Monday, 6 April 2020

சிவபுராணம் ( 7 )

சிவபுராணம்  ( 7 )

7. பார்வதி பரிணயம் 
பார்வதிக்குத் தரிசனம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிய ஈசன் நேராக காசி க்ஷேத்திரத்தை அடைந்தார். மனத்திலே சப்த ரிஷிகளையும் நினைத்தார். அவர் நினைத்த மாத்திரத்திலேயே சப்த ரிஷிகளும் அருந்ததியோடு அங்கு வந்து சேர்ந்தனர்.
சர்வேசா! நாங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? எந்தக் காரியத்தை உத்தேசம் செய்து எங்களை மனத்தால் நினைத்து வரவழைத்தீர்கள்?" என்று அஞ்சலி செய்து வேண்டினர்.
முனிசிரேஷ்டர்களே! உங்களால் ஒரு காரியம் நடக்க வேண்டியிருக்கிறது. தாரகாசுரனால் தேவர்களும் முனிவர் களும் சொல்லொணாக் கொடுமைக்காளாகி வருகின்றனர். எனக்குப் பிறக்கும் குமாரனாலே தனக்கு அழிவு வேண்டும் என வரம் பெற்றுள்ளான் அசுரன். அவனை அழித்துத் தேவர்கள் துயரைத் துடைக்கக் குமாரன் அவதரிக்க வேண்டும். பர்வதராஜனாகிய இமவான் புத்திரியான பார்வதி என்னையே மணக்க வேண்டுமென்று கடுமையாகத் தவம் செய்துள்ளாள். ஆகவே, நீங்கள் பார்வதியின் பெற்றோரை சந்தித்து நம் விருப்பத்தை பக்குவமாக அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் சம்மதத்தைப் பெற்று வாருங்கள்" என்றார், ஈசன்.
மஹாதேவனின் உள்ளக் கிடக்கையை அறிந்த முனிவர்கள் எழுவரும், கிடைத்தற்கரிய பாக்கியமாக அப்பணியைச் சிரமேற் கொண்டு புறப்பட்டனர்.
கோடிசூரியப் பிரகாசமாய் முனிவர்கள் எழுவரும் ஆகாய மார்க்கமாக வந்து இறங்கியபோது, இமவான் அளவில்லா ஆனந்தம் கொண்டு மனைவியோடு ஓடிவந்து அவர்களை எதிர்கொண்டு அழைத்தான்.
தவசிரேஷ்டர்களே! நான் எத்தனையோ மகத்தான புண்ணியங்களைச் செய்திருக்கவேண்டும். அதன் காரண மாகவே புண்ணியாத்மாக்களான உங்கள் பாததுளி என் கிருகத்தில் படும் பாக்கியம் ஏற்பட்டது. உங்கள் எழுவரையும் ஒருங்கே தரிசிக்கும் பேறு சாமானியமாகக் கிடைக்குமா!" என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்து போற்றினான் இமவான். பின்னர் அவர்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று உபசரித்தான்
பர்வதராஜனே! எங்களைத் தரிசித்த காரணத்தால் கிருதார்த்தனாகி விட்டேன் என்று மகிழ்ந்து  கொண்டாடினாயே, இப்போது உன்னைத் தேடி மாபெரும் பாக்கியம் ஒன்று வந்துள்ளது. அதனால் உன் வம்சமே விளங்கப் போகிறது. கைலாசநாதனான சிவபெருமான் தங்கள் குமாரத்தி பார்வதி தேவியை மணம் புரிய விருப்பம் தெரிவித்துள்ளார். தங்கள் குமாரத்தியும் அவரையே நாதனாக வரித்துள்ளாள். தங்களிடம் அவர் விருப்பத்தைத் தெரிவித்து உங்கள் அனைவருடைய சம்மதத்தையும் பெற்று வருமாறு எங்களை அனுப்பி வைத்தார்" என்றனர்.
மகரிஷிகளின் வார்த்தைகளைக் கேட்டதும் பர்வதராஜன் புளகாங்கிதமடைந்தான். 
பெரியோர்களே! உங்கள் வார்த்தைகள் என்னைப் பெரிதும் மகிழ்ச்சியூட்டுகிறது. கைலாசநாதனை மருமகனாகப் பெறுவது என் முன்னோர்கள் செய்த புண்ணிய கர்மாக்களின் பலனே என்று நினைக்கிறேன். என் மனைவியின் அபிப்பிராயமும் தெரிந்து கொள்ள வேண்டாமா?" என்று மேனையைப் பார்த்தான்.
மேனையின் முகம் சிறிது வாட்டமடைந்திருந்தது. ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு இந்த விஷயத்தில் விருப்பமில்லை. மகளின் பிடிவாதம் காரணமாகவே அவள் ஒதுங்கி இருக்க நேர்ந்தது.
அவள் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் எண்ணத்தை அறிந்த முனிவர் எழுவரும், அம்மா, மேனை! சர்வேச்வரனான சிவபெருமானைச் சாதாரணமாக எண்ணாதே. தேவர்களுக்கும் கிட்டாத பாக்கியம் உங்களுக்குக் கிடைத்துள்ளது" என்றனர்.
அருந்ததி, மேனையை அப்பால் அழைத்துச் சென்று ஈசனின் குணாதிசயங்களைப் பலவாறாக எடுத்துக் கூறி அவள் மனம் சம்மதிக்கச் செய்தாள். மனைவியின் விருப்பத்தையும் பெற்றுவிட்ட இமவான் தம் புத்திரியை அழைத்து வந்து ரிஷி புங்கவர்களையும், அருந்ததியையும், நமஸ்கரிக்கச் செய்தான்.
குழந்தாய் பார்வதி! உன் விருப்பப்படியே கைலாசநாதன் விரைவில் வந்து உன் கைப்பற்றுவார்!" என்று ஆசீர்வதித்தனர்.
பின்னர் எல்லோருமாகக் கூடிப் பேசித் திருமணத்துக்கு ஒரு சுபதினத்தைக் குறித்தனர். அங்கிருந்து அவர்கள் புறப் படும் போது இமவான் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாது தவித்தான். சப்த ரிஷிகளும் அவனை அனேக விதங்களில் சிலாகித்துப் பேசிப் பிரியாவிடை பெற்றுப் புறப்பட்டனர்.
காசியை அடைந்ததும் சப்த ரிஷிகளும் சர்வேச்வரனை அடைந்து இமவானின் அரண்மனையில் நடந்தவற்றை விவரித்துத் திருமணத்துக்கான தேதியையும் அறிவித்தனர்.
முனிசிரேஷ்டர்களே! திருப்தி ஏற்படும்படியாகத்தான்  செய்தி கொண்டு வந்துள்ளீர்கள். இதே போல் நீங்கள் அனைவரும் திருமணத்தைச் சிறந்த முறையில் நடத்திக் கொடுக்க வேண்டும்" என்றார் சிவபெருமான்.
சப்த ரிஷிகளுக்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டுக் கைலாசம் திரும்பிய ஈசன், நாரதரை வரவழைத்தார்.
பிரம்மபுத்திரா! இமவானின் குமாரத்தி பார்வதி தேவியை மணம் முடிப்பதென்று நிச்சயித்திருக்கிறேன். சகல தேவர் களுக்கும் செய்தி அனுப்பித் திருமணத்துக்கு வரவழைக்க வேண்டிய பொறுப்பு உன்னைச் சேர்ந்தது. முனிவர்கள், சித்தர்கள், கிம்புருடர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் எல்லோரையும் எப்படியெப்படி அழைக்க வேண்டுமோ அதன்படி கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
நாரதர், ஈச்வரனை நமஸ்கரித்து அவர் ஆசி பெற்றுப் புறப்பட்டார். அந்த க்ஷணமே அவர் பார்வதி பரமேசுவரன் திருக்கல்யாணம் பற்றித் தேவர்கள் முதலானவர்களை அழைக்கப் புறப்பட்டார். யார்  யாரை நேரில் சென்று அழைக்க வேண்டுமோ அவர்களை நேரில் சென்று கல்யாணத்துக்கு வந்திருந்து நடத்தி வைக்குமாறு அழைத்தார். ஓலை அனுப்ப வேண்டியவர் களுக்குத் தகுந்த தூதுவர்கள் மூலம் அனுப்பி வைத்தார். செய்தி அனுப்ப வேண்டியவர்களுக்கும் செய்தி விடுத்தார். இப்படியாக ஒருவரைக்கூட மறக்காமல் எல்லோரையும் கல்யாணத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு  அழைத்தார்.
இமவானாகிய பர்வதராஜனின் பட்டணம் திமிலோகப்பட்டது. மக்களுக்கு உற்சாகம் சொல்லி முடியாது. அரசனுடைய ஏற்பாடுகளில் தாங்களும் மும்முரமாக ஈடுபட்டனர்.
வீதிகள்தோறும் அழகு நிறைந்த தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன. ஆங்காங்கே பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்பட்டிருந்தன. திறந்தவெளிகளில் எல்லாம் பெரிய பெரிய கொட்டகைகள் போடப்பட்டு வரப்போகும் விருந்தினர்களுக் காகத் தயாராக இருந்தன. எங்கே திரும்பினாலும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம் கரை புரண்டோடியது. கல்யாணம் என்ற செய்தியைக் கேட்ட நாளிலிருந்து மக்கள் ஒவ்வொரு நாளையும் கோலாகலமாகக் கொண்டாடி வந்தார்கள்.
அரண்மனை சொர்க்கலோகமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. வண்ண வண்ணப் பட்டாடைகளையும் ஆபரணாதிகளையும் அணிந்து கொண்டு பெண்கள் போவதையும் வருவதையும் பார்க்கப் பார்க்கச் சலிப்பே ஏற்படவில்லை. உலகெங்கிலுமுள்ள பர்வதங்கள் அனைத்தும் மானுடரூபம் தாங்கி, பர்வதராஜனுக்கு உதவ வந்து சேர்ந்தன. நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அனைவரும் வேலை செய்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுத் திருமணமாகவே எண்ணி நிறைந்த உள்ளத்தோடு கல்யாண ஏற்பாடுகளில் கலந்து கொண்டனர்.
பர்வதராஜன், மகிழ்ச்சியால் பூரித்துப் போய் ஒரு சுற்று பெருத்து விட்டான் எனலாம். திருமணத்துக்காக வந்து குவியும் நண்பர்களையும், உறவினர்களையும் ஏற்பாடுகளின் நடுவில் கண்டு குசலம் விசாரித்து வந்தான்.
இங்கே இவ்வாறிருக்கக் கைலாசத்திலும் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்திரன் முதலான தேவர்களும், கந்தர்வர்களும், அப்ஸரஸ் ஸ்திரீகளும் கைலாசத்தில் வந்து கூடினர். பிரம்மதேவர் சரஸ்வதி ஸகிதமாக ஹம்ஸ வாகனத்தில் சகல ரிஷகளும் புடை சூழ வந்து சேர்ந்தார். வைகுந்தத்திலிருந்து விஷ்ணு சர்வாபரணபூஷிதராய் வந்து சேர்ந்தார். அஷ்ட வசுக்கள், துவாதச ஆதித்தர்கள், திக்பாலகர்கள் ஆகியோரும் தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தனர்.
மங்கள நீராடலுக்குப் பிறகு சிவபெருமான் மாப்பிள்ளைக் கோலத்தில் தயாரானார். திருமுடியிலிருந்த பிறைச்சந்திரன் கிரீடத்தின்  மத்தியில் அழகிய ஆபரணமாகத் திகழ்ந்தான். நெற்றிக்கண் திலகமாகப் பிரகாசித்தது. இடுப்பிலே அணிந்திருந்த தோல் ஆடை, அழகிய பட்டாடையாக மாறியது. காதுகளில் அணிந்திருந்த சர்ப்பங்கள் இரத்தின குண்டலங்க ளாயின. அவ்வாறே கைகளிலும் கால்களிலும் அணிந்து கொண்டிருந்த சர்ப்பங்களும் பொன்னாபரணங்களாகப் பிரகாசித்தன. விஷ்ணு, பிரம்மன் முதலானோர் சர்வேச்வரனை தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அலங்காரம் செய்தனர்.
குறித்த வேளையில் சிவகோஷம் எட்டுத் திசைகளிலும் எதிரொலிக்க, மணமகன் கோஷ்டியினர் இமவானின் பட்டணத்துக்குக் புறப்பட்டனர். பூதகணங்களும் தேவர்களும் சிவநாமத்தைப் பஜனை செய்து கொண்டு முன்னால் சென்றனர். அப்ஸரஸ் ஸ்திரீகள், ஈசுவரனின் குணாதிசயங்களைப் போற்றிப் புகழ்ந்து பாடி ஆடியபடி சென்றனர். மத்தளம், மிருதங்கம், சங்கம், எக்காளம் முதலான வாத்தியங்கள் முழங்கின. ஆதிசேஷன் தன் ஆயிரம் முகங்களாலும் சங்கத்வனி முழங்கினான். வாயு தேவன் ஆலவட்டம் பிடித்தான். அக்கினி தூபம் ஏந்தினான், வருணன் பூர்ண கும்பம் ஏந்தினான். குபேரன் வழியெங்கும் நவநிதிகளை இறைத்தான். நாகராஜர்கள் மாணிக்க தீபம் ஏந்தி வந்தனர். வேதங்கள் பகவானின் திருவடியைத் தாங்கின. கங்கை முதலான புண்ணிய நதிகள் பகவானுக்குச் சாமரம் வீசின, குண்டோதரன் பகவானுக்குக் குடை பிடித்தான். விஷ்ணுவும், பிரம்மாவும் இரு பக்கங்களிலும் வந்தனர். ரிஷிகளும் முனிவர்களும் வேத கோஷம் செய்தபடி பின்தொடர்ந்தனர். நந்திதேவர் பொற்பிரம்பைக் கையிலேந்திக் கூட்டத்தினரை ஒழுங்காக நடத்திச் சென்றார். இத்தனை கோலாகலத்தோடு சர்வாலங்கார பூஷிதராகச் சிவன், ரிஷப வாகனத்தில் அமர்ந்து புறப்பட்டார்.
கைலயங்கிரியிலிருந்து பகவான் தம் கணங்கள் புடை சூழப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறாரென்றும் நகரைச் சமீபித்து விட்டாரென்றும் செய்தி கேட்டுப் பர்வதராஜனின் அரண்மனையில் பரபரப்பு மிகுந்தது. பகவானைத் தகுந்த முறையில் எதிர்கொண்டழைக்க இமவான் எல்லோரையும் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான்.
ஊரும் உலகமும் ஒருங்கே கொண்டாடும் சிவனைப் பார்க்க விரும்பிய மேனை, உப்பரிகையின் உச்சியில் ஏறி நின்றாள். அவள் அருகில் நின்ற நாரதர் தூரத்தே வந்து கொண்டிருக்கும் சங்கரனின் கோஷ்டியினரைக் காட்டிக் கொண்டிருந்தார்.
கந்தர்வரும், தேவதாசிகளும் புடைசூழ அலங்காரமாக வந்து கொண்டிருந்த கந்தர்வராஜன் விசுவாவசுவைக் கண்ட மேனை, நாரதரிடம், மகரிஷி! இதோ வருகின்றாரே, அவர்தானே பார்வதியை மணக்கப் போகும் பரமன்?" என்று கேட்டாள்.
நாரதர் சிரித்து விட்டார்.
ஏன் சுவாமி, சிரித்தீர்கள்?" என்று கேட்டாள் மேனை.
தேவி, இவன் யார் தெரியுமா? ஈசனின் சந்நிதானத்தில் கீதம்பாடும் கந்தர்வராஜன் விசுவாவசு!" என்றார் நாரதர்.
மேனை ஆச்சர்யத்தால் ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் விட்டாள். சந்நிதானத்தில் இசைபாடும் இவனே இத்தனை சௌந்தர்யவானாக இருப்பானாகில், சங்கரன் எப்படித் தோன்றுவாரோ என்று வாயைப் பிளந்தாள். எல்லோரும் புகழ்வதற்கேற்ப, பார்வதி யாராலும் அடைய முடியாத பாக்கியத்தைத் தான் அடைந்திருக்கிறாள் என்று எண்ணிய போது அவள் உள்ளம் நிறைந்தது.
அடுத்தபடியாக யக்ஷர்கள் புடைசூழ குபேரன் வந்தான்.
இவர் தானா, சுவாமி?" என்று கேட்டாள் மேனை.
இல்லை, அம்மா! இவன் நவநிதிகளுக்கும் அதிபதியான குபேரன்!" என்றார் நாரதர்.
குபேரனைத் தொடர்ந்து வந்த வருணன், தர்மராஜன், இந்திரன் முதலானோரையும் ஒவ்வொருவராக ‘இவர் தான் பரமசிவனா?’ என்று கேட்டு வந்தாள் மேனை. அவள் கேட்ட போதெல்லாம் நாரதர் இல்லை" என்று மறுத்துக்கூறி அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் எடுத்துச் சொல்லி வந்தார். அவர் கூறுவதைக் கேட்கக் கேட்க மேனையின் உற்சாகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ‘பார்வதி, உனக்குக் கிடைத்துள்ள பாக்கியம் இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை. இனி யாருக்கும் கிடைக்கப் போவதும் இல்லை’ என்றெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
சகல தேவர்கள் சூழ்ந்து வர, கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தோடு வந்த சூரியனைக் கண்டதும், மேனை கண்களை அகலவிரித்து, மகரிஷி! இவர் தானா நீங்கள் புகழ்ந்து போற்றும் பரமேச்வரன்?" என்று கேட்டாள்.
மேனை, இவன் தான் சூரியன். இவர்களெல்லாம் பகவானை எப்போதும் அடிபணிந்து போற்றக் கூடியவர்கள். அவரது ஆக்ஞைக்குட்பட்டுச் சதா காலமும் இயங்கி வருகிறார்கள்" என்றார்.
மேனைக்குப்  பெருமை தாங்கவில்லை. தன்னைச் சுற்றி ஒரு தரம் பார்த்துக் கொண்டாள். குனிந்து அரண்மனை வெளி முற்றத்தைப் பார்த்தாள். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்ததும் அவள் நெஞ்சம் பெருமையால் நிமிர்ந்தது. ம்.... இருங்கள் நீங்களும் என்னைப் போல் தான் ஏமாந்து போகப் போகிறீர்கள் !" என்று சொல்லிக் கொண்டாள்.
சந்திரனுக்கு பின்னால் ஹம்ஸவாகனத்தில் நான்முகன் வந்தார்.
சுவாமி, சகலகலாவல்லவராகத் தோற்றமளிக்கும் இவர் தானா ஈசன்?" என்று கேட்டாள் மேனை.
சிருஷ்டி கர்த்தாவான நான்முகன் இவரே!" என்றார் நாரதர்.
அடுத்தாற்போல் சங்கு சக்ரகதாதாரியாய், நீலமேக சியாமள வர்ண ரூபரான விஷ்ணு, கருட வாகனத்தில் வந்ததைக் கண்ட போது மேனை துள்ளிக் குதித்தாள்.
மகரிஷி! நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டாம். இவரே பார்வதியை மணக்க வரும் பரமேச்வரன்!" என்று குதூகலத்தோடு கூறினாள்.
அம்மா, மேனை! நீ நினைப்பது போல் இல்லை!" என்று நாரதர் சொன்னதும் அவள் திடுக்கிட்டுப் போய் அவரைப் பார்த்தாள்.
என்ன சொல்லுகிறீர்கள் சுவாமி?" என்று கேட்டாள் மேனை.
ஆம், அம்மா! க்ஷீராப்தி சயனரான விஷ்ணு இவர். ஈசன் இன்னமும் வரவில்லை" என்றார் நாரதர்.
மேனையின் உள்ளம் குதிநடை போட்டது.
சுவாமி இவ்வளவு பேருக்கும் மேம்பட்டவரா சிவன்?" என்று கேட்டாள்.
வாஸ்தவம், தேவி. கைலாசநாதன் இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டவர். தினமும் விஷ்ணு பிரம்மாதியரால் வணங்கப்படுபவர்" என்றார் நாரதர்.
அடுத்து பிரகஸ்பதி, ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்கள் புடை சூழ வந்தார். அவருக்குப் பின்னால் பூதகணங்கள் சூழ்ந்திருக்க, ரிஷப வாகனத்தில் வந்தார் சங்கரன்.
இத்தனை நேரமாக ஆனந்தத்தால் அலைபாய்ந்து கொண்டிருந்த மேனை, அவர்களைச் சரியாகப் பார்க்கவே இல்லை. அவர்களுக்கும் அப்பால் யார் வருகிறார்கள் என்று எழும்பிப் பார்த்தாள்.
கோலாகலமாக வந்து கொண்டிருந்த கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது. ரிஷப வாகனத்தில் வருபவருக்கு அப்பால் ஒரு சில முனிவர்கள் வேத கோஷமிட்டு வந்தனர். ஏன் அதோடு கூட்டம் முடிந்து விட்டது? கைலாசநாதன் அவர்களை முன்னே செல்ல விட்டுப் பின்னால் தனியாக வருகிறாரோ என்று எண்ணினாள் அவள். எல்லோருக்கும் மேம்பட்டவரான அவர் கூட்டத்தோடு கூட்டமாக எப்படி வருவார்? தனியாக இருப்பதுதான் உகந்தது என அவள் உள்ளம் மகிழ்ச்சியோடு விடை அளித்தது.
எழும்பி எழும்பிக் கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை பார்க்கும் மேனையைக் கண்ட நாரதர், மேனை, இன்னும் என்ன பார்க்கிறாய்?" என்று கேட்டார்.
சுவாமி சிவனைக் காணவில்லையே! அவர் தனியாக வருவாரா?" என்று கேட்டார்.
தேவி, சிவனை நீ பார்க்கவில்லையா? அதோ போகிறாரே! அவரைப் பார்த்த பிரமிப்பில் நீ பேசவில்லை என்றல்லவா நான் எண்ணியிருக்கிறேன்" என்றார் நாரதர்.
நான் பார்க்கவில்லையே, சுவாமி. சிவன் எங்கே போகிறார்?" என்று பரபரப்போடு கேட்டாள் மேனை.
அதோ, தேவி!.... ரிஷப வாகனத்தில் செல்கிறாரே அவர்தான்!" என்று சங்கரனைக் காட்டினார் நாரதர்.
மகரிஷி சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த மேனை  ஒரு கணம் தன் செயலிழந்து நின்று விட்டாள்.
ஐந்து முகங்களோடும் பத்துக் கரங்களோடும், ஜடை அவிழ்ந்து நாற்புறமும் தொங்க, இடுப்பிலே தோல் ஆடையும், கைகளிலும் காதுகளிலும் சர்ப்பங்களை ஆபரணங் களாகவும் அணிந்து, உடலெங்கும் விபூதி விளங்க, கழுத்திலே காபாலிக மாலையும், கைகளில் கங்காளமும், சங்கமும், உடுக்கும், மானும், மழுவும், சூலமும், டமருகமும், அக்கினியும் ஏந்திப் பூதகணங்கள் புடைசூழ ரிஷப வாகனத்தில் செல்லும் சங்கரனைக் கண்டதும் அவள் மூச்சே நின்றுவிட்டது எனலாம். இந்த ஆண்டியையா எல்லோரும் போற்றிப் புகழ்ந்தனர்? இவரா அவளுடைய மருமகனாக  வரப்போகிறவர்?
மேனையின் உள்ளத்தில் இத்தனை நேரமும் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த உற்சாகம் இருந்த இடம் தெரியாது அடங்கிப் போய் விட்டது. எந்தக் கணத்திலும் உடைந்து சுக்கு நூறாகி விடக்கூடிய அளவுக்கு துக்கம் அவள் இதயத்தில் நிறைந்தது. பிறர் எள்ளி நகையாடக் கூடிய நிலைக்கு அவள் வந்து விட்டாளே என்பதை நினைக்கும் போது அவள் கண்களில் நீர்மூட்டியது. ‘ஏன்டி மேனை, சர்வ லக்ஷணங்களோடு கூடிய இத்தனை பேர்களில் இந்த ஆண்டியையா உன் மகளுக்குத் தேர்ந்தெடுத்தாய்?’ என்று அவள் தோழிகளும் உறவினர்களும் கேட்டால், அவள் என்ன பதில் சொல்வாள்? அவளால் துக்கக்தை அடக்க முடிய வில்லை. இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு ‘ஓ’ வென்று குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கிவிட்டாள்.
பதில் ஏதும் சொல்லாது மேனை அழத்தொடங்கியதும் நாரதர் திடுக்கிட்டு மேனை, இது என்ன? எதற்காக அழுகிறாய்?" என்று கேட்டார்.
சுவாமி ! நான் மோசம் போய் விட்டேன். எல்லோருமாகச் சேர்ந்து என்னை மோசம் செய்து விட்டனர். கைலாசநாதனை என் குமாரத்தி மணப்பதால் எங்கள் கௌரவம் பல விதங்களிலும் உயரக்கூடும் என்றெல்லாம் கூறினீர்களே, சுவாமி! இந்த ஆண்டியை என் மகள் மணப்பதால் எங்கள் கௌரவம் எந்த விதத்தில் உயரப் போகிறது? அதல பாதாளத்திற்கல்லவா போய்விடும்!  பிறர் எள்ளி நகையாடக் கூடிய நிலையில்  அல்லவா என்னை வைத்து விட்டீர்கள்?" என்று விசித்தபடி கேட்டாள் மேனை.
மேனை, என்ன வார்த்தை பேசுகிறாய்? சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் ஆகிய மூன்றுக்குமே காரண கர்த்தாவான சிவபெருமான் யாருக்கும் எந்தவிதத்திலும் குறைந்தவரல்ல. இதை உணராது நீ துக்கப்படுவது சரியல்ல" என்றார். 
மேனை நாரதரின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டவளாகத் தெரியவில்லை. ‘ஓ’ வென்று கதறியபடி உப்பரிகையிலிருந்து இறங்கி ஓடி வந்தாள். ‘மேனை அழுது கொண்டு வருகிறாள்’ என்ற செய்தியை உடனடியாக இமவானுக்குத் தெரியப்படுத்தினர்.
கைகால்கள் வெலவெலக்க ஒன்றும் புரியாதவனாய் ஓடி வந்தான் இமவான்.
நாதனைக் கண்டதும் மேனையின் துக்கம் மேலும் அதிகமாகி விட்டது.
நாதா, என்னை மோசம் செய்துவிட்டார்கள்? எல்லோருமாக வஞ்சித்து விட்டார்கள்" என்று அலறியபடி ஓடி  வந்து அவன் பாதங்களில் விழுந்து கதறினாள்.
பர்வதராஜன் மனைவியை இரு கைகளாலும் தாங்கி மெல்லத் தூக்கி நிறுத்தினான்.
மேனை, என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்?" என்று பரபரப்போடு கேட்டபடி அவள் கண்களிலிருந்து வழிந்தோடும் நீரைத் துடைத்தான்.
நாதா! நமக்கு வரப்போகும் மருமகனைப் பாருங்கள். இந்த ஆண்டிதான் நமக்குக் கிடைத்தாரா? சப்தரிஷிகள் என்னென்னவோ புகழ்ந்தார்களே! அவ்வளவும் வெறும் புகழ்ச்சி தானே! கையையும் காலையும் பாருங்கள், சுவாமி! இத்தனை படாடோபத்தோடு இருக்கும் அவருக்கு ஆபரணங்களா கிடைக்கவில்லை. சர்ப்பங்களை அணிந்து கொண்டிருக்கிறாரே! இவரோடு நம் குமாரத்தி எவ்வாறு வாழ்க்கை நடத்துவாள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?" என்று மாலை மாலையாகக் கண்ணீரை உகுத்தாள்.
மேனை, அவரது தோற்றத்தைக் கண்டா நீ இவ்வாறு துக்கிக்கிறாய்? இங்கே வந்து குழுமியிருக்கும் சகல தேவர்களும் சர்வாலங்கார பூஷிதர்களாக  இருக்கும் போது, அவரது இந்த எளிய தோற்றம் உன் அறிவை மயக்கி விட்டது தேவி. அண்ட சராசரங்களுமே அவரிடம் ஐக்கியம் என்பதை நீ அறியாயோ? இந்தத் தேவர்கள் எல்லோருமே அவரது சக்தியால் விளங்குகின்றார்கள் என்பதை மறந்து விட்டாயா? அவரது ஆத்ம சொரூபத்தை நம்மாலெல்லாம் காண முடியுமா? ஞானிகள் எத்தனையோ வருடங்கள் கடும் தவம் செய்தும் காண முடியாது தவிக்கிறார்களே!" என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னான் இமவான்.
இவையெல்லாம் என் திருப்திக்குச் சொல்லும் வார்த்தைகளே அன்றி வேறில்லை" என்று குமுறினாள் மேனை.
அப்போது அங்கே வந்த சப்தரிஷிகளும் மேனையை நெருங்கி, தேவி, துயரம் வேண்டாம். இமவான் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. பகவானின் ஆத்ம சொரூபத்தை ஞானக்கண் கொண்டுதான் காண முடியும். விதையிலிருந்து செடி உண்டாகி, வளர்ந்து விருக்ஷமாகி அனேகக் கிளைகளுடனும், இலை, காம்பு, பூ முதலியவற்றாலும் விளங்குவதுபோல, தேவர்கள், நாங்கள் எல்லோருமே அப்பரப்பிரம்மத்தினிடமிருந்து உண்டானவர்களே!" என்று சொல்லி அவளைத் தேற்றினர்.
அப்போதும் மேனையின் துக்கம் நீங்கியதாகத் தோன்றவில்லை. பார்த்தார் நாரத முனிவர். நேராகச் சங்கரனிடம் சென்றார்.
சர்வேச்வரா! இதென்ன திருவிளையாடல்? கைலாசத்திலிருந்து புறப்படும்போது சர்வாலங்கார பூஷிதராகத் தோற்றமளித்துப்  புறப்பட்ட தாங்கள், மேனையின் பார்வைக்கு ஏன் வேறு விதமாகத் தோற்றமளித்தீர்கள்? அதன் காரணமாக மேனை பெரும் துக்கத்துக்கு ஆளாகிவிட்டிருக்கிறாள். அவள் உள்ளம் சமாதானம் அடையும்படியாகத் தாங்கள் திருக்கோலம் கொள்ளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்.
நாரதா, அவள் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தை வெளிப்படுத்தவே, அவ்வாறு அவள் கண்களுக்குத் தோற்றமளித்தேன். இப்போதே போய் அவளை அழைத்து வா!" என்றார் சங்கரன்.
நாரதரும் மகிழ்ச்சியோடு அரண்மனைக்கு ஓடினார்.
அங்கே இன்னமும் மேனையை விஷ்ணு, பிரம்மா முதலானோர் தேற்ற முயன்று கொண்டிருந்தனர். ஓடி வந்த நாரதர், மேனை, இப்போது வந்து பார் உன் மருமகனை. உன் துக்கம் போன இடம் தெரியாது போய் விடும். பகவானின் திவ்விய சொரூபத்தை இப்போது பார்" என்று கூப்பிட்டார். மேனையோ இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.
என்னைத் திருப்திப்படுத்த என்னென்னவோ சொல்லுகிறீர்கள். இதனாலெல்லாம் என் உள்ளம் ஆறுதல்  அடைந்து விடுமா?" என்றாள் குமுறிய உள்ளத்துடன்.
மேனை என் வார்த்தையை நம்பு. உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அஞ்ஞானத்தை வெளிப்படுத்த வேண்டியே பகவான் உன் கண்களுக்குத் தம் சொரூபங்களில் ஒன்றைக் காட்டினார். இப்போது வந்து அவரது திவ்விய மங்கள ரூபத்தைக்  காண்பாய்! என்று மீண்டும் அவளை வற்புறுத்தினார் நாரதர்.
வேண்டா வெறுப்போடு மேனை அவரோடு சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து, இமவானும் மற்ற தேவர்களும் சென்றனர். 
அரண்மனை வாயிலை அடைந்த மேனை மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
அவள் பார்வை அப்படியே நிலைத்து நின்று விட்டது. சற்று முன்பு கண்ட ஆண்டி எங்கே? ரிஷபவாகனத்தின் மீது இருக்கும் புதிய மனிதர் யார்? ஐந்து முகங்களும், பத்துக் கரங்களும் எங்கே போயின? திருமுகம் ஒன்றோடும், இரு கைகளுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் யார்? அந்த இளைஞனைச் சுற்றி அதென்ன ஒரே பிரகாசம்? அங்குக் குழுமியிருந்த தேவர்களில் எவரையும் அவனுடைய அழகுக்கு இணையாகச் சொல்ல முடியாது!
மேனையின் உள்ளம் சிலிர்த்தது. திரும்பித் தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். விஷ்ணு பிரம்மாதி தேவர்கள் இருகரங்களையும் கூப்பி, ஹர ஹர சங்கரா!" என்று கோஷமிட்டனர். மேனையின் இரு கரங்களும் அவளையறியாமல் கூப்பின. கண்களிலிருந்து நீர் பெருக, பிரபோ! அடியாளை மன்னித்து விடுங்கள்!" என்று பிரார்த்தித்தாள்.
பக்கத்திலே நின்றிருந்த இமவான் எங்கே பூர்ணகும்பம்? எடுத்து வாருங்கள்" என்று துரிதப்படுத்தினான். விஷ்ணு, ரிஷபத்திலிருந்த பகவானைப் பிரார்த்தித்தபடி கைலாகு கொடுத்து அவரைக் கீழே இறக்கினார். இமவான் ஓடி  வந்து அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான்.
பிரபோ, நான் தன்யனானேன்?" என்று மகிழ்ச்சியோடு கூறி, மேனையின் கையிலிருந்து தீர்த்த பாத்திரத்தை வாங்கிப் பகவானின் கால்களை அலம்பினான். நறுமணம் கமழும் மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, பாதத்திலிருந்து வழிந்தோடும் நீரைக் கைகளில் எடுத்துத் தன் தலைமீது ப்ரோக்ஷித்துக் கொண்டு மேனையின் தலையிலும் தெளித்தான்.
சர்வேசா! தாங்கள் என் குமாரத்திக்கு வாக்குக் கொடுத்த படி அவளை ஏற்றுக் கொண்டு எங்களை அனுக்கிரகிக்க வேண்டும்" என்று அஞ்சலி செய்து வேண்டினான் இமவான்.
அவ்வாறே செய்வேன்" என்று அருளினார் சங்கரன்.
பின்னர் மணமகன் கோஷ்டியாருக்கு என ஏற்பாடு செய்திருந்த அரண்மனைக்கு அவர்களை அழைத்துச் சென்று உபசரித்தான். அவர்கள் சௌகரியங்களைக் கவனித்துக் கொள்ள ஆயிரக்கணக்கானவர்களை ஏற்பாடு செய்திருந்தான்.
பட்டணம் முழுவதுமே குதூகலத்தில் மூழ்கியிருந்தது. எங்கே திரும்பினாலும் நிருத்தியமும் கீதமும் வந்திருந்த விருந்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. யாரைப் பார்த்தாலும் பகவானின் திவ்விய மங்கள சொரூபத்தையே வர்ணித்துக் கொண்டிருந்தனர்.
கங்கை முதலான புண்ணிய நதிகள், இமவானின் அரண்மனைக்கு வந்து பார்வதியை மங்கள நீராட்டி சௌந்தரிய தேவதையாக அலங்கரித்தன. லக்ஷ்மியும், சரஸ்வதியும் இரு புறங்களிலும் தாங்கிப் பிடித்தவாறு பார்வதியை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.
பந்தலில் இருந்தவர்கள் தேவியின் ரூபலாவண்யத்தைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டனர். மணமகன்-மணமகள் இருவருடைய அழகும் ஒன்றுக்கொன்று இணையாக விளங்குவதைக் கண்டு பிரமித்தனர்.
பிரம்மதேவன் புரோகிதராக முன்னின்று நடத்த மேனை நீர் வார்த்துக் கொடுக்க, இமவான் பார்வதியைக் கன்யா தானம் செய்து கொடுத்தார்.
சர்வேச்வரா, என் குமாரத்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று பகவானை வேண்டினார்.
சங்கரன் முகமலர்ச்சியோடு பார்வதியின் கையைப் பற்றித் தம் பக்கத்தில் அழைத்து வந்து அமர்த்திக்கொண்டார். துந்துபிகள் முழங்கின. பிரம்மன் அக்கினி வளர்த்து மந்திரங்களைச் சொல்லி, பந்தலில் குழுமியிருந்தோரின் மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரத்துக்கிடையே ஈசன், தேவியின் கழுத்திலே திருமாங்கல்யதாரணம் செய்தார். வேத கோஷங்கள் வான்முகட்டை எட்டின.  தேவர்கள் மலர்மாரி பெய்தனர். மங்கையர் மங்கல கீதம் இசைத்தனர்.
இமவான் மேனையுடன், வந்திருந்த ஒவ்வொரு தேவர்களையும் அவரவர் பரிவாரங்களோடு நேரில் போய் சந்தித்து உபசரித்தான். நந்திகேச்வரரின் மேற்பார்வையில் விருந்து பரிமாறப்பட்டது. பலவகைப்பட்ட ருசிமிக்க உணவு வகைகளை, வந்தவர்கள் அனைவரும் வயிறார உண்டனர். விருந்துக்குப் பின்னர் சந்தன தாம்பூலம் வழங்கப்பட்டது.
தேவர்கள் தங்கள் தங்கள் தேவியரோடு வந்து, மண மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்த பார்வதி பரமேச்வரரை வலம் வந்து வணங்கி அவர்களது ஆசி பெற்றுப் புறப்பட்டனர்.
அனைவரும் புறப்பட்ட பிறகு, ஈசனும் பார்வதியுடன் கைலாசத்துக்குப் புறப்பட்டார். இமவானும் மேனையும் குமாரத்தியை விட்டுப் பிரிய மனமில்லாமல் நீர் துளிக்கும் கண்களோடு எல்லைவரை உடன்சென்று அவர்களை வழி அனுப்பிவிட்டுத் திரும்பினர்.
கைலயங்கிரி திரும்பிய பரமேச்வரன் தேவியுடன் ஆனந்தமாகக் காலத்தைக் கழிந்து வந்தார்.

ஹரி ஓம் !!!

Thursday, 2 April 2020

சிவபுராணம் ( 6 )

சிவபுராணம் 

6. பர்ண சாலையில் புதிய காட்சி 



ஈசனின் வடிவிலே உள்ளத்தைப் பறி கொடுத்தவளாய் பெற்றோர்களிடம் திரும்பிய பார்வதி, அவர் நினைவாகவே வாடினாள். ஊண் உறக்கம் இல்லாது தோழிகளுடன் உத்தியான வனத்துக்கு வந்தாலும், மனம் பொழுது போக்குகளில் ஈடுபடவில்லை. சிவபெருமானையே மணப்பது என்று உறுதி கொண்டாள் தேவி.
இப்படி இருந்து வரும்போது ஒருநாள் நாரத முனிவர் அங்கு வந்தார். பார்வதி அவரை வரவேற்றுப் பலவாறு உபசரித்தாள். பூரித்து விளங்கிய தேவி, உற்சாகமின்றி வாடிய முகத்தோடு இருப்பதைக் கண்டு அதன் காரணத்தை வினவினார் நாரதர்.
மகரிஷே, கைலாசநாதன் யோகத்தில் அமர்ந்திருந்த போது அவருக்குப் பணிவிடை செய்து வரும் பொறுப்பை என் தந்தையார் எனக்கு அளித்திருந்தார்கள். ஈசனின் திருவடிவம் என் உள்ளத்தில் அழியா வடிவமாகப் பதிந்து விட்டது. அவரையன்றி வேறு  யாரையும் என் உள்ளம் ஏற்காது. தயவு செய்து அவரை அடையும் மார்க்கத்தைத் தாங்கள் எனக்குக் காட்டவேண்டும்" என்று வேண்டினாள்.
உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. சிவனைக் குறித்துத் தவம் செய். அவரும் மகிழ்ச்சி அடைந்து உன் வேண்டுகோளை நிறை வேற்றுவார்" என்று சொல்லி நாரதர் கைலாசநாதனைக் குறித்துத் தவம் செய்யும் வழிகளை அவளுக்கு விளக்கி விட்டுச் சென்றார்.
நாரதர் சென்றதும், பார்வதி தோழிகளை அழைத்துத் தன் விருப்பத்தை இமவானிடம் தெரிவிக்குமாறு அனுப்பினாள். 
பார்வதியின் விருப்பத்தைத் தோழிகள் வந்து கூறிய போது இமவான் அளவில்லா ஆனந்தமடைந்தான்.
தேவர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் கைலாச நாதனே, என் குமாரத்திக்கு ஏற்ற மணாளனாவார். அவரைக் கைப்பிடிக்கக் குழந்தை கடுமையான தவம் மேற்கொள் வதாகக் கூறுகிறாளே? அதை அவள் தாய் மேனை அனுமதிக்க மாட்டாளே, அவள் சம்மதித்துவிட்டால் எனக்கென்ன ஆக்ஷேபணை?" என்றான்.
அவன் எதிர்ப்பார்த்தவாறே மேனை அதற்கு உடன்பட வில்லை. உடனே மகளை அழைத்து, அவள் செய்யப் போகும் காரியம் சரியல்ல, என தன் ஆட்சேபத்தைத் தெரிவித்தாள்.
பார்வதி, இங்கே உனக்கு என்ன குறை? எதற்காக நீ தவம் செய்யக் காட்டுக்குப் போக வேண்டும்? கைலாசநாதன் யோகத்தில் அமர்ந்திருந்த போது அவருக்குப் பணிவிடை செய்து வந்தாயே, அப்போது அவருக்கு உன்னிடம் மகிழ்ச்சி உண்டாகவில்லை என்றால், இப்போது மட்டும் எப்படி உண்டாகப்போகிறது? உன் மலரினும் மென்மை நிரம்பிய தேகம் அதைத் தாங்காது. இம்மாதிரி நமக்கு ஏற்காதக் காரியங்களை விட்டுவிட்டு மற்ற வேலைகளைக் கவனி" என்றாள் மேனை.
தாய் கூறிய புத்திமதிகள் எதுவுமே, பார்வதி எடுத்த முடிவை மாற்ற இயலவில்லை. ஈசனைக் குறித்துத் தவம் மேற்கொள்ளத் தன்னை அனுமதிக்காவிடில், தான் அதே ஏக்கத்தில் இருந்து உயிரை விட்டு விடுவதாகக் கூறினாள் பார்வதி. பெண்ணின் மன உறுதியைக் கண்ட மேனை, முடிவில் அவள் விருப்பத்துக்குச் சம்மதித்தாள்.
அழகிய மலைச் சிகரம் ஒன்றில் பர்ணசாலை அமைத்துக் கொடுத்தான் இமவான். குமாரத்திக்கு உதவியாக அவளது இரண்டு தோழிகளையும், அவளோடு பர்ணசாலையில்  இருக்க செய்தான். பர்ண சாலையைச் சுற்றிலும் கனி தரும் மரங்களையும், அழகிய மலர்ச் செடிகளையும் பயிராக்கினாள் பார்வதி. கடுமையாகத் தவம் மேற்கொண்டாள். பர்ணசாலைக்கு வரும் அதிதிகளை அவள் உபசரிக்கத் தவறுவதில்லை.

ஈசனைக் குறித்துத் தேவி மேற்கொண்டுள்ள தவத்தை அறிந்த தேவர்கள் கைலாசநாதனிடம் சென்று பிரார்த்தித்தனர்.

சர்வேச்வரா! தங்களை மணாளனாக அடையும் எண்ணம் கொண்டு இமவானின் புத்திரி கடுமையாகத் தவம் மேற்கொண்டுள்ளாள். உலகம் க்ஷேமமுற தேவியின் விருப்பத்தைத் தாங்கள் நிறைவேற்ற வேண்டும்" என்று எல்லோருமாகச் சிவபெருமானை வேண்டினர்.
வானவர்களே! விரைவிலேயே பார்வதிக்குத் தரிசனம் கொடுத்து அவள் விருப்பத்தை நிறைவேற்றுவேன்" என்று அபயம் அளித்தார் சிவன்.

தேவர்கள் சென்றதும், முதிய அந்தணரைப் போன்று வடிவம் கொண்டு, பார்வதி தவம் செய்யும் பர்ணசாலையை அடைந்தார் ஈசன்.

பர்ண சாலைக்கு யாரோ அதிதி வந்திருப்பதைக் கண்டதும் தோழியர் இருவரும் அவரை அன்போடு வரவேற்று பார்வதியிடம் அழைத்து வந்தனர். தேவி அவரை வணங்கி அர்க்கியம் முதலானவைகளைக் கொடுத்து உபசரித்தாள்.
சுவாமி, பிரயாணத்தால் மிகவும் களைப்படைந்துள்ளீர்கள் போல் தோன்றுகிறது. தாங்கள் இங்குத் தங்கி இளைப்பாறி நாளை போகலாம்" என்று வேண்டினாள் பார்வதி.
பரமனும் அதற்கு உடன்பட்டவராய் பர்ண சாலையில் தங்கினார். நடந்து வந்த களைப்பு நீங்கச் சிறிதுநேரம் தூங்கி எழுந்தார். தேவியும் அவர் பாதங்களை மெல்ல வருடியபடி தரையில் அமர்ந்திருந்தாள்.

உறக்கம் நீங்கி அந்தணர் எழுந்ததும், அவருக்குத் தீர்த்தம் முதலியன கொண்டு வந்து கொடுத்து உபசரித்தாள்.

சுவாமி, தாங்கள் யார் என்று சொல்லவில்லையே! இந்தத் தள்ளாத வயதில் இம்மலைப் பிராந்தியத்தில் பிரயாணம் செய்து வரக் காரணம்  என்ன? உங்களைச் சேர்ந்தோர் யாரும் கிடையாதா?" என்று கேட்டாள் பார்வதி.

குழந்தாய், நான் என்ன சொல்வேன்? நானோர் எழை அந்தணன். உற்றார் உறவினர் யாரும் இல்லை. வயிற்றுப்பாடு இருக்கிறதே. சும்மா உட்கார வைத்து யார் சாப்பாடு போடுவார்கள்? ஏதோ ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த வழியாக வரும்போது நீ இங்கு பர்ணசாலை அமைத்துக் கொண்டு தவம் செய்வதாகச் சொல்லக் கேட்டு, உன்னைப் பார்த்துச் செல்லலாம் என வந்தேன்" என்று சிவபெருமான் மெல்ல தாம் வந்த காரியத்தைத் தொடங்கினார்.

குழந்தாய்! என்னைக் கேட்டாயே, உன் விஷயம் என்ன? உடலை வருத்தும் கடுமையான தவம் மேற்கொள்ளும் வயதா உனக்கு? உன் சௌந்தர்யத்துக்கு ஏற்ற கோலமா நீ கொண்டிருக்கிறாய்? உன் வயதில் உள்ள பெண்கள் எத்தனையோ ஆபரணாதிகளை அணிந்து கொண்டு சிட்டுக் குருவிகளைப் போன்று குதூகலமாக இருக்கவில்லையா? நீ ஏன் இப்படிக் குடிசையில் அடைந்து கிடக்கிறாய்? இந்தத் தோல் ஆடை உனக்கு ஏற்றதில்லையே. ‘கல கல’வென்று சப்திக்கும் வளையல்களை அணிய வேண்டிய உன் கரங்களில் மலர் வளையங்கள். அழகாக, வாசனைத் தைலங்களால் சீவி முடித்துப் பலவகையாக அலங்கரிக்கப்படவேண்டிய உன் கேசம், இப்படி அலங்காரம் ஏதுமின்றி வாரி முடிக்கப்பட்டிருக் கிறதே. இந்தக் கோலம் எதற்காக? உன் உள்ளத்தில் இருப்பது தான் என்ன? உன் குணப் பண்புகளுக்கேற்பத் தகுந்த நாயகனை அடைவதற்காக நீ இந்தத் தவம் மேற்கொண்டிருந்தால், இதை இப்போதே நிறுத்தி விடு. உன் போன்ற சௌந்தர்ய தேவதைகளுக்கு இது ஏற்றதல்ல" என்றார்.
முதியவரின் வார்த்தைகளைக் கேட்ட தேவி நாணத்தால் தலை குனிந்தவளாய், தோழியை பார்த்துக் கண் ஜாடை காட்டினாள்.
சுவாமி, அரச குமாரி தவம் மேற்கொண்டிருப்பது எதற்குத் தெரியுமா? கைலாசநாதனைக் கணவனாக அடைய வேண்டும் என்ற விருப்பத்தால் தான்" என்றாள் தோழி.
அவள் வார்த்தைகளைக் கேட்டதும் அந்தணரான ஈசன் ‘கல கல’ வென்று சிரித்தார்.
தேவியின் முகத்தில் கடுகடுப்பு நிறைந்தது.
எதற்கடி அவர் சிரிக்கிறார்? இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? காரணத்தைக் கேள்" என்றாள் தோழியிடம்.
குழந்தாய்! சிரிப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன? உன் குலம் என்ன? அந்தஸ்து என்ன? உங்கள் குலத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள எத்தனையோ பேர் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரமாட்டார்களா? அப்படி என்ன உனக்கு அழகு இல்லையா? உன் அழகுக்கு ஈடு சொல்ல யாருமே இல்லையெனலாம்..."
தேவி அவர் பேச்சில் குறுக்கிட்டாள், 
கைலாசநாதனிடம் என்ன குறை கண்டார் என்பதைக் கேளடி!" என்று தோழியை அதட்டினாள்.
பார்வதி, உன் விருப்பம் எப்படி இருக்கிறது தெரியுமா? நறுமணம் கமழும் சந்தனம் இருக்க, அதை விட்டு விட்டுச் சேற்றை அள்ளிப்பூசிக் கொள்வது போல் இருக்கிறது. யானை வாகனமிருக்க, எருமை வாகனமாகவும், கங்கா ஜலமிருக்கக் கிணற்று நீரைப் பருகவும், சூரிய ஒளியை விட்டு விட்டுப் பூச்சிகளின் மினுமினுப்பையும், அழகிய பட்டு வஸ்திரமிருக்க தோலால் ஆகிய ஆடையையும், வீட்டு வாசத்தை விட்டுக் கானக வாசத்தையும் விரும்பி ஏற்றுக் கொள்வது போல விசித்திரமாக இருக்கிறது. எத்தனையோ தேவர்கள் இல்லையா? அவர்களில் ஒருவரையும் பிடிக்காது இந்தச் சுடலையாண்டியிடம் உனக்கு எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது ? கருவண்டுகளை நிகர்த்த உன் இருவிழிகளுக்கு அம் முக்கண்ணனின் விழிகள் ஈடு சொல்ல முடியுமா? அதிசயமாக நெற்றியிலும் ஒரு கண். பார்க்க அசிங்கமாக இல்லை. அவருக்கென்ன சந்தனாதி வாசனைத் தைலங்கள் கிடைக்கவில்லையா? சாம்பலைப் பூசிக் கொண்டு திரிகிறாரே. விலங்கின் தோலை உடலில் சுற்றிக் கொண்டு, கைகளில் நெளியும் பாம்புகளையும் அணிந்து கொண்டிருக்கிறார். அவர் தான் இப்படி இருக்கிறாரென்றால் அவரைச் சுற்றியுள்ளவர் களோ பூதம் பிசாசங்கள்..."

பார்வதியின் கண்கள் ‘ஜிவு ஜிவு’ என்று சிவந்தன.

சுவாமி...!" என்று அதட்டிக் கூப்பிட்டாள்.
உங்களை இன்னாரென்று அறியாது அழைத்து உபசரித்து விட்டேன். நீங்கள் சிவத்துவேஷி என்பது இப்போதுதான் தெரிகிறது..." என்றாள்.

பார்வதி, எனக்கொன்றும் சிவனிடம் துவேஷமில்லை. எத்தனையோ தேவர்கள் இருக்கிறார்களே; அவர்களுள் ஒருவரை விரும்பி அடையாது, இந்தப் பித்தனை விரும்புகிறாயே என்று தான் சொல்ல வந்தேன்" என்றார் அவர்.

பெரியவரே, அந்தப் பித்தன் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் நீங்கள் இப்படிச் சொல்லியிருப் பீர்களா? ஏதோ மற்ற தேவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னீர்களே? அந்த தேவர்கள் அனைவருமே சிவனால் உண்டாக்கப்பட்டவர்கள் தாமே? சகல புவனங்களும் கைலாச நாதனின் படைப்புகளாய் இருக்கும்போது அவர் நினைத்த மாத்திரத்தில் அவருக்கு ஆபரணங்கள் கிடைக்காமலா போய்விடும்? பட்டுப் பீதாம்பரங்கள் அவருக்கு இல்லையா என்ன? வேண்டுமென்று நினைத்த மாத்திரத்தில் வந்து குவிந்து விடுமே. சாம்பலைப் பூசிக் கொண்டு சுடலையில் பித்தனாக ஆடுகிறார் என்றால் உங்களைப் போன்ற அறிவிலிகளின் பித்தத்தைப் போக்கத்தான். சர்வ லோக சரண்யனான கைலாசநாதனுக்குப் பிறப்பு இறப்பு உண்டா? பரப்பிரம்மமான அவரிடமிருந்தல்லவா மற்றவை தோன்றி யுள்ளன. சகல தேவர்களும் அடிபணிந்து வணங்கும் அவரை நான் விரும்பியதில் தவறொன்றும் இல்லை" என்று சொன்ன பார்வதி, தோழியின் பக்கம் திரும்பி, ஸகி, அவருடைய உண்மைச் சொரூபத்தை அறிந்த பிறகும் நாம் அவருக்கு இருப்பிடம் கொடுக்கக்கூடாது. அவரைச் சீக்கிரம் இங்கிருந்து வெளியேறச் சொல். சிவ நிந்தையைக் காது கொடுத்துக் கேட்ட பாபம் நீங்க, நீராடிப் பூஜை செய்ய வேண்டும்" என்றாள்.

அந்தணர் வடிவிலிருந்த ஈசன் மெல்ல சிரித்தபடி எழுந்திருந்தார்.
குழந்தாய் ! நீ போகச் சொல்லி விட்ட பிறகு நான் ஏன் இங்கே தங்க வேண்டும் ? நான் போய் வருகிறேன், பார்வதி !" என்று சொல்லியபடி அவள் அருகில் வந்தார்.
சீக்கிரம் போய் விடுங்கள்! உங்களைப் பார்ப்பது கூட என் விரதத்துக்குப் பங்கம் விளைவித்து விடும்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள், பார்வதி.
பார்வதி! வெகுநேரம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தால் கழுத்து வலிக்கும். நான் செல்வதற்கு முன் நன்றாக என்னை ஒருமுறை திரும்பிப்பார்!" என்றவராய் பர்ண சாலையின் வாயிலை அடைந்தார்.
அடுத்தக்கணம் தோழியர் இருவரும், ஹோ!..." என்று திடுக்கிட்டு அலறியதைக் கேட்டு முகத்தைத் திருப்பிய பார்வதி சிறிது நேரம் ஸ்தம்பித்து விட்டாள். அங்கே அந்தணரைக் காணவில்லை. ரிஷப ரூபராய் பரமசிவன் காட்சி கொடுத்தார்.

பார்வதியின் கைகள் இரண்டும் கூப்பின.
சுவாமி... தாங்களா...!" என்று மனதிலிருப்பதைச் சொல்ல முடியாது குழறினாள்.

ஆம், பார்வதி! சற்று முன்பு அந்தணராக வந்தது நான் தான். என்னைக் குறித்துத் தவம் செய்யும் உன் மன உறுதியைச் சோதிக்கவே அவ்வாறு வந்தேன்!" என்றார் ஈசன்.

கண்கள் ஆனந்த பாஷ்பத்தைப் பெருக்க, ஈசனைப் பல விதங்களிலும் ஸ்தோத்திரம் செய்தாள்.

பிரபோ! அடியாளின் எண்ணத்தை நிறைவேற்றத் தரிசனம் தந்தீர்களோ! உற்றார் உறவினர் மகிழ என்னைத் தாங்கள் கை பிடிக்க வேண்டும். பிரபோ, சர்வேசா! என் விருப்பம் நிறைவேற அனுக்கிரகம் செய்ய வேண்டும்!" என்று வேண்டினாள் பார்வதி.

பர்வத ராஜகுமாரி! அவ்வாறே செய்கிறேன்.  போதும் உன் தவம். அரண்மனைக்குத் திரும்பு. விரைவிலேயே உன்னைத் திருமணம் பேச உன் தந்தையைச் சந்திக்கிறேன்" என்று அருளி மறைந்தார் சிவபெருமான்.
பார்வதி அடைந்த மகிழ்ச்சியை விவரிப்பது இயலாத காரியம். தோழிகளை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினாள்.
ஹரி ஓம் !!!!

Tuesday, 31 March 2020

காசி யாத்திரை

காசி யாத்திரை
சுற்றுலா என்பதற்கும் யாத்திரை 
என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடுண்டு. 
சுற்றுலா என்பது கேளிக்கைக்கு 
முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வது. 
யாத்திரை என்பது முழுக்க முழுக்க பக்தி, 
ஆன்மிகம், சடங்குகள், இறைவழிபாடு 
போன்றவற்றை அடிப்படையாகக் 
கொண்டது.
பண்டைக் காலம் தொட்டே யாத்திரை 
என்பது ஹிந்துக்களின் வாழ்வோடு 
பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இருந்து 
வந்துள்ளது. யாத்திரைகள் பல இருந்தாலும் 
‘காசி யாத்திரை’ புனிதமானதாகக் 
கருதப்படுகிறது. காசிக்குச் சென்று 
கங்கையில் நீராடினால் பாவங்கள் 
தொலைந்து விடும் என்ற நம்பிக்கை 
காலம் காலமாக இருந்து வருவதே 
இதற்குக் காரணம்.
காசி யாத்திரை முறைகள்
காசி யாத்திரையை நாம் முதலில் 
இராமேஸ்வரத்தில் துவங்க வேண்டும். 
அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி, 
ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் 
நீராடி பின் இறைவனை வேண்டி, 
சேதுக்கரையில் மணலால் லிங்கம் செய்து 
பூஜித்து யாத்திரையைத் துவங்க வேண்டும்.
காசி ஆலயங்கள்
சடங்குகளை முறையாகச் செய்து விட்டு 
இறைவழிபாட்டிற்குச் செல்லலாம். 
பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே 
காசியில் சிவன், விஷ்ணு, துர்க்கை, 
விநாயகர், ஆஞ்சநேயர், பைரவர் என பல 
மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கின்றனர். 
பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் 
காசியில் அமைந்துள்ளன. அவற்றுள் 
தரிசிக்க வேண்டிய முக்கிய 
தெய்வங்களைப் பற்றி :
விஸ்வேசம் மாதவம் டுண்டிம்
தண்டபாணிம்ச பைரவம் |
வந்தே காசீம் குஹாம் கங்காம்
பவானீம் மணிகர்ணிகாம் ||
விஸ்வேசம்
விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுவது 
காசி விஸ்வநாதரை. இந்தியாவின் 
முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம் இது.
ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் 
பழமையான லிங்கம் இருப்பதாய் ஐதீகம்.
பிந்து மாதவர் ஆலயம்
மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் 
குறிக்கும். இராமேஸ்வரத்தில் சேது 
மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் 
வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் 
விஷ்ணு, காசியில் பிந்து மாதவராகக் 
காட்சி தருகிறார். இவரது ஆலயம் 
பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. 
பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர். 
சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்திக் 
காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே 
விஷ்ணு பாதம் இருக்கின்றது. அதற்கு 
கங்கை நீரை அபிஷேகம் செய்து, 
மலர்களைத் தூவி வழிபடுகின்றனர்.
டுண்டி கணபதி
டுண்டி’ கணபதி காசியின் முக்கியமான 
தெய்வங்களுள் ஒன்று. காசியின் சிறிய 
சந்துகளில் பல கடைகளுக்கு நடுவே 
ஒளிந்து கொண்டிருக்கும் இவரை தேடித் 
தான் கண்டுபிடிக்க வேண்டும். காசிக்குச் 
செல்பவர்கள் மணிகர்ணிகையில் 
நீராடிவிட்டு தேவ, ரிஷி, பித்ரு கடன்களை 
முடித்து விட்டு பின்னர் டுண்டி கணபதியை 
வணங்க வேண்டும். டுண்டி விநாயகரைக் 
காலையில் வணங்கினால் ஒருவருடைய 
அனைத்து இடையூறுகளும் நீங்கி 
வாழ்க்கையில் வளமுண்டாகும்.  
“சகல சித்திகளையும் அளிக்கும் டுண்டி 
விநாயகரை ஒருவன் அனுதினமும் 
தொழுது வந்தால் 
அளவற்ற நன்மைகளை அடைகிறான்” 
என்கிறது ஸ்காந்த புராணம்.
தண்டபாணி ஆலயம்
‘தண்டபாணி’ ஆலயம் கால பைரவர் 
ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 
காசியின் தண்டல் நாயகர் இவர் 
அதனால்தான் இப்பெயர். கால பைரவரின் 
தளபதியான இவர், காசியில் உள்ள 
கணங்களுக்கெல்லாம் அதிபதியும் கூட. 
சலவைக் கல்லால் ஆன ஆலயத்தில் இரு 
கைகளிலும் ஒரு தண்டத்தைப் 
பிடித்துக்கொண்டு குத்திட்டு அமர்ந்துள்ளார் 
தண்டபாணி. கழுத்திலும், தலையைச் 
சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு 
செய்கின்றன. கால பைரவரின் ஆக்ஞைக்கு 
உட்பட்டு தண்டனைகளை நிறைவேற்றுபவர் 
இவர்தான். ‘தண்டுபாணி’என்று சொல்லி 
வட நாட்டவர்கள் இவரை வழிபடுகின்றனர்.
கால பைரவர்
காசி நகரத்தின் காவல் தெய்வமும், 
க்ஷேத்திர பாலகரும் ‘கால பைரவர்’தான். 
இவர் கட்டுப்பாட்டில்தான் காசி மாநகரே 
உள்ளது. இவர் கண்ணசைவின்றி காசியில் 
ஏதும் நிகழாது என்பது ஐதீகம். இவரைத் 
தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி 
ஆவதில்லை. உருண்டையான முகம், 
பெரிய கண்கள், அடர்ந்த மீசை என 
கம்பீரமாக இவர் காட்சி தருகிறார். உள்ளே 
நுழைந்து பைரவரை வணங்கியதும் 
ஆலயத்தில் உள்ள பண்டா மயிற்பீலியால்
 நம் முதுகில் தட்டுவார். அதனைத் 
தொடர்ந்து ‘தண்டம்’ வழங்கப்படுகிறது.
 தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். 
அதைப் பக்தர்களின் தலையில் வைத்து 
ஆசீர்வதிக்கிறார்கள். கோயில் வாயிலில்
 ’காசிக்கயிறு’என்னும் கறுப்புக் கயிறு 
விற்கிறார்கள். காசிக்குவந்து சென்றதற்கும், 
கால பைரவரைத் தரிசித்து அவர் அருள் 
பெற்றதற்கும் அதுவே அடையாளம். 
அந்தக் கயிறுகளை வாங்கி, அதனை 
பைரவரின் திருவடியில் வைத்து வணங்கி 
தாங்களும் கட்டிக் கொள்வதுடன் காசி 
யாத்திரை நிறைவேறியதும் 
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு 
அளிக்கலாம். ஆதிசங்கரர் காசி பைரவர் 
மீது “கால பைரவாஷ்டகம்.” என்றொரு 
அற்புதத் துதியை இயற்றியுள்ளார்.
காசி
இங்கே காசி என்று குறிப்பிடுவது ஆதிகாசி. 
இது ஒருசிறு கோயில். இங்கு ஒரு சிறிய 
லிங்கமும், சிவமூர்த்தியும் இருக்கின்றன.
குஹாம்
மிருத்யுயேஞ்சஸ்வரர் ஆலயம் அருகே ஒரு 
குளம் உள்ளது. இதுதான் ஆதி கங்கை 
என்று சிலர் கூறுகின்றனர். இதன் அருகே 
உள்ள குகையே குஹாம் என்று 
அழைக்கப்படுகிறது.
கங்காம்
இது ஆதிகங்கை இருந்த இடம். இங்குதான் 
பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு 
வந்தான் என்கிறது புராணம். 
ஆதிகங்கையின் நீரை தலையில் 
தெளித்துக் கொண்டால்தான் கங்கையில் 
முழுமையாக நீராடிய பலன் கிடைக்கும்.
பவானி
காசி விசாலாட்சியே பவானி ஆகப் 
போற்றப்படுகிறாள் என்பதாக ஒரு கருத்து 
உண்டு. பவானி என்பது காசியில் உள்ள 
துர்கை அம்மன் ஆலயமே என்றும் சிலர் 
கருதுகின்றனர். விசாலாட்சி ஆலயம், 
விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் 
சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. 
தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி 
நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி 
இருக்கிறாள். வெள்ளிக் கவசத்தில், 
சாந்தமான திருமுகத்துடன், கருணை 
பொங்கும் திருவிழிகளுடன் அன்னை 
காட்சி தருகிறாள். இவ்வாலயம் 
அன்னையின் 51 சக்தி பீடங்களில் 
ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்னையின் 
பின்புறம் உற்றுக் கவனித்தால் மற்றொரு 
திருவுருவத்தைக் காண இயலும். அதுவே 
‘பவானி’ என்று சிலர் கூறுகின்றனர். காசி 
நகரத்தாரின் பொறுப்பில் இவ்வாலயம் 
அமைந்துள்ளது.
மணிகர்ணிகா
மணிகர்ணிகா தீர்த்தம் மிகப் புனிதமானது. 
காசித் திருத்தலத்தின் மிக முக்கியமான 
படித்துறை இது. இங்குள்ள மயானம் மிகப் 
புனிதமானதாகப் போற்றப்படுகின்றது. 
இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் 
தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.  
உடல்கள் வண்டியில் கொண்டுவரப்பட்டு, 
மணி கர்ணிகையில் நீராட்டப்பட்டு பின்னர் 
தகனம் செய்யப்படுகின்றது. இங்கு நீராடி 
நீத்தார் கடன்களைச் செய்வதன் மூலம் 
முன்னோர்கள் மேலுலகம் செல்வதாக 
நம்பிக்கை. இங்கு நீராடி 
மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த 
பின்தான் காசியின் பிற தெய்வங்களை 
வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதி 
உள்ளது. இங்குள்ள இறைவன் உள்ளது. 
இங்குள்ள இறைவன் மணிகர்ணேஸ்வரர் 
என்று போற்றப்படுகிறார். காசியில் 
மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து 
ராம நாமத்தை ஓதும் போது அவர் 
காதுகளில் அணிந்துள்ள குண்டங்கள் 
தரையில் படுவதால் இறைவனுக்கு 
இப்பெயர். (மணி – குண்டலம்; கர்ணிகா – 
காது). “மணிகர்ணிகையில் குளித்து 
மணிகர்ணிகேஸ்வரரைத் 
தியானிப்பவர்களுக்கு மீண்டும் பிறவி 
இல்லை. மணிகர்ணிகையில் ஒருமுறை 
மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் 
புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் 
தரும். மணிகர்ணிகைக்குச் சமமான 
தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை”
 என்கிறது ஸ்காந்த புராணம்.
அன்னபூரணி
காசியின் அதி முக்கிய தெய்வங்களுள் 
ஒன்று அன்னபூரணி. காசி முழுக்க முழுக்க 
அன்னையின் அருளாட்சிதான்.
கங்கா ஆரத்தி
காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத 
ஒன்று கங்கா ஆரத்தி. தசாஸ்வமேத 
காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. 
மாலை சுமார் 6.30க்கு ஆரம்பித்து 7.30க்கு 
முடியும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் 
கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே 
‘கங்கா ஆரத்தி’ எனப்படுகிறது. முதலில் 
புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து 
பூஜையை ஆரம்பிக்கின்றனர். அடுத்தடுத்து 
ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என 
ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி 
நடைபெறுகிறது. பார்க்கக் கண்கொள்ளாக் 
காட்சியாக இது இருக்கும்.
இவை தவிர காசியில் தரிசிக்க வேண்டிய 
ஆலயங்கள் பல இருக்கின்றன.  
கேதாரேஸ்வரர் ஆலயம், ஹனுமான்காட் 
ஆஞ்சநேயர், துர்கா மந்திர், வராகி அம்மன் 
கோவில், துளசி மானஸ் மந்திர், சங்கட் 
மோசன் ஹனுமான் ஆலயம் போன்றவை 
இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.
கௌடி மாதா 
எல்லா ஆலய தரிசனங்களையும் முடித்து 
விட்டு இறுதியில் கௌடி மாதா என்னும் 
சோழி அம்மன் கோவிலை அவசியம் 
தரிசிக்க வேண்டும். ‘காசீ பல் ஹம் கோ; 
கௌடீ பல் தும்கோ’ என்று சொல்லி 
சோழிகளைக் கையால் அளைந்து இங்கே 
வழிபட வேண்டும் என்பது ஐதீகம். படி 
ஏறிச் சென்றுதான் இவளைத் தரிசிக்க 
வேண்டும். இந்த அம்மன் முன் 
வைக்கப்பட்டிருக்கும் சோழிகளைக் 
கையால் அளைந்து இவளை வணங்கி 
விடை பெற்றால்தான் காசி யாத்திரை  
காசியில் பூர்த்தி ஆவதாக ஐதீகம்.
கங்கை நீரைக் கொண்டு வந்து, 
இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக 
லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுடன்தான் 
காசி யாத்திரை என்பது முழுமையாகப் 
பூர்த்தி ஆகிறது.
உண்மையில் காசி யாத்திரை என்பது 
வெறும் யாத்திரை மட்டுமல்ல; அது,
 ஹிந்துக்கள் தங்களது பண்பாட்டை, 
கலாசாரத்தை, வேற்றுமையில் ஒற்றுமை 
காணும் ஒருமை உணர்வை 
ஒருங்கிணைக்கும் ஒரு புனிதப் பயணம். 
ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் தம் 
வாழ்வில் ஒருமுறையாவது மேற்கொள்ள 
வேண்டிய யாத்திரை காசி யாத்திரை 
எனலாம்.

ஹரி ஓம் !!!