Monday 15 June 2020

சிவ புராணம் ( 37 )


37. உஷா பரிணயம்






பாணாசுரன் மிகுந்த சிவபக்தன். கடுமையான தவம் செய்து கணக்கற்ற வரங்களைப் பெற்றிருந்தான். அவனை மிஞ்சிய பலசாலி கிடையாது. தேவர்கள் அவனுக்குப் பணிந்து நடந்தனர்.

ஒரு சமயம் பாணாசுரன் மறுபடியும் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான். அவன் தவத்துக்கு மெச்சி சிவபெருமான் அவனுக்குக் காட்சி தந்து, உனக்கு வேண்டியது என்ன?" என்று கேட்டார்.

பிரபோ, எனக்கு ஒரு குறைவும் இல்லை. தங்கள் அருள் கடாக்ஷம் பெற்ற எனக்குக் கிட்டாததுதான் என்ன? தேவர்களும் என்னைக் கொண்டாடுகின்றனர். எனக்கு மிஞ்சிய வல்லமை கொண்டவன் யாருமில்லை. இத்தனை இருந்தும் உபயோகிக்க வழியில்லாது இருக்கிறது. என் தோள்கள் இரண்டும் தினவெடுக்கின்றன. எனக்கு இணையாகச் சண்டையிட ஒருவனும் பிறக்கவே இல்லையா? துருப்பிடித்துக் கிடக்கும் ஆயுதங்களைப் போல உறங்கிக் கிடைக்கும் என் சக்திகளை உபயோகிக்கக் கூடிய யுத்தம் எப்போது வரும்?" என்று கேட்டான் பாணாசுரன்.

ஈடு இணையற்ற பராக்கிரமத்தை உடைய பாணாசுரன் அதனால் ஏற்பட்ட கர்வத்தால் இவ்வாறு பேசுகிறான் என்பதை உணர்ந்த சிவபெருமான், பாணாசுரா, உன் விருப்பம் விரைவிலேயே நிறைவேறப் போகிறது. தினவெடுக்கும் உன் தோள்களுக்கு நிறைய வேலை கொடுத்து, கடைசியில் அவற்றை அறுத்துத் தள்ளும் புருஷன் வருவான்" என்று சொல்லி  மறைந்தார்.
சிவபெருமானின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி கொண்ட பாணாசுரன் தோள்களைத் தட்டிக் கொண்டு சென்றான்.
இவ்வாறு இருக்கும்போது, வைகாசி மாதம் வந்ததுசுக்லபக்ஷத் துவாதசி அன்று இரவு, உஷை உபவாசமிருந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்பார்வதி தேவி அவளுக்கு அனுக்கிரகித்திருந்தபடி காரியங்களை நிறைவேற்ற முனைந்தாள்
சிவபெருமான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி மன்மதன் துவாரகையில் கிருஷ்ணனின் புத்திரனாக பிரத்யும்னன் என்ற பெயரில் பிறந்திருந்தான். அவன் மகனான அநிருத்தனே உஷைக்கு ஏற்றக் கணவனாகத் தீர்மானித்த பார்வதி, இருவரையும் ஒன்று சேர்க்க எண்ணினாள். மாயையால் துவாரகையிலிருந்து அநிருத்தனைத் தூக்கி வந்து அயர்ந்து நித்திரையிலிருக்கும் உஷையின் அருகில் விட்டாள்.

தந்தச்சிலை போன்ற அவளைக் கண்டதும் அநிருத்தன் ஒரு கணம் அசந்து போய் விட்டான். அவளைப் போன்ற அழகுப் பதுமையை அவன் கண்டதே இல்லை. அதே சமயம் கட்டிலிலிருந்த உஷையும் கண்விழித்து எழுந்தாள். எதிரே கட்டிளம் காளை ஒருவன் நிற்பதைக் கண்டதும் அவள் உள்ளம் இன்ப வெள்ளத்தில் திளைத்தது. விரகத்தால் உடல் சோர எழுந்திருந்தாள். அநிருத்தனும் அவளைக் கண்டதிலிருந்து அதே நிலையில்தான் இருந்தான். இருவரும் தங்களை மறந்தனர். ஒருவரில்லாது மற்றொருவர் இருக்க முடியாது என்ற அளவில் இருவருடைய உள்ளங்களும் இணைந்தன.
அதற்காகக் காத்திருந்த தேவி உடனே தன் மாயையால் உஷையை மீண்டும் நித்திரையிலாழ்ந்திருக்கச் செய்து, அநிருத்தனை துவாரகையில் கொண்டு போய் விட்டு விட்டாள்.
கண் விழித்தபோது உஷையின் சிந்தனை முழுவதிலும் அநிருத்தனின் நினைவே ஆட்கொண்டிருந்தது. இங்குமங்கும் சுற்றிப்பார்த்து அவனைக் காணாது திகைத்தாள். வைகாசி சுக்கிலபக்ஷ துவாதசி அன்றிரவு எந்த ஆடவன்  உன்னைக் கூடுகிறானோ, அவனே உன் நாயகன்" என்று பார்வதி கூறியிருந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
உஷையின் மனத்தில் அநிருத்தனின் உருவம் அழியாமல் பதிந்துவிட்டது. அவன் நினைவு அவளை வாட்டியது. கண்கள் அவனைத் தேடித் தேடி அலுத்து விட்டன. அவளுக்கு உணவில் மனம் செல்லவில்லை. தோழிகளோடு சரியாக பேசவும்  இல்லை. உற்சாகமிழந்து அறையினுள்ளே கவிழ்ந்து கிடந்தாள். அவள் தளிர்மேனி வாடி விட்டது.

அரசகுமாரியிடம் ஓர் இரவுக்குள் நேரிட்ட இந்த மாற்றத்தைக் கண்டு தோழிகள் வியந்தனர். அவளை உற்சாகப்படுத்த என்னென்னவோ செய்தனர். கேலிப் பேச்சுகளைப் பேசினர். உஷையோ எதிலும் மனம் செல்லாமல் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். அநிருத்தனின் நினைவு அவளை வாட்டி எடுத்தது. அவன் யாரோ? எந்த நாட்டு அரசகுமாரனோ?" என்றெல்லாம் எண்ணி எண்ணி உருகினாள்.

மந்திரி குமாரத்தியான சித்திரலேகை, தோழியர்கள் அனைவரிலும் சற்று சூடிகையானவள். அரசகுமாரியின் சோர்வுக்குக் காரணத்தை ஊகித்துக் கொண்டாள். மெல்ல உஷையைத் தனியே அழைத்துச் சென்று, அவளின் இந்த மாற்றத்துக்கான காரணத்தை தெரிவிக்குமாறு கேட்டாள். உஷை அவளிடம் இரவு, கனவு போல தோன்றி மறைந்த சம்பவத்தை விளக்கினாள்.

சித்ரா, அந்த ராஜகுமாரன் எப்படி மறைந்தான் என்பது புரியவில்லை. அவன் போகும்போது என் உள்ளத்தையும் கொண்டு சென்று விட்டான். அவனைக் கண்டால்தான் என் இழந்த உற்சாகம் மீளும். இல்லையேல் அவன் நினைவிலேயே என் உயிர் பிரிந்து விடும்" என்றாள் உஷை.
சித்திரலேகை பலமுறை அவளைத் தூண்டித் தூண்டி அரசகுமாரனின் அங்க அடையாளங்களைத் தெரிவிக்கச் செய்தாள். அரசகுமாரி கூறக்கூற சித்திரலேகை நடு இரவிலே வந்து சென்ற அரசகுமாரன் துவாரகையிலிருக்கும் கிருஷ்ணனின் பேரனான அநிருத்தனே என்பதை அறிந்தாள்.
ராஜகுமாரி, வருத்தப்படாதே. நான் இப்போதே நீங்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு, வந்து சென்ற அரச குமாரன் யார் என்பதை அறிந்துவர ஏற்பாடு செய்கிறேன். என் ஊகம் சரியானால் அந்த ராஜகுமாரன் கிருஷ்ணனின் பேரனான அநிருத்தனாகவே இருக்க வேண்டும். நான் நினைப்பது தான் உண்மை என்பதானால் அந்த அரசகுமாரனை இங்கு அழைத்து வந்து உங்களிடம் சேர்ப்பிப்பது என் பொறுப்பு" என்றாள்
தோழியின் உறுதிமொழிகளால் உஷை ஓரளவுக்கு வருத்தம் நீங்கியவளாய் அவள் முயற்சி வெற்றி பெறுமாறு பகவானைப் பிரார்த்தித்துக் கொண்டாள். சித்திரலேகை அன்றைக்கே இரகசியமாக ஒற்றர்களைத் துவாரகைக்கு அனுப்பி, இராஜகுமாரி குறிப்பிடும் அங்க அடையாளங்களை உடையவன் அநிருத்தன் தானா என்பதை அறிந்துவரச் செய்தாள். அவர்களும் விரைவிலேயே திரும்பி, அவள் குறிப்பிட்ட நபர் அநிருத்தனே என்பதை அறிவித்தனர்

விஷயத்தை அறிந்தபோது உஷை உற்சாகத்தோடு தோழியை அழைத்து,சித்ரா, இனி நீ எப்படி அரசகுமாரனை இங்கு அழைத்து வருவாய்? அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால் நம் எல்லோருக்கும் ஆபத்தல்லவா?" என்றாள்.

ராஜகுமாரி, இன்றிரவு எப்படியாவது உங்கள் மனோ பீஷ்டத்தைப் பூர்த்தி செய்கிறேன். இது உறுதி. ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். விஷயம் அந்தப்புரத்தை விட்டுக் கொஞ்சமும் வெளிப்படாமல் இருக்குமானால் நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் மகிழ்ச்சியோடு இருக்கலாம்" என்றாள் சித்திரலேகை.

அன்றிரவு ஊரடங்கும் வரை காத்திருந்த சித்திரலேகை மாயாசக்தியால் துவாரகை சென்று அநிருத்தனின் அந்தப்புரத்தை அடைந்தாள். அங்கே கட்டிலில் அநிருத்தன் அயர்ந்து நித்திரையிலாழ்ந்திருந்தான். அவன் தூக்கம் கலையாது அப்படியே கட்டிலோடு தூக்கி வந்து உஷையின் கட்டிலருகில் விட்டாள்.

காதலனைக் கண்ட உஷை அடைந்த மகிழ்ச்சி சொல்லி முடியாது. அவன் கண் விழிக்கட்டுமென்று அருகில் அமர்ந்து விசிறிக் கொண்டிருந்தாள்.

பொழுது புலரும் நேரத்தில் அநிருத்தனின் நித்திரை கலைந்தது. அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்ததும் பக்கத்தில் உஷையைக் கண்டதும் திடுக்கிட்டு நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். தான் இருப்பது துவாரகையிலுள்ள தன் அந்தப்புரமில்லை என்பதை அறிந்தபோது அவனுக்கு வியப்பாக இருந்தது.

நான் எங்கிருக்கிறேன்? எப்படி இங்கு வந்தேன்?" என்று பரபரப்போடு உஷையைக் கேட்டான்.

பிரபோ, தாங்கள் என் அந்தப்புரத்தில் இருக்கிறீர்கள். பாணாசுரன் குமாரத்தியான என் பெயர் உஷை என்பது" என்றாள் தலையைக் குனிந்தவாறு.

துவாரகையிலிருந்த நான் இங்கு எப்படி வந்தேன்?" என்று கேட்டான் அநிருத்தன். நான் தங்களை என் தோழி சித்திரலேகை மூலம் இங்கு வரவழைத்தேன்" என்று கூறிய உஷை அனைத்து விஷயங்களையும் விவரித்தாள். உஷையின் மூலம் விவரங்களை அறிந்து அநிருத்தன் மிகுந்த ஆச்சரியமடைந்தான்.

பிரியே, அன்றிரவு உன்னை நான் எப்படிச் சந்தித்தேன் என்பதே புரியவில்லை. உன்னைப் பிரிந்தது முதல் உன் நினைவே என்னை வாட்டி வருகிறது. நீ யார், எங்கிருக்கிறாய் என்ற விஷயங்களை அறியாது தவித்து வந்தேன். நாம் இருவரும் இணைவது தெய்வ சம்மதம் என்று தான் நினைக்கிறேன். அதன் காரணமாகவே  இன்று நாம் மீண்டும் சந்திக்க நேர்ந்தது" என்றான் அநிருத்தன்.

அரசகுமாரியின் உற்சாகத்துக்குக் கேட்க வேண்டுமா? சோகம் குடிகொண்டிருந்த அந்தப்புரத்தில் ஆனந்தம் நிறைந்தது. உஷை காதலனுடன் இன்பமாகப்  பொழுதைக் கழித்து வந்தாள்.

நாட்கள் நகர்ந்தன. அந்தப்புரத்தில் நடந்துவரும் காதல் நாடகம் பற்றி மெல்லக் காவலர்களுக்குச் செய்திகள் தெரிய ஆரம்பித்தன. பலத்த காவலுக்கு உள்ளான அந்தப்புரத்தில் ஆடவன் எவ்வாறு நுழைந்தான்? அரசனுக்கு விஷயம் தெரியும் முன்பு தாங்களே தெரிவித்து விடுவது நல்லதென்று காவலர்கள் ஓடிச்சென்று பாணாசுரனிடம் விஷயத்தை அறிவித்தனர்.

அந்தப்புரத்தில் ஆடவன் ஒருவனுடைய நடமாட்டம் இருப்பதைக் கேட்டபோது அசுரன் மிகுந்த கோபம் அடைந்தான். அவன் எவ்வளவு துணிச்சலுள்ளவனாக இருந்திருந்தால் அசுரனுடைய அந்தப்புரத்தில் நுழைந்து இருக்க முடியும்? மந்திரி குபாண்டனை அழைத்தான்.

இப்போதே சென்று, அவனைப் பிடித்து விலங்கிட்டு என் முன் இழுத்து வாருங்கள்" என்று உத்தரவிட்டான்.

அரசனின் கட்டளைக்கு இணங்க தன்னைப் பிடித்துச் செல்ல மந்திரி வீரர்களுடன் வந்திருக்கிறார் என்பதைக் கேட்டபோது அநிருத்தன் கொஞ்சமும் கவலை கொள்ள வில்லை. தைரியமாக அவர்களை எதிர்த்தான். வீரர்களால் அவனை நெருங்க முடியவில்லை. தைரியத்துடன் நெருங்கிய ஒன்றிரண்டு பேர்களும் அவனால் அடிக்கப்பட்டுத் தரையில் வீழ்ந்தனர்.

அநிருத்தனின் பராக்கிரமத்தைக் கண்ட குபாண்டன் உடனே மேலும் வீரர்களை அனுப்பி அவனை எந்த விதத்திலாவது கைது செய்து வருமாறு உத்தரவிட்டான். அரக்க வீரர்களும் ஈட்டி முதலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அநிருத்தன் இருக்குமிடத்தை அடைந்தனர்.

அநிருத்தன் அந்தப்புரத்திலிருந்த மரக்கட்டை ஒன்றைத் தூக்கிக் கொண்டு அவர்களை எதிர்த்தான். அந்த வீரர்கள் எறியும் ஈட்டிகளை லாகவமாகப் பிடித்து அதையே அவர்கள்மீது திரும்பவும் எய்தான். வீரர்களால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திரும்பி ஓடினர்.

குபாண்டன் அரக்கனிடம் ஓடினான். அரசே, அந்தப்புரத்தில் நுழைந்திருப்பது சாதாரண மானிடன் அல்ல. நம்முடைய விரோதிகளான தேவர்களே யாரையோ இங்கு அனுப்பி நமக்குத் துன்பம் விளைவிக்க முயன்றிருக்கின்றனர். நம்முடைய வீரர்கள் அனைவரையும் அவன் ஒருவனாகவே இருந்து எதிர்த்து விரட்டுகிறானென் றால் அவன் சாமர்த்தியத்தை உணர்ந்து கொள்ளலாம். நம் வீரர்கள் எறியும் ஈட்டிகளைப் பிடித்து அதையே அஸ்திரமாக்கி நம்முடைய வீரர்களை விரட்டியடிக்கிறான்" என்றான்.

அதைக் கேட்ட பாணாசுரன் மிகுந்த கோபம் அடைந்தவனாய்ப் புறப்பட்டான். நேராக அந்தப்புரத்தை அடைந்து அநிருத்தனைப் பிணைக்குமாறு நாகாஸ்திரத்தை ஏவிவிட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் அஸ்திரம் அநிருத்தனைக் கட்டிவிட்டது.

இவனை இழுத்துச் சென்று சிறையிலடையுங்கள்" என்று கட்டளையிட்டுவிட்டுத் திரும்பினான் பாணாசுரன். அசுர வீரர்கள் அநிருத்தனை சிறைக்கு இழுத்துச் சென்றனர். காராக்கிருகத்தில் அடைக்கப்பட்ட அநிருத்தன் பார்வதியைக் குறித்து உருக்கமாக வேண்டினான்.

தேவி, உன்னையே சதாகாலமும் நம்பியிருக்கும் எனக்கு இந்தத் துன்பத்தை அளித்துவிட்டாயே. நானும் உஷையும் ஒன்று இணைவது உன்னுடைய அனுக்கிரகத்தில் தான் இருக்கிறது. எங்கள் இருவரையும் சேர்த்து வைத்ததே உன் முயற்சியால் தான். இன்று நான் அவளைப் பிரிந்து வாடுவதை நீ அறிந்திருப்பாய் என்றே நினைக்கிறேன்"

இவ்வாறு பலவிதமாக அநிருத்தன் தேவியைத் துதித்தான். அவன் மீது அன்பு கொண்டவளாய் தேவி அப்போதே சிறைச் சாலையை அடைந்து நாகாஸ்திரத்தின் கட்டுகளிலிருந்து அவனை விடுவித்து, உஷையின் அந்தப்புரத்தில் சேர்ப்பித்தாள்.

பலத்த காவல் இருந்தபோதிலும் அநிருத்தன் சிறைச் சாலை யிலிருந்து மாயமாக மறைந்து அந்தப்புரத்தை அடைந்து விட்டான் என்று கேள்விப்பட்டதும் அசுரன் சொல்லொனாச் சீற்றம் கொண்டான்.

சிறு பிள்ளையாயிற்றே; விரைவில் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கோருவான் என்று  சிறையில் அடைத்தேன். இனி அவனை ஒரு கணமும் உயிரோடு விட்டு வைக்கக் கூடாது" என்று கொதித்து எழுந்தான்.

இதற்குள் அநிருத்தனுக்கு நேர்ந்த அபாயத்தையும், அவன் அசுரனால் சிறையிலடைக்கப் பட்டிருப்பதையும் அறிந்த கிருஷ்ணன் பிரதியும்னனோடும், இதர வீரர்களோடும் சோணிதபுரிக்கு ஓடிவந்தார். பெரும் சேனையுடன் கிருஷ்ணனும் பிரத்தியும்னனும் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும்  பாணாசுரன் தானும் யுத்தத்துக்குத் தயாரானான். குறுகிய நேரத்துக்குள்ளாகவே அசுர சேனைகள் வந்து குவிந்தன.

இரு தரப்பினருக்கும் கடுமையான யுத்தம் மூண்டது. கிருஷ்ணனுடன் வந்திருந்த வீரர்கள், அசுரசேனையில் புகுந்து வதம் செய்தனர். மாயாஜாலத்தில் வல்லவர்களான அசுர வீரர்களை அதே மாயையாலே அழிக்கத் தலைப்பட்டனர் துவாரகையிலிருந்து வந்திருந்த வீரர்கள்.

பாணாசுரனின் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்து விட்டன. தினவெடுத்துக் கொண்டிருந்த இரு தோள்களையும் தட்டி விட்டுக் கொண்டு இரதத்திலேறி நேரிடையாக யுத்த களத்தில் நுழைந்தான்.

கிருஷ்ணன் அசுரனைத் தானே சந்திப்பதாக முன் வந்தார். மாறி மாறி அவன் விடுத்த அஸ்திரங்களைப் பயனற்றுப் போகச் செய்தார் கிருஷ்ணன். பின்னர் அவன் இருகைகளையும் துண்டித்து எறிந்தார். சக்கராயுதத்தை எடுத்து அசுரனின் ஆவியைக் குடிக்குமாறு ஏவ எத்தனித்தார். அப்போது யுத்தகளத்திலே கைலாசநாதரான சிவபெருமான் தோன்றி கிருஷ்ணனைத் தடுத்தார்

கிருஷ்ணா, சுதர்சனத்தைப் பிரயோகிப்பதை நிறுத்திக் கொள். பாணாசுரன் பரம பக்தன் ஆவான். தன்னை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை என்ற கர்வத்தில் தன்னோடு போர்புரிய எவனாவது பிறக்கமாட்டானா என்று கேட்டான். அவன் கர்வத்தை அடக்கி, அவன் கைகள் இரண்டையும் வெட்டித் தள்ளும் புருஷன் விரைவிலேயே தோன்றுவான் என அனுக்கிரகித்தேன். அதன் காரணமாகவே இந்த யுத்தம் நேரிட்டது. அவனுக்கு மிருத்தியு பயம் இல்லை என்று வரம் அளித்திருப்பதால் என் வாக்கு பொய்க்காதிருக்க அவனை விட்டுவிடு. அவன் ஆணவம் அழிந்துவிட்டது" என்றார்.

பாணாசுரன் கண்களிலிருந்து நீர் வழிந்தோட சிவபெருமானைத் துதித்தான். கிருஷ்ணன் அசுரனைக் கொல்வதை நிறுத்தி அவனுடன் வந்திருந்த வீரர்களை மட்டும் அழித்தார். பின்னர் அந்தப்புரத்திலிருந்து அநிருத்தன், உஷை இருவரையும் அழைத்துவரச் செய்து பிரத்தியும்னனிடம் ஒப்படைத்தார்

நந்திதேவன் பாணாசுரனை நெருங்கி, சிவபெருமானின் அருளால்  உன் உயிர் பிழைத்தது. மீண்டும் அவரையே துதித்து அவரது சந்திதானத்தில் நிருத்தியம் செய்து மகிழ்வித்தால் உனக்கு நற்கதி கிட்டும்" என்றார்.

 பாணாசுரன் அதே கோலத்தோடு கைலாசநாதனின் சந்நிதானத்தை அடைந்தான். பகவானை அனேக ஸ்தோத்திரங்களால் துதித்து நிருத்தியம் செய்தான். ஈசனும் அவன்மீது கருணை கொண்டு அவனைப் பார்த்து உனக்கு வேண்டிய வரம் என்ன?" என்று கேட்டார்.

பிரபோ, என் உள்ளத்தில் நிறைந்திருந்த ஆணவத்தை அழித்துவிட்டீர்கள். என்னிடம் குடி கொண்டிருக்கும் அசுரத் தன்மை குறைந்து, நான் எல்லோரிடமும் விரோதமின்றி நட்போடு பழகக்கூடிய வழி வகுத்துத்தர வேண்டும். எனக்குப் பின் அநிருத்தனின் மகனாகப் பிறக்கப் போகிற விஸ்வஜித்தே சோணிதபுரிக்கு அரசனாக வேண்டும்" என்று கோரினான் அசுரன்.

ஈசுவரன் மகிழ்ந்தவராய், அப்படியே ஆகட்டும்!" என்று அருளி அவனைத் தமது சிவகணங்களின் தலைவர்களுள் ஒருவனாக்கினார். அப்போதே அவன் வெட்டுண்ட கரங்கள் இரண்டும் புதிதாகத் தோன்றின. பாணாசுரன் இரு கரங்களையும் கூப்பி  பகவானை உள்ளம் உருகத் துதித்தான்.

அநிருத்தன் வரலாற்றைச் சொன்ன சூதர், முனிவர்களே, அநிருத்தனின் தந்தையான பிரத்தியும்னனும் இதைப்போன்ற சூழ்நிலையில் சிக்கிக்கொண்டது உண்டு. அதையும் கூறுகிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு அந்த விருத்தாந்தத்தைத் தொடங்கினார்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment