Tuesday 9 June 2020

சிவ புராணம் ( 31 )


31. சிவனிடமிருந்து விஷ்ணு சக்கராயுதம் பெறுதல்




அர்ஜுனன் சிவ பூஜை செய்து, சிவபெருமானைக் குறித்துத் தவம் இயற்றிப் பாசுபதாஸ்திரம் பெற்றுவந்த செய்தியைக் கேட்ட கிருஷ்ணன் மனம் மகிழ்ந்து அவனைப் பாராட்டினார்.
இனி உங்களுக்குத் துரியோதனாதியர்களைப் பற்றிய கவலை வேண்டாம். சிவபெருமானின் அருள் கடாக்ஷம் பெற்றவருக்கு எந்த காரியத்திலும் தோல்வியே இல்லை. எனக்குச் சக்கராயுதம் அளித்தவரே அவர்தான்" என்றார்.

மகாவிஷ்ணு சிவபெருமானிடம் சக்கராயுதம் பெற்ற விருத்தாந்தத்தை அறிய வேண்டுமென்று நைமிசாரணிய வாசிகள் விரும்பவே, சூதர் அதைச் சொல்லத் தொடங்கினார்.
ஒரு சமயம் அரக்கர்களின் பலம் அதிகமாயிருந்தது. அவர்களால் பலவிதங்களில் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் மகாவிஷ்ணுவைச் சரண் அடைந்தனர்.

பிரபோ, பன்னகசயனா, தாங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.

விஷ்ணு அவர்களுக்கு அபயம் அளித்து, தேவர்களே, அரக்கர்களை அழித்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள  இடைஞ்சலை நீக்க, நான் சர்வகாரண பூதரான சிவபெருமானை ஆராதித்து அவர் அருள் பெற்று வருகிறேன்" என்று கிளம்பினார்.
கைலயங்கிரியை அடைந்த விஷ்ணு, அங்கே ஓரிடத்தில் ஹோமகுண்டம் வளர்த்து சிவபெருமானைப் பார்வதியோடு பிரதிஷ்டை செய்து மானச சரஸில் வளர்ந்திருந்த தாமரை மலர்களால் அர்ச்சித்து வந்தார். ஆயிரம் தாமரைப் புஷ்பங்களைப் பறித்து வந்து பகவானின் ஆயிரம் நாமங்களையும் ஜபித்து, திருநாமம் ஒன்றுக்கு ஒரு மலராக அர்ச்சனை செய்தார்.
விஷ்ணுவின் பக்தியை பரிசோதிக்க விரும்பிய பகவான் அம்மலர்களில் ஒன்று குறையுமாறு செய்தார். அர்ச்சனை செய்து வந்த விஷ்ணு கடைசியில் ஒரு புஷ்பம் குறைவதைக் கண்டு திடுக்கிட்டார். அதற்காகப் பூஜையை நிறுத்திவிட விரும்பவில்லை. கண்களை மலருக்கு ஒப்பாகக் கூறுவதுண்டு. ஆகவே, குறையும் மலருக்குத் தம்முடைய ஒரு கண்ணையே ஈடாகச் செய்துவிடலாம் என்று எண்ணி ஒரு கண்ணைப் பெயர்த்தெடுக்க முயன்றார்.

சிவபெருமான் பிரத்தியக்ஷமாகி அவரது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினார்.
உன் பக்திக்கு மெச்சினேன், உன்னைப் பரீக்ஷிக்கவே மலர்களில் ஒன்றைக் குறையுமாறு செய்தேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

பிரபோ, சர்வேச்வரா, உலகிலே அரக்கர்களின் உபத்திரவம் அதிகமாகி விட்டது. அவர்கள் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருத்துகின்றன. அரக்கர்களைச் சம்கரித்துத் தேவர்களைக் காக்கும் சக்தியைத் தாங்கள் அளிக்க வேண்டும்" என்று கோரினார் விஷ்ணு.

சுதர்சனம் என்ற சக்கராயுதத்தை விஷ்ணுவுக்கு அளித்து இந்த அஸ்திரத்தால் அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றும் சக்தியை உனக்கு அளித்தேன்" என்றார் ஈசன்.

சுதர்சனத்தைப் பெற்றுக் கொண்ட விஷ்ணு, சிவபெருமானைப் பணிந்து ஆயிரம் நாமங்களையும் கூறித் துதித்தார்.

பிரபோ, என்னால் துதிக்கப்பட்ட இந்த ஆயிரம் நாமங்களையும் கூறி யாரொருவன் தங்களைத் துதிக்கிறானோ அவனுடைய பாபங்கள் அனைத்தும் நசித்துப் போக தாங்கள் அருள வேண்டும்" என்று பிரார்த்தித்தார் விஷ்ணு.

அவ்வாறே அருளி மறைந்தார் சிவபெருமான்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment