Friday 19 June 2020

சிவ புராணம் ( 41 )


41. சிலாதருக்கு அருளுதல்




ஒரு சமயம் சிவபெருமான் பார்வதியோடு குகை ஒன்றில் சந்தோஷமாக இருந்து வந்தார். தக்ஷனுடைய யாக குண்டத்தில் குதித்து உயிர்விட்டதன் காரணமாகத் தான் பெற்றிருந்த கானவ வடிவத்தைப் போக்கிக் கொள்ள தேவி தவம் செய்ய விரும்பினாள். தான் பிரிந்திருக்கும் வேளையில் எதுவும் அசந்தர்ப்பம் நேரிடாதிருக்கத் தன்னுடைய தோழி களில் ஒருத்தியான உத்தாம குசுமை என்பவளையும் நந்தி தேவரையும் குகை வாசலில் காவலுக்கு வைத்துச் சென்றாள்.
ஆடி என்றொரு அசுரன் இருந்தான். அவன் பிரம்ம தேவனைக் குறித்துத் தவம் இயற்றி இறவாமை வேண்டும் என வரம் கோரினான். அவன் விரும்பிய வரத்தை அளிக்க இயலா தென்பதைப் பிரம்மதேவன் தெரிவித்து வேறு வரம் கேட்குமாறு சொன்னார். சந்திரதேவதாகமான நக்ஷத்திரத்தில் கூடிய ருத்திரதேவ தாகமான முகூர்த்தத்திலே இந்திரன் மழை பெய்யச் செய்யும்போது தனக்கு மரணம் சம்பவிக்கலாம் என்று வேண்டி னான் அசுரன். பிரம்மதேவன் அந்த வரத்தை அளித்தார்.
அவன் வனாந்திரங்களில் சஞ்சரித்து வரும்போது சிவபெருமான் தங்கியிருக்கும் குகையை அடைந்தான். நந்தி தேவரும், உத்தாம குசுமையும், வாயிலில் காவல் இருந்தனர். அவர்களிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்து தேவி தவம் செய்யச் சென்றிருக்கிறாள் என்பதை அறிந்தான். தனித்திருக்கும் ஈசனைக் கொல்ல இதுவே தருணமென்று எண்ணிய அசுரன் ஒரு பாம்பாக மாறி வாசலில் காவலுக்கு இருந்த இருவரும் அறியாது குகையினுள் நுழைந்தான். உள்ளே சென்றதும் அதிரூப லாவண்யத்தோடு கௌரியின் ரூபம் எடுத்து ஈசனை நெருங்கினான்.
நாதா, என் உள்ளம் காம வசப்பட்டு அலைகிறது. என்னால் தவம் செய்ய முடியவில்லை" என்று பெண் குரலில் கூறினான் அசுரன்சிவபெருமான் அவன் உண்மை சொரூபத்தை நன்கு உணர்ந்தார். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்வதியாக எண்ணித் தழுவியது  போல் தழுவி சூலத்தால் அவன் உடலைப் பிளந்து எறிந்தார். அரக்கன் அழிந்தான். அதன் பின்னர் அங்கிருந்து வெளிப்பட்டுக் கைலாயம் சென்றுவிட்டார்.
தவம் செய்ய வனத்துக்குச் சென்ற பார்வதி தான் விரும்பியபடி கருமை நிறம் நீங்கி, பிரகாசமான காந்தியையுடைய தேகத்தைப் பெற்றுத் திரும்பினாள். உத்தாமகுசுமை தேவியை வழியிலேயே சந்தித்து நந்தி தேவரின் அஜாக்கிரதையால் யாரோ பெண் ஒருத்தி குகையில் நுழைந்து ஈசனோடு லயித்திருந்தாள் எனச் சொல்லி அவள் கோபத்தைத் தூண்டி விட்டாள். இம்மாதிரி ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது எனத் தேவி எதிர்பார்த்தே அவர்களைக் காவலுக்கு வைத்துச் சென்றாள்.

தேவியால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த க்ஷணமே நந்திதேவர் அஞ்ஞானத்தோடு  பூலோகத்தில் சிலாதன் என்னும் வேதியன் ஒருவனுக்குப் புத்திரனாகப் பிறக்கட்டுமென்று சாபமிட்டாள்.

கைலயங்கிரிக்குத் தேவி திரும்பியதும் நந்தி தேவர் குகையில் நடந்த விவரங்களைத் தெரிவித்து, சிவபெருமானால் அரக்கன் அழிக்கப்பட்டதைக் கூறினார். அப்போதுதான் பார்வதி தான் அவசரப்பட்டு சாபமிட்டுவிட்டதை உணர்ந்தாள்.

குமாரா, உன் நேர்மையில் நான் அவசரப்பட்டுக் குற்றம் கண்டு சபித்துவிட்டேன். அதை மாற்ற முடியாது. எனினும் பன்னிரண்டு வருடங்களுக்குப், பிறகு நீ சாப விமோசனம் அடைந்து என்னை அடைவாயாக" என்றாள்.

நந்திதேவர் பூலோகத்தில் சிலாதன் என்னும் அந்தணருக்குப் புத்திரனாக வந்து பிறந்தார். சிலாதர் பெரும் தபஸ்வி. அவர் சிறு வயதில் ஒரு நாள், யாசகம் கேட்டு வந்தவருடைய பிச்சை தட்டிலி சிறு கற்களைப் போட்டுவிட்டார். அந்த யாசகரும் அதை அறியாது உணவோடு கற்களைப் புசித்துவிட்டார். பிச்சைக்கு வந்தவருடைய பாத்திரத்திலே சிறு கற்களைப் போட்டுவிட்டார். அவரும் அதை அறியாது உணவோடு கற்களைப் புசித்துவிட்டார்.

