Monday 22 June 2020

சிவ புராணம் ( 44 )



44. புராணச் சிரவணம்






பாப புண்ணியங்களையும், தான விசேஷங்களையும் விவரித்து வந்த சூதர், நைமிசாரண்ய முனிவர்களுக்குப் புராணச் சிரவணத்தின் பலனைச் சொல்லத் தொடங்கினார்.

ஒரு சமயம் பிரம்மதேவன் யமலோகத்துக்குச் சென்றிருந்தார். யமதர்மனும் நான்முகனை வரவேற்று உபசரித்தான். அவர்கள் இருவரும் அமர்ந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கையில் கண்ணைப் பறிக்கும் ஜோதியோடு கூடிய விமானம் ஒன்று அங்கே வந்தது. அதிலிருந்து திவ்விய தேஜஸ்ஸை உடைய புருஷன் ஒருவன் இறங்கினான். அவனைக் கண்டதும் தர்மராஜன் சட்டென்று எழுந்து சென்று அவனை நமஸ்கரித்து வரவேற்றான்.

ஐயா, சுகமாக இருக்கிறீர்களா? தாங்கள் வருகையால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் விருப்பம் போல் இங்கே தங்கியிருந்து பின்னர் பிரம்மலோகம் செல்லலாம்" என்று வேண்டினான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அதே போன்று மற்றொரு விமானம் வந்தது. அதிலும் ஓர் திவ்விய புருஷன் அமர்ந்திருந்தார். அவனையும் தர்மராஜன் சந்தோஷத்தோடு வரவேற்று முன் போலவே உபசார வார்த்தைகள் சொல்லி மகிழ்ந்தான்.

அதைக் கண்டபோது பிரம்மதேவனுக்கு ஆச்சிரியமாயிருந் தது. யமனைப் பார்த்து தர்மராஜா, இவர்கள் யார்? உன்னால் பூஜிக்கப்பட வேண்டிய காரணம் என்ன? அந்தப் பாக்கியம் இவர்களுக்கு எப்படிக் கிட்டியது?" என்று கேட்டார்.

தர்மராஜன் அதைக் கூறினார். பூலோகத்தில் வைதிசம் என்னும் பட்டணம் இருக்கிறது. அப்பட்டணத்தை தராபாலன் என்னும் அரசன் ஆண்டு வந்தான்

ஒரு சமயம் பார்வதிதேவி, தவறு செய்த தம் தோழியரில் ஒருத்தியை நரியாகத் திரியுமாறு சபித்தார். ’அவள் பன்னிரண்டு வருட காலம் பூலோகத்தில் சுற்றி அலைந்து விட்டு அதன் முடிவில் விதஸ்தா, வேத்திரந்தி ஆகிய இரு நதிகளின் சங்கம ஸ்தலத்திலே சாப விமோசனம் அடைந்து மீண்டும் பழைய உருவை அடையட்டும் என்று உத்தர விட்டாள். அவ்வாறே அந்தத் தோழியும் நரியாகிப் பூமியில் பன்னிரண்டு வருட காலம் அலைந்து திரிந்து, முடிவில் அவ்விரு நதிகளின் சங்கம ஸ்தலங்களை அடைந்தாள். ஆகாரம் ஏதும் கிடைக்காமையால் பட்டினி கிடந்து அங்கேயே உயிரை விட்டாள். அப்போது திவ்விய விமானம் ஒன்று மேலிருந்து வந்து இறங்கியது. திவ்விய தேகம் பெற்ற அவள் அதிலேறிச் சென்றாள்.

தராபாலன் இதைக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த இடம் மிகவும் உத்தமமான இடம் என்று எண்ணி அங்கே ஒரு சிவாலயம் கட்டுவித்து அதில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கோபுரம், மதில் சுவர் முதலானவற்றையும் கட்டுவித்து நித்திய பூஜைக்கு ஏற்பாடு செய்தான்.

அப்போது ஒரு நாள் சகல சாஸ்திரங்களையும் கற்ற வேதியன் ஒருவன் அங்கே வந்தான். அவன் பாண்டித்தியத்தை அறிந்த அரசன் அவனை வரவேற்று உபசரித்து ஐயா, இந்தச் சிவாலயம் என்னால் கட்டப்பட்டது ஆகும். கட்டி முடிக்கவும் தாங்கள் வரவும் சேர்ந்ததானது என் பாக்கியமே. தாங்கள் தினமும் இவ்வாலயத்தில் புராணம் சொல்ல வேண்டும். தங்கள் ஜீவனத்துக்காக வருடம் ஒன்றுக்கு நூறு பொன் நிஷ்கம் கொடுக்கச் செய்கிறேன். என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு என்னைக்  கிருதார்த்தனாக்க வேண்டும்" என்று வேண்டினான்.

தைக் கேட்ட அந்த வேதியன் மகிழ்ச்சியோடு அரசனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். தினமும் இரவிலே சிவாலயத்திலுள்ள மண்டபத்தில் புராணம் சொல்லப்பட்டது. அரசன் குடிமக்களோடு பக்தி சிரத்தையுடன் புராணம் கேட்டு வந்தான்.

ஆறு மாதங்கள் சென்றன. அரசனது கால தசை முடிந்து விட்டது. அரசன் இறந்ததும் அவனை அழைத்துவர யமலோகத்திலிருந்து விமானம் வந்து சேர்ந்தது. திவ்விய ரூபத்தைப் பெற்ற அரசனை அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றது, அந்த விமானம்.

இந்த விருத்தாந்தத்தைச் சொல்லி முடித்த தர்மராஜன், நான்முகா, புராணச் சிரவணம் செய்ததால் அரசன் மிகுந்த பாக்கியவானானான். ஆகவே அவன் என்னால் பூஜிக்கப் பட்டான். மற்றொருவனும் புராணச் சிரவணம் செய்தவனே. புராணச் சிரவணத்தால் எவரொருவர் தேவர்களைத் தகுந்தபடி கௌரவித்து அவரைத் திருப்திப்படுத்துவார்களோ அவர்கள் பிரம்ம லோகத்தில் நித்திய வாசத்தை அடைவார்கள்என்றார்.

ஹரி ஓம் !!










No comments:

Post a Comment