Tuesday, 31 March 2020

காசி மஹாத்மியம்

காசி மஹாத்மியம்
(உரைநடை)

வ. சு. செங்கல்வராய பிள்ளை


திருச்சிற்றம்பலம்
சிவபக்த சிரோமணிகளாகிய 
நைமிசாரணிய முநிவர்கள்
சூத முநிவரை 
நோக்கி 'முநிபுங்கவரே! எங்கள் 
வினைகளைப் போக்கக் கூடிய 
சிவசரிதங்கள் தங்கள் திருவாக்கால் 
எண்ணில்லாதன உரைத்தீர். 
க்ஷேத்திரங்களுக்கெல்லாம் நாயகமாகிய 
ஸ்ரீ காசி நகரத்தின்
சிறப்பையுந் தயை 
கூர்ந்து உரைத்தருளல்
 வேண்டும்' என்று 
கேட்டுக்கொள்ள, சூத முநிவரும் 
மனமகிழ்ச்சியுடன் 'அன்பர்களே, உங்கள் 
இஷ்டத்தை நிறைவேற்றுகின்றேன்' என்று 
சொல்லிப் பின்வருந் திவ்ய சரிதத்தை 
அவர்களுக்கு உரைத்தருளுகின்றார்:
திருவளர்ந்தோங்கும் பரதகண்டத்தில் 
சிம்ஹள தீபம் என்னும் தேசத்தில் 
சிம்ஹத்வஜன் என்றொரு அரசன் 
இருந்தான். அவன் சகல நற்குண நற் 
செய்கைகளும் வாய்ந்தவன். போரில் 
மஹாவீரன். அவனுடைய
 மனைவி பெயர் 
மந்தாரலக்ஷ்மி. பெண்டிர்க்குரிய 
நால்வகைக் குணமும் பொருந்தியவள். 
அழகிற் சிறந்தவள். தன் கணவன் மேல் 
நிறைந்த காதலும் பக்தியும் உடையவள். 
எவ்வாற்றானும் மேன்மையுற்றும் புத்திர பாக்கியம்
 இல்லாக் குறையால் 
அரசனுக்குத் தினந்தோறும் கவலை 
வளர்ந்து கொண்டே வந்தது. புத்திரப் 
பேற்றைக் குறித்துப் பலவித தருமங்களை 
மன்னவன் உவப்போடு செய்தான். 
கோயில்களுக்குத் தீப கட்டளை, அன்ன 
கட்டளை முதலிய ஏற்படுத்தினான்.  
தினந்தோறும் குடை, உடை, பசு, பூமி 
முதலிய தானங்கள் செய்தான்.
என்ன செய்தும் புத்திரோற்பத்தி 
அடையாமையால் அரசன் மிகக் 
கவலையுடன் தன் மனைவியை நோக்கி, 
ஹே! மந்தார லக்ஷ்மி! மனோமணி!  
நாம் இருவரும் பாக்கிய ஹீனர்கள். ஒரு 
குழந்தையின் தாமரைப் பூப் போலும் 
முகத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் 
நமக்கு இல்லாமற் போய் விட்டது. 
இங்ஙனம் புத்திரனில்லாது இப்போது 
வருந்தும்படி நாம் முன் ஜன்மத்தில் 
என்ன பாவஞ் செய்தோமோ? 
புத்திரனில்லாதவனுக்கு நாடும் நகரமும் 
நாநா பதார்த்தங்களும், தனங்களும், 
சுற்றமும் யாது பயனைத் தரும்? 
அவனுக்கு இம்மையினுந் துக்கம், 
மறுமையினுந் துக்கம். நமது கர்ம 
வினையைப் பார்த்தாயா? பிதிர்த்தொழில் 
செய்ய மக்களில்லாவிட்டால் நமக்கு 
நல்ல கதி எங்கனங் கிடைக்கும்?' என்று 
கூறி இருவருங் கவலுந் தருணத்தில் 
ஆநந்த ஸ்வரூபியாகிய
 ஸ்ரீ நாரத முநிவர் 
அரசனது சபா மண்டபத்திற்கு வந்தார்.
அரசன் அவரைப் பேராநந்தத்தோடு 
எதிரேற்று வந்தித்துப் பூசித்து 
சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கச் செய்தான். 
பின்பு அவரது பாதார விந்தத்தில் வீழ்ந்து 
நமஸ்கரித் தெழுந்து அவரை நோக்கி, 
வீணாதரரே! முநிபுங்கவரே! உமது பாத 
பதுமத்தை யான் காண்பதனாலேயே 
எனக்கு எல்லா நன்மையுங் கைகூடின. 
எனது துக்கமெல்லாம் ஒழிந்தன. நான் 
மக்கட் பேறடைய யாதோர் ஐயமும் 
இல்லை. புண்ணிய புருஷர்கள் ஒருவன் 
திருஷ்டியிற் பட்டபோதே நன்மைகள் 
எல்லாம் அவனை நாடிவரும். இன்று 
நான் பரிசுத்தனாயினேன்; மிகப் 
பிரசித்தனாயினேன்; சிம்ஹள தேசத்து 
அரசர்களுள் மிக்க நிலை பெற்றவன் 
ஆயினேன். ஹே! மந்தாரலக்ஷ்மி! இங்கே வா!
 முநிபுங்கவரது பாத தாமரையைச் 
சிரசிற்றரித்துக் கொள். இவரோ திவ்யர். 
மஹா முநிவர். பிரமபுத்திரர். நினைத்த 
காரியத்தை நிமிஷத்தில் முடிக்க 
வல்லவர். இவர் கடாக்ஷம் பெற்றாய்; 
புத்திரப் பேறுற்றாய் எனப் பலவாறு கூறி, 
முநிபுங்கவரைப் பணிந்து நின்றான்.
இவ்வார்த்தைகளைச் செவியேற்ற 
ஸ்ரீ நாரத முநிவர; சந்திரிகை போலும் 
ஒளி பொருந்திய புன்சிரிப்போடு தமது 
அமுத வாயைத் திறந்து,
  "பூபதே! நீ ஸ்ரீ நீலகண்டப் பெருமானைப் 
பூசித்தல் வேண்டும். அவரே தேவாதி 
தேவர். மூவர்கள் முதல்வர், அடியார்க்கு 
நல்லார், நச்சினார்க் கினியர். அவரை 
வழிபட்டால் உனக்குமங்களம் உண்டாகும். 
உனது பூர்வ கர்ம வினையால் உனக்குச் 
சந்ததி யில்லாதாயிற்று. நீ முன் 
ஜன்மத்தில் அந்தணருடைய பொருளை 
மோசஞ் செய்து கவர்ந்தாய். உன்
முற்பிறப்பின் வரலாற்றைக் கூறுகிறேன்;
 கேட்பாயாக --
  'நீ குந்தள தேசத்தில் அந்திய வமிசத்திற் 
பிறந்து வளர்ந்தாய். பலர் பொருளைக் 
கவர்ந்து வீடு, வாசல் முதலிய கட்டிக்
கொண்டாய். தாடங்கன் என்பது உன் 
பெயர். உன்னுடைய பண ஆசையால் நீ 
ஒரு முறை பிராமணர் வீதியில் 
தேவேந்திரனுக்குச் சமமான செல்வத்தை 
யுற்ற கோவிந்தசருமன் என்பவனுடைய 
வீட்டில் இரவிற் கன்னம் வைத்துச் 
சுவரைத் தொளைத்து உள்ளே புகுந்து 
நவனும் அவன் மனைவியும் குழந்தையும் 
உறங்குவதைக் கண்டு ஆண்டுள்ள 
பொருள்க ளெல்லாவற்றையுங் 
களவாடினாய். அப்போது அங்கே வைரக் 
கடுக்கன், பொற்றோடு, பொன் அறைநாண், 
பொற்சிலம்பு முதலிய அணிந்து உறங்கும் 
குழந்தையை அதிக குதூகலத்துடன் 
மெதுவாய் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு 
வெளியே வந்து அருகிலுள்ள காட்டில் 
நுழைந்து, ஆபரணங்களெல்லாவற்றையும் 
எடுத்துக்கொண்டு, குழந்தையைக் 
கழுத்தைப் பற்றித் திருகி முறித்து ஓர் 
ஆழ்ந்த கிணற்றில் எறிந்து சென்றாய்.
வீட்டிற் கோவிந்த சருமனும் அவன் 
மனைவியும் தங்குழந்தையைக்காணாது 
பிரமித்து வாய்விட்டலறினார்கள். 
 இங்ஙனம் இவர்கள் அழ, இத் துக்க 
சமாசாரம் ஊர் முழுவதும் பரவிற்று. 
அவ்வூர் அரசன் செங்கோல் நடாத்துஞ் 
சீரிய குணத்துச் செல்வன். அவன் 
இதனைக் கேட்கவே, வேதனை யகத்து 
மிக்குக் காவலரைக் கூவி, 'நீங்கள் 
நாற்புறத்துங் காற்றிற் பறந்தோடித் 
துருவித் திருடனை உடனே கொணருதிர்' 
எனப் பணித்தான். அங்ஙனம் புறப்பட்ட 
காவலருட்சிலர் தாடங்கனாய உன்னைப் 
பிடித்தார்கள்.
 கைகளிலும், உடல் மீதும், 
இரத்தக் கறை இருக்கக் கண்டு உன்னை 
அவர்கள் இறுகப் பிணித்து நையப் 
புடைக்கவே, நோய் தாளாது நீ 
உண்மையை ஒப்புக்கொண்டாய். நீ 
கவர்ந்த சொத்துக்களை உன்னிடமிருந்து 
பற்றிக் கொண்டு துஷ்டனாகிய 
உன்னையும்
கழுமுனையி லேற்றும்படி 
அரசன் ஆக்ஞாபித்தான். ராஜ வீதியின் 
கோடியில் ஒரு புறத்தில் உன்னைக் 
கழுவேற்றினார்கள். 
தாடங்கனாகிய நீ கழுமுனையில் 
தினந்தோறும் மரணவாஸ்தையோடு 
துடித்துக் கொண்டிருந்தாய். அப்போது 
காசி யாத்திரை செய்கின்ற புண்ணியசீலர் 
ஒருவர் அவ்வூரில் இரவில் நீ இருந்த 
இடத்திற்குச் சமீபத்தில் வந்து தங்கினார். 
அவர் உன் கூக்குரலைக் கேட்டு உன்னை 
உற்றுப் பார்த்துப் பயந்து பின் வாங்கினார். 
அப்போது நீ அவரை நோக்கி, 'ஐயரே! 
அஞ்சுதல் வேண்டாம், தயை செய்து 
சமீபத்தில் வாருங்கோள்' என்று சொல்ல, 
அவரும் சமீபித்து வந்தார். வருதலும் நீ 
அவரை நோக்கி, 'ஐயரே! தனது தீய 
நடத்தையால் வரும் ஆபத்துக்களை 
ஒருவன் நீக்க முடியுமா? நான் செய்த 
தீமையோ மிகவுங்கொடியது. அவனவனது 
கர்ம பலத்தை அவனவனே அனுபவித்தல் 
வேண்டும். நீங்கள் தீர்த்த யாத்ரிகர் 
போலத் தோன்றுகின்றது. புண்ணிய 
தீர்த்தங்களில் ஆடி வரும் நீங்கள் எனது 
வேண்டுகோள் ஒன்றைச் செவியேற்றருள 
வேண்டும்; கங்கைக் கரையிற் கயா 
சிரார்த்தம் வெகு விசேஷமென்று நான் 
கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே 
நீங்கள் சிரார்த்தம் செய்வதால் வரும் 
பலனில் நூற்றில் ஒரு கூறு தனியாய் 
எனது நற்கதிக்கென்று தத்தஞ் செய்ய 
வேண்டுகின்றேன். இதுவே என் 
பிரார்த்தனை. இப்பிறப்பில் இனி ஒன்றும் 
என்னால் இயலாதாதலின் இவ்வுதவிக்குக் 
கைம்மாறு நான் மறுபிறப்பிலேனுஞ் 
செய்கிறேன், என்று இரந்து கேட்டுக்
கொண்டாய். இம்மொழியைக் கேட்ட 
தயாளுவாகிய அவ்வழிப்போக்கர் 
அங்ஙனே செய்கிறேன், அஞ்சுதல் 
வேண்டா' என வாக்குத்தத்தஞ் செய்து 
சென்றார்.
 இங்ஙனம் நாலைந்து நாள் நீ 
கழுமுனையில் துன்புற்றாய். அப்போது 
ஓர்நாள் நள்ளிருளிற் பேய்க் கூட்டங்கள் 
உன் அருகிற் போந்து சூழ்ந்தன
பேய்க் குழாத்தில் இருந்த ஒரு பெண் 
பேய், 'தெய்வமே! இப்பூமியில் எனது 
சாபத்தைப் போக்குவாரும் உண்டோ? ஒரு 
மனிதன்கூட எனக்கு அருகில் 
வருகின்றானில்லையே" என்று 
ஏக்கத்தோடு கதறி நின்றது. இதனைக் 
கேட்ட ஏனைய பேய்கள்
 'உனக்குச் சாபம் 
எங்ஙனம் வந்தது?' என அப்பெண் பேய் 
சொல்லலுற்றது:
"கேளுங்கோள் என் கதையை. யான் 
முன் ஜன்மத்திற் பெண்கள் சிகாமணியாய் 
வேசியர் குலத்துக்கு ஓர் 
ரத்நமாலிகையாய்ப் பிறந்தேன். என் 
இச்சைபோன வழியெல்லாஞ் 
சுகித்திருந்தேன். குபேர நிதியும் 
தேவேந்திர போகமும் என்னிடத்து 
ஒருங்கு இருந்தன.
 தனப் பெருமையாலும் 
சௌந்தரியப் பெருமையாலும் நான் 
அரசர்களுக்கும் அஞ்சவில்லை.
ரூபலாவண்யத்தாலும், வெகு ரம்யமாய்ச் 
சல்லாபஞ் செய்யுஞ் சாமர்த்யத்தாலும், 
ஆடல், பாடல் முதலியவற்றிலிருந்த 
முதற்றர தேர்ச்சியாலும், மற்றும் 
வேசியர்க்கு வேண்டிய லக்ஷணங்களாலும் 
வேசியர் யாவரினும் மேம்பட்டு 
வேசியர்திலகம் எனப் பிரசித்தி பெற்றேன். 
பொருள் பறிப்பதில் எனக்கு இருந்த 
சாமர்த்யம் வேறு எவருக்குங் கிடையாது. 
இங்ஙனஞ் செல்வ மமதையாற் கண் 
கெட்டிருந்ததால் நான் ஒரு பெரிய 
தோஷத்திற்கு இடந் தந்தேன்.
ஒரு நாள் 
அந்தி வேளையில் எனது தோழியரோடு 
விளையாடிக்களித்து மாளிகையின் 
மேன்மாடியி லிருந்தேன். அப்போது 
வாயிலிருந்த தம்பலத்தை
மென்று கீழே 
உமிழ்ந்தேன்.
அந்தோ! என் பாபம்! அது கீழே 
தெருவிற் போய்க்கொண்டிருந்த ஒரு 
விப்பிர சிகாமணியின்
 தலை மீது வீழ்ந்தது. 
அம் மறையோன் நிமிர்ந்து நோக்கி, 'அடீ! 
வேசி! நீ நசிப்பாயாக! துஷ்டே!
நீ பிசாசாகக் 
கடவது' எனச் சபித்தான்.
 இதனைக் கேட்ட நான் மனங் கலங்கி 
விரைவிற் கீழிறங்கி ஓடி அவன் பாதத்து 
வீழ்ந்து நமஸ்கரித்து, 'அறியாது செய்த 
அபராதத்தை, அந்தணர் பெருமான் 
க்ஷமித்தருளல் வேண்டும். கருணாநிதியே! 
பெரியோர் சிறு நாய்களின் பிழையைப் 
பொறுத்தல் வேண்டுமன்றே'
எனப் பல நய 
வசனங் கூறி எனது வீட்டுக்கு
அழைத்து வந்து 
அப்யங்க ஸ்நாநஞ் செய்வித்து 
சோடசோபசாரங்களுஞ் செய்தேன். 
அன்னமும் பாலும் புசிப்பித்தேன். வெண் பட்டுஞ்
 செம்பொன்னும் அளித்தேன். 
பன்முறை பணிந்து வணங்கினேன். 
அவ்வந்தணர் பெருமானும்
உள்ளம் உவந்து 
நன்றாகுக' எனக் கூறி என்னை நோக்கி, 
தாமரைக் கண்ணீ! என் மனத்திற் கோபம் அடங்கி
  உவகை உண்டாயிற்று, உனக்குச் 
சாப விமோசனந் தருகின்றேன். நீ பேய் 
உருவத்தோடு பூமியிற் பல இடங்களிலுந் 
திரிவாய். எப்போது உன்னை
ஒரு மனிதன் 
பாணிக்கிரஹணஞ்
 செய்வானோ அப்போது 
உனக்குச் சுகம் உண்டாகும்'
எனக் கூறிச் 
சென்றான். அன்றே நானும் இப்பேய் 
உருவத்தை யடைந்தேன். பல இடங்களிலும் 
உழன்றேன். பிராணி வர்க்கங்கள் என்னைக் 
காணும்போதே பயப்பட்டு ஓடுகின்றன. 
அப்படி யிருக்க என்னை எவன் 
பாணிக்கிரஹணஞ் செய்வான்? ஈஸ்வரா! 
என்ன தௌர்ப்பாக்கியம்!
நான் யாரோடு 
நோகேன்! யார்க்கெடுத் துரைப்பேன்! 
என்னைக் கலியாணஞ் செய்து 
கொள்பவனுக்கும் சுபமுண்டாகும் என 
அவ்வந்தணர் கூறியுள்ளார். யாரும் 
பயத்தால் எனக்குச் சமீபத்திலும் 
வருகிறதில்லை;
 எனக்குத் தினந்தோறும் 
துக்கம் பெருகுகின்றது" -- என்று இவ் 
வண்ணம் தன் வரலாற்றை விஸ்தாரமாய்க் 
கூறி அப்பெண் பேய் புலம்பிற்று.
இவ்விருத்தாந்தங்க ளெல்லாவற்றையும் 
கழுமுனையிலிருந்து கவனமாய்க் 
கேட்டுக்கொண் டிருந்த தாடங்களாய நீ, 
பேய் மணியே! உன்னை நான் கலியாணஞ் 
செய்து கொள்ளுகிறேன். ஆனால் நானோ 
மகாதுஷ்டன்,
 கழுமுனையி லிருப்பவன். 
காலனூர்க்கேருந் தருணத்தினன். ஆயினும் 
இருவருக்கும் நன்மை உண்டாகுமாதலால் 
உன்னைக் காந்தருவ விவாகஞ் 
செய்துகொள்ளுகிறேன்; உன்னைச் 
சாபத்தினின்றும் மீட்பேன்' என்று சொல்ல, 
அப்பிசாசும் உடனே தன் குழுவினின்றும் 
பிரிந்து தானுங் கழு முனையிலேறிப் 
பாணிக்கிரஹணஞ் செய்து கொண்டது.
பின்னர் மறுபிறப்பில்
 அப்பேய் 
ராஜகுமாரியாய்ப் பிறந்தது.
சாக்ஷாத் அந்த 
ராஜகுமாரியே உன் மனைவி மந்தாரலக்ஷ்மி. 
தாடங்கனாய நீயோ,
கயாசிரார்த்த பலனில் 
அற்பமாகிய ஒரு சிறு கூறு 
அவ்வழிப்போக்கர் உனக்குத் தத்தம் 
பண்ணினதால், இத்துணைக் கீர்த்தியையும் 
பெருமையையும்
 இப்பிறப்பில் அடைந்து, 
இந்த சிம்ஹள தேயத்துக்கு அரசனா 
யிருக்கின்றாய்.
நீ செய்த சிசு ஹத்தியே 
உனக்குச் சந்ததி யில்லாமற் செய்துவிட்டது. 
ஆதலின், மன்னவ,
நீ காசிக்குப் போய்க் 
கங்கைக் கரையிற்
கயா சிரார்த்தம் செய்து 
முற்பிறப்பில் அவ்வழிப்போக்கருக்கு நீ 
வாக்களித்தபடியே கடனை நிறைவேற்றினால்
சிவசாமீப பதவியிலிருக்கும்
அவரும் சிவ 
சாரூபம் பெற்று சிவ கணத்தவருள் 
ஒருவராவார்; உனக்குந்
 தவறாது புத்திரப் 
பேறுண்டாகும். சிம்ஹத்வஜ!
நீ கவலுதல் 
வேண்டாம். காசிக்குச் செல்லுக,
கங்கா 
ஸ்நாநஞ் செய்க, விசுவநாதருக்கன்பனாகுக. 
நாகபூஷணரது அன்பு
 கிடைக்க வேண்டின் 
பாகீரதி ஸ்நாநஞ் தான் அதற்கு
ஔஷத மாகும்.
 காசித் தலத்தின் பெருமையையும் 
அவ் விசுவேசரது
 பெருமையையும் யான் 
என்னென்றெடுத்துரைப்பேன். ஆயிரம் 
நாவுடைய ஆதிசேடனாலுஞ் சொல்ல 
முடியாது. ஆயினும் என் ஆசை அடங்க 
யான் சிறிது கூறுவேன்:--
காசிநாதரை வணங்காத
 மனிதன் வஞ்சகன். 
ஒருவன் காசிக்குப் போகின்றேன் என்று 
தனது பாதத்தை முன்னிட்டு முன்னிட்டு 
வைத்தால் அவனுடைய பாபங்களெல்லாம் 
பின்னிட்டுப் பின்னிட்டு ஓடிப்போகும். 
காசிக்குப் போகின்றேன் நான்' என்ற 
உரைகளைக்கேட்ட அளவில் 
பிரமஹத்தியாதிகள் பயப்பட்டு ஓடும்.
கங்கா' என்னும் பதத்திலுள்ள 
அக்ஷரங்களைத் தியானஞ்செய்தால் 
மனிதன் சுத்தனாவான். நமது கையின் 
பயன் விசுவேசரைத் தொழக் கூப்புவதே. 
காலின் பயன் அவர்கோயிலை வலம் 
வருவதே. செவியின் பயன் அவர் புகழைக் 
கேட்பதே.
கண்ணின் பயன் அவர் 
ஸ்தலத்தைக் காண்பதே.
 தலையின் பயன் 
அவரை வணங்குவதே.
 நெஞ்சின் பயன் 
அவரை நினைவதே.
சிம்ஹத்வஜ! சிவபிரான் மெய்யர்க்கே 
மெய்ய ராதலின் அவர்மாட்டுக் கெடாத 
உறுதியும் நம்பிக்கையும்
உனக்கு இருத்தல் 
வேண்டும்.
நல்வழி ஒன்று தோன்றும்போது 
அதனை உடனே கைப்பற்றுதல்வேண்டும். 
காசிக்குப் போவது மகாகஷ்டம்; வழியிற் 
பலவித இடையூறுகள் நேரிடக்கூடும். 
அடியார்களது உறுதியைச் சோதிப்பதிற் 
சிவபெருமானுக்கு எப்போதும் ஆசையுண்டு. 
உறுதியுள்ளவர்களுக்கு எம்பிரான் அருள் புரிவார்.
 ஆதலின், சிம்ஹத்வஜ! நீ காசிக்கு 
அவசியம் போகவேண்டும். 
சந்திரசேகரமூர்த்தியின் கருணையினால் 
புத்திரபாக்கியம் முதலிய
சகல சம்பத்தும் 
உனக்கு உண்டாகும். இது நிச்சயம், நிச்சயம், 
முக்காலும் நிச்சயம்" என்று உரைத்து 
அரசனுக்கு ஆசி கூறி அவன்பால் 
விடைபெற்றுப் போயினர்.
அரசனும் அப்போதே
வேறு ஆலோசனை 
ஒன்றுஞ் செய்யாது காசியாத்திரைக்கு 
வேண்டிய ஏற்பாடுகளெல்லாஞ் செய்தான். 
வைதிக பிராமண சிரேஷ்டர்களும் சிவ 
முநிவர்களுந் தன்னொடு வரத் தனது 
மனைவி மந்தாரலக்ஷ்மியுடன் புறப்பட்டான். 
காட்டுவழிக்கு இன்றி யமையாத
வில், 
அம்பு, முதலிய ஆயுதங்களையும் 
எடுத்துச் சென்றான்.
பலநாள் யாத்திரை செய்து வந்தவர்கள் 
ஒரு நாள் அந்தி வேளையில் 
விந்தமலையின் பக்கத்திலுள்ள 
காட்டிற்றங்கும்படி நேரிட்டது. அப்போது 
திடீரென்று மலையின் ஒரு சாரலினின்று 
அநேகங் கள்ளர்கள் வந்து அரசனைச் 
சூழ்ந்து கொண்டார்கள்.
சூழ்ந்தவர் அரசனது 
பொக்கிஷத்தை ஒரு நொடியிற் கவர்ந்தனர். 
அவர்கள் தலைவன் மந்தாரலக்ஷ்மியைத் 
தூக்கிச் சென்றான். இதனைக் கண்ட 
அரசன் அக் கள்ளர் தலைவனைத் துரத்திச் 
சென்று யுத்தஞ்செய்யப் பிரயத்தனப்பட்டான். 
கள்ளர் தலைவன் மந்தஹாஸத்துடன் 
அரசனை நோக்கி, 'ஏடா! மூடா! இந்த 
மஹாவிந்த கோரகானன
 வழியில் அந்தி 
வேளையில் வந்து பாளையத்துடன் 
இறங்கினாய். உன் மதியை யிழந்தாய்; 
நிதியை யிழந்தாய்;
 தாரத்தையு மிழந்தாய். 
இங்ஙனம் இழந்தது மல்லாமல் எதிர்த்து 
மீட்கவும் புறப்பட்டாய்.
இது சுத்த மதிஹீனம். 
வழிபோக்கரிடத் திருந்து
தட்டிப் பறிப்பதில் 
மஹா சாமர்த்யமுள்ள
 தும்பீரன் என்பவன்
 நான்.
உன்னுடைய இந்த மனைவியைப் 
போல இவ்விதத்திற் கிடைத்த ஆயிரம் 
மனைவிமார் எனக்கு உண்டு. ஏடா! 
இன்றல்ல இந்த சௌரியம் எனக்குப் 
பிறந்தது. இங்ஙனம்
 வழி பறித்தல் நாங்கள் 
தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும்
 தருமமாம்' என்று சொல்ல,
 மகாவீரனாகிய அரசன் அடங்காக் 
கோபத்தோடு 'அடே, துஷ்டா! உனது 
புன்னெறி இன்றோடு முடிவு பெறுகின்றது, 
பார்! சற்சனங்களுடைய திரவியத்தை 
அபகரிக்கிற துர்ச்சனத் தலைவா! நில்லடா. 
இதோ எனது கொடிய பாணங்களுக்கு 
உன்னை இரையாக்குகின்றேன். 
கள்ளப்பயலே! உன்னுடைய தலை இதோ 
தூள் தூளாகப் போகிறது பார். 
பிழைத்தோட வேண்டு மென்றிருந்தால் 
எனது மனைவி மந்தாரலக்ஷ்மியை 
விட்டுவிட்டுப் போடா. என்னை யாரென்று 
நினைத்தாயடா? உங்களைப்போன்ற 
மிருகங்களை அழிப்பதற்கென்றேற்பட்ட 
மிருகேந்திரனாய சிம்ஹத்வஜன் என்னும் 
அரசன் நான். சங்காருத்திரனுடைய பக்தன் 
நான். ஆயிரங் காக்கைக்கு ஓர் கல் 
போதாதா? இதோ உன்னையும் உன் 
இனத்தாரையும் ஒரு நொடியிற் 
சங்கரிக்கின்றேன்; துஷ்ட பிண்டமே! 
சண்டாள ஜன்மமே! அர்த்தத்திற்கு 
ஆசைப்பட்ட உனக்கு அநர்த்தம் 
சமீபித்துவிட்டது' என்று கூறி எதிர்த்தான்.
இங்ஙனம் வாதித்த
 அரசனுக்குங் கள்ளர் 
தலைவனுக்கும் யுத்தம் வெகு 
கோரமாய் நடந்தது. கோபத்தினாற் கண் 
சிவந்து புருவத்தை நெறித்துத் தனது 
வில்லை விளைத்துச் சரமாரி பெய்தனன் 
அரசன்.
அவைகளை எல்லாந் தடுத்துத் 
தானும் மறுமாரி பெய்தான் தும்பீரன். 
அதிக கோலாகலத்துடன் வெகுநேரம் 
இருவர்க்கும் சண்டை நடந்தது. ஈற்றில் 
மஹா கொடியனான தும்பீரன் 
சிம்ஹத்வஜனுடைய வில்லை முறித்துச் 
சிம்ஹநாதஞ் செய்தான்.
 அரசன் உடனே 
முஷ்டியுத்தத்திற்குப் பாய்ந்தடுத்தான். அந்த யுத்தத்தில்
 தும்பீரன் அரசனைப் பிண்டம் 
பிடித்து விட்டான். அரசனும் மூர்ச்சித்துத் 
தரையில் வீழ்ந்தான்.
 தும்பீரவேடன் 
அரசனுடைய உடம்பை எலுமிச்சம்பழத்தைப் 
பிழிவதுபோற் கசக்கி விட்டு 
மந்தாரலக்ஷ்மியையும்
 உடன் கொண்டு 
தனது பரிவாரங்களுடன் போய்விட்டான். 
ஆபத்து வேளையில் அரசனோடு எஞ்சி
நின்ற சில சந்நியாசிகள் அவனுக்கு 
மூர்ச்சை தெளிவித்தார்கள். அப்போது 
அவன் அவர்களை நோக்கி மிகுந்த 
துக்கத்துடன் கூறுகின்றான் :--
 'அந்தோ! ஐயன்மீர்! நமது காலதோஷத்தைக் 
கண்டீர்களா? சண்டையில் தோற்ற என் 
சரீரம் மிகத் தளர்ந்தது. அவயவங்களை 
அசைக்கக்கூட முடியவில்லை. எனது 
சஸ்த்ரங்கள், அஸ்த்ரங்கள், வஸ்த்ரங்கள் 
யாவுந் தொலைந்தனவே. கஷ்டம், நான் 
ஏன் இன்னும் பிழைத்திருக்கின்றேன். 
கங்காதரா! என்னைக் கைவிட்டாயோ? 
எவ்வகைத்தான யுத்தத்திலும் எனக்கு 
ஒப்பாவார் கூட இதுவரையும் நான் 
கண்டதில்லையே! அத்தகைய மஹா 
வீரனாகிய என்னைச் சயித்த
அத் தும்பீரன் 
என்பான் எவனோ? இந்த லோகத்தானோ? 
மற்றெந்த லோகத் தானோ? என்னே அவன் 
ஆற்றல்! பாவி, எனது மந்தாரலக்ஷ்மியையுங் 
கொண்டு போய்விட்டானே. ஈசா! யான் 
பிள்ளைவரங் கேட்க வந்து பெண்டிழந்து 
போனேனே. இஃதென்ன காலகதி.'
இங்ஙனந் தன்மனைவியை நினைத்து 
நினைத்து, மனம் பதறி அரசன் 
புலம்புகின்றான். புலம்பித் தன்னோடு 
இருந்தவர்களை நோக்கி, 'அன்பர்களே! 
பாகீரதி ஸ்நாநத்தால் வரும் யோகமும் 
புண்ணியமும் பெறுதற்கு நான் 
பாத்திரனல்லன் போலும். ஜன்மஜன்மமாய்ச் 
சேர்ந்த வினைத் தொகுதியோ இங்ஙனந் 
தடைசெய்தது? எது எப்படியானாலும் நாம் 
உறுதியைக் கைவிடக்கூடாது, எடுத்த 
காரியத்தை நிறைவேற்றியே தீர வேண்டும்.
 ஸ்ரீநாரத முனிவர் உபதேசித்ததை நான் 
மறக்கவில்லை. எவ்வகையாலும் காசிக்குப் போதலே 
நன்று' எனத் துணிபுடன் கூறித் 
தன் தேகநோயையும் புறக்கணித்துப் 
புறப்பட்டான்.
தலத்தின் சீர்த்தியைப் புகழ்ந்து 
அங்கமாலை பாடியும், ஐயா மாயன் 
மைத்துனரே! உமது வஞ்சனையை 
இன்றறிந்தேன். உம்மைப்போல் என்னையும் 
ஆக்கிவிட்டீரே!
 பிச்சை யெடுக்கச் செய்தீரே! 
விபூதியின்றி வேறு அணிகலனில்லாது 
போம்படி செய்தீரே!
கோவணமின்றி வேறு 
ஆடை இல்லா திருக்கவுஞ் செய்தீரே. 
நன்று! நன்று! என அவரை வசை பாடியும், 
வழியின் கஷ்டத்தை மறப்பான்.
இங்ஙனம் பன்னாள் காடு, மலை, ஆறு 
முதலியவற்றைக் கடந்து கண்டவர்க்குக் 
களிப்பளிக்குங் கங்கைக் கரையைக் 
கண்டான்; பேராநந்தங் கொண்டான்; 
குனிப்பான்; [24] சிரிப்பான்; களிப்பான்; 
யானுங் கங்கைக் கரையைக் கண்டேனே,
 கண்டேனே' எனப்பூரித்து மனமகிழ்ந்து 
சாட்டாங்க நமஸ்காரஞ் செய்தெழுந்து, 
சகல லோகத்தவரும் வணங்குகின்ற 
தேவதே! யான் உன்னை வணங்குகின்றேன். 
ஆகாச கங்கையே போற்றி போற்றி! 
லோகமாதாவே போற்றி போற்றி! அன்னாய்! 
கங்காதேவி உனது பெருமையை யான் 
என்னென் றெடுத்துரைப்பேன்' எனப் 
பலவாறு புகழ்ந்து துதிக்கின்றான்
இங்ஙனம் கங்கையை ஸ்தோத்திரஞ் 
செய்து அதின் மூழ்கி, கயாசிரார்த்தத்தையுஞ் 
செய்து, முன் ஜன்மத்தில் அவ்வழிப்போக்கர் 
தனக்கு அளித்த பலனுக்குக் கைம்மாறான 
பிரதி பலனையுந் தந்து கங்கைக் 
கரையோரமாய்ச் செல்லும்போது காணுதற் கரிய
 ஸ்ரீ காசி மாநகரைக் கண்டான். 
கண்டதும் பேருவகை கொண்டான். 
பொன்மயமான மாடமாளிகைகளும், 
ரத்நசிகரங்களும், ரத்ன தோரணங்களும், 
யாண்டும் பேரொளி வீசுதலைக் 
கண்ணுற்றுப் பேராநந்தம் அடைந்தான்.
சுற்றிலும் விஷ்ணு,
 வைரவன், சூரியன், 
சந்திரன் முதலியோருடைய ஆலயங்கள் 
விளங்க, அவற்றின் மத்தியில் எமது 
விசுவேசரது திருக் கோயிலானது செவ்விய 
ரத்தினக் கல்லாலாகிய ஒரு பதக்கத்தில் 
நடுநாயகமாய்ப் பதித்துள்ள விலையிலா 
வைரக்கல் போலத் திகழா நின்றது. 
காசி மாநகர் எங்கும் சிவமயமாய்ப் 
பொலிந்திருந்தது. திருநீறு, ருத்திராக்ஷம், 
புலித்தோல் ,கட்டுவாங்கம், சூலம் முதலிய 
கொண்டுள்ள முநிவரர் குழாம் ஒருபால்; 
சிவநாம சங்கீர்த்தனஞ் செய்யும் பக்தர் 
குழாம் ஒருபால்;
 திருக்கோயிலுக்குப் பூத் 
தொடுப்பார் ஒருபால்; அலகிடுவார் ஒருபால்; '
இன்னிசை வீணையர்
 யாழின ரொருபால்; 
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் 
ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் 
ஒருபால்;
தொழுகைய ரழுகையர் 
துவள்கைய ரொருபால்'--ஆக இவ்வாறு 
சாரூப சாம்பிராச்சிய
 பதவியில் வாழுங் 
கோடா கோடி, பக்த ஜனங்களைக் 
கண்ணுற்ற அரசன் புளகாங்கிதனாய்ப் 
பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி,
மனமகிழ்ந்தான்.
பின்பு கங்கையில்
 ஸ்நாநஞ் செய்து, விபூதி, 
ருத்தி ராக்ஷமணிந்து, விசுவநாதரது 
திருக்கோயிலை வலம் வருங்கால், 
கங்காநதி பாரிசத்தில்
 விசித்திர மண்டபம் 
ஒன்றில் தென்றற் காற்றின் சுகத்தை
ஏற்றுக்கொண்டு தனது மனைவியாகிய 
மந்தாரலக்ஷ்மி ஓர் சிங்காதனத்தில் 
வீற்றிருப்பதைக் கண்டான்; கண்டதும் 
பிரமித்தவனாய், 'இஃதென்னை! மாயையோ 
அல்லது கனவோ!
தும்பீர வேடன் தூக்கிச் 
சென்ற எனது கண்மணி மந்தாரலக்ஷ்மியை 
ஈண்டுக் காண்கின்றேனே! அற்புதம்! 
அற்புதம்! உமாபதீ!
 இதனை உருவெளித் 
தோற்றமாக்கி விடாதே! பார்வதி பாகா! 
இவ்வுருவை மாயையாக்கி விடாதே! 
உனதருளின் பிரபாவத்தை ஒளிக்காதே. 
அந்தகாசுரனைச் செற்ற அண்ணலே! உன் 
கிருபா பிரபாவத்தால்
 ஐந்து வர்க்கங்களில் 
என்ன அதிசய விளைவுதான் உண்டாகாது?' 
என்று சொல்லி அற்புத மனத்தனாய் 
நிற்கும்போது,
 கருணாகர மூர்த்தியாகிய 
விசுவேசர் இடபவாகன ரூடராய்ப் 
பிரத்தியக்ஷமாயினர்.
 விசாலாக்ஷியம்மையார் தமது இடப் 
பாகத்தில் விளங்கவும், கங்காதேவியும் 
இளம்பிறையும் சடைமீது பொலியவும், 
விநாயகக் கடவுளும்
 வேற்கரத் தண்ணலும் 
தமது அருகிற் றிகழவும்,
விஷ்ணு, பிரமன், 
இந்திரன் முதலிய தேவர் தலைவரும், 
அகத்தியர், பிருகு ஆகிய முநிபுங்கர் சூழவும், 
சித்தர், வித்தியாதரர், கின்னரர், இயக்கர் 
முதலிய பதினெண் கணங்களும் தமது 
புகழை எடுத்தோதவும், நாரதர், தும்புரு 
ஆகிய இருவரும் இன்னிசை பயக்கும் 
யாழும் வீணையும் வாசிக்கவும், பேரற்புத 
கோலத்தோடு எம்பிரான் விளங்குவதைக் 
கண்ட அரசன் ஆநந்த பரவசனாய்க், 
கைகளுந் தலைமீ தேறக் கண்ணில் 
ஆநந்த வெள்ளம் மெய்யெலாம் பொழிய, 
வேத முதல்வரைப் பணிந்து போற்றி, 
ஐயனே! அடியனேனை அஞ்சல் என்றருள 
வல்ல மெய்யனே!' எனத் துதித்துப் 
பாடினான்; பரவினான்; பணிந்தான்.
அப்போது கங்காதேவி ஞெரேலென 
இறங்கி மந்தார லக்ஷ்மியின் கரத்தைத் 
தனது திருக்கரத்தாற் பற்றிக் கொண்டு, 
சிம்ஹத்வஜ! வருக!
உன் மனைவியைக் கொள்க!'
 எனத் திருவாய் மலர்ந்தருள, 
அரசனும் உவப்புடன் சென்று கங்கா 
தேவியை வணங்கித் தனது மனைவியைப் 
பெற்றுக் கொண்டு, கருணாநிதியாகிய 
கண்ணுதற் கடவுளைத் துதிக்கின்றான்:
மெய்யன்போடு துதித்தலைக் கேட்ட 
சிவ பெருமான் அரசனை நோக்கி,
 'சிம்ஹத்வஜ! நமது கண நாதனாகிய 
நந்திகேசுரனைத் தும்பீரன் என்னும் 
வேடனாக அனுப்பி உனது தரும 
பத்தினியை ஈண்டுக் கொணர்வித்ததும், 
சண்டையில் உனது நிதி முதலியவற்றைக் 
கவர்வித்ததும் நாமே. இங்ஙனம் அச்சுறுத்தி 
வெருட்டினால் வந்தவழியே திரும்பிப் 
போய்விடுவாயோ அல்லது உறுதியோடும் 
அன்போடும் இந்த க்ஷேத்திரத்திற்கு 
வருவாயோ என உன்னைப் பரீக்ஷித்தோம். 
எமக்கு இப்போது முற்றுஞ் சந்தோஷமே. 
நீ புத்திமான், தைர்யசாலி.
இப்போது நீ கயா 
சிரார்த்தம் செய்தமையால் உன் பாபம் 
எல்லாம் அறவே ஒழிந்தன. அதுவுமன்றி, 
முன் பிறப்பில் தனது சிரார்த்த பலனில் 
உனக்கு ஒருகூறு கடன் கொடுத்த
வழிப் போக்கனும்
 நமது கணங்களில் 
ஒருவனாவான். இனி நீ பாரியாஸமேதனாய் 
உன் ஊருக்குப் போகலாம்.
இனி உனக்கு 
நன்மையே வரும். இன்னும் பன்னீராயிர 
வருடம் இப் பூவுலகைப் பரிபாலிப்பாய். 
உனக்கு ஓர்
அருமைப் புதல்வன் பிறப்பான்.
 நீ கவற்சியுற வேண்டாம்.
ஈற்றில் நீங்கள் 
எமது லோகத்தை அடைவீர்கள்.
மந்தார லக்ஷ்மியும்
 நீயும் இம் மந்தாகினியில் 
முழுகுவீரானால் உங்கள் நகரத்து 
அரண்மனை வாவிக் கரையில் எழுவீர்கள்.
உங்களுக்கு என்றும் மங்களமே" 
எனத்திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.
வெகு விநயத்தோடு சுவாமியின் 
திருவார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த 
அரசன் ஆநந்தக் கடலுள் திளைத்து, 
யார்க்கும், முன்னவனே முன்னின்றால்
 முடியாத பொருளுளதோ' என வியந்து 
களிகூர்ந்தான்.
சிம்ஹத்வஜன் பலநாள் அம் மஹா
க்ஷேத்திரத்திற்றங்கி யிருந்து அந்நகர் 
முழுமையுந் தரிசித்துத் 
துண்டி விநாயகரையும், 
கதிர்காம வேலவரையும் வணங்கிப்போற்றி,
 விசுவநாதரையும் 
விசாலாக்ஷியம்மையையும் பன்முறை 
தாழ்ந்து வணங்கி, தோத்திரஞ் செய்து 
பிரியா விடை பெற்றுச், சிவபெருமானைச் 
சிந்தித்தவனாய்ச் தனது மனைவியோடு 
மந்தாகினியில் முழுகுதலும், தங்கள் 
ஊரிலுள்ள மாளிகை வாவிக் கரையில் 
யாவரும் வியக்கும்படி இருவரும் 
எழுந்தார்கள்.
அரசனுக்கும் இறைவன் ஆக்ஞையின்படி 
ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
அது வெகு 
திவ்விய ரூபத்தோடு பொலிந்தது. அரசன் 
அக் குழந்தைக்குத் தாலத்துவஜன் 
என்ற நாமகரணஞ் செய்தான். பின்னர் 
கால முறையில் தனது மகனுக்குப் 
பட்டங்கட்டி முடியுஞ் சூட்டினான். 
தாலத்வஜன் மன்னுயிர்களைத் 
தன்னுயிரெனக் கருதிச் செங்கோல் 
செலுத்தி உலகைப் புரந்து வருதலைக் 
கண்டு அரசன் பேருவகை பூத்தான்.
 பன்னீராயிர வருட முடிவில் 
சிம்ஹத்வஜனும் மந்தாரலக்ஷ்மியும் 
சிவபிரான் றிருவடி நீறலிற் சேர்ந்தனர். 
இருவரும் 'அவன் அருளாலே அவன்றாள் 
வணங்கி' அழியாப் புகழுக்குப் 
பாத்திரரானார்கள். தாலத்வஜனும் பன்னாள் 
இவ்வுலகை ஆண்டிருந்து அரன் 
சேவடியடைந்தான்.
 காசித்தலத்தின் அருமையையும் கங்கா 
நாயகன் பெருமையையும் எடுத்தோதும் 
இக்கதையைக் கேட்போர்க்கு அழியா 
மேன்மை உண்டாகும்; அவர்செய்த 
பாபங்களெல்லாம் நசிக்கும்; புகழும் 
புண்ணியமுந் தோன்றும்; 
என்றும் சிவம் பெருகும்.
 இங்ஙனம் சிவபக்த சிரோமணியாகிய 
சூதமுநிவர்; இக்கதையைப் பத்திச்சுவை 
நனி சொட்டச் சொட்டச் சொல்லியருள, 
நைமிசாரணிய முநிவர்களும் அன்பினால் 
மனமுருகி 'அரகர' என்று சொல்லித் 
தொழுதார்கள்.

Monday, 30 March 2020

சிவபுராணம் ( 5 )


சிவ புராணம்
அத்தியாயம் 5



மன்மத தகனம்

சோணிதபுரியில் தாரன் என்னும் அசுரன் இருந்தான். அவன் மகன் தாரகன் என்பவன் ஒரு சமயம் தன்னுடைய ஆசிரியரிடம் சென்று, ’தேவர்கள் எல்லோராலும் பணிந்து கொண்டாடப்படக்கூடிய பராக்கிரமம் அடைய என்ன செய்யலாமென்று கேட்டான். அவரும் பிரம்மதேவனைக் குறித்துக் கடுமையாக தவம் செய்யும்படி கூறினார்.

ஆசிரியரின் வார்த்தைப்படி தாரகன் தவம் செய்யப் புறப்பட்டான். மது என்னும் அசுரனுடைய அழகிய வனத்தில் இரு கைகளையும் உயரே தூக்கியபடி ஒரு காலை மடக்கிக் கொண்டு மற்றொரு காலைப் பூமியில் ஊன்றியவாறு நூறு வருடங்கள் தவம் செய்தான். பிரம்மதேவன் பிரத்தியக்ஷமாக வில்லை. அதன்பிறகு கால் பெருவிரலை மட்டும் ஊன்றியபடி ஜலத்தை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு தவம் செய்தான். அப்போதும் பிரம்மா அவன் முன்பு தோன்றவில்லை. பிறகு, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டும், நீரில் இருந்து கொண்டும், வெய்யிலில் இருந்தபடியும், பஞ்சாக்னியின் மத்தியில் இருந்தவாறும் அனேக ஆண்டுகள் தவம் செய்தான். அவன் சிரசிலிருந்து யோகாக்னி கிளம்பி தேவலோகம் வரை சென்று தகித்தது. அதன் வெப்பத்தைத் தாங்க மாட்டாது தேவர்கள் வருந்தினர். எல்லோரும் பிரம்ம தேவனிடம் சென்று பூலோகத்தில் தாரகன் மேற்கொண்டுள்ள தவத்தைப் பற்றியும் அதன் கொடுமை தாங்காது தாங்கள் தவிப்பதையும் முறையிட்டு அவனுக்கு வரங்கள் கொடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டனர்.

தேவர்களின் கோரிக்கை அர்த்தமற்றதாக இருந்தது. வரங்களைப் பெறும் வரையில் தாரகனும் தான் செய்யப் புகுந்த தவத்தை நிறுத்தப் போவதில்லை. நாளுக்கு நாள் அதன் உக்கிரம் அதிகமாகி தேவலோகத்துக்கே நாசம் வந்துவிடும் என தெரிந்ததும், கடைசியில் வேறு வழியின்றிப் பிரம்மதேவன் அசுரனுக்கு தரிசனம் கொடுத்து, தாரகா! உன் தவத்தை மெச்சினேன், உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

தாரகன் அவரை வலம் வந்து வணங்கி, பிரபோ ! தாங்கள் தயை கூர்ந்து நான் கேட்கும் இரண்டு வரங்களை அளிக்க வேண்டும். முதலாவது, எனக்கு இணையாகப் பராக்கிரமம் உள்ளவன் விண்ணுலத்திலும் சரி, மண்ணுலகத்திலும் சரி எங்குமே இருக்கக்கூடாது. இரண்டாவதாக, சிவபெருமானுடைய வீரியத்திலிருந்து உண்டாகின்ற பிள்ளையாலன்றி வேறு எவராலும் எனக்கு அழிவு கூடாது. இந்த இரண்டு வரங்களையே நான் விரும்பிக் கேட்கிறேன்" என்றான்.

பிரம்மதேவன் அவ்வாறே அவன் கோரிய இரு வரங்களையும் அளித்துவிட்டு மறைந்தார். அசுரன் பெருமகிழ்ச்சியோடு தன் பட்டணமாகிய சோணிதபுரிக்குத் திரும்பினான்.

தாரகன் கடுமையாகத் தவம் செய்து பிரம்மதேவனிட மிருந்து அழிவற்ற ஆசிகளைப் பெற்று திரும்பியிருக்கிறான் என்ற செய்தியை அறிந்ததும், உலகெங்கிலும் வியாபித்திருந்த அரக்கர்கள் அவனை வந்தடைந்து, அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக் கொண்டனர். இதனால் கர்வம் அடைந்த அசுரன், பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் எனப்படும் நான்கு வருணத்தாரையும், தேவர்கள், யக்ஷர்கள், கிம்புருடர்கள் ஆகியோரையும் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினான். அனைவரும் அவனுக்கு பணிந்தனர்.

இந்திரனிடமிருந்து உச்சைச்ரவஸ் எனப்படும் குதிரையும்,
யமனிடமிருந்து தண்டமும், ருணனிடமிருந்து உத்தம ஜாதி குதிரைகளையும்,  குபேரனிடமிருந்து  கதை, நவநிதிகள் ஆகியவையும், மகரிஷிகளிடமிருந்து காமதேனுவையும் அவன் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொண்டான். மற்றும் எங்கெல்லாம் உயர்ந்த பொருள்கள் இருந்தனவோ அவற்றை யெல்லாம், அவன் தனதாக்கிக் கொண்டான். ஸமுத்திரராஜன் அவனுக்குப் பயந்து தன் மடியிலிருந்த ரத்தினங்களைக் கொடுத்தான். அசுரனின் சௌகரியத்துக்கேற்ப சூரியன் உஷ்ணத்தைப் பரப்பினான். சந்திரன் சதா அசுரனின் பக்கத்திலேயே இருந்தான். வாயுவோ தன் சக்தியைக் காட்டப் பயந்து அசுரனின் விருப்பப்படி வீசினான். தேவர்களுக்கு அளிக்கப்படும் அவிர்ப்பாகமும், பிதுர்களுக்கு அளிக்கப் பட்டவையும் அசுரனையே அடைந்தன.

இந்தவிதமாகச் சகல லோகங்களையும் தன் ஆக்கினைக்கு உட்படுத்தி அசுரன்அட்டகாசம் செய்து வரும்போது, ஒரு நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பிரம்மதேவனிடம் சென்று தங்கள் துயரை அறிவித்தனர்.

பிரபோ! எங்களைக் காத்து ரக்ஷிக்க வேண்டிய தாங்கள் இவ்வாறு கவனிக்காதிருப்பது தர்மமா? தாரகனின் அட்டகாசங்களுக்கு இனியும் எங்களால் ஈடுகொடுக்க முடியாது. தேவரீர்தான் அவனை அழித்து எங்களை ரக்ஷிக்க வேண்டும்" என்று பிராத்தித்தனர்.

தேவர்களே! அசுரனின் அழிவுக்கு நம்மால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. சிவபெருமானுடைய வீர்யத்திலிருந்து உண்டாகின்ற குமாரனால்தான் தனக்கு அழிவு ஏற்பட வேண்டும் எனத் தாரகன் வரம் பெற்றுள்ளான். ஈசனோ இமயபர்வதத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவர் நிஷ்டையைக் கலைப்பது என்பது சாமானிய காரியமா? அவராக எப்போது கண் விழிப்பார் என்பதும் தெரியாது. அவருடைய பணிவிடைக்காக இமவான், தன் குமாரத்தியான பார்வதியை இரு தோழிமாரோடு நியமித்திருக்கிறான். கைலாசநாதனது நிஷ்டை கலைந்து பார்வதியும் அவரும் ஒன்று சேர்வார்களானால் அசுரனின் அழிவுக்குக் காரண பூதரான குமாரர் அவதரிப்பார்" என்று தெரிவித்தார் நான்முகன்.

அவர் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தவர்களாய் தேவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பினர். அடுத்தபடியாகக் கைலாசநாதரின் நிஷ்டையைக் கலைத்து அவரையும் பார்வதியையும் ஒன்று சேர்க்க என்ன வழி என்பதை அவர்கள் ஆலோசித்தனர். அப்போது தேவேந்திரன் மனத்தால் மன்மதனை நினைத்தார்.

அந்த க்ஷணமே மன்மதன் தன் மனைவி இரதியோடு அவர் முன்பு வந்து நின்றான். இந்திரனை வணங்கி அமரர் கோனே, என்னால் ஆகவேண்டிய காரியம் என்ன?" என்று கேட்டான் மன்மதன்.

மன்மதா, மகரத்வஜா! உன்னால் ஓர் அரிய காரியம் முடிய வேண்டியிருக்கிறது. தேவர்களுக்கு ஆப்தனாக விளங்கும் உன்னால்தான் அக்காரியம் செய்யமுடியும். எனக்கும் உன்னைவிட நெருங்கிய நண்பன் வேறு எவருமில்லை. எதிரிகளை அழிப்பதற்காகப் பிரம்மதேவன் எனக்கு இரண்டு அஸ்திரங்களைக் கொடுத்தார். ஒன்று வஜ்ஜிராயுதம், மற்றொன்று உன்னையே எனக்கு உதவியாகத் தோற்று வித்திருக்கிறார். வஜ்ஜிராயுதத்தைவிட உன்னை மேம்பட்டதாக உயர்த்திக் கூறலாம். ஏனெனில் வஜ்ஜிராயுதம் கூட தன் சக்தியை இழந்து நிற்பதுண்டு. ஆனால் நீயோ தோல்வி என்பதையே கண்டதில்லை. உன் மன்மத பாணங்களுக்குப் பணியாதவர் யார் இருக்கிறார்கள்?" என்றெல்லாம் இந்திரன் தம்முன் நிற்கும் மன்மதனைப் புகழ்ந்தான்.

தேவேந்திரனின் புகழ்ச்சி நிறைந்த வார்த்தைகளால் உள்ளம் களிப்புற்ற மன்மதன் அவனைப் பார்த்து, தேவராஜா, நீ உண்மையைத்தான் எடுத்துச் சொல்கிறாய், நான் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல். இப்போதே அதை நிறைவேற்றக் காத்திருக்கிறேன். உன் பதவிக்கு ஆபத்து உண்டாகும்படி யாராவது தவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா? அவர்கள் இருக்குமிடத்தைச் சொல். உடனே அங்குச் சென்று அத்தவத்தைக் கலைத்து உனக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை நிவர்த்திக்கிறேன். என் மன்மத பாணங்களுக்கு அடிமையாகாத உள்ளம் கிடையாது. கைலாசநாதனே கூட அதற்குப் பணியக் கூடியவர்" என்று பெருமையாகக் கூறினான்.

மன்மதா! எங்கள் உள்ளத்தில் இருப்பதைத் தான் நீயும் சொல்லுகிறாய். உலகத்தில் கொடையாளிக்குப் பஞ்சம் ஏற்படும் போதும், வீரனுக்கு யுத்தத்திலும், நண்பனுக்கு ஆபத்துக் காலத் திலும் தான் தங்கள் உறுதியைக் காட்டக்கூடிய சந்தர்ப்பம் உண்டாகிறது. பெரும் துன்பத்தில் இருக்கும் தேவர்களுக்கு உன் உதவி இன்றியமையாததாக இருக்கிறது. நீ செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேள். தாரகன் என்னும் அசுரன், சிவபெருமானுடைய வீரியத்தில் இருந்து தோன்றும் குமாரனால் தான், தனக்கு அழிவு ஏற்பட வேண்டும் என்று வரம் பெற்றுள்ளதால், அவனை அழிக்க எங்களால் எதுவும் செய்ய முடியாதிருக்கிறது. ஈசனோ ஹிமாசலத்தில் யோக நிஷ்டையிலிருக்கிறார். அவருக்குப் பணிவிடை செய்ய, இமவான் தன் குமாரத்தி பார்வதி தேவியை இரு தோழிகளுடன் பணித்துள்ளான். அவருடைய யோகம் கலைந்து, தேவியிடம் மோகம் கொள்ளும்படி நீ செய்ய வேண்டும். தேவர்களின் துயரம் நீங்க இந்த உதவியை நீ செய்தாக வேண்டும்" என்று அவனைக் கேட்டுக் கொண்டான் இந்திரன்.

மன்மதனும் அவ்வார்த்தைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மனைவியோடும், நண்பன் வசந்தனோடும் ஹிமாசலத்துக்குப் புறப்பட்டான்.
மன்மதன் இமய பர்வதத்துக்கு வந்தபோது சிவபெருமான் கண்களை மூடி யோக நிஷ்டையிலமர்ந்திருந்தார். அப்போது வசந்த காலம். எங்குப் பார்த்தாலும் மரங்களும் கொடிகளும் மலர்களைச் சொரிந்திருந்தன. பக்ஷி ஜாதிகள் ஆனந்தமாகக் கூவிக்கொண்டும் பறந்து கொண்டுமிருந்தன.
வனத்திலிருந்து மலர்களைக் கொய்து எடுத்து வந்த பார்வதி தேவி, சிவபூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். எழில் பொங்கும் அவள் சௌந்தர்ய ரூபத்தைக் கண்ட மன்மதன் இதுவே தகுந்த தருணமென்று எண்ணி, கையில் பிடித்திருந்த வில்லை வளைத்து நாணேற்றிப் பாணங்களை எய்தான்.
வில்லிலிருந்து புறப்பட்ட பாணங்கள், யோகத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமானைத் தாக்கியதும் அவர், நிஷ்டை கலைந்து கண்களைத் திறந்தார். எதிரே அற்புத ரூப சௌந்தர்யத்தோடு நிற்கும் பார்வதியைக் கண்டதும் அவளை அடைய அவர் உள்ளம் விழைந்தது.
அடுத்தக் கணமே அவருக்கு அந்த எண்ணம் மாறியது. யோகத்தில் அமர்ந்திருந்த தம்மைக் கண் விழிக்கச் செய்தது யார் என்பதை அறிய நாற்புறமும் பார்த்தார். பக்கத்திலே கரும்பு வில்லுடன் நிற்கும் மன்மதனைக் கண்டதும் அவருக்குச் சொல்லவொண்ணாக் கோபம் உண்டாயிற்று. எவராலும் வெற்றி கொள்ள முடியாத தம்மை, ஒரு கணத்தில்  மன்மதன் வெற்றி கொண்டு விட்டானே என்பதை நினைத்தபோது அவர்  கோபம் பன்மடங்காகியது. அப்போது அவரது நெற்றிக் கண்ணிலிருந்து ஜ்வாலையோடு கூடிய அக்கினி வெளிப்பட்டது. மன்மதன் அதில் எரிந்து சாம்பலாகி விட்டான். சிவபெருமான் இனி அங்கு அமர்ந்து யோகம் செய்ய முடியாதென்று வேறு இடம் சென்றார். பார்வதி தேவியும் ஈசனின் வடிவிலே லயித்தவளாய், அவர் நினைவால் அலைக் கழிக்கப்பட்ட மனத்தோடு பெற்றோரிடம் திரும்பினாள்.
இது இப்படியிருக்க, கணவனுக்கு நேரிட்ட கதி கண்டு, இரதி தேவி ஆறாத்துயரம் கொண்டாள். வனத்திலே அவள் தலைவிரி கோலமாகக் கீழே விழுந்து புரண்டு அழுதாள்.

தேவர்களே! உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்! ஏன் இப்படி என்னை வஞ்சித்துவிட்டீர்கள்? உங்கள் கஷ்டங்கள்  நீங்குவதற்காகத்தானே அவரை அனுப்பி வைத்தீர்கள்? இப்போது நான் அவரை எவ்வாறு அடைவேன்?" என்றெல்லாம் கதறினாள்.

ஹே பிரபோ! சர்வேச்வரா! இது நியாயம் தானா? என் கணவர் என்ன தவறு செய்தார்? தேவர்களின் வேண்டுகோ ளுக்கிணங்கி அவர்களுக்கு நன்மை செய்யவே இப்பணியை அவர் மேற்கொண்டார். இது தவறென்றால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தேவர்கள் அன்றோ" என்று பிரலாபித்தாள்.

இரதி  தேவியின் அழுகுரலைக் கேட்டு அந்த வனமே துயரம் கொண்டது. செடி கொடிகள் தங்கள் பூரிப்பை விட்டு, வாடித் தலைகுனிந்து நின்றன. பட்சிகளும், மிருகங்களும் குதூகலத்தை விட்டு விட்டுச் சோகமே உருக் கொண்டன.

தேவர்களும் விவரிக்க முடியாத துயரம் அடைந்தனர். அனைவரும் இந்திரனின் தலைமையில் ஒன்று கூடி ஈசனை அடைந்தனர்.

சர்வேச்வரா! தாங்கள் தான் அபயமளிக்க வேண்டும். தங்கள் யோகத்தைக் கலைக்க மன்மதன் மேற்கொண்ட காரியம், தங்களிடம் அவன் திறமையைக் காட்டுவதற்காக அல்ல. பிரபோ! தாரகாசுரனால் நாங்கள் பட்டு வரும் அவதியைக் குறைக்கவே இந்தக் காரியத்தில் அவன் இறங்க நேர்ந்தது. உலகம் க்ஷேமமுற வேண்டும் என்பதற்காகவே அவன் இக்காரியத்தில் ஈடுபட்டான். தேவரீர் கோபம் கொள்ளக் கூடாது. இரதி தேவி படும் துயரை எங்களால் சகிக்க முடியவில்லை. தயவு செய்து மனமிரங்கி அவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும்" என்று பிராத்தித்தனர்.

தேவர்களே! இரதியின் துக்கத்தை நான் அறிவேன். இருப்பினும் நடந்தது நடந்ததுதான். மன்மதனை உயிர்ப்பிப்பது என்பது இயலாத காரியம். ருக்மிணிபதியான கிருஷ்ணன் துவாரகையில் வசிக்கும் காலத்தில், அவளிடத்தில் பிரத்தியும்னன் என்ற பெயரோடு மன்மதன் பிறப்பான். அப்போதுதான் அவனுக்கு உருவம் ஏற்படும். அதுவரை அவன் அருவமாகவே இருந்து வருவான். பிரத்தியும்னன் பிறந்து வளர்ந்து வரும் சமயத்தில் ஒரு நாள், சம்பரன் என்னும் அசுரன் இரதியை அபகரித்துச் செல்வான். மன்மதனும் சம்பரனை யுத்தத்தில் அழித்து அவனுடைய அளவற்ற திரவியங்களோடு இரதியை அழைத்துக் கொண்டு துவாரகை அடைவான். இரதியும் அதுவரை அவன் பட்டணத்தில் இருந்து வரட்டும்" என்று அருளினார், சிவபெருமான். அவர் வார்த்தைகளைக் கேட்ட தேவர்களும், இரதிதேவியும் துக்கத்தை விட்டு ஒருவாறாக மனத்தைத் தேற்றிக் கொண்டு தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பினர்.



ஹரி ஓம் !


Saturday, 28 March 2020

சிவபுராணம் ( 4 )

சிவபுராணம்
அத்தியாயம் 4


4. தக்ஷன் கர்வ பங்கம்

தக்ஷனுக்கு பிறந்த அறுபது பெண்களில் ஸதிதேவியும் ஒருத்தி. அவளை ஈசனுக்கு மணம் செய்து கொடுத்தான் அவன். சகல தேவர்களாலும் வணங்கப் பெறும் கைலாச நாதனான ஈசன், தனக்கு மருமகனாகக் கிடைக்கப் பெற்றது கண்டு அவன் அளவில்லா ஆனந்தமடைந்தான். இந்த சம்பந்தத்தின் மூலம், தான் தேவர்களுக்கும் மேலான வனாகி விட்டோம் என்ற பெருமை அவனிடம் குடிகொண்டது. அதன் காரணமாக அவனிடம் மமதை உண்டாகிவிட்டது.

மமதையே அழிவுக்குக்  காரணகர்த்தா என்பதைத் தக்ஷன் உணரவில்லை. ஒரு சமயம் அவன் கைலயங்கிரிக்குச் சென்ற போது ஈசன் தன்னைச் சரியாக கவனிக்கவில்லை என்று அவரிடம் விரோதம் கொண்டான். கைலாசநாதன் தக்ஷப் பிரஜாபதியைத் தம்முடைய மாமனார் என்ற முறைக்குச் சிறிதும் பங்கம் வராது கௌரவம் அளித்து வந்தார். ஆனால் தக்ஷன் எண்ணியது போல் அவன் மகளை மணந்தது காரணமாக அவன் அவரினும் உயர்ந்தவனாகி விட்டான் என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. இதனால் இருவரிடையேயும் வேற்றுமை அதிகமாகியது.

ஈசனிடம் விரோதம் கொண்டு தன் இருப்பிடம் திரும்பிய தக்ஷன் விஷயத்தை அத்தோடு விட்டு விடவில்லை. ஈசன் தன்னைவிடத் தாழ்ந்தவன் என்பதை நிரூபித்து விடுவது என்ற உறுதியில் யாகம் ஒன்றைத் தொடங்கினான். அந்த யாகத்தில் ஈசனுக்கு அவிர்ப்பாகம் கிடையாதென்று முடிவு செய்தான். தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பினான். பெண்களையும், மருமகன்களையும் யாகத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு சொல்லி அனுப்பினான். ஆனால் சிவனையும், ஸதி தேவியையும் மட்டும் அழைக்கவில்லை.

தந்தை செய்யப் போகும் பிரம்மாண்டமான யாகத்தைப் பற்றி ஸதி கேள்விப்பட்டாள். தந்தையிடமிருந்து அழைப்பு வரா விட்டாலும் யாகத்துக்கு தான் போக வேண்டுமென்று விருப்ப மேற்பட்டது தேவிக்கு. கணவனிடம் தன் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்தாள்.

சிவபெருமானும் தக்ஷன் செய்யப்போகும் யாகம் பற்றி அறிந்திருந்தார். தமக்கு அவிர்ப்பாகம் இல்லையென்ற உறுதியோடு செய்யப்போகும் அந்த யாகம் நிறைவேறப் போவதில்லையென்றும் அழையா வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்வதால் அவமானம் ஏற்படும் என்றும் தெரிவித்து, தேவியைப் போக வேண்டாம் எனத் தடுத்தார். தேவியோ அதற்கு இணங்காது யாகத்துக்குப் புறப்பட்டாள்.

யாகசாலையில் தேவியை யாரும் மகிழ்ச்சியோடு வரவேற்க வில்லை. கணவன் தெரிவித்ததுபோல் அவமானம் ஏற்பட்டதைக் கண்டு சீற்றமடைந்த தேவி, கைலயங்கிரி திரும்ப விரும்பாமல் அங்கேயே யாக குண்டத்தில் குதித்து தமது தேகத்தை விடுத்தாள்.

எவ்வளவோ தடுத்தும் கேளாமல் புறப்பட்ட தேவி, அங்கே அவமானமுற்று யாக குண்டத்திலேயே தன் தேகத்தை விடுத்து விட்டாள், என்பதை அறிந்த சிவபெருமான் சொல்ல முடியாத கோபம் அடைந்தார். அவரது கோபத்திலிருந்து வீரபத்திரன் தோன்றினான்.

வீரபத்திரா! இப்போது தக்ஷன் யாகம் செய்யுமிடத்துக்குச் சென்று அவன் யாகத்தைத் துவம்சம் செய்து அவனையும் அழித்து வா!" என்று உத்திரவிட்டு அனுப்பி வைத்தார் ஈசன்.

அவ்வாறே புறப்பட்டுச் சென்ற வீரபத்திரன், தக்ஷனுடைய யாகசாலையை அடைந்தான். மிகவும் உக்கிரமான தோற்றத்துடன் யாக சாலையினுள் நுழைந்து, அதைப் பல விதங்களிலும் அழித்து நாசமாக்கினார். சிவனுக்கு அவிர்ப்பாகம் தராமல் நடத்தப்படும் யாகத்துக்கு வந்திருந்த இதர தேவர்களையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவர்களுக்குக் கொடுமைகள் பல இழைத்தான். தக்ஷனை இழுத்து வந்து அவன் தலையைத் துண்டித்து எறிந்தான்.

தண்டிக்கப்பட வேண்டியவன் தக்ஷனாக இருக்க, யாகத்துக்கு வந்திருந்த இதர தேவர்களும், முனிவர்களும் வீரபத்திரனால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்ட முனிசிரேஷ்டர்கள், கைலாசநாதனைச் சரண் அடைந்து அவரைத் துதித்தனர். ஈசனும் அவர்கள் பால் கருணை கொண்டு அனைவரையும் உயிர்ப்பித்து அவரவர் இருப்பிடம் செல்ல அனுமதித்தார். தக்ஷனும் தன் தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

யாக குண்டத்திலே தேகத்தை இட்ட ஸதிதேவி, ஜ்வாலையாக விளங்கினாள். இந்திரன் முதலான தேவர்கள் அந்த ஜ்வாலையை வழிபட்டனர். இந்த ஜ்வாலை, பூலோகத்தில் ஹிமவத் கிரியில் வந்து விழுந்தது. அந்த இடமே ஜ்வாலாமயமாக ஆயிற்று.

கணவனின் வார்த்தைகளைக் கேட்காமல் சென்றதால் அவமானமுற்ற ஸதி, தக்ஷனின் மகளாக இருக்கும் அந்தப் பிறவியில் மறுபடியும் ஈசனை அடைய விருப்பப்படாது, திரும்பவும் பூலோகத்தில் பிறந்து ஈசனை மணக்கவே ஆசைப் பட்டாள். இமவானின் வெகுநாளைய ஆசையை நிறைவேற்ற, அவன் புத்திரியாக அவன் மனைவி மேனையிடம் பார்வதியாக வந்து அவதரித்தாள்.



ஹரி ஓம்!!!