Friday 12 June 2020

சிவ புராணம் ( 34 )


34. சிவாலயத்தில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்





அவந்தி பட்டணத்தில் கல்வி கேள்விகளில் சிறந்த பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் ஒழுக்க நெறிகளைச் சிறிதும் வழுவாது கடைப்பிடித்து வந்தார். அவருக்கு இரண்டு புத்திரர்கள் இருந்தனர். அவர்களுக்கு சுந்தி, வேதநிதி என்று பெயர்.
இருவரில் சுந்தி தந்தையைப் போல் ஒழுக்க நெறிகளைக் கொண்டவன். பெற்றோர்களின் முகம் கோணாது பணிவிடை புரிந்து வந்தான். இளையவனான வேதநிதியோ வேத சாஸ்திரங்களில் வல்லவனாயிருந்த போதிலும், பரஸ்திரீ லோலனாக விளங்கி வந்தான். சதா, வேசியர் வீட்டிலேயே இருந்து வந்தான். தாய் தந்தையர் எவ்வளவு கடிந்து பேசியும் அவன் திருந்துவதாயில்லை

ஒரு நாள் பண்டிதருக்கு அரசாங்கத்தில் விலை மதிப்பற்ற சன்மானம் கிடைத்தது. அவருடைய அறிவுத் திறமையைப் பாராட்டி, விலைமதிப்பற்ற ரத்தினம் பதிக்கப்பெற்ற மோதிரம் ஒன்றைப் பரிசு அளித்துக் கௌரவித்தான் அரசன். அதைப் பெற்று வீடு திரும்பிய பண்டிதர் தம் மனைவியை அழைத்து அவளிடம் அதைக் கொடுத்து யாருக்கும் தெரியாது பத்திரப்படுத்தி வைக்குமாறு கூறினார்.

இளைய மகனான வேதநிதி இதைப்பற்றி அறிந்தான். ஒரு நாள் யாரும் அறியாமல் அந்த மோதிரத்தைக் களவாடிச் சென்று தன் மனத்துக்கு இனியவளான வேசிக்கு பரிசாக அளித்து விட்டான்.

நாட்களுக்குப் பின்னர், ஒருநாள் அந்த வேசி, அரசன் முன்னிலையில் நாட்டியமாடச் செல்கையில், அந்த மோதிரத்தை அணிந்து சென்றாள்.

நாட்டிய மாதின் விரலில் பண்டிதருக்குத் தான் அளித்த மோதிரம் இருப்பதைக் கண்ட அரசன் திடுக்கிட்டான். அவளை அழைத்து மிரட்டிக் கேட்டபோது பண்டிதரின் மகனால் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட விஷயத்தைத் தெரிவித்து விட்டாள்.

அரசனுக்குக் கோபம் வந்து விட்டது. உடனே பண்டிதரை  வரவழைத்தான்.

மன்னவா, என்னைப் பார்க்க வேண்டுமென்று அழைத்தீர்களாமே?" என்று வணங்கிக் கேட்டார் பண்டிதர்.

ஆம், பண்டிதரே, நான் தங்களுக்கு ஒரு மோதிரம் பரிசு கொடுத்தது நினைவிருக்கிறதா? அதைக் கொண்டு வாருங்கள். இன்னொன்று அதே போலச் செய்ய வேண்டும், செய்ததும் உம்மிடம் தந்து விடுகிறேன்" என்று தெரிவித்தான் அரசன்.

வீடுதிரும்பிய பண்டிதர் மனைவியிடம் மோதிரத்தைக் கேட்டார். மோதிரம் அகப்படவில்லை. வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அதுதான் வேசியிடமிருக்கிறதே!

அரண்மனை திரும்பிய பண்டிதர், அரசனிடம் மோதிரம் காணாமற் போய்விட்டதென்று தெரிவித்தார். அரசனோ மோதிரத்தை அவருக்குக் காட்டி அது வந்த விதத்தையும் விவரித்தார். பண்டிதருக்கு அவமானமாகி விட்டது.

சோர்ந்த முகத்தோடு வீடு திரும்பிய பண்டிதர், தன் இளைய  மகனான வேதநிதியை அழைத்து, ’இனி வீட்டிலே நுழையக் கூடாதென்று அடித்து விரட்டினார். தந்தையால் விரட்டப்பட்ட வேதநிதி வேசியின் வீட்டுக்குச் சென்றான். அங்கேயும் கதவு தாழிடப்பட்டிருந்தது. வீட்டைவிட்டு விரட்டப்பட்டான் என்பதை அறிந்ததும் அவனால் இனி தனக்குப் பிரயோசனம் எதுவுமில்லையென்று அவனைச் சேர்க்க மறுத்துவிட்டாள்.

வேதநிதி அனாதையானான். பகல் முழுவதும் அன்ன ஆகாரமின்றி அலைந்தான். அஸ்தமித்தபோது அவனுக்குப் பசிபொறுக்க முடியவில்லை. எங்காவது ஒரு கவளம் உணவு கிடைக்காதா என்று தவித்தான்.

அன்று சிவராத்திரி தினம். சிலர் சிவாலயம் சென்று பூஜை செய்துவர பூஜை பொருட்களுடன் போய்க் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட வேதநிதி அவர்களோடு சென்றால் பூஜை முடிந்ததும் ஏதாவது ஆகாரம் கிடைக்கும் என்று அவர்களைத் தொடர்ந்து சென்றான். சிவாலயத்தை அடைந்த அவர்கள் பகவானுக்கு அபிஷேகம் முதலியன செய்து மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தனர். பலகார வகைகள் பலவற்றை பகவானின் முன் படைத்து நிவேதனம் செய்தனர். முதற்கால பூஜை முடிந்ததும் அவர்கள் வீடு திரும்பி நீராடி இரண்டாம் கால பூஜைக்கான பூஜை பொருட்களை எடுத்து வரச் சென்றனர்.

வேதநிதிக்குப் பசி பொறுக்க முடியவில்லை. சந்நிதியின் முன்பு இருந்த ஒரு சிலரும் தூங்கி விழுந்து கொண்டிருந்தனர். மெல்ல கர்ப்பகிருகத்துக்குள் நுழைந்தான். விளக்கில் சுடர் மங்கலாயிருந்தது. ஆகவே அவன் தன் வேட்டியிலிருந்து சிறிது துணியைக் கிழித்துத் திரியாக்கி, விளக்கிலிட்டு சுடரைத் தூண்டி விட்டான். விளக்கும் பிரகாசமாக எரியத் தொடங்கியது. அதன் ஒளியில் அங்கே படைத்திருந்த பலகாரங்களைத் தன் மேல் துணியில் வாரிக் கட்டிக் கொண்டு மெல்ல வெளியேறினான்.

அவன் செல்வதைக் கண்ட சிலர்திருடன் திருடன்என்று கத்தினர். காவலர்கள் ஒடி வந்தனர். அவர்களிடம் அகப்பட்டு விடக் கூடாது என்று வேதநிதி ஓடத் தொடங்கினான். காவலர்கள் அவனைப் பிடிப்பது இயலாதென்பதை உணர்ந்து வில்லில் அம்பெய்தி அவனை அடித்தனர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எய்த அம்பு ஒன்று அவன் முதுகில் பாய்ந்து இருதயத்திலே செருகியது. ‘வென்று அலறிக் கொண்டு தரையில் விழுந்த வேதநிதி அப்படியே உயிரை விட்டான்.

பெரும்பாவியான அவனை நரகத்துக்கு அழைத்துச் செல்ல யமதூதர்கள் வந்தனர். அப்போது சிவகணங்கள் அங்கே வந்து அவர்களைத் தடுத்தனர்.

இவனைக் கைலாசத்துக்கு அழைத்து வருமாறு சிவபெருமானுடைய உத்தரவு" என்றனர் கணங்கள்.

அதெப்படி முடியும்? இவனோ பெரும்பாவி, பெற்றவர்களைக் காப்பாற்றாது வேசியர் வீட்டிலேயே காலம் முழுவதும் கழித்தவன். தான் கற்ற வித்தையை மறந்த துரோகி. இவன் நரகத்துக்கே அழைத்துச் செல்லப்பட வேண்டியவன்" என்றனர் யமதூதர்கள்.

இருக்கலாம். ஆயினும் இன்று சிவராத்திரி தினம். இவனோ ஆகாரமின்றி உபவாசமிருந்திருக்கிறான். சிவாலயம் சென்று  சிவபூஜையைக்  கண்டிருக்கிறான். சாதாரண தினங்களிலே சிவாலயத்தில் தீபம் இடுபவர்களுக்கு எத்தனையோ புண்ணியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கச் சிவராத்திரி அன்று அணைந்துவிட இருந்த தீபத்தைச் சுடர் விட்டு எரியச் செய்திருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலாக இன்று இரவு இவன் இறந்திருக்கிறான். அதனால் இவன் செய்த பாபங்கள் நசிந்து விட்டன. சிவலோகம் செல்லும் பாக்கியம் இவனுக்குக் கிட்டியிருக்கிறது" என்றனர் சிவ கணங்கள்.

யமதூதர்களோ அதற்குச் சம்மதியாது தங்கள் தலைவனிடம் சென்று அனுமதி பெறவேண்டும் எனக் கூறி சிவகணங்களுடன் தர்மராஜனை அடைந்தனர். விஷயத்தை அறிந்ததும் தர்மராஜன் சிவகணங்களை வணங்கி, அவர்கள் கூறியபடி வேதநிதி சகல பாபங்களினின்றும் நீங்கியவனாகி விட்டான் எனக் கூறி அவர்களிடம் அவனை ஒப்படைக்க உத்தரவிட்டான். சிவகணங்கள் வேதநிதியைச் சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அடுத்த பிறவியில் அவன் கலிங்க நாட்டு மன்னனாக பிறந்து சகல போகங்களையும்  அனுபவித்தான்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment