Tuesday 23 June 2020

சிவ புராணம் ( 45 )


45. பூதான விசேஷம்




சித்திராதன் என்னும் அரசன் இருந்தான். அவன் பிரதாபம் இந்திரலோகத்திலும் பரவியிருந்தது. இந்திரனோடு சண்டையிட்டு இந்திரனையும் வென்று தன் அதிகாரத்துக்குட்படச் செய்தான்.

அழகிய மனைவியையும், புத்திரர்களையும் பெற்றிருந்தான். அவனுக்குக் குறைவு என்பதே இல்லாமலிருந்தது. இதே பாக்கியத்தை அடுத்தப் பிறவியிலும் தான் அடைய என்னென்ன மார்க்கங்கள் இருக்கின்றன என அறிய விரும்பினான்.

அவனுடைய குலகுருவான வசிஷ்டரிடம் சென்று பணிந்து, முனிசிரேஷ்டா, பொருளிலோ, பதவியிலோ, மோகத்திலோ ஒரு குறைவுமின்றி இருந்து வருகின்றேன். இந்தப் பாக்கியம் இந்தப் பிறவியில் நான் செய்த புண்ணியத்தால் அடைந்த தன்று. முற்பிறவியில் நான் செய்துள்ள புண்ணியங்களால் அடைந்த பலனே. இதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. தயவு செய்து முற்பிறவியில் நான் செய்த புண்ணிய காரியங்களைத் தாங்கள் சொல்ல வேண்டும்" என்று வேண்டினான்.

வசிஷ்டரும் தனது யோகபலத்தால், அரசனின் முற் பிறவியைக் கண்டு அறிந்து சொல்லுகிறார்.

அரசே! நீ முற்பிறப்பில் அவந்தி பட்டணத்தில் தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாய். நாட்டிலே மழையில்லாது வறுமை தாண்டவமாடியது. அப்போதும் நீ அரசன் தர்மபாலனிடம் யாசகத்துக்குச் செல்லவில்லை. அவன் தர்மவான் என்பதும் அவனை அடைந்தால் ஏதாவது பெறலாம் என்று உனக்குத் தெரியுமென்றாலும் நீ அரசனிடம் செல்லவில்லை. உழைத்துப் பிழைக்கவே விரும்பிய நீ, காட்டிற்கு உன் மனைவியுடன் சென்றாய். அங்குக் கிடைக்கும் காய் கனி கிழங்குகளைக் கொண்டு உயிர் வாழலாம் என்பது உன் எண்ணம். அங்கும் நிலைமை சரியில்லை. உன்னைப்போல் எத்தனையோ பேர் வந்திருந்ததால் தேவையான அளவு காய், கனி உனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, காய்ந்த மரங்களை வெட்டி எரித்துக் கரியையும், சுள்ளிகளையும், சிறு சிறு கட்டைகளையும், விறகுகளாக கட்டி எடுத்துச் சென்று விற்று ஜீவித்து வந்தாய்.

அப்படி இருந்துவரும்போது ஒருநாள் தலைச்சுமை விறகோடு நகரத்துக்கு வந்த உனக்கு அன்றைய தினம் சோதனை போல ஒரு விறகும் விலையாகாது போய்விட்டது. தெருத் தெருவாக அலைந்துவரும் போது ஓரிடத்தில் வைசியன் ஒருவன் வீட்டில் வேதியர் சிலர் ஹோமம் செய்து கொண்டிருந்தனர். அன்றைய தினம் மாசி மாதம் பௌர்ணமி சந்திர கிரகணம் அவர்கள் ஹோமம் செய்து வருவதை உன் மனைவியோடு நீ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாய். ஹோமத்தின் முடிவில் வைசியன் வேதியர்களுக்கு நூறு பலம் உள்ள பொன்னைப் பூதானம் பிரதியாகக் கொடுத்ததைக் கண்டாய்.

அப்போது  உன் உள்ளத்தில் வருத்தம் தோன்றியது. இந்தப் புண்ணிய காலத்தில் நாமும் தானம் செய்து விசேஷ பலனை அடைய முடியாதிருக்கிறதே என்று வருந்தினாய். மானசீகமாகத் தானம் செய்து மகிழ்ச்சி அடைந்தாய். அந்தப் புண்ணியத்தின் பலன் தான் இந்தப் பிறவியில் உனக்கு இந்தச் சுகபோக வாழ்க்கை. தன்னால் முடியாவிட்டாலும், முடியவில்லையே என மனப்பூர்வமாக வருந்தி, அவ்வாறு செய்ததாக மானசீகமாக எண்ணி ஆறுதல் கொண்டதற்கு இந்தபலன் என்றால், உண்மையாகவே தானம் செய்தால் எத்தனை மடங்கு பலன் கிட்டும் என்பதை எண்ணிப்பார். இந்தச் சுகபோக வாழ்க்கை நீ எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு நிலைத்திருக்க, நீ பூதானம் செய்" என்று தெரிவித்தார் வசிஷ்டர்.

அரசனும் அவ்வாறே பட்டணம் திரும்பி சத்புருஷர் களுக்குப் பூதானம், சொர்ணதானம் முதலியன செய்து மகிழ்ந்திருந்தான்.

ஹரி ஓம் !!!










No comments:

Post a Comment