சிலாதர் வளர்ந்து பெரியவரானதும் தனது தபோ பலத்தினால் ஒரு சமயம் யமலோகத்துக்குச் சென்றார். தர்மராஜன் அவரை அழைத்துச் சென்று எல்லா இடங்களையும் காட்டினான்தர்மராஜனின் ஆசனத்துக்குச் சமீபத்தில் ஒரு பெரும் பாறை கிடந்தது. சிலாதர் தர்மராஜனைப் பார்த்து, அந்தப் பாறை அங்கே ஏன் கிடக்கிறது" என்று வினவினார்.

பூஜிக்கத் தகுந்த பெரியவரே! பூலோகத்திலே ஒருவர் இருக்கிறார். அவர் தம்முடைய சிறு வயதில் பிச்சைக்கு வந்தவரின் பாத்திரத்தில் அவருக்குத் தெரியாது விளையாட்டாகக் கற்களைப் போட்டார். அந்தப் பரதேசியும் அதை உணராது சாப்பிட்டுவிட்டான். அந்தக் கற்களே பெரும் பாறையாக வளர்ந்து இருக்கிறது. அந்த மனிதர் தம் கால திசை முடிந்து இங்கு வரும்போது இப்பாறையைப் பொடிசெய்து உண்ணவேண்டும் அதற்காகவே இங்குக் கிடத்தப் பட்டிருக்கிறது" என்றான் தர்மராஜன்.
அதைக் கேட்டதும் சிலாதரின் முகம் வாடியது. தர்மராஜன் குறிப்பிட்ட மனிதர் தாமே என்பதைத் தெரிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் ஆகவில்லை. தர்மராஜா, இதற்குப் பரிகாரம் ஏதுமில்லையா?" என்று கேட்டார் அவர். இருக்கிறது. அந்த மனிதன் தம்முடைய ஜீவிய தசையிலேயே இந்த அளவு பாறையைப் பொடி செய்து கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் குடித்து ஜீரணம் செய்துவிட வேண்டும்" என்றான் தர்மராஜன்.
 பூலோகம் திரும்பிய சிலாதர் யமலோகத்தில் தாம் பார்த்த பாறை அளவுள்ள பாறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைப் பொடி செய்து கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் குடித்து வந்தார். தினமும் சிவயோகத்தில் அமர்ந்து யோகம் முடிந்ததும் பாறையைப் பொடிசெய்து நீரிலே கரைத்துக் குடிப்பார். இப்படியாகக் கொஞ்ச நாட்களில் அந்தப் பாறை முழுவதும் தீர்ந்துவிட்டது. அதன் காரணமாகவே அவருக்குப் பாறையைப் பொடி செய்து ஜீரணித்தவர் என்ற பொருள்படி சிலாதர் என்னும் பெயர் ஏற்பட்டது.

தபோ பலம் நிரம்பப் பெற்ற அவருக்குப் புத்திரப்பேறு மட்டும் கிட்டவில்லை. திருவையாறு எனப்படும் க்ஷேத்திரம் சென்று அங்குள்ள அயனரி தீர்த்தத்தில் நீராடி பகவானைப் பூஜித்து பஞ்சாக்ஷரம் ஜபித்து, ஒற்றைக்காலில் பஞ்சாக்கினி மத்தியில் நின்று பிள்ளை வரம்  வேண்டினார்.

அவர் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அற்பு ஆயுளே ஜீவிக்கக் கூடிய புத்திரனை அருளினார். ஒரு நாள், யாகம் செய்வதற்காகச் சிலாதர் பூமியை உழும்போது மாணிக்கப் பெட்டி ஒன்று கிடைத்தது. அவர் ஆவலோடு அதை எடுத்து மேல் மூடியைத் திறக்க பார்வதியின் சாபத்தால் நந்தி தேவர் அங்கே குழந்தையாகப் படுத்திருந்தார்.
சிலாதர் மகிழ்ச்சியோடு குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டார். அவனுக்கு செப்பேசுவரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். குமாரனும் வளர்ந்து வந்தான். புத்திரனிடம் எவ்வளவுக்கு வாஞ்சை கொண்டிருந்தாரோ, அந்த அளவுக்கு அவன் வளர்ந்து வருவதைக் காணும்போது வருத்தம் கொண்டார். குமாரனின் அற்ப ஆயுளை எண்ணும் போது அவர் உள்ளம் வேதனையால் துடித்தது.

செப்பேசுவரன் தந்தையின் வருத்தத்தை அறிந்த போது அப்பா, வருந்தாதீர்கள். இப்போதே நான் பரமேச்வரனை ஆராதித்து நீடித்த ஆயுளைப் பெற்றுத் திரும்புவேன்" என்று சொல்லி அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டான்.


ஆலயத்துக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பகவானை ஏகாக்கிர சிந்தையுடன் தியானித்தான். பகவான் அவன்பால் மகிழ்ச்சி கொண்டு அவனுக்குக் குறைவில்லாத ஆயுளை அளித்து சுயசை என்ற பெண்ணையும் மணம் செய்வித்தார். செப்பேசுவரன், நந்திதேவர் என்ற பெயரோடு சிவ கணங்களின் தலைவனாகத் தனது முந்தைய பதவியை அடைந்தான்.

ஹரி ஓம் !!






No comments:

Post a Comment