Tuesday 14 July 2020

சிவ புராணம் ( 53 )


53. பிதுர் தேவர்கள்










முதலில் பிரம்மதேவன் சில தேவர்களைத் தோற்றுவித்தார். அவர்கள் பிரம்மாவின் உபதேசத்தை மறந்து தங்களைத் தாங்களே பூஜித்துக் கொண்டனர். அதனால் அவர்கள் அறிவு மழுங்கிப் போகுமாறு பிரம்மதேவன் சாபமிட்டார்.

அறிவிழந்த அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து பிரம்மதேவனைப் பணிந்து, தங்களை மன்னித்து அருளுமாறு வேண்டினர். அதற்குப் பிரம்மதேவன் தம் புத்திரர்களிடம் சென்று பரிகாரம் கேட்குமாறு சொன்னார். அவ்வாறே அவர்கள் பிரம்மபுத்திரர்களை அடைந்தனர். பிரம்மபுத்திரர்களும் அவர்களது சாபத்தை விலக்கி, புத்திரர்களே, உங்கள் சாபம் நீங்கி விட்டது. இனி நீங்கள் மகிழ்ச்சியோடு போகலாம்" என்று தெரிவித்தார்கள். அப்போது பிரம்மதேவன் அத்தேவர்களைப் பார்த்து, அமரர்களே, உங்களை என் புத்திரர்கள்புத்திரர்களேஎன்று அழைத்ததால் அவர்கள் பிதுர்களாகிறார்கள். நீங்கள் புத்திரர்களாகிறீர்கள். பிதுர்களைத் திருப்தி செய்பவன் இஷ்ட காரியங்களை அடைகிறான். பிதுர் தேவர்களும் தாங்களும் திருப்தி அடைவதோடு, தங்களைத் திருப்திப்படுத்தியவரின் பிதுர்களையும் திருப்தி செய்விப்பர்" என்று அருளினார்.

பிதுர்தேவர்கள் எழுவர். கவ்வியவாகன், கனலன், சோமன், யமன், அரியமன், அக்கினாவர்த்தன், பர்ஹிஷதன் ஆகியோர் ஆவர். இவர்களில் நால்வர் தேகத்தோடும் மூவர் தேகமின்றியும் இருப்பர். தேகமின்றி இருப்பவர்களைத் தேவர்கள் வணங்குவார். மற்ற நால்வரை பிராமணர் முதலானோர் வணங்குவர். இறந்த காலங்களில் பிதுர்கட்குச் சிராத்தம் செய்ய வேண்டும். தேவகாரியத்தை விடப் பிதுர் காரியம் சிறந்ததாகும். அதைப் பக்தியோடு செய்விக்க வேண்டும். யோக பலத்தால் அடைய முடியாததுகூடப் பிதுர் காரியத்தால் அடையலாம். இம்மையில் சகல சுகபோகங் களோடு வாழ்ந்திருந்து மறுமையிலும் நற்கதியோடு வாழலாம்.

பிதுர் காரியங்களின் சிறப்பு பற்றி முன்பு நடந்த சரிதத்தின் மூலம் அறியலாம்.

பரத்துவாஜ முனிவருக்கு, வாக்துஷ்டன், குலோதனன், ஹிம்சிரன், பிகனன், கபி, பிதுர்வர்த்தி, ஸ்வஸ்ரூபன் என ஏழு புத்திரர்கள் இருந்தனர். அவர்கள் தங்களது துர்நடத்தைகளால் பிரஷ்டர்களானார்கள். அடுத்த பிறவியில் கௌசிக முனிவருக்குப் புத்திரர்களாகப் பிறந்த அந்த எழுவரும் கர்க்க முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர்.

ஒருசமயம் மற்றொரு ஆசிரமத்திலிருந்து பசுவையும் கன்றையும் ஓட்டி வருமாறு அவர்களை அனுப்பினார் முனிவர். பசுவையும் கன்றையும் ஓட்டி வரும்போது அவர்கள் பசியால் வாடினார்கள். பசுவைக் கொன்று புசித்து விடலாமென்று அவர்களில் சிலர் கூறினார்கள். கபி, ஸ்வஸ்ரூபன் இருவரும் அதைக் கூடாதென்று தடுத்ததோடு, குருவுக்குத் துரோகம் செய்ததாக ஆகுமென்றனர். பிதுர்வர்த்தி என்பானோ, பிதுர் தேவருக்கு அர்ப்பணித்துப் புசிப்பதால் பாவம் தொடராது என்றான்.

அவ்வாறே ஏழுபேரும் பசுவைக் கொன்று புசித்து விட்டு, முனிவரிடம் புலி அடித்துக் கொன்றுவிட்டது என்று பொய் சொன்னார்கள். முனிவரும் அதை நம்பிவிட்டார். அந்தத் தோஷத்தால் அவர்கள் எழுவரும் அடுத்த பிறவியில் வேடுவ ஜாதியில் பிறந்தார்கள். இருப்பினும் பூர்வஞானம் பெற்றிருந்தமையால் அவர்கள்  தங்கள் செய்கைக்கு வருந்தி அந்த ஜன்மத்தைக் கழித்தனர். அடுத்த பிறவியில் அவர்கள் காலஞ்சரமென்னும் மலையில் மிருகங்களாகப் பிறந்து அந்த ஜன்மத்தையும் கழித்து, சரத் தீபத்தில் சக்கரவாகப் பக்ஷிகளாகப் பிறந்தனர். சுமனஸ், சுவாக், சுத்தன், பஞ்சாலன், சித்ரத்ரிசகன், சுநேந்திரன், சுநந்திரன் என்ற பெயர்களோடு, சக்கரவாக பறவைகளாக இருந்து வரும்போது நிபதேசத்து அரசன் அவ்வனத்துக்கு வேட்டையாட வந்தான். அவனைக் கண்ட சுநந்திரன் அந்த அரசனைப் போன்று போக பாக்கியங்களோடு வாழ என்ன வழி இருக்கிறதென்று மற்றவர்களைக் கேட்டது. அதைக் கேட்ட மற்ற இரு பறவைகளும், நீ அரசனானால் நாங்கள் உன் மந்திரியாகிறோம்" என்றன.

அம் மூன்று பறவைகளின் வார்த்தையையும் கேட்டதும் பெரும் வேதனை அடைந்த ஒரு பறவை, நாமோ குருத்துரோகம், கோஹத்தி முதலான பாபங்களால் அடுத்தடுத்துப் பல பிறவிகளை எடுத்து வருகிறோம். இந்தப் பாபத்தை ஒழித்து நாம் நற்கதி அடைய விரும்பாது மேலும் அல்ப சுகத்துக்கு ஆசைப்படுகிறீர்களே!" என்றது.

அடுத்த பிறவியில் அவர்கள் அன்னங்களாய்ப் பிறந்தனர். அவர்களுள் நால்வர், ஞானமுடையவர்களாகவும், மற்ற மூவர் மோகத்தில் விருப்பமுடையவர்களாகவும், இருந்து அந்த ஜன்மத்தையும் முடித்தனர். அடுத்த பிறவியில் காம்பில்லிய நகரத்து அரசர் புதல்வன் ஹநூஹனாகச் சுநந்திரன் பிறந்தான். சித்ரத்ரிசகன், சுநேந்திரன் இருவரும் அந்நகரிலேயே வேதியன் ஒருவனுக்கு மகனாகப் பிறந்து, வேத சாஸ்திரங்களில் வல்லவர் களானார்கள். பஞ்சாலன் ருக்வேதியாகத் தோன்றிச் சிறந்த ஆசாரியனாக விளங்கினான். சுத்தன் வேதியனாகப் பிறந்து, இரு வேதங்களை நன்குணர்ந்திருந்தான். சுவாக், சாம வேதியாகப் பிறந்தான். சுமனஸ்ஸும், வேதியர் குலத்தில் பிறந்து யாகம் செய்யும் ஆசாரியனாக விளங்கினான்.

சிறிது காலம் சென்றதும் ஹநூஹன் ஆட்சியைத் தன் பிள்ளைகளிடம் ஒப்புவித்து விட்டுக் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றான். பஞ்சாலனும், சுத்தனும் அவனோடு கானகம் சென்று தவம்செய்து உயர்ந்த பதவியை அடைந்தார்கள். மற்ற நால்வரும் அந்த ஜன்மத்தை விடுத்து அடுத்த பிறவியில் ஏழைப் பிராமணன் ஒருவனுக்குப் பிள்ளைகளாகப் பிறந்து யோக மார்க்கத்தைக் கடைப்பிடித்து முக்தி அடைந்தனர்.

பெரும்பாவிகளான அம்மூவரும் பிதுர்தேவர்களைத் திருப்தி செய்ததால் அனேகப் பிறவிகளை எடுத்தாலும், பூர்வஜன்ம உணர்ச்சியோடு இருந்து கடைசியில் நற்கதியை அடைந்தார்கள். சிரார்த்தங்களை விடாது செய்து பிதுர் தேவர்களைத் திருப்திப் படுத்துபவன் சகல பாக்கியங்களுடன் வாழ்ந்திருந்து நற்கதியை அடைவான் என்பது திண்ணம்.

ஹரி ஓம் !!


No comments:

Post a Comment