Sunday 21 June 2020

சிவ புராணம் ( 43 )

43. நரகவாதனையும் தான விஷேசமும்

புண்ணியாத்மாக்களும், தானம் செய்தவர்களும், யம பட்டணத்தைக் கிழக்கு வாசல் வழியாக அடைவார்கள். கிழக்குப் பக்கமாகச் செல்லும் வழி, சுலபமானதாகவும், அதிக தூரம் இல்லாததாகவும் இருக்கும். தெற்குப் பக்க வழியோ மிகுந்த தூரமுள்ளது. வழியெல்லாம், கூரிய முட்கள் நிறைந்திருக்கும். பாதத்தைக் கீழே வைக்க முடியாது, சுடும் மணல் கொட்டப்பட்டிருக்கும். கிடுகிடு பாதாளமாக இருக்கும். இரும்புக் குழம்பு ஓடும். ஒவ்வொரு இடத்தையும் தாண்டிச் செல்வதற்குள், அந்த ஆத்மா சொல்லொணா வேதனையை அனுபவித்துவிடும். யம கிங்கரர்களோ, கும்மாளமிட்டபடி “ நன்றாக அனுபவி “ என்று கை கொட்டுவார்கள். வர முடியாதென்றாலும் விட மாட்டார்கல், அடித்து உதைத்து இழுத்துச் செல்வார்கள். தாகம் நாவை வரட்டி எடுத்தாலும், ஒரு சொட்டு தண்ணீரும் தரமாட்டார்கள். நடக்க முடியாமல் சோர்ந்து விழுந்தால், கயிறு கொண்டு கழுத்திலோ, காலிலோ கட்டி இழுத்துச் செல்வார்கள்.

புண்ணியாத்மாக்களுக்கு இந்த வேதனை இல்லை. வழியில் சிரமம் ஏற்பட்டால், நிழலில் தங்கச் செய்து, சிரம பரிகாரம் செய்துகொண்ட பின்னரே அழைத்துச் செல்வார்கள். தாகம் ஏற்பட்டால், குடிக்க நீர் கைடைக்கும். நடக்க முடியாவிட்டால், பல்லக்கிலோ, குதிரை மீதோ, யானை மீதோ ஏற்றிச் செல்வார்கள்.

தர்மராஜன் சந்நிதானத்தை அடைந்தவுடன், அவரவர் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப, தண்டனையோ, சொர்க வாசமோ கொடுக்கப்படும். முதலில் தான் செய்த புண்ணியங்களுக்கானப் பலனை அனுபவித்து, பின்னர் பாவங்களுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

பாபிகளுக்கு, தர்மராஜனையும் அவந்தூதர்களையும் பார்க்கவே பயமாய் இருக்கும். கோரமான ரூபத்தோடும், அனல்கக்கும் விழிகளோடும் தோன்றுவார்கள். புண்ணியாத்மாக்களுக்கு, அவர்கள் நண்பர்களாகவும், இதம் செய்பவர்களாகவும் தோற்றமளிப்பார்கள்.

பாபிகளுக்கு, தண்டனை விதிக்கப்பட்டதும், கிங்கரர்கள் அவர்களை இழுத்துச் சென்று, அவர்கள் செய்த குற்றங்களைக் கூறி தண்டனை கொடுப்பார்கள். தண்டனையின்போது, கொடுமை தாங்கமாட்டாது துடிக்கும்போதும், கதறும் போதும், ஏளனம் செய்வார்கள்.

நரகங்களில் முக்கியமானவை இருபதெட்டாகும். கோரம், சுகோரம், அதிகோரம், மகாகோரம், கோர ரூபம், தலாதலம், பயநாசம், காளராத்திரி, பயோத்கடம், சண்டம், மகாசண்டம், சண்டகோலாகலம், பிசண்டதர் நாயகம், பத்மம், பதவதி, பீஷ்டை, பீமப் பிரணாயகம், கராளம், விகராளம், வச்சிரம், திரிகோணம், பஞ்சகோணம், சுதீர்க்கம், பரிபர்த்துலம், ஸப்தபௌமம், அஷ்ட பௌமம், தீப்ரம், மநனாய் ஆகியவை.இந்த நரகங்கள் இருபதெட்டுக்கும், ஒவ்வொரு வகையிலும் கோடி ஸ்தானங்கள் உண்டு. முக்கியமாக ஐந்து ஐந்து ஸ்தானங்கள் சொல்லப்படும் . 

