன்று சங்கினை அடிக்க வேண்டும். இப்போதே அவை மூன்றையும் சேர்த்து அடித்து விடுகிறேன். இனி உன் பெயர் திரிசங்கு என அழைக்கப்படட்டும்" என்று சொல்லி அவனை திரிசங்கு எனக் கூப்பிட்டார். அது முதல் அவனுக்குத் திரிசங்கு எனப்பெயர் உண்டாயிற்று. அங்கிருந்து விலகி அவன் விசுவாமித்தரரின் ஆசிரமத்தில் இருந்து வந்தான்.

தவம் முடிந்து ஆசிரமம் திரும்பிய விசுவாமித்திரர், தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தமைக்காகத் திரிசங்குவிடம் மிகுந்த பிரியம் கொண்டார். அவன் அவரைப் பணிந்து நடந்த  விருத்தாந்தங்களைச் சொல்லி, சுவாமி, வசிஷ்டர் எனக்கு ராஜ்ஜியமின்றிச் செய்துவிட்டார். என் நாட்டை நான் அடையக் கிருபை செய்யவேண்டும்" என்று வேண்டினான்.

 விசுவாமித்திரர் தமது தபோபலத்தால் அவனுடைய பாபங்களை ஒழித்து, நல்லவனாக்கி நாட்டின் மன்னனாகப் பட்டம் கட்டச் செய்தார். கேகய வமிசத்தில் பிறந்த சத்தியரதை என்பவளை மணந்த திரிசங்கு, அரிச்சந்திரன் என்னும் மகனைப் பெற்றான். மகனுக்கு வயது வந்ததும் அவனை நாட்டின் அரசனாக முடிசூட்டிவிட்டுக் காட்டுக்கு வந்த திரிசங்கு, குருவான வசிஷ்டரைக் கண்டு மானிட தேகத்தோடு சுவர்க்கம் செல்ல அருளவேண்டுமென்று கேட்டான். அது சாத்தியமானதல்ல என்பதைத் தெரிவித்தார் வசிஷ்டர். அவருடைய குமாரர்களை அடைந்து அவர்களிடம் கேட்டான் திரிசங்கு. அவர்களும் முடியாதென மறுத்துவிட்டனர். அதனால் கோபம் கொண்ட அவன் தன் விருப்பத்தை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களையே தன் குருவாக வரிக்கப் போவதாகத் தெரிவித்தான். வசிஷ்டர் கடும் கோபம் கொண்டு அவனை நீசனாகப் போகுமாறு சபித்தார்.

திரிசங்கு நேராக விசுவாமித்திரரிடம் வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்து, வசிஷ்டர் முதலானோர் முடியாதென நிராகரித்ததையும் கூறினான். விசுவாமித்திரர் அவன் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாகக் கூறி யாகம் செய்வித்தார். அதன் பயனால் திரிசங்கு மானிட ரூபத்துடனேயே சுவர்க்கம் சென்றான். தேவர்கள் அவனை உள்ளே விடாது தடுத்துத் திரும்பவும் பூமிக்குச் செல்லுமாறு தள்ளினர். தலைகீழாக வந்து கொண்டிருந்த திரிசங்கு விசுவாமித்திரரை நோக்கிக்  கதறினான். அவரும் தமது யோக பலத்தால் அவனை நடு வழியிலேயே நிற்கச் செய்து அவனுக்காக ஒரு சுவர்க்கத்தையே உண்டாக்கிக் கொடுத்தார். அதுவே திரிசங்கு சுவர்க்கமாயிற்று.

மூவுலகங்களிலும் சத்தியவான் எனப் பெயரெடுத்த அரிச்சந்திரனுக்கு லோகிதாசன் என்னும் மகன் பிறந்தான். அவனுக்கு விருகனும், விருகனுக்கு பாகுவும் பிறந்தனர்.
பாகு ஆட்சி புரிகையில் எதிரிகள் அவனை வென்று துரத்தி விட்டு நாட்டைக் கைக்கொண்டனர். பாகு கானகம் சென்று ஔர்வர் என்னும் முனிவர் ஆசிரமத்தில் தங்கி தனக்கொரு புதல்வன் வேண்டுமென்று தவம் செய்தான். முனிவர் அவனிடம் பழம் ஒன்றைக் கொடுத்து அவன் மனைவியிடம் கொடுக்குமாறு கூறினார். அரசனின் மற்றொரு மனைவி யாருக்கும் தெரியாமல் அந்தப் பழத்தில் நஞ்சைக் கலந்து விட்டாள். அதை அறியாது மூத்த மனைவி பழத்தைச் சாப்பிட்டுவிட்டாள். அவள் வயிற்றில் விஷத்தோடு கூடிய கரு வளர்ந்து வந்தது.

கொஞ்ச காலத்தில் பாகு இறந்தான். அவனோடு அவன் மனைவியர் இருவரும் உடன்கட்டையேற விரும்பினர். கர்ப்பிணியான மனைவி உடன்கட்டை ஏறக் கூடாதென முனிவர் தடுத்து நிறுத்தியதோடு அவள் உதரத்தில் வளரும் கருவுக்கு விஷத்தால் ஏற்படக்கூடிய ஆபத்தை மந்திரத்தால் தடுத்தார். விஷத்தோடு பிறந்த அந்தக் குழந்தைக்குக் சகரன் எனப்பெயர் உண்டாயிற்று.

சகரன் முனிவரிடம் வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து, எதிரிகளுடன் போரிட்டு வென்று தன் தந்தை இழந்த ராஜ்ஜியத்தை மீட்டான். முனிவர் அனுக்கிரகத்தால் அவன் பெற்ற ஆக்னேயாஸ்திரத்தைக் கொண்டு அனைவரையும் வென்று ஏக சக்கராதிபதியாய் விளங்கினான். பின்னர் சந்ததி விருத்திக்காக அவன் வனம் சென்று தவம் செய்து மூத்த மனைவியிடம் அசமஞ்சன் என்னும் பிள்ளையையும், இளையவளிடம் அறுபதினாயிரம் பிள்ளைகளையும் பெற்றான்.

அசமஞ்சன் நாட்டிலுள்ள குழந்தைகளை நதியில் தள்ளிக் கொலை செய்து வந்தான். அதனால் வேதனையுற்ற சகரன் வசிஷ்டரைக் கண்டு சொல்ல, அவரும் அவனைக் காட்டிற்கு அனுப்பி விடுமாறு தெரிவித்தார். அசமஞ்சன் காட்டிற்கு அனுப்பப்படும்போது அவன் மனைவி கர்ப்பவதியாக இருந்தாள். அவளுக்குப் பிறந்த பிள்ளைக்கு அம்சுமான் எனப் பெயரிடப்பட்டது.

 சகரன் முன்போலவே ஆட்சி புரிந்து வருகையில், அசுவமேத யாகம் செய்ய விரும்பினான். யாகக் குதிரையை அவிழ்த்து விட்டுப் பூவுலகம் முழுமையையும் சுற்றி வரச் செய்தான். சகரனிடம் பொறாமை கொண்ட இந்திரன், யாகக் குதிரையைக் கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரின் ஆசிரமத்தில் கொண்டு போய்க் கட்டிவிட்டான். குதிரைக்கு காவலாக வந்த சகரன் புத்திரர்கள் பூமண்டல முழுமையும் குதிரையைத் தேடிக் காணாது, பாதாளலோகம் செல்கையில் அங்கே கபிலர் ஆசிரமத்தில் குதிரை இருப்பதைக் கண்டனர். முனிவரே  குதிரையை அபகரித்தவர் என்று எண்ணி அவரைப் பலவாறு  தூஷித்தனர். முனிவர் கடுங்கோபம் கொண்டு ஹூங்காரம் செய்ய, அந்த க்ஷணமே அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விட்டனர்.

குதிரையோடு சென்ற புத்திரர்கள் வெகுகாலமாகத் திரும்பாதது கண்ட சகரன், தன் பேரனான அம்சுமானை அழைத்து பௌத்திரா, நான் யாகதீக்ஷையுடன் இருப்பதால் செல்ல முடியாது. ஆகவே, நீ சென்று மற்றவர்களின் கதி என்ன ஆயிற்றென்பதைக் கண்டு வா" என்றான்.
அம்சுமான் தன் சிறிய தகப்பன்மார்கள் யாகக் குதிரையைத் தேடிக் கண்டு பிடிப்பதற்காகச் சென்ற வழியை விசாரித்தறிந்து அதைத் தொடர்ந்து சென்றான். முடிவாக கபில முனிவர் தவம் செய்த இடத்தை அடைந்து, யாகக் குதிரையைக் கண்டுபிடித்தான். ஆனால் முனிவர் அங்கில்லை. ஒரு பெரிய சாம்பல் மேடுதான் காணப்பட்டது.

குதிரையைக் கண்டு பிடித்த மகிழ்ச்சியும், சகர புத்திரர்களைக் காணாமல் சாம்பல் மேட்டைக் கண்டதில் திகைப்பும் அடைந்து நின்றான் அவன். அந்த நேரம் சகரனின் இரண்டாவது மனைவியான சுமதியின் சகோதரனான கருட பகவான் அங்கே வந்து கபிலரின் சாபத்தால் சகர குமாரர்கள் பஸ்பமானதைத் தெரிவித்து அவர்கள் நற்கதி அடைய வேண்டுமானால், ’தேவலோக கங்கையை வரவழைத்து, அதில் அந்தச் சாம்பலைக் கரைக்க வேண்டும் என்றும் கூறினான்.

அரண்மனை திரும்பிய அம்சுமான் தன் பாட்டனிடம் குதிரையை ஒப்புவித்துப் பாதாள லோகத்தில் நிகழ்ந்ததைத் தெரிவித்தான். சகரன் யாகத்தை முடித்து, ராஜ்ஜியத்தை அம்சுமானுக்கே அளித்து அவனுக்கு முடி சூட்டினான். அவன் காலத்திலும் ஆகாச கங்கையை வரவழைக்க முடியவில்லை. அம்சுமான் காலத்திற்கு பிறகு அரியனை ஏற்ற திலீபன், பகீரதன் போன்றவர்களில் பகீரதன், கோகர்ண க்ஷேத்திரத்தில் வெகு காலம் தவம் இருந்து கங்கையைத் தருவித்து, மூதாதையரின் சாம்பலை அதில் கரைத்து அவர்களை நற்கதியை அடையுமாறு செய்தான்.


பகீரதனுக்குப் பிறகு, ரகு வம்சம் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த, இராமாயணத்தின் காதாநாயகனான ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவரான ரகு மட்டுமல்லாமல், பெரும் பராக்கிரமசாலிகளான சுருதசயனன், நாபாகன், சிந்துத்வீபன், ருதுபர்ணன், கல்மாஷபாதன், மஹாபக்த சிரோ மணியான அம்பரீஷன், அஜன் போன்றோரும், ஸ்ரீ ராமனுக்குப் பிறகு குசன், அதிதி, நிஷதன், நளன், நபசு, புண்டரீகன், வீரசேனன் போன்ற பலருமாக, வெரு நேர்த்தியுடனும், கீர்த்தியுடனும் இப்பூமண்டலத்தை ஆண்டு வந்தனர்.


ஹரி ஓம் !!

No comments:

Post a Comment