Saturday 20 June 2020

சி வ புராணம் ( 42 )

42. சிவாலயம் எழுப்புவதால் அடையும் பலன்கள்

நைமிசாரண்யத்துவாசிகளைப் பார்த்து சூதர், சிவாலயம்  எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்களை விவரிக்கத் தொடங்கினார்.

எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள். பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவ லோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான். சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான். ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள், காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
சிவாலயம் சென்று பகவானைத் தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான். கிருஷ்ண பக்ஷ சதுர்தசியில் சிவலிங்கத்துக்கு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செய்த பாபங்கள் விலகும். பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சிவலிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்பவன் சகல பாபங்களினின்றும் விடுபடுவான். பிரதோஷ காலங்களில் நெய்யால் அபிஷேகம் செய்தால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் கூட விலகிவிடும்.

பசுவின் பாலால் ஒருவன் அபிஷேகம் செய்தால், அவன் சிவலோகத்தை அடைந்து மகிழ்ச்சியோடு ஸ்வஸ்தசித்தமும் ரோகமின்மையும் சுந்தர வடிவமும் பெற்று வாழ்வான். நவக்கிரகங்களும் அவனுக்கு அனுகூலம் செய்யட்டுமென்று அருளுகிறார்.

ஒரு சமயம் பூஷணன் என்பவனும் அவன் மனைவி சுயதி என்பவளும் சிவலோகத்தை அடைந்து ஆனந்தமாக இருந்து வந்தனர். கௌதமி என்பவள் அவர்களைப் பார்த்து ஆச்சரியமுற்று, இந்திராதி தேவர்களுக்கும் இல்லாத தேகக்காந்தி உங்கள் இருவருக்கும் இருக்கிறதே. உங்கள் இருவரைப்போல் மனமொற்று நடக்கும் தம்பதிகளை நான் தேவலோகத்திலும் பார்த்ததில்லை. இந்தப் பாக்கியம் உனக்கு எப்படி கிட்டியது? என்ன தவம் செய்தாய்?" என்று கேட்டாள்.

அம்மா, சொல்லுகிறேன் கேள், என் கணவரின் மூதாதையர்கள் சிவபெருமானை ஆராதித்து வந்தவர்கள். என் கணவரும் அனேக யாகங்கள் செய்தார். பகவானுக்கு நெய்யினாலும் பாலினாலும் அனேக அபிஷேகங்கள் செய்தோம். பகவானுக்கு மலர் மாலைகளும், இரத்தினம் முதலிய பொன்னாலான ஆபரணங்களும் பட்டாடைகளும் சமர்ப்பித்தோம். அந்த பலனே இப்போது சொர்க்க லோகத்திலே எங்களுக்குக் கிட்டியுள்ளது. அபிஷேகம் செய்ததாலேயே எங்களுக்குக் காந்தியோடு கூடிய தேகமும், மனமொற்று நடக்கும் தம்பதிகள் எனப் பிறரால் கொண்டாடப்படும் பாக்கியமும் கிட்டியது" என்றாள் சுயதி.

சிவபெருமானை மனத்திற்குப் பிடித்த மலர்களால் அர்ச்சிக்கலாம். தாமரை மலர், நீலோற்பலம், ஜாதி புஷ்பம், மல்லிகை, பாடலம், கரவீரம், (அலரி) அத்திகொன்றை, கொங்கு, முல்லை, இருவாக்ஷி, பலாசம், ஆகத்திப்பூ, துளசி, சத பத்திரம், வில்வம் ஆகியவற்றினால் அர்ச்சிக்கலாம். வில்வ பத்திரம் உலர்ந்திருந்தாலும் அர்ச்சனைக்கு உரியதே. முள்ளை உடையதும், உக்கிரமான வாசனை கொண்டதுமான ஊமத்தை முதலிய மலர்களாலும் சிவனை அர்ச்சனை செய்யலாம்.

மலர்கள் கிடைக்காவிடில் ப்ருங்கராஜபத்திரம், அறுகம்  புல், சலேத்திரம் ஆகியவற்றால் பூஜிக்கலாம். தாழை மலரைக் கொண்டு பகவானைப் பூஜிக்கக் கூடாது

சங்கராந்தி விஷு புண்ணிய காலம், வ்யதிபாதம், தக்ஷிணாயன உத்தராயண காலங்கள், கிரஹண காலம், பௌர்ணமி, அமாவாசை சதுர்தசி, அஷ்டமி ஆகிய புண்ணிய  காலங்களில் சிவபெருமானைப் பூஜிப்பவர்கள் நித்ய பூஜை விட ஆயிரம் மடங்கு அதிகமான பலனை அடைவார்கள்.
சிவனடியார் ஒருவனுக்குச் செய்யும் சேவை சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியாகும். தபோ நிஷ்டர்களுக்குத் தானம் செய்தால், நூறு பிறவிகள் எடுத்துத் தானம் செய்தால்  அடையும் பலனைக் கொடுக்கும். ஆனால் சிவனடியார்களுக்குத் தானம் செய்தாலோ லக்ஷம் பிறவிகளில் தானம் செய்த பலன் கிட்டும்.

சிவனடியார் ஒருவருக்கு இடும் பிக்ஷை அவன் வமிசத்தாரையே சிவலோகம் செல்ல வழி வகுக்கும். சிவனடியார் ஒருவர் எவன் வீட்டுக்கு வருகிறாரோ அப்போதே அவ்வீட்டுக்குத் தன தானிய சம்பத்துக்கள் உண்டாகும். சிவபக்தர்களைச் சிவபெருமானாகவே எண்ணி உபசரிக்க வேண்டும். சிவனடியார்களைத் துவேஷிப்பவன் பெரும்பாவியாகிறான்.

ஏழையான யாசகன் வந்தபோது அவனை விரட்டி விட்டு, இன்னொருவனை அழைத்து வந்து அனேகவித ருசி மிகுந்த அன்னமிட்டால் அதனால் பலன் ஏதுமில்லை. தானம் செய்யச் சக்தி இல்லாதவன் வந்தவனுக்கு நல்ல வார்த்தைகள் கூறி அனுப்பினால் போதும், அதுவே ஓரளவு பலன் அளிக்குமாம்.

பிற ஸ்திரீகளை அடைய விரும்புதல், அந்நியர் பொருளை அபகரித்தல், விரும்பாத பிறருக்கு அபகாரம் செய்ய வேண்டுமென்று நினைத்தல், செய்யத் தகாத காரியங்களைச் செய்ய விரும்புதல் இந்நான்கும் மானசீகப் பாபங்களாகும். சம்பந்தமின்றிப் பேசுதல், பொய் பேசுதல், பிரியமற்ற சம்பாஷணை, புறங்கூறல் ஆகிய நான்கும் வாசிக பாவங்க ளாகும், புசிக்கத் தகாதவற்றைப் புசித்தல், துன்புறுத்தல், நிஷித்த காரிய சரணம், பிறர் பொருளை அபகரித்தல் ஆகிய நான்கும் சாயிக பாவங்களாகும். இந்தப் பன்னிரண்டு பாவங்களும் நரகத்துக்கு அழைத்துச் செல்பவையாகும்.

பிரம்மஹத்திபொன் திருடுதல், மதுபானம் செய்தல், குரு பத்தினியிடம் தகாத நடத்தை ஆகியவை  மகாபாதகங்களாகும். வேதியனைக் கொல்ல விரும்புவது, ஆசை வார்த்தைகள் கூறிப் பின்னர் வேதியனை ஏமாற்றுவது, காரணமின்றிப் பிறரைத் துவேஷிப்பது, இறுமாப்பால் படித்தவர்களை நிந்திப்பது, பிறரிடம் தன்னைப் பற்றித் தற்புகழ்ச்சியாகப் பேசுவது, பிறருடைய நற்குணங்களை விட்டுவிட்டு, அவர்களுடைய துர்க்குணங்களை மட்டுமே எடுத்துக் கூறுவது, பசி தாகத்தால் வருந்தி வீடு தேடி வந்த மனிதனை வீட்டினுள் சேர்க்காது விரட்டுவது, பிறருக்குப் பயத்தைக் கொடுப்பது, பிறர் ஜீவனத்தைக் கெடுப்பது, தேவ பூமி, பிராமண பூமி ஆகியவற்றைப் பலாத்காரமாகக் கைக்கொள்வது ஆகியவை பிரம்மஹத்திக்குச் சமம் ஆகும்.

பிராமணருடைய சொத்துக்களை அபகரித்தல், பெற்றோர்களை நிர்க்கதியாக விடுதல், பொய் சாக்ஷி கூறுதல், சிவ பக்தர்களை நிந்தித்தல், நிரபராதிகளைக் கொல்லுதல், பிறர் வீடுகளுக்கு நெருப்பு வைத்தல் ஆகியவை பிரம்ம ஹத்திக்குச் சமமான பாபங்களாகும்.

வேதியனுக்குக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டுப் பின்னர் பொருளைக்  கொடுக்காமலிருத்தல், தானம் செய்த பின்னர் தானம் செய்துவிட்டோமே என்று வருந்துதல், பதிவிரதைகளைத் தூஷித்தல், மூத்தவனிருக்க இளையவன் மணம் முடித்தல், புத்திரர் மித்திரர் ஆகியோரை நிர்க்கதியாக விடுதல், பசுக்களை வதைத்தல், சிவாலயத்திலுள்ள விருக்ஷங்களை வெட்டுதல், சொல்லத் தகாதவர்களுக்கு வித்தையைக் கற்பித்தல், தானம் வாங்கிய பொருள்களை விற்றல், மனைவி, புத்திரன் முதலானோரை விற்றல், பாவியின் பொருள்களைத் தானம் வாங்குதல், விலையுள்ள பொருள்களைக் கபடமாகக் குறைந்த விலையில் வாங்குதல், குலாசாரங்களை விட்டுவிடுதல், ஏரி, குளம் முதலியவற்றின் கரைகளை  இடித்தல் ஆகியவை உப பாதகங்களாகும்.

பிறர் செல்வத்தைக் கண்டு பொறாமை கொள்ளல், பிறருக்குத் துன்பம் இழைப்பதிலேயே விருப்பமுடையதா யிருத்தல், பிறர் மதிக்க வேண்டிக் காரியங்களைச் செய்தல், பசு கட்டுமிடம், அக்கினி காரியம் செய்யுமிடம், சிவாலயம்சத்திரம் ஆகிய இடங்களில் அசுத்தப்படுத்தல், வழியை அடைத்தல்தகுதியில்லாத பொருள்களைத் தானம் கொடுத்தல், வண்டி மாடு, குதிரை, முதலிய பிராணிகளுக்கு ஓய்வு கொடுக்காது எந்நேரமும் வேலை வாங்குதல், வேலைக்காரர்களிடம் கடுமையான உழைப்பைப் பெறுதல், பிறரிருக்கத் தான் மட்டும் உணவருந்தல் ஆகியவை உபபாதகங்களுக்குச் சமமாகும்.

பாவம் செய்த மனிதன் உயிர் நீங்கியதும் யாதனா சரீரம் பெற்று யமலோகத்தை அடைந்து அங்கே தான் செய்த  பாவங்களுக்கேற்ப நரக வேதனைகளுக்கு உள்ளாகிறான்.


சிவாலய வழிபாட்டால் ஏற்படும் பலன்களை விவரித்த சூதர் அடுத்துப் பாப காரியங்களை விவரித்தார். அவற்றைக் கூறி முடித்ததும் பாபிகள் தங்கள் தங்கள் பாபங்களுக்கு என்னென்ன தண்டனைகளைப் பெறுவார்கள் என்பதையும் எடுத்துக்  கூறத் தொடங்கினார்.

ஹரி ஓம் !!!




No comments:

Post a Comment