அவை :
ரௌரவம், மகாரௌரவம், தமசு, சீகம், உஷ்ணம் ; சுகோரம், மகாதீஷணம், பத்ம ஸஞ்சீவனம், சிஷம் ;  மகாதம விலேபம், சுலோமம், கண்டகம், தீவிர வேகம், சராளம்; விகராளம், பிரகம்பனம், மகா வக்கிரம், வக்கிரம், காலம் ; பிரகர்ஜனம், ஸுசீமுகம், ஸுநேமி, காதகம், சுப்பீரபீடணம் ; சும்பி பாகம், சுபாகம், கிரகசம், தாருணம்,அங்கார ராசி ; பவனம், மேதப் பிரஹிதம், அஸ்ருக் பிரஹிதம், தீஷண துண்டம், சகுனி ; மகாசம்வர்த்தகம், கிரதுஸப்த ஜந்து, பங்கலேபம், பிதிமாசஸ்ரம், பூத்பவம்; உச்வாசம், ம்ஹிருச்வாசம், ஸ்தீர்கம், கூட சால்மலி, பிதீபத்மம்; ஸுமஹாநாதம், பிரவாஹம், சுப்பிர வாகனம்,மோகம் , விருஷம்; சல்லியம், சிம்மம், வியாக்கிரம், சுஜம், சுவாராஜம், மகிஷம், அவிகாரம், விருகானனம், கிரஹாக்கியம், மீன வக்திரம், ஸ்ர்பம், கூர்மம், வாயசம், குர்த்ரம், உலூகம், ஐலௌசம், சார்த்தூலம், விகர்க்கடகம், மண்டூசம், பூதிவக்த்ரம், ரஜிதம், பூதலிருத்திகை, கணதூமம், கணாக்னி, திருமி, சமூகம், அக்கினிகாசம், பிரதிஷ்டம், ருதிராம்பம், ஸ்ருபாஜனம், லாலா பக்ஷணம், ஆத்மபக்ஷணம், ஸர்வ அப்க்ஷணம், ஸுதாருனம், ஸுகண்டம், ஸுவிசாலம், விகடம், கடபூதனம், அம்பரீஷம், கடாஹம்,கஷ்டம், வைதாரிணி நதி, சுதப்லலோகசயனம், ஏகபாதம், பிரபூரணம், அசிதாலவனம், கோரம், அஸ்தி பங்கம், ஸுபூர்ணம், திலாதசிசுயந்திரம், கூடபாசம், பிரமர்த்தனம், மகாசூர்ணி, சுசூர்ணி, தப்தலோகமயம், பர்வதத்தில் இருந்து விழும் நீர் அருவி, மலவர்த்தகம், மூத்திரவிஷ்டம், சுக்லபம், தாரகூபம், சீதலம், முசலம், உலூகலம், யந்திரம், சிலை, சாகடம், லாங்கலம், தாலபத்திரம், கஹனம், மகாசகடமண்டபம், ஸம்மோஹம், அஸ்தி பங்கம், தப்தம், மலயம், குடம், பஹூதுக்கம், மகா துக்கம், கஸ்மலம், ஸ்வயமலம், மலம், ஹாலாஹலம் விரூபம், கரூபம், யமானுகம், ஏகபாதம், திரிபாதம், வாலுகவிதளம், தீவிரம், அர்வீசரம், ஆக நூற்று நாற்பது ஸ்தானங்கள்.

யமகிங்கரர்கள், பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சங்கிலிகளில் தலை கீழாகக் கட்டி தொங்கவிடுவார்கள். இரும்புப் பாறைகளைக் காலில் கட்டி சுமக்கச் செய்வர். கூரிய முனைகளை உடைய ஆயுதங்களால் உடலைத் துளைப்பார்கள். கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் தள்ளி வதக்கி அடுப்பார்கள். எரியும் நெருப்புக் கொண்டநளில் ஈட்டியால் குத்தி வாட்டி எடுப்பார்கள். செக்கிலிட்டு ஆட்டுவார்கள். மல மூத்திரக் குழிகளில் தள்ளி அங்கேயே சில காலம் கிடக்கச் செய்வார்கள். ஊசிகளால் குத்தி கழுவேற்றுவார்கள். பாவம் செய்த அவயங்களைத் தனித்தனியே துண்டித்து, சித்திரவதைக்குட்படுத்துவார்கள். வேதனைப் பொறுக்க முடியாது கூக்குரலிட்டாலோ, ஓடினாலோ, கதறினாலோ, கெஞ்சினாலோ, கிங்கரர்கள் கொஞ்சமும் பரிதாபம் காட்ட மாட்டார்கள். அவரவர் செய்த பாபங்களின் கடுமைக்கேற்ப, தண்டனையும் கடுமையாக இருக்கும்.

புண்ணியம் செய்தவர்கள், யமலோக வாதனை ஏதும் இன்றி சொர்க்லோகத்தை அடையலாம். அவர்கள் செல்லும் வழி, அவர்களுக்குச் சுகம் கொடுப்பதாகவே அமைந்திருக்கும்.

சத்பிராமணர்களுக்கு, பாதுகை, குடை முதலிய தானம் கொடுத்தால், அவன் குதிரையில் ஏறி, யமலோகத்தைக் கடந்து செல்வான். பாதைகளில் விருக்ஷங்களை வளர்த்து மக்களுக்கு உதவுபவன் யம லோகத்தைக் கடந்து செல்லும் வழியில், அநேக விருக்ஷங்கள் அவனுக்கு நிழல் தர காத்திருக்கும். தேவாலயங்கள், சத்திரங்கள், அனாதாசிரமங்கள் ஆகியவற்றைக் கட்டுவித்தவர்கள், எவ்வித சிரமமும் இன்றி கடந்து செல்வர். தீப தானம் செய்தவர்களுக்கு, வழி நெடுகிலும் ஜோதி வழிகாட்டி வரும். ப்தானம் செய்தவர்கள் செல்லும் வழியில், குளிர்ந்த சோலைகளும், தடாகங்களும், நிறைந்து மனதுக்கு இன்பம் அளிக்கும். ‘

தானங்களில் சிறந்தது அன்னதானம். அன்னத்தைக் கொடுத்தவன் பிராணனைக் கொடுத்தவன் ஆகிறான். ஆகவே, அவன் சகல தானங்களையும் கொடுத்தவனாகிறான். அன்னதானம் செய்தவனுக்கு, யமலோகத்தைக் கடந்து செல்கையில், பசி, தாகம்,களைப்பு ஏதும் இருக்காது. அன்னதானம், பான தானம், கோதானம், வஸ்திர தானம், படுக்கை தானம், குடை தானம், ஆதன தானம், பாதுகா தானம் ஆகிய எட்டும் பிரேத லோகத்தில் சிறந்த பலனைக் கொடுக்கக்கூடியவை.
தவம் செய்பவருக்கு, ஞானம், செவர்காதி பதவிகள், பாபநாசம், சிவலோகப் பதவி ஆகியவை கிட்டும்.

குடிமக்களின் உபயோகத்திற்காக, தடாகமோ, சிறு குளமோ, ஒருவன் வெட்டுவிப்பானாகில், அவன் வமிசத்தார் அனைவரும், தாங்கள் செய்த பெரும் பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியவாங்களாவார்கள்.

குடி தண்ணீருக்ககத் தோண்டுவிப்பது விஷேசமாகச் சொல்லப்படுகிறது. ஆயிரம் கோதானம்செய்த பலனை அவன் அடைகிறான். 

ஹரி ஓம் !!!!





No comments:

Post a Comment