Sunday 14 June 2020

சிவ புராணம் ( 36 )

36. நதி தீரத்தில் நல்லதோர் நாடகம்


ஒரு சமயம் பாணாசுரனுடைய பட்டணமான சோணித புரிக்கு அருகே உள்ள நதி தீரத்தில் சிவபெருமான் எழுந்தருளினார். அவருடைய அற்புத கோலத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் முதலானோர் அங்கு கூடினர். முனிவர்கள், பரமனின் திவ்விய கோலத்தைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியவர்களாய் வேதகோஷங்களால் பகவானைப் பணிந்து போற்றினர். தேவர்கள் பகவானின் திவ்விய நாமங்களை ஒலித்தனர். அப்சரசுகள் கண்ணுக்கு விருந்தாக அற்புத நாட்டியம் ஆடினர். கின்னரர்கள் கீதம் இசைத்தனர். எங்கும் மகிழ்ச்சி ஆறாகப் பெருகி ஓடியது.

அந்த நேரத்தில் தேவியும் அங்கிருந்தால் நல்லது என எண்ணினார் ஈசன். உடனே நந்திதேவரை அழைத்து, இப்போதே கைலாசம் சென்று பார்வதியை அலங்கார பூஷிணியாக அழைத்து வா" என்றார்.

நந்திதேவர் உடனே கையிலயங்கிரி சென்று தேவியிடம் சிவபெருமானுடைய விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு வந்தார்பார்வதி ஈசன் விருப்பப்படி தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். திரும்பவும் பரமசிவனிடம் வந்து தேவி தயாராகிக் கொண்டிருப்பதாகக் கூறினார், நந்திதேவர்.
நந்தீ, நீ சென்று பார்வதியை அழைத்து வாஎன்று அவசரப்படுத்தினார் ஈசன்.

நந்திதேவர் மீண்டும் கைலாசத்துக்கு ஓடினார். பார்வதி தன்னுடைய தோழிகள் ஐவரை நந்தி தேவருடன் அனுப்பி வைத்து விரைவில் தான் வந்து சேருவதாகப் பரமசிவனிடம் தெரிவிக்குமாறு கட்டளையிட்டாள்.

சிவபெருமான் முன்பு கூடியிருந்த அப்சரசுகளிடையே தர்க்கம் ஒன்று நடந்தது. தங்களுக்குள் யார் சிறந்தவள் என்பதை அறிய அவர்கள் விரும்பினர். அவர்களிடையே ஒருமித்த முடிவு உண்டாகாததால் அவர்கள் சிவபெருமானையே கேட்பதென்று தீர்மானித்தனர்.

யார் பகவானை நெருங்கிக் கேட்பது?

இதைக் கவனித்துக் கொண்டிருந்த பாணாசுரன் மந்திரியான குபாண்டன் என்பவனின் மகள் சித்திரலேகைக்கு, தோழிகளுடன் சேர்ந்துகொண்டு ஒரு வேடிக்கை செய்ய விருப்பம் உண்டாயிற்று.

விஷ்ணுவின் தொடையிலிருந்து தோன்றியதால் ஊர்வசி என்ற பெயரைக் கொண்ட அப்சரசை நந்தி தேவரைப்போல் வேடம் புனையச் செய்தாள். கிருதாசி என்பவள் காளியாகவும், விசுவாசி என்பவள் சண்டிகையாகவும் வேடம் புனைந்தார்கள். அதேபோல் சாவித்திரியாக ப்லம்லோகையும், காயத்திரியாக மேனகையும் வேஷம் தரித்துக் கொண்டனர். ஜயை விஜையையாக ஸஹஜந்யா என்பவளும், புஞ்ஜகஸ்தலி என்பவளும் மாறினர். விநாயகராக கரதூஸ்தலி என்பவள் உருமாறினாள்.
சித்திரலேகை கௌரியாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். அவளைப் பார்ப்பவர்கள் கைலாசத்திலிருந்து பார்வதிதான் வந்துவிட்டாளோ என எண்ணத் தோன்றும் விதத்தில் தோற்றம் அளித்தாள் அவள். அவளுடைய தோழிகள் கூடப் பிரமித்துவிட்டனர். அவ்வளவு தத்ரூபமாக அமைந்து விட்டது அந்த வேஷம்.

பின்னர் நந்தி தேவராக வேடம் புனைந்திருந்த ஊர்வசி, தோழிகள் பின் தொடர சித்திரலேகையை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்றாள். அவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே அங்கு குழுமியிருந்த தேவர்களும், முனிவர்களும் எழுந்து நின்றனர். பார்வதி தேவியார் வந்துவிட்டார் என்ற பேச்சு எங்கும் பரவியது. அவர்கள் செல்லும் வழியில் இருந்த தேவர்களும் முனிவர்களும் வேதகோஷங்களை எழுப்பி வரவேற்றனர்.

ஊர்வசி நந்தி வேடம் தரித்திருந்த மற்றவர்கள் பின்னால் வர ஈசனை நெருங்கி வணங்கினாள்

பிரபோ, தங்கள் கட்டளைப்படி கைலாயத்திலிருந்து தேவியை அழைத்து வந்துள்ளேன்" என்று ஆண் குரலில் தெரிவித்தாள்.

சர்வ வியாபியான ஈசுவரனுக்குத் தெரியாதா அவர்கள் விளையாடுகின்றனர் என்பது? மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்க அங்கே கூடியிருக்கும் அந்நேரத்தில் அவர்களைக் கடிந்து கொள்ள விரும்பவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் உண்மை தானே வெளியாகும்போது அவர்கள் படும் அவஸ்தையைக் கண்டு களிக்க எண்ணம் கொண்டவராய், எதுவுமே தெரியாதது போல் இருந்தார்.

தேவி, உன் வருகைக்காகத்தான் எல்லோரும் காத்திருக்கிறோம்" என்று சொன்னவராய் சித்திரலேகையைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னருகில் உட்காரச் செய்தார்.

தேவமாதர்கள் பார்வதி தேவியார்தான் அமர்ந்திருப்பதாக எண்ணி மலர்களைத் தூவி கீதம் இசைத்தனர். சித்திரலேகையின் நெஞ்சம் துணுக்குற்றது.
அதே சமயம் தொலைவில் ஏதோ ஆரவாரம் கேட்கவே அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது. சிவகணங்கள் புடைசூழ பார்வதி வருவதைக் கண்டதும் அனைவரும் பிரமித்தனர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சிவனருகே தேவி அமர்ந்திருக்கும் போது எதிரே வருவது எங்ஙனம்?

திரும்பி ஈசனைப் பார்த்தனர். அவரோ ஒன்றும் நடவாதது போல எதிர்கொண்டு சென்று தேவியை அழைத்து  வந்து தன்னருகே நிறுத்தினார்.

சிவனருகிலே தன்னைப் போன்று ஒருத்தி அமர்ந்திருப் பதைக் கண்டதும் திடுக்கிட்டாள் பார்வதி. தன்னுடன் வந்திருந்த தோழிகளைப் போன்று சிவனின் அருகில் நின்று கொண்டிருந்த கிருதாசி போன்றவர்களைக் கண்டதும் அவள் குழப்பம் மேலும் அதிகரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு விநாயகரைக் கண்டாள். இருவரில் யார் தன்னுடைய குமாரன் என்பது அவளுக்குப் புரியவில்லை. தன்னோடு கைலாயத்திலிருந்து வந்திருப்பவர்கள் வேடதாரிகளோ என்ற குழப்பம் எழுந்தது பார்வதிக்கு.

பார்வதியை எதிரில் கண்டதும் சித்திரலேகை சப்தநாடியும் அடங்கியவளாகி விட்டாள்அவள் நினைத்திருந்ததே வேறு! தங்களைக் கண்டதும் தேவர்கள் பார்வதி தேவியார்தான் வந்து விட்டாள் என்று நம்பி எழுந்திருப்பார்கள் என்றும் அப்போது ஈசன் அவர்களுக்கு தாங்கள் போட்ட வேஷத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் திகைக்க வைப்பார் என்றே எதிர்பார்த்தாள் அவள்.

அந்த வேடிக்கை, அங்கே நிலவியுள்ள மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் மேலும் சந்தோஷத்தையே உண்டாக்கும் என்று எண்ணியே அவள் அத்திட்டத்தை மேற்கொண்டாள். ஆனால், ஈசனே அவளைப் பார்வதியாக அழைத்துச் சென்று மஞ்சத்தில் அமர்த்தியபோது அவளுக்குப் பெரும் சங்கடமாகிவிட்டது. அந்தப் பெரும் குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதை உணராது தவித்தாள். தேவர்களும் தேவமாதர்களும் அவள் தவிப்பை வேறு விதமாக எடுத்துக்கொண்டு அவளுக்கு மேலும் உபசாரங்கள் செய்தனர். ஈசனின் முன்பு தன் மீது எல்லோரும் அபரிமிதமாக அன்பைச் சொரிகிறார்களே என்று நாணுவதாகவே அவர்கள் எண்ணினார்கள். ஈசன் அந்த விளையாட்டை மேலும் ஏன் தொடர்ந்து நடத்துகிறார் என்பதை அவள் அறியவில்லை

இந்தச் சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் போது அவள் முன்பு பார்வதியே வந்து நிற்கும்போது எப்படியிருக்கும்? சித்திரலேகை தவித்துக் கண்ணீரால் தரையை கழுவி விட்டாள் என்றே சொல்லலாம். அந்தப் பயத்தில் அவள் கொண்டிருந்த மாயத்தோற்றம் தானாகவே மறைந்தது. அந்த நிலையிலேதான் அவள் தோழிகளும் இருந்தனர்.

உண்மை வெளிப்பட்டதும் தேவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. எல்லோரும் தேவியையே வியப்புடன் நோக்கினர்.

சித்திரலேகை உடல், பதட்டத்தால் துடித்தது. இரு கைகளையும் கூப்பியவளாய் விழிகளில் நீர் திரையிட எழுந்தாள்.

தேவி, மன்னித்து விடுங்கள், வேடிக்கை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். வினையாக முடிந்து விட்டது. இவ்வளவு தூரத்துக்குப் போகும் என எதிர்பார்க்கவில்லை" என்று வாய் குழறச் சொன்னவள், அப்படியே பார்வதியின் கால்களில் விழுந்துவிட்டாள்.

பார்வதி, பக்கத்திலே நின்றிருந்த  ஈசனைப் பார்த்தாள். அவர் முகத்திலே மெல்லிய புன்னகை  மலர்ந்தது. அதைக் கண்டதும் தேவியின் உள்ளத்திலே எழுந்த கோபம் அகன்றது. குனிந்து சித்திரலேகையைத் தூக்கினாள்.

தேவி, என் கணவரை என்னிடமே ஒப்புவித்துவிட வேண்டும்" என்று உடலைக் கூனிக் குறுகிக்கொண்டு சித்திரலேகையிடம் பார்வதி வரம் கேட்டபோது அவள் சிரித்து விட்டாள். பார்வதியும் மகிழ்ச்சியோடு அவளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

தேவர்களும் தேவமாதர்களும் மகிழ்ச்சிக் கொந்தளிப்பில் பெரும் ஆரவாரம் செய்தனர்.

அங்கே நிலவிய சந்தோஷத்தைக் கண்டபோது பாணாசுரன் குமாரத்தியான உஷையின் உள்ளத்தில் சிறிது வருத்தம் ஏற்பட்டது. தனக்கொரு காதலன் இருப்பானாகில் அவனோடு எவ்வளவு மகிழ்ச்சிகரமாகப் பொழுதைப் போக்கியிருக்கலாம் என்றும் அந்தநாள் எப்போது வருமோ என்றும் நினைத்தபோது அவள் முகம் வாடியது.

பார்வதி இதைக் கவனித்தாள். அங்கே குழுமியிருக்கும் அவ்வளவு பேருடைய முகமும் மலர்ந்திருக்க, உஷை மட்டும் வேதனையோடு இருப்பதைக் கண்டதும் அவள் உள்ளத்தில் குமுறும் எண்ணத்தை அறிந்தாள். அவளைப் பக்கத்திலே இழுத்து நிறுத்திக் கொண்டாள்.

ராஜகுமாரி, வருத்தப்பட வேண்டாம். உன் உள்ளத்தில் அலைபாயும் எண்ணத்தை நான் அறிவேன். மகிழ்ச்சியோடு இருக்கக்கூடிய காலம் விரைவில் வரும். இப்போதிருந்து ஏழாவது மாதத்தில் வைகாசி சுக்ல பக்ஷத்துவாதசி அன்றிரவு, நீ உபவாசமிருந்து அயர்ந்து நித்திரையிலிருக்கும்போது, உன்னை யார் அடைந்து இன்புறச் செய்கிறானோ அவனே உன் நாயகன் ஆவான்" என்று ஆசீர்வதித்தாள்.

உஷையின் வருத்தம் நீங்கியது. கண்கள் ஆனந்த பாஷ்பத்தைப் பெருக்க, அவள் தேவியைப் பணிந்து வணங்கினாள்.

ஹரி ஓம் !!!



No comments:

Post a Comment